Thursday, January 20, 2011

எனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்



தமிழ்நாட்டில் திரை உலகின் பாதிப்பால் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததைப்போல் என்னுள் பல மாற்றங்களை கொண்டுவந்த படைப்புகளுள் சில ... இவையாவுமே உங்களையும் பாதித்திருக்கும் என்றும் எண்ணுகிறேன் ..சினிமா மக்களை சீரழித்து விட்டது என்பதைவிட மக்களை சீராக அழைத்த  தாகவே நான் எண்ணுகிறேன் ..

பராசக்தி

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.
"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.
பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.

‘பொண்ணு பொறந்த நாகம்மையார், பையன் பொறந்த பன்னீர்செல்வம்னு பெயர் வைக்கனும்’ என்று வசனம் வரும். நாகம்மையார் தந்தை பெரியாரின் துணைவியார். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் தாய். பன்னீர்செல்வம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாருக்காக எதையும் செய்யக்கூடியவராக இருந்தவர்.

படத்தில் சிவாஜியின் காதலியாக வரும், பண்டரிபாய் பெரியாரின் சுயமரியதை கொள்கையை கடைபிடிக்கும் பெண். ஆணைவிட அதாவது கதாநாயகனைவிட புத்திசாலி. பண்டரிபாயின் சகோதரர், சுயமரியாதை கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் சொற்பொழிவாளர் கதாபாத்திரம்.

படத்தின் கடைசிக் காட்சியில், பண்டரிபாய்க்கும் சிவாஜிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று குடும்பத்தார், பேசிக்கொள்வார்கள். திருமணத்தை வைதீக முறைபடி நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, ‘அதெல்லாம் எதற்கு? தாலிகூட வேண்டாம். இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் போதும்’ என்று பெரியாரின் சுயமரியாதை திருமண முறையை வலியுறுத்திதான் படம் முடியும்.

பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான்.

அன்பே சிவம் 

அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண்மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம்.ஆனால் இத்திரைப்படம் பிடித்தது எங்கள் கிராமத்தில் எங்கள் இருவருக்கு மட்டும்தான்.பலருக்கு பிடிக்கலவில்லை என்று சொல்வதை விட புரியவில்லை என்று சொல்வதுதான் உண்மை. ஆனால் அன்று பிடிக்கவில்லை என்று சொன்ன அனைவர்க்கும் இன்று பிடித்த படம் அதே அன்பே சிவம் தான். என்ன செய்வது நல்ல படங்கள் வெற்றியடைய எத்தனை வருடம் தேவைப் படுகிறது.

ஒரு வரியில் சொன்னால் "கடவுள் என்றால் என்ன?" இதுதான் படத்தின் கதை. அதற்கான விள்க்கம் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பதிய பட்டிருக்கிறது. இப்படி பட்ட சிறந்த படத்தின் கதையில் கடவுள் பற்றிய விளக்கங்கள் கொண்ட காட்சிகளை ஒரு வரலாறாக சொல்லலாம்.

வீடு

பாலு மகேந்திராவின் "வீடு" ஒரு உன்னத தயாரிப்பு என்பதில் எவருக்கும், மாற்றுக் கருத்து இருக்காது.பெற்றோரை இழந்து தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாழும் நாயகி, அவளின் ஒரே சம்பளத்திலும் தாத்தாவின் பென்ஷன் பணத்திலும் தான் இவர்களின் குடும்ப வாழ்வை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிலையில் வாடகைக்கு வீடு தேடிக் களைத்துப் போய், அவளின் தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி சொந்த வீட்டைக் கட்டவேண்டும் என்று அவள் தீர்மானிக்கும் போது சந்திக்கும் சோதனைகள் தான் இப்படம்.அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் "வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்

2002 வருடம் வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கி, மாதவன்.சிம்ரன்,பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ் கீர்த்தனா பார்த்திபன் நடித்த
கன்னத்தில் முத்தமிட்டால்.என்னை பாதித்த மற்றொரு ஆழமான அழகான திரைப்படம் .இலங்கை அகதியாக விடப்பெற்ற ஒரு பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக்கொள்கின்றனர். இக் குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன்னை பெற்ற தாயை காண இவள் ஆவல் கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள். ஈழத்தை நினைகும்போதேலாம் என் கண் முன் நிற்க்கும் ஓர் காவியம் .

தென் மேற்கு பருவக்காற்று

சீனு ராமசாமி இயக்கியுள்ள இரண்டாவது படம் தென் மேற்கு பருவக்காற்று. சரன்யாவுடன், விஜய் சேதுபதி, வசுந்தரா சியேட்ரா ஜோடியாக நடித்துள்ளனர்.தமிழ் புவியியல் சார்ந்த படம் என்றால் அது தென் மேற்கு பருவக்காற்றுதான். பார்க்கும் எவரையும் சட்டென்று ஈரப்படுத்திவிடும் தமிழ் மண் சார்ந்த கதை. இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை. தமிழ் சினிமாவில், முதன்முதலாக சொல்லப்பட்ட புவியியல் பற்றிய படம்.  செழிப்பான கிராமத்துக்கும் வானம் பார்த்த வறண்ட பூமிக்கும் இடையே கதை நிகழ்கிறது.மனிதனின் உணவு, பழக்கம், உடை போன்றவை மாறலாம். ஆனால் எப்போதும் மனித குலத்திடம் மாறாமல் இருப்பது தாய் பாச உணர்வு ஒன்றுதான். அதனை இந்த படத்தில் கொட்டி காட்டியுள்ளனர்.
இத்திரைப்படங்கள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு(ம்) பிடித்த சில திரைப்படங்களிலிருந்து நான் பெற்ற பல பாடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதினால் பேருவகை அடைகிறேன்..இத்திரைப்படங்கள் யாவுமே மக்களுக்கு பொழுதுபோக்காக அமையாமல் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வுகளின் பொழுதுகளையே பிரதிபலித்ததின் காரணத்தால் காலம் கடந்தும் கவி சொல்லும் காவியங்கள் இவை .... 

3 comments:

  1. உங்களது சினிமா இரசனை நன்றாக இருக்கிறது... அன்பே சிவம் திரைப்படமும் எனக்கு பிடித்தி திரைப்படங்களில் ஒன்று...

    ReplyDelete
  2. ஆறிலிருந்து அறுபது வரை அலசியிருக்கிரீங்க.

    ReplyDelete
  3. உங்கள் சினிமா ரசனை மிக அருமை.. சினிமா என்பது சமூகத்தின் பாதிப்பும் யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பும் என்பதனை அழகான எழுத்து நடையில் கூறி உள்ளது உன்னதம் ... மேலும் சினிமா சம்மந்தப்பட்ட பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ....

    ReplyDelete