சமுக உறவில் தேடுங்கள்

Loading

Friday, September 29, 2017

தமிழகம்தான் முன்னோடி

அட்ரா சக்கை.. அட்ரா சக்கைன்னானாம்.

கடந்த இருநாட்களுக்கு முன்... அதாவது புதிய இந்தியா பிரசவிக்க,   தேசத்தாய் மகப்பேறு மருத்துவ மனையில் அனுபதிக்கப் பட்ட நேரம்

வழக்கமாக மாலை நேரத்தில் நணபர்கள் கூடி பேசும் இடத்தில் நான் மட்டுமே தனித்து விடப்பட்டேன்.  வழக்கமாக எனக்கு முன்னரே வந்துவிடும் நண்பர்கள் வராதது ஆச்சர்யம்.  அலைபேசி எடுத்து நண்பர் நடராசனாரை அழைக்க முனைந்தேன். இடையில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த ஒருவர் உதவி கோரி வந்தார். ஆணையரை தொடர்புகொண்டு பேசி அவரை அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட 20நிமிடங்களானது. இப்பவும் நண்பர்கள் வரவில்லை.

நடராசனாருக்கு அழைப்பு விடுத்தேன். ஒலித்தது.. ஒலித்த்த்த்தது ஒலித்துக் கொண்டே இருந்தது எடுக்க இயலாத சூழல், ஒருவேளை வாகனத்தை செலுத்திக் கொண்டிக் கொண்டிருக்கலாம்  என்று நானே அழைப்பை துண்டித்தேன். வக்கிலுக்கு அடுத்த அழைப்பு.  அவரும் எடுக்கவில்லை. அடுத்து கதிர் அண்ணன் , அவரும் எடுக்கவில்லை. எனது அலைபேசி மீதே எனக்கு சந்தேகம் வந்தது. அழைப்பு சத்தம் எனக்கு மட்டும் கேட்கின்றதா? அலைக்கற்றை சதி செய்கின்றதா என அலைபேசியை சுழற்றி சுழற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஒரு அழைப்பு வந்தது.  அலைபேசியும், அலைக்கற்றையும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உறுதியானது.

அழைப்பை ஏற்றேன். அடுத்த முனையில் அண்ணன் கோவலன். எங்க தமிழ் இருக்க? என்றார். கழுதை கெட்டால் உங்க வீட்டிற்கு பின்புறம்  தான் என்றேன். இன்றைக்குமா என இழுத்தார்.  இன்றைக்கு என்ன புதுசா? என்றேன்.  குறைந்தபட்ச அக்கறை கூட உனக்கில்லை. ஏழை எளிய மக்களுக்காக புதிய இந்தியா பிறக்கப் போகின்றது என்றார். ஏற்கனவே பிறந்த இந்தியா அம்மனத்துடன் நிற்கின்றது. அதற்கு கோவணம் கட்ட ஆளில்லை, இப்ப எதுக்கு இன்னொன்று? என்றேன். இதுக்கெல்லாம் குறையில்ல, சரிப்பா! நான் இன்னிக்கு வரமுடியாது என சொல்ல தான் போன் செய்தேன் என்ற போதே டொய்ங்ங்ங்..

நண்பர்கள் அனைவரும்
ஏழைகளுக்கான புதிய இந்தியா பிரசவத்தை பார்க்க வேண்டும் என  நகங்களை கடித்துக் கொண்டு டீ.வி பார்க்கின்றார்கள் என்பது புரிந்து  நானும் ஒரு ஏழை என்ற முறையில்  அக்காட்சியை காண வீட்டுக்கு விரைந்தேன். வழக்கமாக 10:30க்கு வீடு திரும்பும் நான் 8:15க்கெல்லாம் வந்ததும் மனைவி வானத்தை பார்த்தார். மகன் ராகுல் அக்கறையுடன் கேட்பது போல்  உடம்புக்கு முடியலையாப்பா என்றான். சமூக அக்கறை இல்லாமல் இவர்கள் என்னை கலாய்ப்பது எனக்கு புரிந்தது.

தொலைக்காட்சியை இயக்கினேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி பார்த்தேன். முந்தித் தருவது யார்? ஆசுவாசப்படுத்திக் கொள்ள என்னால் நகம் கூட கடிக்க முடியாது. காரணம் நகத்தை ஒட்டஒட்ட வெட்டும் பழக்கம் கொண்டவன்.

ஒரு வழியாக மாயவித்தை காட்டும் மாயாஜால மன்னனை காட்டினார்கள். பெயர் மோடியாம்.  திட்டத்திற்கு அவர் தான் டாக்டர். குழந்தைக்கு அப்பா யாரென கேட்காதீர்கள். எல்லா திட்டத்தையும் சேவை நோக்குடன் தத்தெடுக்கும் அதானி தான் அப்பா . கரசேவை சத்தத்தில்
செளபாக்யா யோஜனா பிறந்தாள். 100% மின் இணைப்பு வழங்கும் திட்டம். ஒவ்வொரு வீட்டிலும் விளக்கெரியும் என வழக்கமாக முகநூல், ட்வீட் கீச்சு கொண்டாட்டங்கள் தொடங்கின.

பீகார் நண்பர் ரவீந்த்ராவை தொடர்பு கொண்டேன். எப்படி, குழந்தை நல்லா இருக்கா? என்றேன் பரவால்லை ஆனால் கிட்ட போய் உற்று பார்க்க முடியாது. என்றார். காரணம் பீகாரில் குறைந்தபட்சம் 46% மட்டுமே மின் இணைப்புகள்  வழங்கப்பட்டு உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 49.27 சதவீத கிராமப்புற வீடுகளில் மின் இணைப்புகள் உள்ளன.  இவர்களுக்கு வேண்டுமானால் இத்திட்டம் இனிப்பு கொடுத்து கொண்டாடும் திட்டமாக இருக்கலாம்.

கேரளா 100% டெல்லி 99.7%கோவா 99.8% புதுவை, சண்டிகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 99.6%,

தமிழ்நாடு , ஆந்திரா 98.5% கர்னாடகா 97.8% மின் இணைப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு பணமதிப்பிழப்பு  விசயத்தில் பிஜேபியின் சாயம் நாளேடுகளில் சு.சாமி, குருமூர்த்திகளே வெளுத்துக் கொண்டிருப்பதை திசை திருப்ப செய்த அறிவிப்பு மட்டுமே..

அதாவது 68% இட ஒதுக்கீடு அளித்த தலைவர் கலைஞர் வெறும் கருணாநிதியாக இருப்பாரம். 1% அதிகரித்துக் கொடுத்த அம்மையார் 69%கொடுத்த சமூகநீதி வீராங்கனையாக திகழ்ந்ததை போல்,  மோடி அவர்கள் 98%-99% ஏற்கனவே மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இவர் 1%-2% மின் இணைப்பு கொடித்து சமுக நல்லிணைப்பு மின்சார வல்லுனர் பட்டம் வாங்க நினைக்கின்றார்.
புத்தாண்டு பிறக்கும் விநாடிகளுக்கு முன் ஒளிவெள்ளத்தில் ஊரே மிதக்க,  மக்கள் ஆர்ப்பரிக்க கடைசி வினாடிகள் 6,5,4,3,2 என விநாடிகள் எண்ணப்படும் போது அடுத்து மின்பட்டாசுகள் , மின் வானவேடிக்கைகள் வானத்தை அலங்கரிக்கும் என காத்துக்கிடக்கும் நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஊரே இருட்டில் தள்ளப்பட்டு பீதி நிலவும் நிலை  போன்றது தான் இந்த அறிவிப்பு. வழக்கம் போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியிலே, திராவிட அரசுக் கட்டிலிலே என நீட்டி முழக்குவோருக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டும். மொத்த இந்தியாவில் சராசரியாக 86% மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 98.5% மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. எவ்வகையிலும் வடமாநிலம் பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலையில் தமிழகம் இல்லை. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகள் அரசு சரியாக இயங்காத போதிலும் இந்நிலை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிஜேபியின் ஒரு திட்டம் வடமாநில, பிஜேபி நண்பர்களால் கொண்டாடப்பட்டது. மகப்பேறு உதவித்திட்டம். அதாவது ₹6000 நிதி வழங்க போகின்றார்கள் என பெருமைபட்டுக் கொண்டனர். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்கின்றேன். தமிழ்நாட்டில்
தலைவர் கலைஞர் அவர்களால் 2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றும் செயல்படுத்தி வருகிறது. அன்று 2007ல் அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? இன்று மோடி அரசு அறிவித்து இருக்கும் அதே 6000ரூபாய். தமிழ்நாட்டில் இன்று மகப்பேறு திட்டத்தில்  அளிக்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா 18,000 ரூபாய். தலைவருடன் ஒப்பிடுகையில், ஏறத்தாழ 10வருடங்கள் இவர்களின் மூளைவளர்ச்சி பின்தங்கி உள்ளது.

பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி. 1956 முதல் இருந்த சட்டத்தை 1989ல் மாற்றி அமைத்து பெண்களுக்கும் சம உரிமை உண்டு என நிலைனாட்டிய பெருமை, முன்னோடியாக திகழும் பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு. 17ஆண்டுகளுக்கு பின்னர்  2006ல் மத்திய அரசின் சட்டம் சொத்துரிமை அளித்தது.

பாஜகவினரே, மோடி அவர்களே  நீங்கள் உலகின் எந்த மூளைக்கு சென்று இது நல்லதிட்டமாக இருக்கின்றதே என இந்தியாவுக்கு இறக்குமதி செய்தாலும் சரி அதற்கு முன் தமிழ்நாடு என்றொரு நாடு இருக்கின்றது.  அவர்களின் சாதனை திட்டங்களை,  பட்டியலை பார்த்துவிட்டு வடநாட்டுக்கு அர்ப்பனிக்கவும்.

என்னது குடும்பத்தில் முதல் பட்டதாரியின் படிப்பு செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய திட்டமா?

நீங்க என்ன திட்டம் அறிவித்தாலும் சரி அது தமிழக வரலாற்றில் 10வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு இன்று நிலுவையில் இருக்கும் பார்த்துக்கோங்க.

நன்றி Npn Tamilarasan

No comments:

Post a Comment