Tuesday, July 31, 2018

ஊழல்... விஞ்ஞான பூர்வ ஊழல்.. காமடிகள்..

ஊழல்... விஞ்ஞான பூர்வ ஊழல்.. காமடிகள்..

ஒரு வாதத்துக்கு, கலைஞர் தவறு செய்திருந்தால், தவறான வழில் சொத்து சேர்த்திருந்தால், கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட, மிக அதிகமாய் அதிமுக தானே இங்கே ஆட்சில் இருந்தார்கள், கேவலம் ஒரு FIR கூட போடமுடியவிலையா?? அதற்கு வக்கில்லையா?? ஆண்மையில்லையா??? கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட அதிக காலம் அதிமுகவும், அவரை ஜென்ம எதிரியாக கருதும் ஆட்களும் தானே இங்கேயும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்கள் / இருகிறார்கள், நடவடிக்கை எடுக்கலாம்மே.. யார் தடுக்கிறார்கள்??

எப்படி ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல, செய்யவேண்டியது தானே... 46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதானே... இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கபட்டு கீழே இறங்கியவர் ஜெயா தானே... அப்படி ஒரு ஆதாரபூர்வமான வழக்கை கலைஞர் மீது போட்டு நிருபிக்கலாம்மே, யார் தடுக்கிறார்கள்?? அதற்கு ஆதாரம்மில்லையா அல்லது ஆண்மையில்லையா???

மேலும், ஒருவருடைய சொத்து என்றல் அவர் பெயரில் உள்ளது மட்டுமே, குடும்ப சொத்து என்றல் அவர் வீட்டு முகவரியில், ரேஷன் கார்டில் உள்ள உறுபினர்களின் சொத்து மட்டுமே... தனி தனி குடும்பத்தினர், கொண்டான் கொடுத்தான் என்று எல்லோருடைய சொத்தையும் சேர்த்து எப்படி ஒருவருடைய சொத்து என்று சொல்லமுடியும் ???? கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சி குழுமத்தை, திறமையாக, வெற்றிகரமாக நடத்தி, இப்போதும் (ஜெயா & பிஜேபி ஆட்சியிலும்) இந்தியாவிலேயே முதன்மை சேனலாக வைத்துள்ள சன் குழும வியாபாரங்களுக்கும் கலைஞர் & திமுகவுக்கும் என்ன தொடர்பு??

அந்த காலத்திலேயே, அதாவது தேர்தல் அரசியலுக்கு கலைஞர் வருவதற்கு முன்பே, பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், பல நூல்கள், நாடகங்கள், பத்திரிக்கைகளில் எழுதியும் வந்தவர் கலைஞர்.. தனது இருபதாவது வயதிலேயே, 1944 ஆம் ஆண்டில், பிரபலமான ஜூபிடர் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு வசன கர்த்தாவாக பணி செய்தவர் கலைஞர்.. அதுமட்டும் அல்ல, மேகலா, பூம்புகார் போன்ற சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவங்கள் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்தவர்.... அவருடைய கோபாலபுரம் இல்லம், அவர் முதன்முதலில் MLA வாகிய 1957 க்கு முன்பே வாங்கப்பட்டது.. கார் வீடு என்று அப்போதே உழைத்து வசதிவாய்ப்புக்களை உருவாக்கி கொண்டவர் கலைஞர்... கலைஞரும் அவர் குடும்பத்தினரும் இத்தனையாண்டுகளாக தங்களின் வருமானங்களுக்கு முறையாக வருமானவரி கட்டி வருபவர்கள். 

கலைஞர் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் கோர்டில் ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்பட்டு அல்ல, குறைந்தபட்சம் விசாரணை கூட நடந்தது இல்லையே....ஊழல் வழக்குகளுக்காய் எத்தனை முறை கலைஞர் கோர்ட் படி ஏறியுள்ளார்???, ஊகத்தின் அடிப்படையில் நடைபெற்ற சர்க்காரியா கமிஷனிடமும், புகார் சொன்னவர்களே, அதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பின்வாங்கி சென்றவர்கள்தானே.. ஐந்து முறை முதல்வராய் இருந்த கலைஞர், இதுவரை எத்தனை முறை ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ளார் ??, சிறை செல்வது இருக்கட்டும், எத்தனை வழக்குகள் கோர்ட்டில் விசாரணை நடந்திருக்கிறது????, விசாரணை இருக்கட்டும், எத்தனை வழக்குகள் அதாரபூர்வமாய் போட்டனர்????? ஒரே ஒரு ஊழல் வழக்கை கூட கலைஞர் மீது போட முடியவில்லையே, 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக நிர்வாகத்தில் இல்லாத சட்ட நிபுணர்களா??? ஜெயாவிடம் இல்லாத அரசு அதிகாரம்மா????

சிலர் வித்தியாசமாக திமுக விஞ்ஞான பூர்வமாக, அதாவது சைன்டிபிக் முறையில் ஊழல் செய்தது என சொல்வார்கள்.. அதாவது, யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம்.. அப்படியானால், சர்க்காரியா மட்டும் எப்படி கண்டுபிடிப்பார்??? சரி, விஞ்ஞான பூர்வம் என்றால் என்ன??? ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும் ஒன்றைத்தான், அறிவியல் பூர்வமான ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படும்.. ஆனால், எந்த ஒரு புகாரையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்காமல், விஞ்ஞான பூர்வ ஊழல் என்பது சுத்த டுபாகூர் தகவல்.. மக்களை முட்டாளாக்கும் ஒன்று...  

2G விஷயத்தில் கூட, எழு வருடங்களாக விசாரணை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும், பலமுறை சோதனைகள் நடத்தி, இதுவரை என்ன கண்டுபிடித்தார்கள்???? எதை நிரூபித்தார்கள்?? - ஒன்றும் இல்லை.. நீதிபதி சைனியே "எழு ஆண்டுகளாக யாராவது ஒரே ஒரு ஆதாரத்தையாவது கொண்டுவது கொடுப்பார்கள் எனகோர்ட் வாசலை திறந்துவைத்து உட்கார்ந்திருந்தேன், ஆனால், ஒருவரும் வரவில்லை" என தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, 2G வழக்கு எந்த ஒரு அடிப்படை ஆதராமும் இல்லாத வழக்கு என ஏழாண்டுகள் விசாரித்து தள்ளுபடி செய்து, எல்லோரையும் விடுதலை செய்துவிட்டார்..

Sunday, July 29, 2018

2009 கலைஞர் செய்தது சரியா ?

கலைஞர் 2009இல் மேலும் வீரியத்துடன் போராடியிருக்க வேண்டும், போராடியவர்களையும் கிளர்ச்சி செய்ய அனுமதித்திருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அன்றைய நிலைமையை இலகுவாக மறந்து விடுகிறார்கள். அன்றைய நிலைமையை பார்க்கு முன் இன்றைய நிலைமையைப் பார்ப்போம்.

அண்ணன் சீமான் ஊர் ஊராகச் சென்று மானத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் வீரத்தை ஊட்டியிருக்கிறார். உணர்ச்சியோடு இலட்சக் கணக்கான தம்பிகள் ஏகே 74 ஏந்தத் தயாராக நிற்கிறார்கள். எட்டு வழிச் சாலை அமைந்தால் எட்டுப் பேரை வெட்டுவேன் என்று மன்சூர் அலிகான் அரிவாள் எந்தி நிற்கிறார். சுங்கச் சாவடிகளை அடித்துடைத்து விட்டு வேல்முருகன் வேலேந்தி நிற்கிறார்.

இப்படியான நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் காட்டாட்சி தமிழ்நாட்டில் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் தமிழர்கள் மீது பயங்கரவாதப் படுகொலை அரங்கேறியது. எட்டுவழிச் சாலை ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகின்றன.

இதை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்று மார்தட்டியவர்கள் இன்றைக்கு சில வழக்குகளைப் போட்டதும் ஓடி ஒளிந்து விட்டார்கள். எட்டுப் பேரை வெட்டுவேன் என்ற மன்சூர் அலிகான் சிறைவாசலில் நின்றபடி, 'இது நல்ல திட்டம் என்றால், நானும் கல் தூக்கி உதவுவேன்' என்று பம்மினார். சீமானின் சத்தத்தையே காணவில்லை. உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அடி வாங்கவும், சிறை செல்லவும் இன்றைக்கும், அன்றைக்கும் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இவர்களை எல்லாம் நம்பி, 2009இல் கலைஞர் டெல்லிக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கியிருந்தால், அதோ கதிதான்.

ஒரு காலம் இருந்தது. 1985இல் ஆண்டன் பாலசிங்கம் உட்பட மூன்று பேர் இந்திய அரசால் நாடுகடத்தப்பட்டார்கள். கலைஞர் ஆணையிட்டார். இலட்சக் கணக்கில் தமிழர்கள் வீதியில் இறங்கினார்கள். ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் எந்த ஊரிலாவது ரயில் ஓடினால் அந்த ஊரில் தமிழன் இல்லையென்று அர்த்தம்' என்று கலைஞர் முழங்கினார். இந்திய அரசு பணிந்தது. நாடுகடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இது எல்லாம் ராஜிவ்காந்தி படுகொலையோடு முடிந்து போனது. வெகுஜன ஆதரவு இப்படியான போராட்டங்களுக்கு இல்லாமல் போனது. உலகமயமாக்கலும் ஒருபக்கம் போர்க்குணம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையை உலகம் முழுதும் குறைக்கத் தொடங்கியிருந்தது.

இப்படியான ஒரு நிலையில்தான் 2009 வருகிறது. சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பெரும்பாலான தமிழர்கள் தம்பாட்டில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கிளர்ச்சி செய்ய சில நூறு பேர் தயாராக இருந்தார்கள். பல இலட்சம் பேர் கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்திய அரசு ஈழத்தில் மூர்க்கமான போரை நடத்திக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மீது பாயவும் அது தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. கலைஞர் வரம்பு மீறினால், அவருடைய ஆட்சியைக் கலைத்து, அவரையும் சிறையில் அடைத்து, திமுக என்கின்ற கட்சியையும் இல்லாமல் செய்து விடுகின்ற திட்டத்தை ஆரிய பார்ப்பனிய அதிகார வர்க்கம் கொண்டிருந்தது.

திமுகவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போனாலும், வெளியில் இருந்து கொண்டே மத்திய அரசாங்கத்தைக் காப்பாற்ற பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள் என்று பலர் தயாராக இருந்தார்கள். தன்னால் மத்திய அரசைக் கவிழ்க்க முடியாது என்பதையும் கலைஞர் உணர்ந்திருந்தார்.

மிகப் பலவீனமான நிலையில் சிறுபான்மை அரசாங்கத்தை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்த கலைஞர் தன்னால் எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் முயன்றார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் முடியவில்லை.

ஈழத்தில் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு அடி பணிவுத் திட்டத்தையும் ஏற்க மறுத்து சண்டை செய்து கொண்டிருந்தார். ஈழத்தில் இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்பதும் தனக்குப் பிறகு வருபவர்கள் தமிழர் உரிமையை கூறு போட்டு விற்று விடுவார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இறுதி வரை அடிபணியாது எதிர்த்து நின்று அவர் சண்டையிட்டார்.

ஆனால் கோடிக் கணக்கில் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஒரு முதன்மை மாநிலமாக ஆக்கியிருக்கின்றன. சமூகநீதியில் தமிழ்நாடு எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது. இன்னும் போக வேண்டிய தூரமும் இருக்கிறது. விட்டுக் கொடுப்புக்களோடும், நிதானத்தோடும்தான் இலக்கை அடைய வேண்டியிருக்கிறது.

மூத்த அரசியல்வாதியான கலைஞர் எல்லாவற்றையும் சரியாகக் கணக்கிட்டு, தன்னால் முடிந்ததை முயன்றார். முடியாததை செய்யாது விட்டார். தடுக்க முடியாததை தடுக்காது விட்டார். தமிழீழத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட, இந்திய வேட்டை நாய்களிடம் இருந்து தமிழ்நாட்டை கலைஞர் காத்தார்.

நன்றி:- வி.சபேசன்

Saturday, July 21, 2018

கடலில் விழும் காவிரியை கையப் பிடிச்சு இழுக்காதே...

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.

இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.

மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள்  கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.

இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு  சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.

ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.

காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.

முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.

பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து  உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை.  காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"

என்கிறது அகநானூறு (126 : 4-5)

- நம்பிக்கை ராஜ்.