"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?
குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்?
கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான்.
அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.
அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?
அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?
சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)
இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்?
கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010. மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்!
இதோ அந்த நூலில் இருக்கும் கலைஞர் அவர்களின் திரையுலக பங்களிப்பை விரிவாக காணுங்கள்.
**********************************************************
கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.
.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.
ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.
1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.
1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..
1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி
1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம் "பெரியம்மா குத்துவிளக்கு , சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு" இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.
1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.
1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.
'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'
அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.
மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.
52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'
என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி
53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட் 'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.
பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி. திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்.
1953 ல் வந்த படம் 'நாம்'
ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.
இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.
1954ல் வந்த படங்கள்
மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.
அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் "மலைக்கள்ளன்".கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.
அடுத்து "அம்மையப்பன்.".எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்
1956ல் வந்த படங்கள்
"ராஜாராணி"..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.
"ரங்கோன் ராதா"...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகள்
\\ திண்ணை தூங்கி பண்டாரம்
திருவோடு ஏந்தும் பரதேசி
தெருவில உருளும்
திருப்பதி கோவிந்தா..கோவிந்தா
இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு
உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்
என்றும் எதிலும் பொதுநலம் \\
1957ல்
புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம் புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா
1960ல் வந்த படம் குறவஞ்சி..
இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.
1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி
1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.
1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.
1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.
1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.
1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.
1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.
1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.
1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.
1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்
1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்
1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.
1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.
இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.
1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.
அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.
ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.
பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் "பூக்காரி "வந்தது.
கலைஞர் கதை மட்டும் எழுத "அணையா விளக்கு" வந்தது
பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.
1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.
1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு
1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்
1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்
1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.
1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை
1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.
1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.
1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.
1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு
1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.
1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.
1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.
1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்
1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.
1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்
1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.
1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.
1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.
1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.
1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.
1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.
1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்
1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை
1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை
1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை
1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்
1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்
1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி
பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்
2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை
அதன் பின்னர் மீரா ஜஸ்மின் நடித்த பெண் சிங்கம்,பின்னர் பிரசாந்த் நடிக்க பொன்னர் சங்கர் வந்தது.
தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது
1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.
இடைவிடாமல் 90 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது.
இதே கலைஞர் அவர்கள் திரைத்துறையில் மட்டுமா ஜொலித்தார்.
நெஞ்சுக்கு நீதி 5ம் பாகம் வெளியீடு ஜூன் 2, 2013
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி (5 பாகம்) இனியவை இருபது, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர் -சங்கர், தொல்காப்பியப்பூங்கா போன்ற பொக்கிஷங்களை கொடுத்துள்ளார். இதை தவிர ஏராளமான சிறுகதைகள், எண்ணிலடங்கா கவிதைகள், மற்றும் நாடகங்களான மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், உதயசூரியன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, சிலப்பதிகாரம் ஆகியவை முக்கியமானதாகும். தூக்கு மேடை, காகிதப்பூ இவற்றில் அவரே நடித்துள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியுள்ளார். அது தான் பின்னர் கவிஞர் பா.விஜய் நடிக்க "இளைஞன்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
ஆக தமிழக சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எல்லீஸ் ஆர் டங்கன் . டி ஆர். சுந்தரம் என்னும் ஜாம்பவான்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர் அவர்கள் தமிழக திரைப்பட வரலாற்று நூற்றாண்டின் இறுதியில் இப்போது ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுடன் கூட வேலை செய்து செம்மொழி நூற்றாண்டு பாடலை கூட எழுதி வரும் கலைஞர் மஞ்சள் பை நிறைய பணம் எடுத்து வந்து தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்னும் நிலையில் இல்லை. ஒரே ஒரு பேனாவும் அவரது மூளையும் மூலதனமாக போதும்.
இனியாவது கலைஞரை மஞ்சள் பையுடன் வந்தார் இன்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என புலம்பும் பொறாமை கொண்டவர்களிடம் இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம். ஊரான் சொத்துகளை எல்லாம் கலைஞரின் சொத்து என பொய்ப்பிரச்சாரம் செய்யும் புண்ணியாத்மாக்களிடம் புரியும் படி இதை நாம் சொல்லலாம்.
வாழ்க கலைஞர்!
படித்ததில் பிடித்தது..
கலைஞரின் எழுத்து மற்றும் நிர்வாகத் திறமைகளை மிகத் தெளிவாகக் கூறினீர்கள். யாரும் மறுக்கமுடியாது. அவரை வசைபாடுவோருக்கு ஓரளவு பதில் அளித்துவிட்டீர்கள்.
ReplyDeleteஆனாலும் 2 ஜி - விஷயத்தில் அவரை நீங்கள் காப்பாற்ற முடியுமா? அரசியலுக்கு வரும் முன்பு, வெறும் சினிமா வசனகர்த்தாவாக இருந்தபோது அவரிடம் இருந்த நேர்மையும் தூய்மையும் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு மாறிவிட்டதை யாரால் மறுக்க முடியும்?
என்ற போதிலும், 'மஞ்சள் பையுடன் வந்தவர்..' என்ற பழியை (மட்டும்) நீங்கள் போக்கி விட்டீர்கள் என்பது உறுதி!
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
(http://ChellappaTamilDiary.blogspot.com)