சமுக உறவில் தேடுங்கள்

Loading

Saturday, January 1, 2011

பெண் - ஒரு போக பொருள்

பெண் ஒரு போக பொருள் அல்ல , பல போகங்களாக உலகை இயக்கிகொண்டிருக்கும் ஜீவன் .அறுவடை செய்த பின் நிலத்தில் இருக்கும் தாளிலிருந்து விளையும் பயிர் ஒரு போகம் எனப்படும், அதுபோலவே  இவ்வுலகில் வாழ்ந்தும் நம்மை வாழ்வித்தும் கொண்டிருப்பவளே பெண் .


தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனி தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு...????

ஆண்களுக்கு ஈடாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என எழுத்துருவில் சட்ட வரைபுகள் இருந்தாலும் நடைமுறையில் அதனைச் செயற்படுத்துவது அவரவர் கைகளிலேயே தங்கியுள்ளது. அதிகாரம் என்பது யாரும் வந்து அள்ளித்தருவது அல்ல தாங்களாக தங்களின் ஆளுமைக்கு ஏற்ப எடுத்துக் கொள்வதுதான். தமிழர்கள் பெண்களினைப் பொறுத்தவரை ஆண்களைவிடவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமூகத் தலைமை தாங்கலுக்கும் சில பிற்போக்கு சிந்தனையுள்ள ஆண்கள் தடையாக அமைந்ததாலும் அதிகம் பெண்களின் தாழ்வுமனப்பாண்மையும் ஏனைய பெண்களுமே தடையாகவுள்ளனர். தாழ்வு மனப்பாண்மையைத் தகர்த்தெறிய பெண்கள் பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் செயற்பாடுகளால் ஓரளவு நிவர்த்தி செய்தாலும் பெண்களுக்கான பெண்களின் தடைகளை நீக்க பெரும் வழிப்பூட்டல் தேவை. சக பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் வசைபாடல்களையும் பெண்களே தவிர்க்கவேண்டும். சமூக முன்னோடியாக பெண் முன்வரும்போது பெண்கள் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர முறையற்ற மனச் சலனங்களை ஏற்படுத்தும் சம்பவங்களைத் தூக்கி வீச வேண்டும்.

 வரலாற்று ரீதியில் வளர்ந்து முற்றி கனிந்துப் போயிருக்கும் பெண் விடுதலைக்கூறுகள் வரலாற்று ரீதியான உண்மைகளையும் தகர்ப்புகளையும் கொண்டே உடைத்தெரியப்பட வேண்டிய தேவை இன்று பெண் விடுதலை பேசும் அனைவரினதும் பொறுப்பாக காணப்படுகின்றது. ஒருவர் சட்டென்று முளைத்த காளாண் போன்று பெண் விடுதலைப் பற்றி பேசவோ, எழுதவோ, நடைமுறைப்படுத்தவோ இயலாது. அதில் யதார்த்தமும் காணப்படாது. அது பெண்ணை வரலாற்றில் தவறாய் புரட்டிப்போட்ட அத்தனை விடயங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது.

அது கருத்தியல்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், அரசியல், மொழி, பொருளாதாரம், சமூகம் என்பவற்றின் அடிப்படையிலும் மெதுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதனை மிகச் சீக்கிரமாய் திருப்பிப் போட முடியாது. படிப்படியாக எடுக்கப்படும் எத்தனங்களாலே அவற்றை புரட்டிப்போடும் பணியை தொடர்தல் வேண்டும். வேறுவேறான சமூக நடைமுறை சார்ந்த யதார்த்த நிலமைகளை சரியான முறையில் அணுகிப்பார்ப்பதன் மூலம் அவற்றை வெற்றி கொள்ளமுடியும்.

அரசியலிலும் பெண்களின் பிரவேசம் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் பெண்களின் குரல் ஒலிக்க முடியும். இன்றைய தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்த்தால் பெண்கள் மத்தியில் ஆளுமை வளர்வதற்கு குரோத உணர்வுகளே அதிகம் வெளிப்படுத்தப் படுகின்றது. மாமியார்,மருமகள் கொடுமை அக்கா,தங்கை திருமணச் சண்டை, பரம்பரைச்சண்டை எனத் தொடர்கின்றது. எனவே இவைகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

மேலேத்தேய நாடுகளில் காணப்படும் அதே அமைப்பு முறைகளை மிகச் சாதாரணமாய் வாழும் பெருந்தோட்ட உழைப்பாளப் பெண்களிடம் பிரயோகப்படுத்த முடியாது. அவர்களுக்கேற்ற அனுபவ ரீதியான நடைமுறைகளைக் கொண்டே அவற்றைப் பேசத்துணியவும் வேண்டும். திடீரென மேலைத்தேய பெண் விடுதலைக்கூறுகளை நாம் கீழேத்தேய நாடுகளுக்கு பிரயோகிக்க முடியாது. எனவே அவற்றை முறையாக சிந்தித்து தொடர வேண்டியது அவசியமாகும். இவ்வடிப்படையிலேயே நாம் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள், விடுதலைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். சமூக விடுதலைக்கூறுகளையும், மாற்றங்களையும் பெண் விடுதலையுடன் இணைத்துக்கொள்வதில் ஆண்களாலும் அது பேசப்பட வேண்டிய கருத்தாக பரவ வேண்டியதும் அவசியமானதாகும்.


இன்றைய பெண்ணியல்வாத அமைப்பு பெண்களுக்கேற்படுகின்ற ஒடுக்கு முறைகளை பொதுவாகவே ஆண், பெண் முரண்பாட்டை மட்டுமே கருத்திற் கொள்கின்றனர். முனைப்பாக காணப்படும் ஒரு விடயத்தினை மட்டும் தூக்கிப்பிடித்துக் காட்டுவதென்பது சமூக விடுதலைக்கு இட்டுச் செல்லாததாகி விடுகின்றது. அது பின்னிலைவாத நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது. அவற்றிலிருந்து விடுபட்டு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களிலும் பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்னெடுப்பதென்பது இயலாத காரயமாகிறது.

விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வருகின்ற உலகின் நடைமுறை, அனுபவம் என்பது நாளுக்கு நாள் வரலாற்றின் பாதைகளை சரியாக இனங்கண்டு வெற்றிபெற வேண்டியதாகின்றது. இங்கு ‘மாக்ஸ்’ கூறிய குடும்ப அமைப்புப் பற்றிக் கூட நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. குடும்பம் என்பதில் உழைப்பு சுரண்டப்படுவதும், தனி மனித ஆதிக்கம் செலுத்தப்படுவதும் என்பதிலிருந்து விடுதலையே இங்கு பேசப்பட்ட விடயம். அவற்றைப் பிய்த்து சுழற்றி எறிந்துவிட்டு தனிமனித சொத்துரிமை வேண்டப்படுவது விடுதலையல்ல என்பதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். தீவிர பெண்ணியல்வாதிகள் இதற்கப்பாற்பட்டும் செயற்படுவதும் நமக்குத் தெரிந்ததே.

தமிழ்நாட்டில் 1929 ஆம் ஆண்டு ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்கள் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க தீர்மானம் நிறைவேற்றினார். இதனை 60 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு மகளிருக்கு சொத்தில் சம உரிமையினை சட்டமன்றத்திலேயே ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றியவர் தான் தலைவர் கலைஞர். பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை 1989 ஆம் ஆண்டு ரூ.5 ஆயிரம் என வழங்கி, 1996 ஆம் ஆண்டு ரூ. 10 ஆக உயர்த்தி வழங்கினார். 

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியாகவே அளித்து அதனை கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். ஓரிரு ஆண்டுகளுக்கு பின் ரூ.20 ஆயிரமாக உயர்த்தினார். தற்போது திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 25 ஆயிரம் வழங்குகிறார்.
1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 150 கோடி சுழல் நிதி.
மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் (Statutory Status)
கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை எனத் தொடர் சாதனைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருபவர் தான் தலைவர் கலைஞர்.

 ஐ.நா சபையில் முதல் பெண் தலைவராக விளங்கியவர் விஜயலட்சுமி பண்டிட், முதல் பெண் ஆளுநர் கவிக்குயில் சரோஜினி நாயுடு, தேர்தலில் பெண்களின் வாக்குரிமைக்காக முதலில் குரல் கொடுத்து சட்டமேலவையில் இடம் பெற்றவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆவார். முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார். சமுக தொண்டிற்காக பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசா என பெண்களுக்கு பெருமை சேர்த்தவர்கள் பலர் உண்டு.
இதைவிட சிறப்பான எடுத்துக்காட்டு தேவையில்லை. தலைவர் கலைஞர் ஆட்சியில் பெண்கள் பெருமைப்படதக்க வகையில் சிறப்பான முன்னேற்றம் பெற்றுள்ளனர். 

பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி நடத்துபவர் தான் தலைவர் கலைஞர். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமும், நாட்டின் முன்னேற்றமும் பெண்களின் முன்னேற்றத்தையே அடிப்படையாக கொண்டுள்ளது. எனவே, வாக்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, வாழ்க்கையையும், நாட்டையும் வளமாக்க வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்


No comments:

Post a Comment