Saturday, September 24, 2011

அரசியல் என்றால் - வணக்கம் தோழர்களே




வணக்கம் தோழர்களே
இன்று அரசியல் என்றால் முகம் சுளிப்பவர்கள் உண்டு.பொதுவாக யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்குங்க அரசியலெல்லாம் என்று சொல்லுவார்கள். உண்டான சோலியப் பாக்கவே நமக்கு நேரம் இல்லை. இதிலே எங்கே அரசியலைப்பத்திக் கவலைப் பட?என்பார்கள். தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம்; ஆனால் அரசியலில் இருந்து விலகியே நிற்போம் என்று சொல்பவர்கள் உண்டு.பொதுவாகவே ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நான் உண்டு என் வேலை உண்டு; எனக்கு அரசியல் பிடிக்காது என்று ஒதுங்கி நிற்போர் ஒருவகையில் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவராகிவிடுகிறார். நமது வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அரசியல் இரண்டற கலந்து கிடக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திற்கு அரசும் காரணம் என்கிற போது அந்த அரசு பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா?

இன்னொரு பக்கம்-யாராவது கமுக்கமாகச் சில காரியங்களைச் செய்தால் “ஏ…அவன் பயங்கர பாலிக்ட்டிக்ஸ் பண்றாம்ப்பா” என்போம்.

“உங்க பாலிடிக்ஸ்லே என்னை மாட்டிவிடாதிங்க”
“நாம ஒண்ணும் இங்க பாலிடிக்ஸ் பண்ண வரலே”

என்றெல்லாம் பேசுகிறோம்.இந்த இடத்தில் அரசியல் என்றால் சதி,வஞ்சகம்,சூது என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறோம்.
இன்னும் ஒரு வாதம் உண்டு . “இப்பெல்லாம் என்ன சார் அரசியல் நடக்கு? கக்கன்,காமராஜ் காலம் மாதிரியா இப்ப இருக்கு? அரசியல்னாலே துட்டு அடிக்கிறதுன்னு ஆகிப்போச்சு. நல்ல தமிழ் பேசி துட்டு அடிக்கப்போறியா இல்லாட்டி கான்வெண்ட் இங்கிலீக்ஷ் பேசித் துட்டு அடிக்கப்போறியாங்கிறது தான் கேள்வி. ஆனால் கக்கன்,காமராஜர் காலத்தில் என்ன பேச்சிருந்ததென்றால் “என்ன சொல்லுங்க வெள்ளக்காரனை மாதிரி நிர்வாகம் பண்ண முடியுமா?”

இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல்கூடப் பரவாயில்லை அடிதடி, வெட்டுக்குத்து,சொந்தக் கட்சிக்காரனையே போட்டுத்தள்றது-இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. இதுகெல்லாம் மேலே தலைவர்கள், தலைவிகள் காலில் விழுந்து கும்பிடுகிற அசிங்கம். சேச்சே…மானம் ரோஷம் உள்ளவன் அரசியலுக்குப் போவானா?

ஆனால், இவையே முழு உண்மையும் இல்லை. இது மட்டுமே அரசியல் என்பதும் சரி இல்லை
ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முடிவுகளை எடுப்பது அரசியல் அல்லவா? அதுபற்றி நாம் அக்கறையில்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?

மாணவர்களிடம் நீ கல்வி முடித்தவுடன் என்ன உத்தியோகம் பார்க்கப்போகிறாய், என்றால் பொறியாளர்,மருத்துவர்,மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்கள் ஒருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் சமூகம் அரசியல் என்பதை மக்களிடமிருந்து ஒதுக்கிவைத்துள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான். நாம் மீடியாக்களின் வாயிலாக சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறோம், மீடியாவில் வருபவை எல்லாமே நடு நிலையான செய்திகள் என்று கூறமுடியாது.

தினமும் மக்கள் பார்க்கும் செய்திகளில் அவர்கள் விவாதிக்கும் போது அரசியல் என்றாலே சாக்கடை தான், அது காசு பணம் சம்பாதிக்கின்ற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று தான் பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதியை குறைசொல்லாத நபரே இல்லை, ஒவ்வொருவரும் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதியை குறைகூறுகிறோம்,ஆனால் நாம் தவறவிட்ட அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மை இங்கு இல்லை. எல்லா அரசியல் வாதியும் ஒண்ணு தான் என்ற ரீதியில் பேசுவோம். ஆனால் மக்களுக்காக அரசியல் நடத்தும் சில இயக்கங்களை காணத்தவருகிறோம். அரசியலில் தலைமையை நோக்கி கேள்வி கேட்கும் ஜனநாயகத் தன்மை இல்லை தான். தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை.

மனித சமுதாயத்தில் துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களை மிருகங் கள் என்றார் மாமேதை மார்க்ஸ். அதையே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லும் பொழுது

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!

என்று சீறுகிறார்.

அரசியல் என்றால் என்ன? அதில் நம்முடைய பங்கு என்ன?
அரசியல் என்பதன் அடிப்படையை -அரசு +இயல் என்பதை தெரிந்துகொண்டால்தான் ஏமாற்றங்களிலிருந்து விடுபடமுடியும். விரக்தியில்லாமல் நமக்கான அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.
எது உண்மையிலேயே நம்ம கட்சி என்று கண்டுபிடிக்கத்தெரியாமல் எல்லாக் கட்சியிலேயும் சேர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியும் வேண்டாம் எல்லாமே சாக்கடை என்று ஒதுங்கி நிற்கிறார்கள்..
அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு உண்டு .

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும்.
அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன

"ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."

குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்"

"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல்".

ஆனால் நாம் இன்று செய்துகொண்டிருப்பது என்ன என்பதை சற்று சிந்திப்போம், இன்றைய பல இந்திய இளைஞர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்னவென்றால் ஐம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை , ஒரு கார் , ஒரு பிளாட் , அழகான ஒரு மனைவி.இதையும் தாண்டி சிந்திப்பவர்கள் , கவிஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் , இயகுனர்களாகவும், வலைப்பூவிலும் , முகநூளிலும் ,தன் சிந்தனையை வெளிபடுத்துகிறனர்.புதிய சட்டம் போடணும் ,தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் திட்டணும் வாய்யளவில் பேசிக்கொண்டும் , மனதளவில் எண்ணிக்கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது , சட்டத்தையும் , திட்டத்தையும் நடைமுறை படுத்த நமக்குள்ளே ஒரு "தீ" வேண்டும் , நாம் தகுதியை வளர்த்துக்கொண்டு , தகுந்த சமூக பொறுப்பை (பதவி) அடையவேண்டும் .மேலும் உள்ளாட்சி பொறுப்பில் இருந்து படிபடியாக சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கமுடியும் .
படித்த பலர் மைக்ரோ சாப்டில் வேலை வேண்டும் , ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்றுதான் விரும்புகிறனர் , ஆளும் பொறுப்புக்கு வரவேண்டும் என்று விரும்புவோர் மிகவும் குறைவு , (எல்லோரும் கலக்டர் ஆனால் கம்போண்டர் ஆவது யார் என்று கேட்பது எனக்கு புரிகிறது)

உண்மையை சொல்லப்போனால் சமூக அக்கறையும் , தொலைநோக்கு பார்வையும் உள்ள வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் சற்று களத்தில் இறங்க முற்படவேண்டும்.
இன்று வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் எந்தனை பேர் எங்களை போல் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் கிராமத்திற்க்கு உருவாக்கப்படும் திட்டங்களையும் கிராமத்தையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
இதை வாசிக்கும் எத்தனை பேர் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று எண்ணி பாருங்கள் . இங்கு பின்னுட்டம் எழுதுவதும் , வலை பூ எழுதுவதும் ,ஒரு பெரிய காரியமல்ல , தற்பெருமைக்காக சொல்லவில்லை , நான் M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த போது அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேண். இப்பொழுது சொல்லுங்கள்---( நீ பிழைக்க தெரியாதவள் என்று) ஏன் என்றால் பல படித்தவர்களும் பட்டினதாரும் என்னை பார்த்து சொல்லும் ஒரே வார்த்தை இதுதான் .நாம் கிராமத்துக்குப்போய் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழிக்க வேண்டும் மூடநம்பிக்கையை அகற்றவேண்டும் , நீங்கள் இதை செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது.படிப்பதும் மட்டும் ஒரு மாணவரின் கடமையல்ல. வளமான பாரதத்தை வலுவான பாரதமாக மாற்றுவது, நமது இளைய பாரதங்களின் கையில் தான் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டியது அனைவரும் தான். ,

நமது தேசியத்துக்காக செல்ல வேண்டிய பாதையின் திறவு கோல் எமது போராட்டங்களின் தோல்விகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. ..மானத்தை உயர்வென்றெண்னி.! மரணத்தை துச்சமாக நினைப்பவன் எவனோ.! அவனே தமிழன்
இன்றைய மக்களிடம் (சுயநலம்) , ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியதுவம் கொடுத்து செயற்படுவதே மேலோங்கி இருப்பதால் ஒரு திட்டத்தை நிறைவேற்ற உண்மையான மக்கள் சேவகர்கள் படும் பாடு ....... அய் அய் அய் அய் யோ ...............என்னை பொறுத்த வரை நான் எந்த வேலை செய்தாலும் எனக்கு பிடித்தால் மட்டுமே செய்வேன் அல்லது மற்றவர்களது நன்மைக்காகவும் , மகிழ்ச்சிக்காகவும் செய்வேனே தவிர . கோடி கொடுத்தாலும் காசுக்காக கஷ்டப்பட்டு எதையும் செய்யமாட்டேன், கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வதை விட இஷ்டப்பட்டு செய்வதுதான் எனக்கு திருப்தியை தரும் , எனக்கு போராட்டம் மிகவும் பிடிக்கும். காரணம் நாம் பூமியில் வாழுவதற்கு கொடுக்கும் வாடகைதான் நமது சேவை .

என்னை சுற்றி உள்ள அனைவரும் நல்லவர்கள் , நான் செய்கின்ற பணி சிறந்தது என்று வாழ்வதால்தான் என்னால் குடும்பதினருடனும் , கிராம மக்களுடனும் ,மாணவர்களுடனும்,முகநூல் வலைப்பூ நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் தன் கருத்துகளை பரிமாறி என் பனிகளை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது.


பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010,23:27 IST
அவிநாசி :அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவிக்கு, "இளம் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவியாக சாந்தி உள்ளார். திருச்செங்கோட்டில் நடந்த ஜேசீஸ் மண் டல மாநாட்டில், இவருக்கு 2010ம் ஆண்டின் "இளம் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது; ஜேசீஸ் முன் னாள் தேசிய தலைவர் வல்லபதாஸ் வழங்கினார்.ஒன்றிய தலைவி சாந்தி கூறுகையில்,""உலக அளவில் இளைஞர் விழிப்புணர்வு, தனிமனித மேம்பாடு உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கும் ஒரே சங்கம் ஜேசீஸ் மட்டுமே. இன்றைய இளைஞர் கள் அரசியலை பார்த்து பயப்படக்கூடாது; சமூகப் பணியாற்ற கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்,'' என்றார்


                       

சமூக விழிப்புனர்வுக்காக மட்டுமே இப் பதிவு , பெருமைக்காகவோ அல்லது , யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்திலோ அல்ல ,

தவறாக இருந்தால் தயவுகூர்ந்து மனிக்கவும்,

உங்கள் அன்பு சகோதரி :-சாந்திபாபு 


Thursday, September 15, 2011

வரம்பை மீறிய சதித்திட்டம்

இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல 

- அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...

"Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG

நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.

ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.

CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said. 

There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration.



What prompted the Comptroller and Auditor General from not quantifying the losses to the exchequer in the KG Basin contract and Air India decisions may never be known.

நன்றி - விஜய் 

Tuesday, September 6, 2011

கில்லாடி ஜெவும் கிறுக்கு தமிழனும் ...



கலைஞர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டம் எது?

எந்தச் சூழ்நிலையில் அன்றைய முதல்வர் கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்?

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கும் 
ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்த அதிபர் ராஜபக்சே ஆணை பிறப்பித்துவிட்டார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் விடிந்தால் என்ன நடக்குமோ என்ற வேதனையும் பீதியும் நிலவிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார் . தமிழர்களுக்கு நடக்க இருந்த ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நன்றிக் கண்ணீர் மல்க மனிதநேயத்தோடு போற்றுவார்கள்.

உம்மையிலேயே அங்கு ஏற்பட்ட விளைவு.

பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும், வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத் தும், அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜபக்சேவை, தமிழ்நாட்டின் முதல்வர், மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண்ணாவிரதம் அசைத்திருக் கிறது; இறங்கி வரச் செய்திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசர மாகக் கூட்டி புதிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கிறது .

அரசின்செய்திக் குறிப்பு

இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்ற குடி மக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும் என்று கூறியது .

போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டு மன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகி யோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றது .

உள்நாட்டில் குடி பெயர்ந்த மக்களும், பொது மக்களும்தான் இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களைப் பாதுகாக்கவும, அவர்களது நலன்களுக்கு உறுதியளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியது .


ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?

ஈழத்தமிழர் பிரச்சினையில் தொடர்ச்சியாக - இயல்பாக ஈடுபாடு காட்டி வருபவர்கள் யார்? என்பது தான் மிக முக்கியம். சந்தர்ப்பவாதிகளின் 
சதுராட்டங்களில் ஏமாந்துவிடக் கூடாது.

போர் நிறுத்தம் செய்யச் சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கே என்றும், இலங்கையில் தற்போது நடப்பது உள்நாட்டுப் போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது என்றும், உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலை யிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்றும் பச்சையாக கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமின்றி, ராஜபக்சேயின் சகோதரியாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாதான் -இன்று சிலருக்கு ஈழத் தமிழர்களைக் காக்க வந்த மாமணியாகக் காட்சியளிக்கிறார். ஜெயலலிதா இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டபோது இந்த வீராதி வீரர்கள் எங்கே போனார்கள்? ஒரு கண்டனம் உண்டா?


3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என சொண்னார் ஈழத்தாய் ஜெயலலிதா ..
இங்குதான் தமிழ் உணர்வாளர்களிடத்தில் ஒரு கேள்வி 
உள்நாட்டு பிரச்சனையில் கூட முதலமைச்சருக்கு தலையிட உரிமை இல்லை என்ற போது...வெளிநாட்டு விவகாரத்தை கலைஞர் சரியாக செய்யவில்லை , இன துரோகி என குற்றம் சாட்டிய தமிழ் உணர்வாளர்களே , இதற்கென்ன உங்கள் பதில் ?

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கண்துடைப்புக்காக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றுக்கிறார் 

இரண்டு தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு அனுமதி தராமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அம்மா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் போராட்டங்கள் நடத்த அனுமதி தருகிறார். இவர் தான் உண்மையான ஈழத்தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட ஈழத் தாய்” என்று பேசினார்.இன்று ‘ஈனத் தாய்’க்கு நன்றி தெரிவித்தும் மூவர் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தியும் வேலூர் சிறைவாசலிலிருந்து பரப்புரை நடைபயணம் தொடங்கிய சீமானை ஜெ அரசின் போலீசார் கைது செய்தனர். கைது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “சட்டம் ஓழுங்கு சீர்கெடும் எனக்கூறி கைது செய்துள்ளார்கள். சட்டத்துக்கு கட்டுப்பட்டு கைதாகிறோம் அரசாங்கம் நடைப்பயணம் செல்ல கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி தந்தால் கட்டுப்பாடுகளை மதித்து நடைப்பயணம் செல்வோம். இல்லையெனில் நடைப்பயணம் ரத்து செய்யப்படும். குறிப்பிட்ட தேதியில் கூட்டங்கள் மட்டும் நடைபெறும்” என்றார்.



கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? 
உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை 
விரோதியாகவும் கருதுவார்களா? 
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது? 


தோழர்களே.., தியாகம் புனிதமானது. தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இந்த வேளையில் நாம் பிறிதொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தோழர்களே, தோழர் முத்துக்குமாரின் ஈகம் எதற்குப் பயன்பட்டது ? யாருக்குப் பயன்பட்டது ? யாரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது ? எனவே தோழர்களே, இங்கேயும் தந்தை பெரியாரின் நிலைப்பாட்டினை நாம் கவனத்தில் கொள்ள மறக்கின்றோம்; பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே....

நன்றி -முகநூல் வட்டம் 

Friday, September 2, 2011

ராஜீவ் கொலையின் மர்மம்?


தமிழன் எக்ஸ்பிரசில் சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அந்த கட்டுரையை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

நவம்பர் 19, 1997-ல் 

யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. ............

நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது. 

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்? 

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?



41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு? தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

நன்றி-செல்வ நம்பி