Monday, June 10, 2013

நாளை பள்ளி - உங்க குழந்தையும் நல்ல குழந்தைதான் ..

babu




பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க..
நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .
எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்
திரும்ப திரும்ப செய்தல் .
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்
நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 . முழு கவனம் மிக அவசியம் .
4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
Example - news - north ,east,west,south ....
5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை
8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.
(நன்றி : Readers ' digest ) /World is not enough

Tuesday, April 23, 2013

உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல





"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். . மனிதன் வரலாற்றுக்குரியவன் ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார்.

இந்தியநாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான்.

ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் ‍ சர் ஐசக் நியூட்டன்.

துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்..மார்ட்டின் லூதர் கிங்.

ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.

"மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். "--பாவ்லோ பிரையர்

உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

"ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.

"வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்

"ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது" ஜார்ஜ் பெர்னாட்ஷா

"ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" -ஜேம்ஸ் ரஸ்ஸல்

"ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்"..-அரேபியப் பழமொழி.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று- பெட்ரண்ட் ரஸ்ஸல்

புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்..நெப்போலியன்

மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்..தாமஸ் கார்லைல்

வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்

ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்

*அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!

* குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...! 

* நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்!"

"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"

புத்தகம் நம் நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது ...
ஆகவே அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்போம்....

நன்றி - பார்த்திபன் 

Monday, April 22, 2013

இன்றைய உலகை அன்றே கணித்தவர்

இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது.
வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு.

1944-ம் ஆண்டு பெரியார் எழுதிய நூல் இது. வரும் காலங்களில் சமூகத்திலும், விஞ்ஞானத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்களெல்லாம் ஏற்படும், மக்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யூகித்து சொல்லியிருக்கிறார். இந்த சின்ன புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஆச்சரியமும், வருத்தமும் ஒருசேர மிஞ்சியது. செல்போனும், ஃபேஸ்புக்கும், ஸ்கைப்புமாக இன்று தொழில்நுட்பத்தில் கண்டறிந்து உபயோகிப்பவைகளை அவர் 40 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார் என்ற பெருமையோடு ஐந்து நிமிடங்களில் புத்தகத்தில் நுழைந்து வெளியேறலாம்.

புத்தகத்திலிருந்து:
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும் - செல்போன்
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் - ஃபேஸ்புக், ஸ்கைப்
இன்று இருக்கும் சாட்டிலைட் வழிக் கல்விமுறை - ஓர் இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்
மருத்துவத்தில் இன்று இருக்கும் டெஸ்ட் டியூபின் மூலம் குழந்தை பெறுதலை- பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது
வீரியத்தை இன்ஜெகஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும்,குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
பேட்டரி கார் - பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தலாம்.
அதிசயப்பொருளும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்று போலவே அனுபவிப்பார்கள் - தீம் பார்க்

நன்றி - தருண் 

Saturday, April 20, 2013

இலை மலர்ந்தால் ஈழம் ?????




 “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.
‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.
1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.
ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.
ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.
‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.
1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.
தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.
1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.
கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.
பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.
ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.
1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.
மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது  பிரதமராக வேண்டும் என்கிறது, அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

இறுதிக்கட்ட போரின் போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் ஏன் போர்நிறுத்த பெரிய முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் பலருடைய கேள்வி ?
இதோ விடைகள்
http://shanthibabu.blogspot.com/2012/04/blog-post_27.html

Friday, April 19, 2013

ஆங்கிலேயருக்கே சவால் விட்ட நம்ம ஆளு ....


ஆரம்ப பள்ளியைக்கூட முழும்மையாக முடிக்காத ஒருவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? இது நடந்தது நமது தமிழ்நாட்டில்தான்.அந்த நபர் வேறு யாரும் இல்லை உயர்திரு.ஜி.டி. நாயுடுதான்.பலவித்ம்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடு மாபெரும் அறிவியல் புரட்சியாளர்தான்.

கோவைக்கு முதன்முதலில் பாலிடெக்னிக்கை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடுதான்.குறுகிய,திறமையான ம்ற்றும் துல்லியம்மானதுதான் ஜி.டி. ¿¡யுடுவின் பார்முலா.அவர் உருவாக்கிய சர்தார் ஷோப் பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கி காட்டினார். சென்னை கிண்டி பொறியியல் க்ல்லூரி பேராசிரியர்களும்,மாணவர்களும் இதனை ஆச்சர்யப்படுத்துடன் பார்த்துச்சென்றனர். இராணுவ அதிகாரிகளுக்கும் இதனை சொல்லிக்கொடுத்தார்.

வழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியை கண்டுப்பித்து அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார்.ஜெர்மானியர்கள் இதனை வாங்கி கலப்பினம் தயார் செய்து அத்ற்க்கு ” நாயுடு காட்டன் என பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. நாயுடு தயாரித்த நீரழிவு,ஆஸ்துமா,வெள்ளைபடுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனம்மான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.

2,500 ரூபாய்க்கு சிறிய ரக கார் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.இதற்க்கு மட்டும் மத்திய அரசு அனுமதியும்,ஆதரவும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும். 7/11/1967 அன்று காலை 9:30 க்கு அடிக்கல் நாட்டப்பட்டு மறுதினம் மாலை 3.45 க்கு முடிக்கப்பட்ட வீட்டின் திறப்புவிழா நடந்தது.டெக்னாலஜி என்பது சாமன்யனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வழக்கம் போல் சுதந்திர இந்தியா நாயுடுவைக் கண்டு கொள்ளவில்லை.


 வாழ்க நாயுடு...
 நன்றி : - பிரியங்கா 

Thursday, March 28, 2013

இது உங்களுக்கு தேவையா - OVER

கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள்.

'அஞ்சாம்கிலாஸ்' கூட தாண்டாதவன் கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.

கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். புரோகிதர்களும் கல்யாண‌மும்.

படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

எட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.

ஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம்.

ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும் தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன.

எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா?

உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது?
ஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.
மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா?

சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

                                                                                                                     நன்றி : - பி ஆர் கே 

Wednesday, February 20, 2013

அரசியல் ரொம்ப ஈசி இல்ல


எங்கள் அண்ணன் குன்னம் தொகுதி திரு சிவ சங்கர் MLA அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ததுள்ளோம்...

""  இது எல்லோருக்குமான நிலைத் தகவல் அல்ல...

என் மீது எரிச்சல் கொண்ட தோழர்களுக்கானது. எனது நிலைதகவல் கருத்துகளால் வெறுப்பு கொண்டு, தொடுக்கும் பாணம் “ இவர் எம்.எல்.ஏ வேலை பார்க்கிறாரா, இல்லையா “.

எம்.எல்.ஏ பணியோடு சேர்த்து எனக்கு மாவட்ட செயலாளர் பணியும் இருக்கு.

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பணியை தெரியப்படுத்துவதற்காக எனது ஒரு நாள் சுற்றுப்பயண விவரத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

சுய விளம்பரம் அல்ல. பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் பணி இப்படிதான் அமையும்.

16.02.2013 சனிக்கிழமை...
காலை 8.30 – இல்லத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு.

9.00 மணி அரியலூர் நகரம்
• சபரி டிஜிட்டல் சபரிஸ்வரன் திருமணம் விசாரிப்பு
• தொ.மு.ச தோழர் கருப்பையா புதுமனைப் புகுவிழா
• மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்மாறன் திருமணம் விசாரிப்பு (காலை உணவு )


10.30 அரியலூர் ஒன்றியம், அய்க்கால் கிராமம்
* கழகத் தோழர் அழகுதுரை இல்ல காதணி விழா விசாரிப்பு

11.30 செந்துறை ஒன்றியம்
* தெற்கு பரணம் கிளை பிரதிநிதி விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு
* பரணம் ஆதிதிராவிடர்காலனி செயலாளர் கோவிந்தன் மறைவு விசாரிப்பு
* வடக்கு பரணம் கழகத் தோழர் விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு

பகல் 12.30 ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் கிராமம்
* குவாகம் கிளை பிரதிநிதி அன்பழகன் திருமணம் விசாரிப்பு
* கீழகுவாகம் கழக முன்னோடி ரத்தினசாமி மறைவு விசாரிப்பு

1.15 கு.வல்லம் கிராமம்
* வல்லம் கிளை கழக செயலாளர் முருகேசன் புதுமனைப் புகுவிழா விசாரிப்பு
* வல்லம் கழகத் தோழர் கண்ணன் புதுமனைப் புகுவிழா ( மதிய உணவு )
* வல்லம் கிளை பிரதிநிதி பொய்யாமொழி மகன் திருமணம் விசாரிப்பு

3.00 மணி இடையக்குறிச்சி கிராமம்
• முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( அதிமுக ) அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மறைவு விசாரிப்பு
• கழக தோழர் செல்வராசு தந்தை மறைவு விசாரிப்பு


மாலை 4.30 ஜெயங்கொண்டம் நகரம்
• மறைந்த கொள்கை முரசு “ அலைகடல் வெற்றிகொண்டான் “ இல்லம்- இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

5.30 தா.பழூர் ஒன்றியம்
* ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ( 6.00- 8.00)

8.30 ஜெயங்கொண்டம் நகரம்
* மறைந்த மருத்துவர் விஜயன் உடலுக்கு இறுதி அஞ்சலி

9.15 உடையார்பாளையம் பேரூர்
* மறைந்த கழகப் பேச்சாளர் சி.ஆர்.மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி

10.00 ஜெயங்கொண்டம் ஒன்றியம்
* வளவெட்டி குப்பம் கழக முன்னோடி முருகேசன் மறைவு அஞ்சலி

இரவு 10.45 அரியலூர் வீடு – இரவு உணவு.
( கிட்டத்தட்ட 160 கி.மீ சுற்றுப்பயணம், 14,15,16,17 அனைத்து நாட்களுமே இப்படிதான் )

இது என்ன கல்யாணத்திற்கு, சாவிற்கு போனதெல்லாம் கணக்கான்னு ஆரம்பிச்சுடாதீங்க... எங்கு போனாலும் பொதுமக்கள் சந்திப்பு தான், பொதுப் பணியின் அங்கம் தான். நோக்கம் அதுதான்.

தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் பணியையும் ஒரு நாள் பதிவிடுகிறேன். ( தினமும் போட்டால் உங்களுக்கே அலுப்பாயிடும்.)

# இயக்கப்பணியும், பொதுப்பணியும் முடித்துதான், இணையப்பணி. அதுவே உங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் என்ன சார் செய்ய ?   '''



தோழர்களே ....
அவருடைய இந்த ஒரு நாள் பட்டியல் படிப்பதற்கே நமக்கு மூச்சு வாங்கும் பொழுது, சற்று யோசித்து பாருங்கள் சமூக பணி எவ்வள்ளவு சிரமம் என்று, ஆனால் அந்த பணியை ஆர்வமுடன் செய்யும் பொழுது அதில் ஒருவித மன அமைதியும் திருத்தியும் கிடைக்கும், ....

இது வரை அரசியல் மீது இருந்த ஒரு தவறான பார்வையை நீக்க இந்த ஒரு பதிவே போதும் நினைக்கிறன் , ஆம் இது ஒரு வரலாற்று பதிவு, என்னதான் பணம்,செலவாக்கு, மரியாதை, இருந்தாலும் ஒரு சராசரி மனிதனுக்கு கிடைக்கும் சுதந்திரமும், ஓய்வு நேரமும், பொழுதுபோக்கோ நம்மை போன்ற சமுகவதிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது...ஒரு சராசரி சாமானியன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்றால் அது ஒரு பெரிய விஷயமல்ல,ஆனால் நாம் கண்டிப்பாக செல்லவேண்டும் காரணம் நாம் அவர்களின் ஊழியன் ...அவர்களால் இந்த இடத்திற்கு வந்தவர்கள் எனவே ஒரு சமூகாவதிக்கு கிடைக்கும் செல்வாக்கை மடுமே பார்க்கும் இந்த உலகம் அவர்களுக்கு இருக்கும் கடமைகளையும், எதிமங்கலையும் பார்பதில்லை ....கொஞ்சம் இரண்டு பக்கத்தையும் பாருங்க ....pls..