சமுக உறவில் தேடுங்கள்

Loading

Friday, September 29, 2017

தமிழகம்தான் முன்னோடி

அட்ரா சக்கை.. அட்ரா சக்கைன்னானாம்.

கடந்த இருநாட்களுக்கு முன்... அதாவது புதிய இந்தியா பிரசவிக்க,   தேசத்தாய் மகப்பேறு மருத்துவ மனையில் அனுபதிக்கப் பட்ட நேரம்

வழக்கமாக மாலை நேரத்தில் நணபர்கள் கூடி பேசும் இடத்தில் நான் மட்டுமே தனித்து விடப்பட்டேன்.  வழக்கமாக எனக்கு முன்னரே வந்துவிடும் நண்பர்கள் வராதது ஆச்சர்யம்.  அலைபேசி எடுத்து நண்பர் நடராசனாரை அழைக்க முனைந்தேன். இடையில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த ஒருவர் உதவி கோரி வந்தார். ஆணையரை தொடர்புகொண்டு பேசி அவரை அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட 20நிமிடங்களானது. இப்பவும் நண்பர்கள் வரவில்லை.

நடராசனாருக்கு அழைப்பு விடுத்தேன். ஒலித்தது.. ஒலித்த்த்த்தது ஒலித்துக் கொண்டே இருந்தது எடுக்க இயலாத சூழல், ஒருவேளை வாகனத்தை செலுத்திக் கொண்டிக் கொண்டிருக்கலாம்  என்று நானே அழைப்பை துண்டித்தேன். வக்கிலுக்கு அடுத்த அழைப்பு.  அவரும் எடுக்கவில்லை. அடுத்து கதிர் அண்ணன் , அவரும் எடுக்கவில்லை. எனது அலைபேசி மீதே எனக்கு சந்தேகம் வந்தது. அழைப்பு சத்தம் எனக்கு மட்டும் கேட்கின்றதா? அலைக்கற்றை சதி செய்கின்றதா என அலைபேசியை சுழற்றி சுழற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஒரு அழைப்பு வந்தது.  அலைபேசியும், அலைக்கற்றையும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உறுதியானது.

அழைப்பை ஏற்றேன். அடுத்த முனையில் அண்ணன் கோவலன். எங்க தமிழ் இருக்க? என்றார். கழுதை கெட்டால் உங்க வீட்டிற்கு பின்புறம்  தான் என்றேன். இன்றைக்குமா என இழுத்தார்.  இன்றைக்கு என்ன புதுசா? என்றேன்.  குறைந்தபட்ச அக்கறை கூட உனக்கில்லை. ஏழை எளிய மக்களுக்காக புதிய இந்தியா பிறக்கப் போகின்றது என்றார். ஏற்கனவே பிறந்த இந்தியா அம்மனத்துடன் நிற்கின்றது. அதற்கு கோவணம் கட்ட ஆளில்லை, இப்ப எதுக்கு இன்னொன்று? என்றேன். இதுக்கெல்லாம் குறையில்ல, சரிப்பா! நான் இன்னிக்கு வரமுடியாது என சொல்ல தான் போன் செய்தேன் என்ற போதே டொய்ங்ங்ங்..

நண்பர்கள் அனைவரும்
ஏழைகளுக்கான புதிய இந்தியா பிரசவத்தை பார்க்க வேண்டும் என  நகங்களை கடித்துக் கொண்டு டீ.வி பார்க்கின்றார்கள் என்பது புரிந்து  நானும் ஒரு ஏழை என்ற முறையில்  அக்காட்சியை காண வீட்டுக்கு விரைந்தேன். வழக்கமாக 10:30க்கு வீடு திரும்பும் நான் 8:15க்கெல்லாம் வந்ததும் மனைவி வானத்தை பார்த்தார். மகன் ராகுல் அக்கறையுடன் கேட்பது போல்  உடம்புக்கு முடியலையாப்பா என்றான். சமூக அக்கறை இல்லாமல் இவர்கள் என்னை கலாய்ப்பது எனக்கு புரிந்தது.

தொலைக்காட்சியை இயக்கினேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி பார்த்தேன். முந்தித் தருவது யார்? ஆசுவாசப்படுத்திக் கொள்ள என்னால் நகம் கூட கடிக்க முடியாது. காரணம் நகத்தை ஒட்டஒட்ட வெட்டும் பழக்கம் கொண்டவன்.

ஒரு வழியாக மாயவித்தை காட்டும் மாயாஜால மன்னனை காட்டினார்கள். பெயர் மோடியாம்.  திட்டத்திற்கு அவர் தான் டாக்டர். குழந்தைக்கு அப்பா யாரென கேட்காதீர்கள். எல்லா திட்டத்தையும் சேவை நோக்குடன் தத்தெடுக்கும் அதானி தான் அப்பா . கரசேவை சத்தத்தில்
செளபாக்யா யோஜனா பிறந்தாள். 100% மின் இணைப்பு வழங்கும் திட்டம். ஒவ்வொரு வீட்டிலும் விளக்கெரியும் என வழக்கமாக முகநூல், ட்வீட் கீச்சு கொண்டாட்டங்கள் தொடங்கின.

பீகார் நண்பர் ரவீந்த்ராவை தொடர்பு கொண்டேன். எப்படி, குழந்தை நல்லா இருக்கா? என்றேன் பரவால்லை ஆனால் கிட்ட போய் உற்று பார்க்க முடியாது. என்றார். காரணம் பீகாரில் குறைந்தபட்சம் 46% மட்டுமே மின் இணைப்புகள்  வழங்கப்பட்டு உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 49.27 சதவீத கிராமப்புற வீடுகளில் மின் இணைப்புகள் உள்ளன.  இவர்களுக்கு வேண்டுமானால் இத்திட்டம் இனிப்பு கொடுத்து கொண்டாடும் திட்டமாக இருக்கலாம்.

கேரளா 100% டெல்லி 99.7%கோவா 99.8% புதுவை, சண்டிகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 99.6%,

தமிழ்நாடு , ஆந்திரா 98.5% கர்னாடகா 97.8% மின் இணைப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு பணமதிப்பிழப்பு  விசயத்தில் பிஜேபியின் சாயம் நாளேடுகளில் சு.சாமி, குருமூர்த்திகளே வெளுத்துக் கொண்டிருப்பதை திசை திருப்ப செய்த அறிவிப்பு மட்டுமே..

அதாவது 68% இட ஒதுக்கீடு அளித்த தலைவர் கலைஞர் வெறும் கருணாநிதியாக இருப்பாரம். 1% அதிகரித்துக் கொடுத்த அம்மையார் 69%கொடுத்த சமூகநீதி வீராங்கனையாக திகழ்ந்ததை போல்,  மோடி அவர்கள் 98%-99% ஏற்கனவே மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இவர் 1%-2% மின் இணைப்பு கொடித்து சமுக நல்லிணைப்பு மின்சார வல்லுனர் பட்டம் வாங்க நினைக்கின்றார்.
புத்தாண்டு பிறக்கும் விநாடிகளுக்கு முன் ஒளிவெள்ளத்தில் ஊரே மிதக்க,  மக்கள் ஆர்ப்பரிக்க கடைசி வினாடிகள் 6,5,4,3,2 என விநாடிகள் எண்ணப்படும் போது அடுத்து மின்பட்டாசுகள் , மின் வானவேடிக்கைகள் வானத்தை அலங்கரிக்கும் என காத்துக்கிடக்கும் நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஊரே இருட்டில் தள்ளப்பட்டு பீதி நிலவும் நிலை  போன்றது தான் இந்த அறிவிப்பு. வழக்கம் போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியிலே, திராவிட அரசுக் கட்டிலிலே என நீட்டி முழக்குவோருக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டும். மொத்த இந்தியாவில் சராசரியாக 86% மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 98.5% மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. எவ்வகையிலும் வடமாநிலம் பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலையில் தமிழகம் இல்லை. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகள் அரசு சரியாக இயங்காத போதிலும் இந்நிலை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிஜேபியின் ஒரு திட்டம் வடமாநில, பிஜேபி நண்பர்களால் கொண்டாடப்பட்டது. மகப்பேறு உதவித்திட்டம். அதாவது ₹6000 நிதி வழங்க போகின்றார்கள் என பெருமைபட்டுக் கொண்டனர். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்கின்றேன். தமிழ்நாட்டில்
தலைவர் கலைஞர் அவர்களால் 2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றும் செயல்படுத்தி வருகிறது. அன்று 2007ல் அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? இன்று மோடி அரசு அறிவித்து இருக்கும் அதே 6000ரூபாய். தமிழ்நாட்டில் இன்று மகப்பேறு திட்டத்தில்  அளிக்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா 18,000 ரூபாய். தலைவருடன் ஒப்பிடுகையில், ஏறத்தாழ 10வருடங்கள் இவர்களின் மூளைவளர்ச்சி பின்தங்கி உள்ளது.

பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி. 1956 முதல் இருந்த சட்டத்தை 1989ல் மாற்றி அமைத்து பெண்களுக்கும் சம உரிமை உண்டு என நிலைனாட்டிய பெருமை, முன்னோடியாக திகழும் பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு. 17ஆண்டுகளுக்கு பின்னர்  2006ல் மத்திய அரசின் சட்டம் சொத்துரிமை அளித்தது.

பாஜகவினரே, மோடி அவர்களே  நீங்கள் உலகின் எந்த மூளைக்கு சென்று இது நல்லதிட்டமாக இருக்கின்றதே என இந்தியாவுக்கு இறக்குமதி செய்தாலும் சரி அதற்கு முன் தமிழ்நாடு என்றொரு நாடு இருக்கின்றது.  அவர்களின் சாதனை திட்டங்களை,  பட்டியலை பார்த்துவிட்டு வடநாட்டுக்கு அர்ப்பனிக்கவும்.

என்னது குடும்பத்தில் முதல் பட்டதாரியின் படிப்பு செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய திட்டமா?

நீங்க என்ன திட்டம் அறிவித்தாலும் சரி அது தமிழக வரலாற்றில் 10வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு இன்று நிலுவையில் இருக்கும் பார்த்துக்கோங்க.

நன்றி Npn Tamilarasan

Thursday, September 21, 2017

ஏனெனில், அவர் பெரியார் ! ப.திருமாவேலன்.

ஏனெனில், அவர் பெரியார் !
ப.திருமாவேலன்.

பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது; செருப்பால் அடிக்கப்படுகிறது. இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். அவரே சொன்னார்... 'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.
30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார்.

பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!

ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!

'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு.

'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.
கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.
கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.

தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.

சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும்
மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.
அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.

பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர, குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.
அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.

மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.
கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.

அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?
அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார்.

ஏனெனில், அவர் பெரியார்!

ப.திருமாவேலன்.

Tuesday, September 19, 2017

குழந்தைகளுக்கு கடவுள் மறுப்பு

பெரியாரின் ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது.

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும்.

“இதப் பாரு. நீ ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா?

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு.

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி.

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது.

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி.

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது.

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும்.

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வ Urey miller சோதனை சொல்லுது.

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க.

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும்.

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது.

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது.

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம்.

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு.

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான்.

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான்.

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார்.

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார்.

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம்.

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான்.

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான்.

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது.

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது.

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான்.

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு.

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான்.

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ.

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க.

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது.

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்ற்படிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம்.

ஒடுக்கலாம்னுதன் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க.

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும்.

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான்.

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான்.

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு.

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”.
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”

நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம்.

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம்.

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு.

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு.

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு .

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு.

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும்.

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன்.

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசிச் சென்றார்.

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள்.

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன்.

இஸ்ரோவில் இருந்து எத்தனையோ மடச்சாரம்பிராணி இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள்.

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள்.

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன்.

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு
செய்யும் நன்மை எதுவுமில்லை. :)

- Vijay Bhaskarvijay