தொகுப்புகள்

Search This Blog

Monday, January 31, 2011

தமிழ் பேரு வெச்சா தப்புங்களா ? என அழுதார்...

                                                             (சிறப்பு மாணவர்கள் வள மையம் )
அன்புள்ள நண்பர்களுக்கு,

என் நெஞ்சத்தினை பாதித்த ஒரு உண்மை சம்பவத்தினை உங்களுக்காக கண்ணீரோடு காணிக்கையாக்குகிறேன்.

கடந்த திங்களன்று எங்கள் ஒன்றியத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் SSA(Sarva Shiksha Abhiyan ) மூலம் பெற்றோர் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதன் நோக்கம் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு பழுதுகளை சீரமைப்பது பற்றிய பயிற்சி வகுப்பு . ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

 நானும் சேர்மனான எனது மனைவியும் துவக்க விழாவினை துவக்கிவிட்டும் ,சிறப்புரை ஆற்றிவிட்டும் பின் அலுவலக வேலை காரணமாக பயிற்சி தொடங்கிய சில மணித்துளிகளில் கிளம்ப வேண்டியதாயிற்று . அதுசமயம் SSA அமைப்பின் அவினாசி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியை பற்றி பேசி இருந்தார்.எங்களுக்கு சட்டென்று அந்த பள்ளியைப்பற்றி தோன்ற உடனே அவரை அழைத்துக்கொண்டு அப்பள்ளியை பார்வையிட சென்றோம். அரசு நிதி கட்டிடம் கட்ட மட்டுமே சரியாகப்போனதால் ,தண்ணீர் தொட்டி மற்றும் அக்குழந்தைகளுக்கென நவீன கழிப்பறை கட்டித்தருமாரும் கேட்டுக்கொண்டார் .  சரி என்னால் முடிந்த அளவில் மிக விரைவாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி அமைச்சர் நிதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி குழந்தைகளை காண உள்ளே சென்றோம் . 

அங்கே மொத்தம் 22 குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர் . நாங்கள் உள்ளே சென்றதும் சில குழந்தைகள் வணக்கம் கூறி வரவேற்றனர் . சில குழந்தைகள் மட்டுமே அவர்கள் தங்களுக்கு தெரிந்தவாறு என்னிடம் அறிமுகம் செய்துகொண்டனர். அதில் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர்.ஒரு பையன் விசும்பிகொண்டிருந்தவாரே அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்தான் . நானும் என்னுடன் வந்தோரும் ஒவ்வொரு குழந்தைகளிடமும் நலம் விசாரித்தோம். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியர் அக்குழந்தைகளிடம் என் மனைவி சாந்தியை காட்டி இவர் யார் என்று கேட்டார்.அக்கா,அம்மா, புது டீச்சர் என்று பல பதில்கள் வந்த வேளையில் சாந்தி என்று அழுத்தமான குரலில் சத்தமான பதில் வர அனைவரும் ஆச்சர்யத்துடன் அந்த மனவளர்ச்சி குன்றிய 16 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவனை பார்த்து இவங்களை எப்படி தெரியும் என்று கேட்க "தெரியும்" என்று மட்டுமே மறுபடியும் பதில் சொன்னான். உன் பெயர் என்ன என்று கேட்டவுடன் நான்கு வயது பாலகன்போல திக்கிதிக்கி தன பெயர் தமிழரசன் என்று கூறினான் . என்னுடன் மிக இலகுவாக பலகினான். புன்முறுவல் கொண்ட முகத்துடனே காணப்பட்டான். அப்போது என்னுள்ளே பதினாறு வயதினிலும் எந்த கவலையும் இல்லாத இந்த சிறுவனின் நிலை கண்டு ஒருநொடி சந்தோசம் அடைவதற்குள் அவன் மீது இனம் புரியாத பரிவு ஏற்படத் துவங்கியது . அவன் உடல் வளர்ச்சிக்கு தகுந்த மன வளர்ச்சி இல்லாதது கண்டு மனம் சற்றே ஆதங்கப்பட்டது . இடையே தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதமான அலைபேசி இரண்டு மூன்று முறை ஒலித்தவாறே இருந்தமையால் நாங்கள் , உலகமே தெரியாமல் புது உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் அக்குழந்தைகளிடம் வருத்தத்துடன் விடைபெற்றோம் .
                                                                 (சிறப்பு மாணவர்கள் வள மையத்தில் குழந்தைகள் ) 
ஒருவாரம் கழிந்த பின்னர் நேற்று மாலை ஞாயிறுக்கிழமையாதலால் பனிச்சுமை சற்று குறைவாகவே இருந்தது . சுமார் நான்கு மணி அளவில் வழக்கமாக செல்லும் கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேக்கரியில் டீ குடிக்க என் மாப்பிள்ளை பார்த்தி,மற்றும் கட்சி உடன்பிறப்புகள் இருவருடன் சென்றேன். டீ கடையில் வழக்கம்போல அரசியலும் சினிமாவும் கலந்த டீ கடை டேபிள் போலிருந்தது . அப்பொழுது கலைஞரின் இயற்பெயர் என்ன ? என்று ஒரு குரலொலிக்க , என்னை முந்திக்கொண்டு தட்சிணாமூர்த்தி என்று பில் கொடுத்துக்கொண்டிருந்த நாகராஜ் அண்ணன் சொன்னார் .அவர் வயது 46.பனியன் கம்பெனியில் வேலை செய்துகொண்டுள்ளார் .

 என்னைப்பார்த்ததும் வணக்கம் , எப்டி இருக்கீங்க ? சாந்தியும், வாரிசு கலைநிதியும் எப்டி இருக்காங்க ? போன வாரம் எதோ கீழ விழுந்துட்டாத தம்பி சொன்னா. "பாபு கொஞ்சம் பத்தரமா பாத்துக்கங்க.இல்லாட்டி பின்னாடி நம்ம பையனாட்ட ரொம்ப கஷ்டமாயிரும் ." என்றார் . எனக்கு நாகராஜ் அண்ணனை மட்டுமே தெரியும்.அவருடைய குடும்பம்,வருமானம் , இருப்பிடம் பற்றி அவ்வளவாக தெரியாது. நான் உடனே "ஏனுங்னா என்னாச்சுங்" என்றேன். பின்னர் அவர் கூறியதை கேட்டதும் என் இதயமே நொறுங்கிவிட்டது. அவர் என்ன சொன்னாரென்றால்,

"அதுங்க பாபு நம்ம பெரிய பைய ஆறு மாச கொழந்தையா இருக்கறப்போ தொட்டல்ல இருந்து கீழ விழுந்துட்டான் . எங்க மாமியாகாரி காத்து கருப்பு வந்தரகூடாதுன்னு கோடரியோட கொழுவ புடி இல்லாம தொட்லுக்கு கீழ வெச்சிருந்தாங்க.குழந்தை தல கரெக்டா கோடரி மேல விழுந்து தலைல அடி பட்டிருச்சு.நாங்களும் உடனே டாக்டர் கிட்ட காட்டி மருந்து மாத்திரையெல்லாம் குடுத்தோம். ஒரு ரெண்டு மாசத்துக்கு பையனோட தல கெட கொள்ளாமையே இருந்துது.யாரவது தொட்டா அழுவான். உடனே எங்க சொந்த பந்தமெல்லாம், "அப்பவே சொன்னோம்.கொழந்தைக்கு சாமி பேர் வெக்கலாமுனு . நீதான் தமிழ்நாடு,தமிழ்,தலைவர்னு தமிழ்ல பேர் வெச்ச.பாத்தியா இப்ப என்ன ஆச்சுன்னு." என்று என்னை குத்தம் சொன்னாங்க . 
                                                                       (சிறப்பு மாணவர்கள் வள மையத்தில்  தமிழரசன் )
ஏனுங்க தமிழ் பேரு வெச்சா தப்புங்களா என அழுதார் ?" ஒரு வருஷம் கழிச்சு , பையனுக்கு வலிப்பு வந்திருச்சு . உடனே ஸ்கேன் பாக்கணும்னு சொன்னாங்க.அப்பதான் தெருஞ்சுது , மூளைல அடிபட்டு நரம்புல சீல் கோர்த்திருக்கறதா பெரிய டாக்டர் சொன்னாரு.ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க . வேணா மாத்திர மருந்துல குடுத்து பாப்போம் .செரியாக வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க . இந்த பதினாறு வருசமா இன்னும் மாத்திரை சாப்டுட்டு தா இருக்கான்.

நான் உடனே பையன் பேர் என்னுங்க்னா ஸ்கூலுக்கு போரானுங்க்லா என்றேன். 

"ஆமாம்.இங்க தான் சிறப்பு குழந்தைகள் வள மையம் ஸ்கூல்ல படிக்கிறான் .பேரு தமிழரசன்.இப்ப கொஞ்சம் பரவா இல்லை .அப்பப்போ உங்க காலண்டர் ,விசிடிங் கார்டு,நோட்டீஸ்னு எதாவுத தந்தா ,பாத்து சாந்திய அடையாளம் கண்டு புடிப்பான் .

(அப்பொழுதுதான் தெரிந்தது நாம் பார்த்தது இவரின் மகனென்றும்,மனைவியின் பெயரை சரியாக சொன்னதன் காரணமும்).

மீண்டும் அவரே தொடர்ந்து " என்னோட ரெண்டாவது மகனுக்கும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகரோட பேர்தான் வெச்சிருக்கேன்" என்றவாறே சற்று கண்கலங்கி இந்தப்பையனுக்கு எந்தவொரு குறையுமில்லாமல் ஏழாவது படிப்பதாகச் சொன்னார் .

என்னோடு இருந்த மாப்பிள்ளை பார்த்திபனும் , கழக உடன்பிறப்புகளும் "நம்ம பார்த்த தமிழரசன் இவரோட பையனா..?சே பாவம் என்று நொந்தவாறே,இந்த காத்து,கருப்பு,சாமீ,பரிகாரம் இதெல்லாம் எவன் கண்டுபுடுச்சது" என்றவாறே அனைவரும் கலைந்தோம்.பிறகு வீட்டிற்கு சென்று மனைவி சாந்தியிடம் கூறியபோது ,அழத் தொடங்கிவிட்டாள் . அவளை ஆறுதல்படுத்தி காலையில் அந்த பையனை போட்டோ எடுத்து நான் ப்ளாக்ல இதைப்பத்தி எழுதுறேன்.இத படுச்சிட்டு யாரவது ஒருத்தராவது மாருவாங்க .நீ கவலைப்படாம காலேஜ் போ.என்று சொல்லிவிட்டு என் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு ,அந்த பள்ளிக்கு மீண்டும் சென்று அவர்களுடன் சற்றே கலந்து பேசிவிட்டும் , விளையாடிவிட்டும் இந்த புகைப்படங்களை எடுத்து வந்தேன்.

இதை வாசிப்பவர்கள் வெறுமனே படித்து விட்டும், பகிர்ந்து விட்டும் செல்லாமல் , மூட நம்பிக்கையின் முட்டாள்தனத்தினை அனைவருக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                 இறுக்கமான மனதுடன் 
உங்கள் நண்பன் பாபு 

2 comments:

  1. அற்புதம், மனதை தொடும் நிகழ்ச்சி, once again I really envy Avinashi people to have such a good-hearted politician as their leader.....even though I do not 100% agree with your party and principle or ideology, u really stand tall as a leader....my best wishes for ur future success in the politics.....

    ReplyDelete
  2. Its really chanceless mam's... heart touching... am very proud abt shanthi ka.... she s a legend upto me. no more words r thr to say. 1000's of hat's off to u my akka & mama. vazhtha vayathillai,vanangugiren ungalai...wit al my prayers n my wishes....

    ReplyDelete