Tuesday, January 7, 2020

கடவுள் மறுப்பு கொள்கை அல்ல அது ஒரு உண்மை..

* நாத்திகர்களின் தெளிவான பார்வை!

கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.

நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?

“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது

ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.

மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.

பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவோம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.

#பகிருங்கள் #Copied