Thursday, March 7, 2024

பார்ப்பனர் எதிர்ப்பு நியாயமா அநியாயமா ?

தொடர்ந்து பார்ப்பன சமூகத்தை பெரியார்வாதிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு பேசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன். 

முகநூலில் இருக்கும் பல பார்ப்பன இளைஞர்களுக்கும் அந்த உணர்வு இருக்கும் 

“ என்னடா இது எப்ப பாத்தாலும் எல்லாரும் பார்ப்பனர்களை குறை சொல்லிட்டே இருக்காங்களே” என்று தோன்றும். 

இப்பிரச்சனையை அவர்கள் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும். 

“பார்ப்பனர் உசத்தி” என்ற தியரியை குறைந்தது ஆயிரம் வருடங்களாவது அரசர்களின் உதவியோடு பார்ப்பனர்கள் செய்து வந்திருக்கிறார்கள். 

-பார்ப்பனர் உசத்தி
-பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை கூடாது.
-சிவனே ஆனாலும் பார்ப்பனன் தலையை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்து விடும்.

கொஞ்சம் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராண கதைகளை இக்கோணத்தில் வாசித்தால் இதை புரிந்து கொள்ளலாம். 

அதாவது 97 % மக்களுக்கு 3 % மக்கள் உசத்தி உசத்தி என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அவர்களை நம்பவும் வைத்திருக்கிறார்கள்.

என் வீட்டு ப்ரிட்ஜை சரி செய்ய ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டாம் சேல்ஸுக்கு ப்ரிட்ஜுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

சும்மானாலும் அது பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரர் “ இத வாங்கிக்கோ சார். இதுக்கு முன்னாடி ஐயர் யூஸ் பண்ணின ப்ரிட்ஜ். நல்லா இருக்கும்” என்றார். 

ஒரு குளிர்பெட்டியை ஐயர் உபயோகித்தால் அது எப்படி மதிப்புள்ளதாக மாறும் என்று புரியவே இல்லை.

மக்கள் மத்தியில் இன்னமும் பார்ப்பனர் என்றால் உசத்தி என்ற எண்ணம் இருக்கிறதுதான். 

இது ஒரே நாளில் வந்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. 

என்ன திட்டத்தின் மூலம் பார்ப்பனர் உசத்தி என்பது மக்கள் மத்தியில் ஏற்றப்பட்டது? 

உலகில் ஐம்புலன்களை பெற்று மனிதனாக பிறந்து விட்டாலே அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். 

பிரச்சனையை தீர்க்க பெரும் சக்தி ஒன்றிடம் பிரார்த்தனை செய்வது மனித இயல்பு. அப்படித்தான் கடவுள் உருவாகிறார். 

பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

அல்லது ஏற்கனவே மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளை அவர்கள் வழிபாட்டு முறைகளோடு இணைக்கிறார்கள். 

“நிமித்தம்” சொல்வதன் மூலம் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

கடவுளுக்கு அடுத்தது பார்ப்பனன்தான் என்ற தியரியை மக்களுக்குள் எளிதாக் மதத்தின் மூலமாக திணிக்கிறார்கள். 

இதனால்தான் பார்ப்பனர்கள் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” என்பதை ஒத்துக் கொள்வதில்லை. 

கடவுளுக்கு அடுத்து கோவிலில் அங்கே ஒரு பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

அங்கே ஒரு பறையரும், அருந்ததியரும், தேவரும், நாடாரும், வன்னியரும் நின்று பூஜை செய்து கொண்டிருந்தால் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பம் மக்களிடையே மறைந்து விடும்.

ஸோ இப்படி இந்து மதத்துக்குள் பின்னி பிணைந்து பார்ப்பனர்கள் அவர்கள் பற்றிய இமேஜை மக்களிடையே உயர்த்திக் கொள்ளும் போதுதான் பெரியார் எதிர்க்கிறார். அம்பேத்கர் அதை எதிர்க்கிறார்.
 
பாமர மக்கள் “எப்படி ஒரு பார்ப்பனர் உசத்தி” என்று கேட்கும் போதெல்லாம் கடவுளை கைக்காட்டி “கடவுள் சொன்னாராக்கும். கடவுள் எழுதி வைச்சிருக்கிறார்” என்றெல்லாம் பார்ப்பனர்கள் பதில் சொல்லி நம்ப வைத்தனர். 

அதனால்தான் பெரியார் பார்ப்பனர்கள் கைகாட்டும் கடவுளையே எதிர்க்க ஆரம்பித்தார். 

இப்படி யோசித்து பாருங்கள். 

உங்கள் வகுப்பு லீடர் ஆசிரியர் இல்லாத நேரம் ஆசிரியர் சொன்னதாக பெரும் அதிகாரம் செய்கிறான். 

மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான். எதிர்த்து கேட்டால் “ டீச்சர்தான் எனக்கு பவர் கொடுத்தாங்க” என்று சொல்கிறான். 

குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டும் போது “என்னடா உங்க டீச்சர். நா அவுங்க கிட்டையே கேப்பேன். டீச்சர காட்டி எங்கள அதிகாரம் செய்றியா? என்று ஸ்டாப் ரூமை நோக்கி செல்வோமா இல்லையா? “ 

அதைத்தான் பெரியாரும் செய்தார். 

கடவுள் ஒரு பெரும் சக்தி என்று நான் நம்புகிறேன் என்ற லாஜிக்கை பெரியார் எதிர்க்கவில்லை. 

சரி அது உன் நம்பிக்கை இருந்துவிட்டு போ என்றுதான் சொல்கிறார். 

ஆனால் கடவுள் பெரும் சக்தி, அவரின் ஒரே பிரதிநிதி பார்ப்பனர்கள்தான் என்று அதற்கு ஒரு லாஜிக் புராண கதைகளை இட்டு கட்டும் போதுதான் பெரியார் அதே லாஜிக்கை வைத்து அந்த புராண கதைகளை ஆராய்ந்து உண்மையை மக்களிடதில் அம்பலப்படுத்துகிறார். 

மதன காமராஜன் கதை என்றொரு கதை கொத்து உண்டு. 

அதில் ஒரு பார்ப்பன இளைஞன் உலக அனுபவம் வேண்டி தேசம் விட்டு தேசம் செல்கிறான். 

காட்டை கடக்கும் போது வேடன் ஒருவன் எதிர்படுகிறான் 

“ ஐயா நீங்கள் இந்த இரவை காட்டின் இருட்டில் கடந்தால் மிருகங்கள் தாக்கி இறந்து போவீர்கள். ஆகையால் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று அழைக்கிறான். 

பார்ப்பனனும் செல்கிறான். அங்கே சிறிய பரண் ஒன்று இருக்கிறது. 

கீழே தூங்கினால் புலி தின்றுவிடும் என்று பரண் அமைத்து அங்கே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். 

வேடனின் மனைவி அப்பரணில் பார்ப்பனனும் தூங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். 

அது இருவர் தூங்கும் பரண் எப்படி மூவர் தூங்க முடியும் என்று சொல்கிறாள். 

ஆனால் வேடனோ “பாவம் இந்த பார்ப்பனன் அஞ்சி நடுங்கி போய் இருக்கிறான். இவனுக்கு நாம்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று மூன்று பேரும் சமாளித்து பரணில் படுக்கிறார்கள். 

வேடன் இடது ஒரம் , மனைவி வலது ஒரம் , பார்ப்பனன் மத்தியில் என்று படுத்து தூங்குகிறார்கள். 

இரவில் அசைந்து தூங்கும் போது வேடன் பரணில் இருந்து விழுந்து விடுகிறான். 

அவனை புலி தின்று விடுகிறது. 

மறுநாள் காலை பார்ப்பனன் வருத்தம் தெரிவித்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடுகிறான். 

ஒருவருடம் கழித்து அந்த நாட்டின் மன்னனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பார்ப்பனன் தியானம் செய்கிறான். 

அந்த தியானத்தின் போதுதான் தனக்கு பரணில் இடம் கொடுத்து உயிர் நீத்த வேடனே அப்புண்ணியத்தால் இளவரசனாக பிறந்ததாக கண்டுகொள்கிறான். 

சரி அந்த வேடனின் மனைவி என்னவானாள் என்று தியானம் செய்கிறான். அவளும் அந்த பிராமணன் சென்ற ஒரிரு நாளில் விஷமுள் குத்தி இறந்து விடுகிறாள். 

இப்போது அவள் எங்கே பிறந்திருக்கிறாள் என்று பார்த்தால் அவள் ஒரு சேரியில் பன்றிகுட்டைக்கு அருகே இருக்கும் வீட்டில் பிறந்திருக்கிறாளாம். 

கதையை கவனியுங்கள் 

- பார்ப்பனருக்கு உதவி செய்தால் அவர் மறுபிறவியில் இளவரசனாம்.

- பார்ப்பனருக்கு உதவி செய்ய மறுத்தால் அவர் பன்றிகுட்டை சேரியில் பிறப்பாராம்.

இது போன்ற ஏராளமான பார்ப்பன சாதி போற்றும் கதைகளை நம்மிடையே அனைத்து பழங்கதைகளும் திணித்திருக்கும். இப்படி திணித்து திணித்துதான் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

சமதர்ம சமூகத்தில் இந்த போலி பிம்பம் உடையத்தானே வேண்டும். 

அது தேவையில்லாத பிம்பம்தானே. 

அது சமத்துவத்துக்கு எதிரான பிம்பம்தானே. அந்த பிம்ப உடைப்பை ஒவ்வொருவரும் செய்யும் போதுதான் அது பார்ப்பனர்கள் மனதை புண்படுத்தி விடுகிறது. 

அந்த பிம்ப உடைப்பின் அவசியத்தை ஒரு சமூகநீதி ஆர்வலராக நீங்கள் புரிந்து கொள்ளும் போது நீங்களும் பெரியார்வாதிகளுடன் சேர்ந்து அப்பிம்பத்தை உடைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

எந்தவிதமான உண்மையும் இல்லாமல் வெறுமே இட்டுக்கட்டல் மூலம் பிம்பம் நமக்கெதுக்கு என்று அதற்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவீர்கள்.

- Vijay Bhaskarvijay பதிவு

Saturday, January 20, 2024

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..


நிஷா, ஜல், தானே, வர்தா, ஒக்கி, நிவர் வரிசையில் நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

என் முன்னோர்கள் வந்தார்கள் சென்றார்கள், நானும் அப்படியே செய்ய நினைத்தேன்..
ஆனால் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி இருந்தது..
நான் கடந்து சென்ற கதையை சொல்கிறேன் கேளுங்கள்..
நான் குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகி 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.. ஏனென்றால் என் முன்னோர்கள் வந்த பொழுதெல்லாம் 10 முதல் 20 சென்டி மீட்டர் மழையை கொட்டிச் சென்றாலே சென்னை மிதக்கும்..

எப்பவும் போல இல்லாமல் இந்த முறை நான் உருவாகும் பொழுதே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.. எனக்கு கோபம்.. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று தல தோனியை போல் அடி பட்டையை கிளப்ப பூஸ்ட் குடித்துவிட்டு என் வலிமையை கூட்டி தயாரானேன்.. 
அதில் 20 சென்டிமீட்டர் பொழிந்தாலும் எதுவும் ஆகாது என்று மக்களுக்கு நம்பிக்கை விதைத்தார் மாசற்ற மனிதர் ஒருவர்.. 
இப்படித்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கோம் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று டி நகரில் நின்று எகத்தாளம் பேசினார் மண்டியிட்ட மனிதர் ஒருவர்.. ஆட்சி மாறியது காட்சியும் மாறியது 2021ல் என் தங்கச்சி பருவமழைக்கே பல்லை இளித்தது டி நகர்..

என் பலத்தை ஏற்றி கொண்டு நகரத் துவங்கினேன், 10 சென்டிமீட்டர் 20 சென்டிமீட்டர் என்று மழை பொழிவை கூட்டினேன்.. என்ன ஆச்சரியம், கொட்டியவுடன் ஆங்காங்கே காணாமல் போகிறது தண்ணீர்.. எனக்கு கோபம் தலைக்கேறியது உடனே பிரேக் போட்டு கீர் டவுன் செய்து 10 கிலோமீட்டர் என்று வேகத்தை குறைத்து அண்ட சராசரங்களும் நடுங்கும் அளவிற்கு அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை என்பதை போல் நின்று நிதானமாக இரவு பகலாக என் வேலையை காட்டினேன்.. 

அப்படி இருந்தும் என்னால் புறநகர் சென்னையான வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற சில இடங்களை தவிர எங்குமே தண்ணீரை நிரப்ப முடியவில்லை.. விசாரித்த போதுதான் தெரிந்தது, சரியாக திட்டமிட்டு ஏரிகளில் தண்ணீரை குறைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று.. 

உடனே 4 ஆயிரம் கோடி எங்கே என்று கொக்கரித்தது சில கூட்டம்... அடேய் அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சென்னையை அழித்திருப்பேன்..
அப்படி இருந்தும் பள்ளிக்கரணை ஏரி கரைகள் உயர்த்தப்படாதது குற்றம் தானே?
குற்றம்தான் யார் செய்த குற்றம்?
கரையோரத்தில் இருக்கும் கோயில்களை கட்டியவர் குற்றமா? கோயிலை இடித்தால் இந்து மதத்திற்கு எதிரி என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் குற்றமா ?அல்லது பழிச்சொல் வந்தால் பரவாயில்லை என்று அந்தக் கோயிலை இடித்து கரையை பலப்படுத்தி உயர்த்தாமல் இருந்தவர்களின் குற்றமா?
எது எப்படியோ என் ஆசை கொஞ்சம் நிறைவேறியது..
ஊரே தத்தளிக்க முன்னெச்சரிக்கை இல்லாமல் மதியற்ற ஒருவர் மாண்புமிகுவின் மனைவிக்கு அலைபேசியில் உதவி கேட்டு அழைத்த சர்ச்சைகள் ஆங்காங்கே.. எப்பவும் போல நான்கு பேர் வீடியோ எடுக்க மூட்டை தூக்கும் முட்டாள் கூட்டம் ஒரு பக்கம்..  
வாம்மா மின்னல் போல திடீரென்று வந்து நொட்டை சொல்லும் மண்டியிட்ட மாமனிதர் ஒரு பக்கம். 
இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த உணவை எடுத்து நாடகம் போடும் நாடக கம்பெனி ஒரு பக்கம்...
வாயில் மட்டுமே வடை சுடும் ராஜ் பவன் ராங்கி எங்கு சென்றார் என்ற கேள்விகள் ஒரு பக்கம்...
இருந்தாலும் என் முன்னோர்கள் வந்து சென்றதற்கும் இதற்கும் பல வேறுபாடுகளை காண முடிகிறது.. பவர் இல்லாமல் வந்து பத்து நாள் முடக்கி போட்டு பல பேரை பலி வாங்கிய என் முன்னோர்களை காட்டிலும் பத்து மடங்கு பவரோட வந்த என்னால் அதில் பாதி சேதாரம் கூட செய்ய முடியவில்லை.. திட்டமிட்டு பவர் கட் செய்து ஆங்காங்கே மக்களை பாதுகாத்து என் பவரை குறைத்துவிட்டது இந்த அரசாங்கம்..
அப்படி இருந்தும் நடுநிலை அமுக்கிகள் (translate in English) என்று சொல்லிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் சொல்வதைப்போல ஒரு பக்கம் தானே காட்டுனீங்க என்பதைப் போல் அவதூறுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன சில அமுக்கிகள்..
பாதம் தாங்கிகள், ஆட்டுக் கூட்டங்கள் எல்லாம் ஆங்காங்கே குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போது பறந்து வந்த ஒன்றிய ஆய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஈஸியாக திரும்பிவிட்டது என்று நற்சான்றிதழ் கொடுத்து கொக்கரித்த கூட்டங்களின் வாயில் வாழைப்பழம் வைத்தது.. 
இதிலும் ஒரு சூட்சமம் இருக்கலாம்.. ஜாக்கிரதையாக இருங்கள் ஒன்றிய நிவாரண தொகையை குறைத்துக் கொடுக்க பாராட்டு பத்திரம் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது..
எது எப்படியோ மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என் வலிமை என்னவென்று.. என்னை சமாளித்த அரசுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
என்னால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.. 
எங்கள் குடும்பத்திலிருந்து இனிய எவராவது வருவாராயின் பல மடங்கு பலத்துடன் வருவோம்..
அரசாங்கம் மட்டுமல்ல மக்களாகிய நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்..
அரசாங்கம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாட்டர் பீட் போடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமேசானில் நான்கு பேர் செல்லும் படகு எட்டாயிரம் ரூபாய்தான் வரும் வீதிக்கு ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் சந்திப்போம்.. நன்றி

இப்படிக்கு உங்கள் அன்பு மிக்ஜாம் புயல்..

Monday, November 6, 2023

பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா

நான் கண்டதும் கொண்டதும் 
அந்த ஒரே தலைவரைத்தான்.

இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார், 
நான் அவருடன் இணைந்த போது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்கு முன் முப்பது ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கின்றார்.

இந்த " ஆண்டுகள் " தமிழரின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகள்.

" திடுக்கிட வைக்கிறாரே! 
திகைப்பாக இருக்கின்றதே! 
எரிச்சல் ஏற்படுத்துகின்றாரே
ஏதேதோ சொல்லுகிறாரே! 

இவரை விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! 
நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று பலர் ப
ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர்.

ஆனாலும் மூலையில் நின்றாகிலும்,மறைந்து இருந்தாகிலும் அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அந்தப் பேச்சு ஐம்பது ஆண்டுகளுக்கப் மேலாக நடந்தபடி இருந்தது. 

எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள், தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்.

கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; 
அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; 

அவருடைய பேச்சோ தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது.

மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு காடுகளை கழனி வளம் பெறச் செய்து கொண்டு 
ஓசை நயத்துடன்,ஒய்யார நடையுடன்! 

அங்கே பேசுகிறார், 
இங்கே பேசுகிறார், 
அதைக் குறித்துப் பேசுகிறார், 
இதைக் குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது.

மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் - எது நேரிடினும் - 
என்ற உரிமைப் போர், 
அவருடைய வாழ்வு முழுவதும். 

அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. 
அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. 

இன்று அனைவரும் பெற்றுள்ளனர் 

இன்று தமிழகத்தில் தூய்மையுடன், மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்து உரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அறிவுப்புரட்சியின் முதற்கட்ட வெற்றி இது! 
இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! 

இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது வியர்த்துப் போகின்றனர். 

அப்படியா! முடிகிறதா!நடக்கிறதா!விட்டு வைத்து இருக்கின்றார்களா? என்று கேட்கின்றார்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர் காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகரங்களில்
 என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்த போது 
ஒவ்வொரு ஊரிலேயும் இதுபோலத்தான் கேட்டனர். 

யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!

அந்தப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய பெரிய ஏடுகளை, எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை, 
கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபங்களில் போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! 

இங்கு?

இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? 
அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? 
எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

ஏ! அப்பா ! 
ஒரே ஒருவர் 
அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்து வீசுகிறாரே என்று 

இந்த நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டு இருந்த பழமை அலறலாயிற்று! 

புதுப்பதுப் பொருள் கொடுத்தும்,
பூச்சு மெருகு கொடுத்தும் 
இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும்,

விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது என்பதனை அறியாதார் இல்லை!

எனவேதான் 
பெரியாருடைய பெரும் பணியை ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல,
ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று நான் கூறுவது வாடிக்கை. "

- பேரறிஞர் அண்ணா -

Sunday, October 22, 2023

A2B புறக்கணிப்பு வரலாறு..

1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியவை), காபி கடை (cafe என்பதின் மருவல்), பட்ஷணக் கடை (டிஃபனுக்கு தமிழ்ப் பெயர் பலகாரம்) என்றெல்லாம் தான் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்வது என்பது சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று கருதிய காலம். தமிழ் பிரமணர்கள், கன்னட பிராமணர்கள், நெல்லை பிள்ளைமார்கள் போன்ற பிரிவினர் கையில் மட்டுமே இருந்த தொழில் அது.
பெரும்பாலான ஹோட்டல்களில், "பிராமணர்கள் மட்டும் சாப்பிடும் அறை" என்று தனியாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி போன்ற பழைய திரைப்படங்களில் இவைகளை காணலாம்! மேலும் இதையெல்லாம் தி.ஜ, லாசரா காலத்துக் கதைகளில், அப்பம், வடை, தயிர்சாதம் நாவலில் கதைப் பின்னணியாக பாலக்குமாரன் விரிவாக எழுதி இருப்பதைப் படிக்கலாம். 

காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டுப் பந்தியில் பிராமணர், சூத்திரர் என தனி தனி பந்திகள் அமைக்கப்பட்டதை எதிர்த்ததுதான் தந்தை பெரியார் முதலில் காங்கிரஸில் கருத்து மாறுபாடு கொண்டார். பின்னாளில் அவர் மாநாடு நடத்தியபோது, "நாடார் சமைக்கும் உணவு பறிமாறப்படும்" என்று நோட்டீஸிலேயே போட்டார். நாடார்கள் என்பது அந்தக் காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். தொட்டாலே தீட்டு எனப் பார்க்கப்பட்டவர்கள். அவர்களை அழைத்து பொதுச் சமையல் செய்யச் சொல்லி சமத்துவப் புரட்சி நிகழ்த்தினார். 

உணவுக் கூடங்களில், தொழில்களில் இத்தகைய ஒரு சாராரின் ஆதிக்கம், அடக்குமுறைகள் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக எதிர்க்கப்பட்டது. பின்னாளில் மாற்றப்பட்டது.

அதை முதன்முதலில் எதிர்த்தவர் பெரியார். மாற்றியவர் பெரியார்.

இத்தனை ஆதாரங்கள், காட்சிப்படங்கள், காணொளிகள் இருக்கும்போதே முழுப் பூசணியை உப்புமாவில் மறைக்கப் பார்க்கின்றனரே!

இவர்கள் நமக்குக் காட்டும் அந்தக்காலச் சரித்திரம் எந்த லட்சணத்தில் இருக்கும்!!

#ஈரோடு_குரங்குகுட்டை பதிவிலிருந்து

Saturday, September 30, 2023

ஸ்டாலின் மிசாவில் கைது பொய்யா உண்மையா ?

Wednesday, September 13, 2023

"உடன்கட்டை எனும் சதி"ஒரு விரிவான பார்வை...

Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான்.  சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல்  எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது. 
இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இது 1798ல் எழுதப்பட்டது. அப்போது இந்தியர்களை ஐரோப்பியர்கள் Hindu என்ற அடையாளப்படுத்தவில்லை Gentoo என்றே அடையாளப்படுத்தினார்கள். ஐரோப்பியர்கள் நம் மக்களை. Natives  என்றோ சிலசமயம் திமிராக savages  என்றோ black man என்றோ குறிப்பிடுவார்கள். இதிலும் தொடக்கத்தில்.மட்டும்  Gentoo   என்று குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு Brahmin என்ற  வார்த்தையை இந்த  குறிப்பில் நிறைய தடவை உபயோகப் படுத்தியுள்ளார். நான் தான் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்த சங்கடப்பட்டுக் கொண்டு விட்டு விட்டேன். 👇👇👇👇👇👇👇👇

"இந்துப் பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்பட விருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் இந்த வேதனைதரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம்  தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் வெள்ளை சேலை கட்டி இருந்தாள். தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள். அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள்
பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள்.
மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள். வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார். 
அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன்.
500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு.அழைத்தார். சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார்.
நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள். பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள்  நெற்றியில் தடவினார்கள்.
பிறகு அந்தப் பெண் சிதைக்கு  அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள். சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல்அருகில் அமர்ந்தாள்.
பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை,  திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார். பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள்.

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள் ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள். அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார்.
பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள். பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள். பிறகு இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள். குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய்  போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள். பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள். இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது. இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார். ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார். பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள். பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார். பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள். அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது. ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது. சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது.

நான்  அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது அவளிடம் எந்தவிதமான பயமோ பீதியோ எதிர்ப்புணர்வோ இல்லவே இல்லை மிக சாந்தமாகவும் நிதானமாகவும் இருந்தாள். அவளுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும் ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது."

Sunday, September 3, 2023

திமுக சித்தாந்தத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவு வேண்டும்...

திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை
இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!   
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.  
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.   
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.

அது ஒரு சாதாரண விடயம் அல்ல.
திராவிட கருத்தியல்:
தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராட்டியம் போன்ற 20 மாநில மொழிகளும்,
திராவிட தன்னாட்சி கோட்பாட்டை புரிந்து கொண்டு முன்னெடுக்க முயன்றால்
ஆரிய காலனி ஆட்சியின் முடிவுக்கு தேதி குறிப்பிடப்பட்டுவிடும்.,.
அதன் முடிவில் இருந்துதான் உண்மையான இந்திய ஒன்றியம் உருவாகும்.   
இந்த உண்மை ஆரிய பார்ப்பனீய காலனித்துவவாதிகளுக்கு புரியும்.   
எனவேதான் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே திராவிட கருத்தியல் மீது வன்மைத்தோடு போர்
புரிகிறார்கள்.  
ஆம் இங்கு சரியான வார்த்தையைதான் பயன் படுத்தி உள்ளேன்.
 ஆரிய பார்ப்பன சக்திகள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒரு மூர்க்கமான
போரை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.   
இதற்கு கணக்கில்லாமல் உதாரணங்கள் உண்டு.
1967இல் பேறிஞர் அண்ணா தலைமையில், திராவிட முன்னேற்றக்கழகம்
தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சியை பிடித்தது.   
இந்த வெற்றியானது ஆரிய பார்ப்பன சக்திகளின் நெஞ்சில் விழுந்த இடியாக ஒலித்தது.  
அன்றில் இருந்து அவர்களின் போர் இயந்திரங்கள் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்ட
வண்ணமே உள்ளது.   
இந்திய ஒன்றியம் என்று அவர்களால் கூறப்படும் அமைப்பு,
உண்மையில் ஒன்றியம் என்ற கருத்தை இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.

ஒன்றியம் என்பதன் அர்த்தத்தை தமிழகம் புரிந்து கொண்ட அளவு ஏனைய மாநிலங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
பாசிசத்திற்கு எதிரான திராவிடம்:
ஒவ்வொரு மாநிலங்களும், தங்கள் தன்னாட்சி கருத்தியல் தளத்தில், நிமிர்ந்து
நின்று கொண்டு அமைக்கும் ஒன்றியம்தான்,
ஒரு உண்மையான ஒன்றியமாக இருக்க முடியும்.
ஒரு உண்மையான இந்திய ஒன்றியம் உருவாவதற்கு உரிய சரியான கோட்பாடுகள்,
திராவிட கருத்தியலில் மட்டும்தான் உண்டு.
ஆரிய பார்ப்பனீயத்தில் அது ஒருபோதும் சாத்தியப்படாது.   

ஏனெனில், அடிப்படையில் அந்த கோட்பாடு, சக மனிதர்களை தரம் பிரித்து அடிமை படுத்தி ஏமாற்றி
பிழைக்கும் பாசிசத்தன்மை கொண்டதாகும்.  
நவீன உலகில் அதன் இருப்பு சந்தேகத்துக்கு உரியது.  

இன்னும் சரியாக ஆராய்ந்து பார்த்தால்,
அந்த ஆரியத்தின் அத்தனை நச்சு விதைக்களும் ஹிட்லரின் நாசி தத்துவத்தில்
இருக்கிறது. உண்மையில் அந்த நாசி தத்துவமே, ஆரிய பார்பனீயம் பெற்ற திருட்டு குழந்தைதான்.   

 இந்த பாசிசத்தை சரியாக புரிந்த கொண்டவர்கள் தென்னாட்டு திராவிடர்கள்தான்.  
 திராவிட கருத்தியல் பொறிதான் இந்தி அல்லாத மாநிலங்களையும் சேர்த்து கொண்டு,
முழு இந்திய உபகண்டத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக, வழிகாட்டுகிறது.  

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியில், அதை எதிர்த்து சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்ற கழக அரசு..  

அன்று, அது சர்வதேச ஊடகங்களின் முதல் பக்க செய்தி என்பது, நினைவிருக்கட்டும்.
ஒன்றியம் என்ற பெயரில் தோன்றிய சர்வாதிகாரத்துக்கு சவுக்கடி கொடுத்து இந்திய ஒன்றியத்துக்கே ஜனநாயக காவலனாக அவதாரம் எடுத்தார் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கலைஞர்.
அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அரசியல் கருத்தியல் கூடங்களிலும்,
இது ஒரு முக்கிய திருப்பு முனையாக எப்போதும் கருதப்படுகிறது.  
அதன் தொடர்ச்சியாக , ஆட்சி கலைப்பு என்ற மிரட்டலையும் மீறி, எதிர்க்கட்சி என்று எந்த பெரிய கட்சியும் இல்லாத அந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம்
மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய ஒன்றியத்துக்கான மேடையாகும்.

நன்னம்பிக்கை முனை:
பார்ப்பனீயத்தின் ஆட்சி அதிகார கட்டுமானம் தங்கி இருப்பது “ஒன்றியம்”
என்ற பெயரில்தான்.
மாநிலங்கள்தோறும் உள்ள இந்தி அல்லாத தேசிய இனங்களின்
தனித்தன்மையை மெதுவாக அரித்து அரித்து இல்லாமல் செய்து விடுவதுதான்,
ஒன்றியம் என்பதன் தலையாய் பணி என்று, கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

ஒன்றியம் என்ற பெயரில் இந்த திருட்டுத்தனத்தை அவர்கள் தொடர்ந்து
செய்துகொண்டே வருகிறார்கள்.
அதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் விட்டார்கள்.

ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வலுத்து கொண்டே வருகிறது.
இந்தி மொழி அல்லாத மாநிலங்களில், திராவிட கருத்தியலும், திராவிட
முன்னேற்றக்கழகமும் எப்படி பார்க்கப்படுகிறது?

 ஒரு மாநில தன்னாட்சி கோட்பாட்டின் ந‌ன்னம்பிக்கை முனையாகத்தான்,
திராவிடமுன்னேற்ற கழகம் பார்க்கப்படுகிறது.

இது பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் உள்ளன.
மாநில உரிமைகள், மாநில பெருமைகள்,
மாநில கலாசார வரலாறு,
பண்பாட்டு விழுமியங்கள் பற்றி எல்லாம் பேசுவதே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து ஆரியர்களால் காலத்துக்கு காலம் கட்டமைக்கபட்டு வந்துள்ளது.   

குறிப்பாக, மாநில உரிமைகள் என்ற பேச்சை, செவிமடுத்தாலே,
ஆரிய பார்ப்பனீய சக்திகள், இடிகேட்ட நாகம் போல ஆகிவிடுகிறது.  

ஏனெனில், அவர்களுக்குத்தான் எந்த மாநிலமும் இங்கு கிடையாதே?.

அதனால் எல்லா மாநிலங்களையும், அவற்றின் மாநில அடையாளங்களை சிதைப்பதே, தங்களுக்கு நல்லது என்ற நோக்கத்தில், செயல்படுகிறார்கள்..

வெறும் சமுக இயக்கமாக பிரசாரங்கள் மட்டும்செய்வார்கள் என்று கருதி இருந்த ஆதிக்க சக்திகளுக்கு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் மேடை, பெரிய அதிர்ச்சி வைத்தியமாகி விட்டது.   

ஒடுக்கப்பட்டவன் ஒரு நாள் நிமிர்ந்து எழுவான் என்பது இயற்கை விதி.   
பேராசைகாரர்களுக்கு, அது இலகுவில் புரிவதில்லை.

அவர்களுக்கு புரியக்கூடிய அந்த பாடத்தை அவர்களுக்கு முதலில் படிப்பித்தது திராவிட முன்னேற்றக்கழகம்தான்.

தமிழகம் கற்பித்த இந்த மாநில தனித்துவம் என்ற பாடம்,
 தற்போது எல்லா மாநிலங்களுக்கும் பரவி விட்டது!  
குறிப்பாக இந்தி அல்லாத மாநிலங்களில் மாநில தன்னாட்சியின் பேசு பொருளாக இருப்பது நிச்சயமாக தமிழகத்தின் தன்னாட்சியை நோக்கிய வரலாற்று பயணம்தான். .

இந்தி அல்லாத எந்த மாநிலத்து அரசியலை எடுத்துகொண்டாலும்,
அங்கெல்லாம் இப்போது மாநில உரிமைகள் பற்றிய கருத்துக்கள் பெரிய அளவில் ஒலிக்கிறது.

இந்திய மாநில மொழிகள், இன்றுவரை கொஞ்சமாவது காப்பாற்றப்படுவதற்கு முக்கிய காரணம்,
திராவிட கருத்தியலை முன்னெடுத்த தமிழகம்தான்.
தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி,

இப்போது இதர மாநிலங்களை தட்டி எழுப்பிவிட்டது.
மும்மொழி என்ற பெயரில் இந்தியிடம் தங்கள் அடையாளங்களை பறிகொடுத்து விட்டோம் என்று,
இப்போது அவர்களுக்கு தெரிந்து விட்டது.

மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற
உறுதி மொழியை திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அரசிடம் இருந்து பெற்றது.

இதன் பலனை இன்று எல்லா மாநிலங்களும் அனுபவிக்கின்றன.   
இன்று ஆங்கில கல்வியை, இந்தி அல்லாத மாநிலங்கள் பெற்று ,
முன்னேறி இருப்பதற்கு, அவைகள் தமிழகத்துக்கு நன்றி கூறவேண்டும்.

திராவிட முன்னேற்றக்கழகம் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய
ஒன்றியத்துக்கான மேடையாகும்.

தேசிய அரசியல்போக்கை மாற்றிய திராவிடம்:
அடுத்த கட்டமாக, வி.பி.சிங் ஆட்சியை நிறுவியதிலாகட்டும்,
அதன் பின்பு,மன்மோகன் சிங் ஆட்சியை கொண்டுவந்ததில் ஆகட்டும்,
திமுக, என்றைக்குமே புதிய போக்கை முன்னெடுப்பதாக தான் இருந்திருக்கிறது.

இந்தி அல்லாத எந்த மாநிலத்தில், எந்த மாநில கட்சி வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக்கழக
தலைவரை, முதன்மை விருந்தினராக, அவர்கள் அழைப்பது, ஒரு தொடர் நிகழ்வாக
நடப்பது ஒன்றும், தற்செயலான விடயம் அல்ல.  

மாநில உணர்வுகள், அங்கெல்லாம் கொழுந்து விட்டு எரிகிறது.
அந்த மாநில மக்களின் நாடித்துடிப்பை, அந்த தலைவர்கள் எல்லோரும் அறிவார்கள்.

ஊடகங்கள் ஒன்று கூடி மறைத்தாலும், அந்த மக்களின் உணர்வுகளை,
அந்த மண்ணின் தலைவர்களும், கட்சிகளும், கவனத்தில் எடுத்து கொண்டே ஆகவேண்டிய நிலை உள்ளது.   

கடந்த மக்களவை தேர்தலில், தலைவர் ஸ்டாலின், முன் மொழிந்த, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி, என்பதை அப்போது ஏற்று கொண்டு, வெளிப்படையாக ஆதரவு கொடுக்காமையே,

இன்றைய அவலங்களுக்கு, ஒரு காரணம், என்று பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு, தங்கள் மாநில உரிமைககளின் முன்னோடி அடையாளமாக திராவிட முன்னேற்றக்கழகம்தான் தெரிகிறது.

பின் குறிப்பு:
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, இந்த மண்ணில், வாழ்ந்த மக்களிடையே, ஜாதி இல்லை.

மக்களை, ஜாதி என்ற வியாதி கொண்டு, பிரித்து ஆளும் வந்தேறி மதங்கள், இல்லை.
கடவுளின் பெயரால் அடக்குமுறை இல்லை.
ஆரிய வருகைக்கு முந்தைய, தொன்மையான திராவிட வரலாற்று சான்றுகளையும், விழுமியங்களையும்,
மீட்டு எடுப்பதில் திராவிடர்கள், வெற்றி பெற்றுவிட்டார்கள்.   
இதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.
இன்னும் வெகு தூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பது ,உண்மைதான்.
ஆனாலும், இந்திய துணை கண்டமெங்கும், திராவிட கருத்தியல், முன்னெப்போதையும் விட ,தற்போது கவனிக்கப்படுகிறது..

:- ராதா மனோகர்