Tuesday, June 19, 2012

கண் கலங்கிய கலைஞர்


பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கலைஞர் அன்று சட்டசபையில் கண் கலங்கிக் கூறிய அந்த ஒரு நிகழ்வு ....

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கலைஞர் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கலைஞர் பேசுகையில், தோழமை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது கலைஞரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

கலைஞர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.
நன்றி - இராசா 

Saturday, June 9, 2012

காமம், காதல், இன்பம் என்பததெல்லாம் என்ன?

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

SEX
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் காமம் கலக்காத காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா?

அதாவது நான் காமத்தை தவறு என்று சொல்லவில்லை. உடலழகில் வசியப்பட்டு காதல் என்ற உன்னதமான சொல்லை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

முதலில் காமம் என்பது என்ன?

காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்கள் ...


அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது

ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?

இவை எல்லாவற்றோடும், காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?

ஒரு காலத்தில் நான் கில்லி விளையாடினேன், கோலி விளையாடினேன், பின்னர் பந்தாட்டம், பின்னொரு நாள் கணினியில் விளையாட்டு இப்போது அவைகளை விளையாடுவதில்லை. அதே போல விளையாட நேருமானால் விளையாடுவதில் தயக்கம் ஏதுமில்லை. காமம் இது போல ஒரு விளையாட்டா? வாழ்க்கையில் ஒரு பருவமா? அப்படியாயின் ஏன் அதைத் தாண்டிய பருவத்தில் ஏன் விடாமல் பற்றிக் கொண்டு அலைகின்றனர் மக்கள். ஏன் இந்த அலை கழிப்பு? வாழ்நாளின் எவ்வளவு நேரத்தை ’வெற்றம் பல தேடி பிறந்த இடத்தையும், கறக்கும் இடத்தையும் நாடி’ வீணடிக்கின்றனர் என பட்டினத்துப் பிள்ளை மட்டுமல்ல நாமும் கவலைப் படவே செய்யலாம். சமூக நெருக்கடியா? அல்லது மனதளவில் மனிதன் பதினெட்டு வயதிற்குப் பின் முதிர்வதே இல்லையா? அப்படியானால் என்ன ஒரு வாழ்க்கை இது?
LOVE
அல்லது பசி, தாகத்தைப் போல இது ஒரு இயல்பான ஒரு உடல் தேவையா? அப்படியானால் ஏன் என்னுடைய பதின்மப் பருவத்திற்கு முன்னர் இது என்னை அலைக்கழிக்கவில்லை.
அல்லது சிக்மெண்ட் ப்ராய்டின் உளவியல் சொல்வது போல பிறப்பிலிருந்தே ஒவ்வொரு நாளும் பல தடவை காமத்தின் உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறதா? அவற்றைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் இருந்ததா?

காமத்தின் பின்னாலிருக்கும் சமூகக் காரணிகள் என்ன? அழுத்தப் படுவதால் பீறிடுகிறதா? சமூக மதிப்பீடுகள் நம்காமச் செயல்பாடுகளை பாதிப்பது எவ்விதங்களில்? நம்முடைய அலுவலக, சமூகச் செயல்பாடுகளின் நேர்மை,எத்தனை சதவீதம் உடல் உறவுக்கான சாத்தியப்பாடுகளுக்காக ஏங்கும் இச்சையினால் பலியிடப்படுகிறது?

தந்திர யோக முறைகளில் குறிப்பிடுவது போல காமம் ஓஜஸ்சக்தியாக மடை மாற்றப் பட வேண்டுமா? சாத்தியமா? காமத்தின் ஊடாக ஆண் பெண் உறவின் நிலைப்பாடுகள் என்ன? அதன்மூலமாக நிகழும் உடல் அரசியல் என்ன? அதிகார சமன்பாடென்ன? காமத்தைப் புரிந்து கொள்வதும், அதை ஆள்வதன் மூலமாக ஆதிக்கம் செலுத்தப்படாத உறவு சாத்தியப்படுமா?

காமத்தை சிறப்பாக கையாள உடல், உணர்வு,எண்ணம் குறித்த அடுக்குகளின் விழிப்புணர்வும், நம்மளவில் இம் மூன்றில் எதை விட எது வலிமையானதாகப் பெரும்பாலும் செயல்படுகின்றது? என்பதைப் பற்றிய ஞானமும் அவசியம். இன்பத்தில் ஆழ்வது, விலக்குவது அல்லது விடுபட்டு உணர்வது எது நமக்கான செயல்பாடு என்பதைப் பற்றிய விவேகத்தையும். வெளியிலிருந்து கற்க முடியாது. உனக்குள்ளேதான் நீ தேடவேண்டும் ...


நீ உடலை காதலிக்கிறாய் என்றால் ஒரு விலை மாது போதும்
நீ உயிரை காதலிக்கிறாய் என்றால் ஒரு நாய்குட்டி போதும்
உடலும் உள்ளமும் சேர்ந்ததுதான் காதல்-: கவிஞர் வைரமுத்து...

காதல் காமம் வாழ்க்கை அல்ல, காதலும், காமமும் இல்லா வாழ்வு வாழ்க்கையே அல்ல


நன்றி :- அமிர்தம் 

Tuesday, June 5, 2012

திராவிடன் சாகவேண்டும் - ஆரியன் யாகம்

diravidam

“இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம்.

இத்தகைய திருட்டு இனங்கள் நுழைவதற்கென்றே அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே அமைக்கப்பட்டுவிட்டனவோ என்று எண்ணும்படியான வடஇந்திய மலைப்பிரதேசங்களான இமயமலை இந்து குஷ்மலைகளின் இடை இடையேயுள்ள கைபர் பாஸ், போலன் பாஸ் முதலிய இடைவெளி கணவாய்களின் வழியாக தங்களின் ஆடு, மாடுகளை மேய்ப்பவர் போல் மேய்த்துக்கொண்டே உள்நுழைந்து சாரி சாரியாக முகாம் அடித்துக் கொண்டவர்கள்தான் இவ்வாரியப் பரதேசிகள்.

நம் முன்னோர்களோ அப்பாவிகள். ஏதோ தங்கள் விவசாயமுண்டு, தாங்களுண்டு என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவந்த அமைதிப் பிரியர்கள். இப்பொழுதும் பார்க்கிறோமில்லையா – லம்பாடிகள் – நரிக்குறவர்களை. இன்று வருவார்கள், நாளை போய்விடுவார்களென்றே அசிரத்தையாய் இருந்து விட்டார்கள் - அக்கால நம்முன் னோர்கள் - முளையிலேயே கிள்ளி எறியாமல்.

கூட்டங்கூட்டமாக வந்துகொண்டேயிருந்த மத்திய ஆசிய ஆரிய காடுமிராண்டிகள், சீக்கிரமாகவே தங்கள் வாலாட்டத்தை ஆரம்பித்தார்கள். நம் மக்களிடம் பல நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்; கதைகள் கட்டினார்கள். செப்படி வித்தை, ஜேப்படி வித்தை காட்டினார்கள். இயற்கைச் சம்பவங்களைக் காட்டிக் காட்டி கடவுள் என்றொன்றை கற்பனை செய்து அதுவரையில் மலைப்பபோ, மயக்கமோ இன்னதென்றறியாத திராவிடர்களின் மூளையைக் குழப்பியே விட்டுவிட்டார்கள்.

கார்ல் மார்க்ஸ் என்றும் பேரறிஞர் தெரியமலா சொன்னார். தன் புத்தகமான மூலதனம் என்னும் பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில் “மதம் மக்களுக்கு மயக்க மருந்து” என்று.

கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் பிராமணன் என்றும், கடவுளின் கரங்களிலிருந்து வெடித்து வந்தவன் சத்திரியன் என்றும், கடவுளின் இடுப்பிலிருந்து வெடித்தவன் வைசியன் என்றும், கடவுளின் பாதத்திலிருந்து வெடித்தவன் சூத்திரன் என்றும் பல ஆரிய சாகசங்களைக் கையாண்டு திராவிடர்களில் பலரை நம்பச் செய்தனர். நான் 30 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் இங்கும் வைத்திய தொழில் செய்துவரும் அனுபவசாலி. ஆனால் இம்மாதிரியான டெலிவரி கேசுகளை நான் கண்டதுமில்லை, கேட்டுமறியேன்.” என்று 1919லேயே வீரமுழக்கமிட்டு பேசியவர்தான் அன்றைய திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி டாக்டர் டி.எம்.நாயர்.

விடுதலை வேட்கை வீறுகொண்டிருந்த அந்நாளில் தமிழின உணர்வு, தனித்தமிழ் தேவை அறியப்படாத காலம் அது.

அன்றைய சென்னை மாகாணத்தில் திராவிடர் இயக்கத்தின் தாய்க்கழகமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை 1916ஆம் ஆண்டு தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர் டி.எம். நாயர் .

பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு அரசியலின் சரியான, துல்லியமான, வீரியமிக்க வடிவம் நாயரிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாயரை புறக்கணித்து இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியலைப் பேச முடியாது. தமிழர்களின் வரலாற்றை எழுதவும் முடியாது. அவ்வளவு கூர்ந்த பார்வையைக் கொண்டிருந்த நாயர் இன்றைய நதிநீர்ப் பகிர்வு பற்றியும் அன்றே முக்கிய உரை நிகழ்த்தியுள்ளார்.

பாலக்காடு மாவட்டம் திரூரில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர் தந்தை பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர். பொது வாழ்க்கையில் 1904ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த டி.எம். நாயர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். காலனிய அரசு உருவாக்கிய தொழிற்சாலைகளுக்கான தொழிலாளர் ஆணையத்தின் முக்கிய உறுப் பினராகச் செயல்பட்டவர்.

சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1912-1916 காலகட்டத்தில் பணியாற்றியபோது தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம் பற்றி நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா மாநாட்டில் ஆற்றிய உரை இன்றைய நீர்ப்பாசனப் பிரச்சினைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

“தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக புத்திமான்கள் இருப்பது போலவே ராஜதானியிலுள்ள மற்ற ஜில்லாக்களை உத்தேசித்து தஞ்சாவூர் ஜில்லா நிலத்தின் வளப்பமும் ச்லாக்யமாயிருக்கிறது. ஆனால் நிலம் விளைவதும் விவஸாயம் கடைத்தேறுவதும் மழையையும் காவேரியில் வரும் ஜலத்தையும் பொறுத்திருக்கிறது.

ஆப்ரிக்காவில் இஜிப்ட் என்பதாக ஒரு தேசம் இருக்கிறது. அதில் நைல் என்பதாக ஒரு பெரிய நதி ஓடுகிறது. லார்ட் ரோஸ்பரி என்பவர் ஒரு ஸமயம் இஜிப்ட் தேசத்தைப் பற்றி பேசியபோது இஜிப்ட் தேசமே நைல் நதியாகும், நைல் நதியே இஜிப்ட் தேசமாகும் என்றார். அப்படியே நாமும் தஞ்சாவூரே காவேரி நதியாகும், காவேரி நதியே தஞ்சாவூர் ஜில்லாவாகும் என்று சொல்வதும் ஸரியாகும்.

காவேரியில் சலாக்யமான வண்டல் வருவதால் நாளது வரையில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு தென்னிந்தியாவின் தோட்டம் என்று கௌரவம் இருந்து வருகிறது. இந்தக் காவேரி இல்லாவிட்டால் தஞ்சையின் நிலைமை மிகவும் குறைவு அடைந்திருக்கும். இந்த விஷயம் வெகுகாலமாகத் தெரிந்ததே. இதை உத்தேசித்து ஹிந்து ராஜாக்கள் வெகுகாலத்துக்கு முன்னாலேயே காவேரியிலிருந்து பாசனத்துக்கான வேலைகள் ஏற்பாடு செய்ய ஆரம் பித்தார்கள். இங்கிலீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுவதற்கு முன்னாலேயே இவை ஆரம்பிக்கப்பட்டன.

அநேக ஆறுகளிலுள்ள ஜலத்தைத் தேக்கி பக்கத்தில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குக் கட்டிய பழைய கட்டிடங்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன.

அவைகளால் தஞ்சாவூர் அரசர்கள் நீர்ப்பாசன விஷயமாய் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. க்ராண்ட் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கல்லணையுங்கூட வெகு காலத்துக்கு முன்னால் கட்டப்பட்டதே.

சில வருஷங்களுக்கு முன்னால் சில மாறுதல்கள் மாத்திரம் செய்யப்பட்டு தூக்கு ஷட்டர்கள் போட்டிருக்கிறார்கள். உண்மையில், 1836ஆம் வருஷத்தில் ஸர் ஆர்தர் காட்டன் என்பவர் அப்பர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் மேல் அணைக்கட்டு கட்டின வரையில், தஞ்சாவூரார்கள் ஹிந்து அரசர்கள் செய்த பாசன ஏற்பாட்டின் பலனையே அடைந்து வந்தார்கள்.

1801 ஆம் வருஷத்தில் ப்ரிட்டிஷார் தஞ்சாவூரை தமது வசம் அடைந்ததற்கு முன் மாத்திரம் தேசமானது குழப்பமான நிலைமையில் இருந்ததால் காவேரி நீராரம்பங்களின் பாசனம் மிகவும் கெடுதலாயிருந்தது.

கம்பெனியார் தஞ்சாவூரைக் கைவசப்படுத்திக் கொண்டவுடனே காவேரி நீராரம்பங்களின் பாசனத்தை வ்ருத்தி செய்வதற்கு வேண்டிய ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் காவேரியில் உள்ள அதிக மணலை அப்புறப்படுத்துவதிலேயே வெகுவாய் ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளால் அதிக பலன் ஒன்றும் உண்டாகவில்லை. கொள்ளிடத்தில் தலைப்பில் அப்பர் அணைக்கட்டு கட்டின பிறகுதான் காவேரிக்கு நன்றாய் ஜலம் வரலாயிற்று.

இப்படி மேல் அணைக்கட்டு கட்டினதால் கொள்ளிடத்திலிருந்து பிரியும் வாய்க்கால்களுக்கு ஜலம் குறைந்து போயிற்று. அதனால் வரும் ஜலநஷ்டத்துக்கு ஈடு செய்ய லோயர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கீழ் அணைக்கட்டு ஒன்று 70 மையிலுக்கு அப்பால் கட்ட வேண்டியதாயிற்று. அதன் பிறகு 1887-1889 ஆம் வருஷத்தில் கல்லணையில் காவேரி, வெண்ணாறு, ஹெட் ரெகுலேடர்கள் கட்டவே, காவேரி, வெண்ணாறு இந்த இரண்டு நதிகளிலும் ஜலம் போவதை ஒழுங்குபடுத்துவது ரொம்ப ஸுலப மாயிற்று.

பிற்பாடு செய்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெள்ளக் காலத்தில் ஜலத்தை சீர்படுத்தவும் ஜலத்தை ஸரிவர வாய்க்கால்களில் பாய்ச்சவுமே செய்யப்பட்டவை. இவைகளால் காவேரி பாசன ஏற்பாட்டுக்கும் இந்தியாவிலுள்ள மற்ற பாசன ஏற்பாடுகளுக்கும் ரொம்ப வித்யாஸமிருக்கிறது.”

டி.எம்.நாயர், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் 1894ல் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார்; அதன்பின் லண்டனில் காது, மூக்கு, தொண்டை குறித்த அறுவை சிகிச்சைக்கான கல்வியையும் முடித்து 1896ல் எம்.டி. பட்டம் பெற்றார். பின் பாரிஸ் சென்று இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மாணவர் கழகச் செயலாளராகவும், எடின்பரோ இந்தியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

தொடக்கத்தில் காங்கிரஸ்காரராகத்தான் பொதுப்பணியைத் தொடங்கினார் நாயர். சென்னை, திருவல்லிக்கேணி வட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 12 ஆண்டு காலம் மாநகராட்சியில் பணியாற்றினார்! 1912ல் சென்னை மாநகராட்சியால் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

காங்கிரஸ் பெயரால், பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததைக் கண்டு, டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர் ஆகியோருடன் இணைந்து ‘நீதிக்கட்சி’ என்னும் தமிழகத்துக்கு வரலாற்றுத் திருப்பம் தந்த இயக்கத்தை எழுப்பினார். 1917இல் கட்சியால் நடத்தப்பட்ட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியராக விளங்கி பார்ப்பனர்கள் உலகத்தில் பெரும் கலகக்காரராக கருதப்பட்டார்.

ஜஸ்டிஸ் இயக்கம் ஆரம்பித்த பிறகு சர் லயோனெல் கர்டிஸ் என்ற ஓர் ஆங்கிலேயர், பொது நலத்திற்கு உழைத்துக் கொண்டிருந்த அரசியல் அறிஞர். இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமையைக் கண்டறிந்து கொள்ள தானாகவே இந்நாட்டிற்கு வந்து டில்லி, பாட்னா, கல்கத்தா, அலகாபாத், நாகபுரி, பம்பாய் முதலிய ஊர்கட்குச் சென்று, ஆங்காங்கிருந்த எல்லா முக்கிய அரசியல் தலைவர்களையும் கண்டு பேசி அவர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு சென்னை வந்து கன்னிமாரா ஹோட்டலில் தங்கினார்.

அவர் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களை, தான் பார்த்துப் பேச வேண்டுமென கருதுவதால், தன்னை வந்து சந்திக்குமாறு வேண்டி ஓர் கடிதம் எழுதினார். அதற்கு நாயர் அவர்கள் (Mountain will not go to Mohahommed, Mahommed should go to the Mountain) முகம்மது அவர்களிடம் மலை போகாது, முகம்மதுதான் மலையிடம் போகவேண்டுமென்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தாங்கள் எவ்வளவு பெரிய மனிதரானாலும் என்னைச் சந்திக்க வேண்டுமானால் நீங்கள்தான் வந்து என்னைச் சந்திக்க வேண்டுமென பதிலெழுதிவிட்டார்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் சர் லயோனெல் கர்டிஸ் தன் தவற்றை உணர்ந்து உடனே டாக்டர் டி.எம்.நாயர் அவர்கட்கு, நாயர் அவர்களைத் தன்னை வந்து சந்திக்குமாறு எழுதினது தவறுதான் எனவும், அதற்காக தன்னை மன்னிக்க வேண்டுமெனக் கோரியும், நாயர் அவர்களை அவரது வீட்டிலேயே வந்து சந்திப்பதாகவும் பதில் எழுதி விட்டு அது போன்றே டாக்டர் டி.எம். நாயர் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் பயணம் முடிந்த பிறகு இந்திய அரசியல் நிலையைப் பற்றி ஓர் புத்தகம் வெளியிட்டார் சர் லயோனெல் கர்டிஸ். அதில் அவர், தான் இந்தியா முழுவதும் சுற்றி அநேகமாக எல்லா முக்கிய அரசியல் தலைவர் களையும் சந்தித்துப் பேசியதாகவும், அவர்களில் டாக்டர் டி.எம்.நாயரைப் போன்று தெளிந்ததும், சாத்தியமானதுமான (Practical Politician) கருத்துடைய தலைவர் வேறு யாரையும் தான் காண முடியவில்லை என எழுதியுள்ளார்.

மாண்டேகு இந்தியா வந்து சென்றபின் 1919ஆம் ஆண்டில் லண்டனில் ஜாயின்ட் பார்லிமென்டரி குழுமுன் வகுப்புவாரி உரிமை தொடர்பாக சாட்சியம் அளிக்க நீதிக்கட்சியின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் அங்கு சென்றார். சர்.கே.வி. ரெட்டி, சர்.ஏ.ராமசாமி முதலியார், கோகா, அப்பாராவ் நாயுடு ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றனர். புதிய சட்டத்தில் அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி உரிமை என்பது மக்கள் தொகைக்கேற்ப அமைந்த விகிதாசார முறையேயாகும் என இக்குழு சாட்சி அளித்தது.

தேர்தல் காலங்களில் பொதுத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குழு கோரியது. இக்கோரிக்கை பிரிட்டனிலுள்ள அரசியல்வாதிகட்கு வியப்பை அளித்தது. ஏனென்றால், பெரும்பான்மை பார்ப்பனரல்லாத சமுதாயம் சிறுபான்மை பார்ப்பனச் சமுதாயத்திடமிருந்து பாதுகாப்புக் கேட்பது அவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. இதை டாக்டர் டி.எம். நாயரிடம் அவர்கள் அறிவித்தார்கள். அப்போது டாக்டர் நாயர் “ஓர் ஓநாயிடமிருந்து மிகப் பலவான ஆடுகளைப் பாதுகாப்பதில்லையா?” என்று விளக்கினார்.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மாகாணமாக சென்னை ராஜதானி இயங்கியது. அப்போது சர்.பி.டி. தியாகராயர்தான் இச்சங்கத்தைத் தோற்றுவிக்க உதவினார். இதன் முதல் முனைப்பு உதவியாளரே டாக்டர் நடேசனார்தான். அரசு அலுவலர்களின் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறனாளராக இருந்தவர் திரு.டி.எம். நாயர், அரசு அலுவலர்களுக்கு முதல் ஊதியக்குழு பெற்றுத் தந்தார். டி.எம். நாயர் லண்டனுக்குச் சென்று ப்ரிவ்யூ கவுன்சிலில் வாதாடி அரசு ஊழியர்களுக்கான நியாயமிகு ஊதியக்குழுவைப் பெற்றுத் தந்தவர் நாயர் அவர்கள்.

‘ஒரு நாள் சென்னை டவுன்ஹாலில் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. அதில் டாக்டர் நாயர் பேசினர். அவருக்குச் சில கேள்விகள் கூட்டத்திலிருந்து வந்தது.

கேள்வி : “நீங்கள் ஏன் காங்கிரசை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்யம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?” பதில் : “யான் காங்கிரஸில் தொண்டு செய்தவனே, அது பார்ப்பனர் உடைமையாகியதை யான் உணர்ந்தேன். காங்கிரசால் தென்னாட்டுப் பெருமக்களுக்குத் தீமைவிளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைக்கலானேன். வகுப்பு வாதத்தால் சுயராஜ்யம் வரும் என்று எவருங் கூறார். வகுப்பு வேற்றுமை உணர்வு தடித்து நிற்கும்வரை சுயராஜ்ம் என்பது வெறுங்கனவே யாகும். வகுப்பு வேற்றுமையுணர்வின் தடிப்பை வகுப்புவாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்யத் தொண்டில் இறங்க வேண்டுமென்பது எனது கருத்து. காலத்துக்கேற்ற தொண்டு செய்வது நல்லது. வகுப்பு வேற்றுமை இல்லாத நாடுகளைப் பற்றிய சரித்திரங்களை இங்கே ஏன் வலித்தல் வேண்டும்? இந்தியா ஒரு விபரீத நாடு. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் நாடு.”

கேள்வி கேட்டவர் காங்கிரஸ்காரர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

1919 ஆம் ஆண்டு லண்டனில் பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியிடும் சாட்சியங்கள் கூறி தங்கள் கட்சிகளுக்கு ஆதரவு பெற காங்கிரஸ் சார்பில் பாலகங்காதர திலகர் சென்றார். வைசிராய் கவுன்சில் அங்கத்தினராக இருந்த வி. ஜே. பட்டேல், சென்னை சட்டசபை அங்கத்தினர் யாகூப்ஹாசன், ரங்கசாமி அய்யங்கார் மற்றும் பத்திரிகையாளர்களும் சென்றனர். ‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார் என பலர் அங்கு சென்று பேசியும் எழுதியும் வந்தனர்.

நாயர் ஒருவர்தான் பார்ப்பனரல்லாத கட்சிக்காக லண்டனில் சென்று வேலை பார்த்தார். அங்கு சர்க்கரை வியாதியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாயர் படுத்த படுக்கையாகி விட்டார். கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு முன் நீதிக்கட்சியின் சில தலைவர்கள் லண்டன் போய் சேர்ந்தார்கள். ஆனால், கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு ஒருநாள் முன்பு (17-7-1919) நோய்வாய்ப்பட்டு லண்டனிலேயே இறந்துவிட்டார் நாயர்.

இறுதி ஊர்வலம் லண்டன் நகரில் கோல்டன் கிரீன் என்ற இடத்தில் நடந்தது. இங்கிலாந்து மற்றும் பிரான்சில் இருந்து வந்திருந்த நாயருடைய வெள்ளைக்கார நண்பர்களும் நீதிக்கட்சி தலைவர்களும் சில காங்கிரஸ் பிரமுகர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். நாயரின் நெருங்கிய நண்பரான ‘இந்து’ கஸ்தூரிரங்க அய்யாங்கார் லண்டனில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்பது எல்லோராலும் வருத்ததோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது.

லண்டனில் நாயர் நோய்வாய்பட்டிருந்தபோது, சென்னையில் ‘நாயர் இறந்து விடவேண்டும்’ என்று சிறப்பு யாகங்களை பார்ப்பனர்கள் நடந்தி இருக்கிறார்கள்.

திராவிடர்-ஆரியர் போர்தான் ராமாயாணம் என்றார் நேரு. ராமாயணம் காலந்தொட்டு இன்றுவரை அது தொடர்போராட்டம்தான்.
இன்றைய நிலவரப்படி ....
பார்ப்பான் என்று எதுவும் இல்லை. இருப்பது அனைத்தும் கடைந்தெடுத்த பச்சை பிராமணர்களே. தமிழ்நாட்டில் தமிழரென்றும், கேரளாவில் மலையாளி என்றும், கர்நாடகாவில் கன்னடன் என்றும், ஆந்திராவில் தெலுங்கனென்றும், மஹாராஷ்ட்ராவில் மராத்தி என்றும், வங்கத்தில் பெங்காலி என்றும் கூறிக்கொள்ளும் பிராமணர்கள் முகவரியற்றவர்கள்.
நன்றி :- வான்மதி 

Friday, June 1, 2012

வேலைக்குப் போகும் பெண்கள்

shanthibabu

வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது என சிலவற்றை பட்டியலிடலாம்.

1. நேரத்தை நிர்வகிக்கும் திறமை

2. பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது

3. நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது

4. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.

5. அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.

6. சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.

7. கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது

8. வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது

9. அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது

10. பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது
11. தங்கள் வாழ்க்கை முறையும் நம் வரலாற்றையும் கற்றுத்தருவது .

தொடக்க பள்ளிக்கு முந்தைய காலகட்டத்தில் - 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு பிந்தைய காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் தோழியாகவும்.

மேலே சொன்னதுபோல நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் நாமும் சவால்களை சமாளித்து நம் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க முடியும் .................வாழ்த்துக்கள்!

நன்றி :- நிலா