Thursday, June 6, 2019

இந்தி திணிப்பு - நம் வாழ்வாதார பிரச்சனை

இந்திப் படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

பெற்றோர் எல்லாரும் இந்தி வேண்டுமென்று சொல்லும்போது அதைத் தடுக்க நீங்கள் யார் ?

தமிழ் மொழி, தமிழ் மொழினு சொல்லி, சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

இந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் முன்வைக்கும் வாதங்களே இவை. நியாயமாக தெரியும் வாதங்கள். உணர்வுப்பூர்வமான வாதங்கள்.

நாம் உணர்வுப்பூர்வமாக இதனை அணுகாமல், தமிழ் மொழி என் உயிர் என்ற நிலையில் இருந்து அணுகாமல், பொருளாதாரம் (வரவு - செலவு), யதார்த்தம் என்றளவில் இந்தி மொழி பயன்பாட்டை ஆராய்வோம்.

நாடு என்பது உண்மையில் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே குறிக்கும். நாடுகள் தோன்றுவதற்கு முன் சிறு, சிறு மக்கள் குழுக்கள் தங்கள் இடத்தில் தங்களுக்கான பொருளாதாரத்தை நிறுவிக் கொண்டனர். அவர்கள் செழிப்படைந்தவுடன், பக்கத்தில் உள்ள குழு படையெடுத்து வந்து செழிப்பான பொருளாதாரத்தைப் பிடித்துக்கொள்வார்கள். இது ஒரு இயல்பான சுழற்சி. மனிதக் கூட்டம் மட்டுமின்றி மிருகங்களின் எல்லையுமே இப்படித்தான் வரையறுக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். வலுத்த மிருகமே பொருளாதாரத்தை ஆளும்.

பொருளாதாரமே நாடு என்பதால், நாடு பிடிப்பதிலும் வரவு - செலவுக் கணக்குகள் உண்டு. போர் தொடுக்க 1000 ரூபாய் செலவாகும் என்றால், போரில் வெற்றி பெற்றால் அந்த நாட்டில் இருந்து 2000 ரூபாய் கிடைக்கும் என்றால் மட்டுமே போர் தொடுக்கப்படும். லாபம் இருந்தால் மட்டுமே போர் நடக்கும். அதைப் போல அந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கும், எதிரிகளை எதிர்த்து போரிடலாமா? சரணடையலாமா? என்பதும் இந்த வரவு - செலவை வைத்தே கணக்கிடப்படும். இராஜராஜன் சோழன் வடக்கே செல்லாமல், கிழக்காசியவிற்கு சென்றதற்கும் இந்த கணக்குகளே காரணமாக இருந்திருக்ககூடும். மொத்தத்தில், பொருளாதார கணக்குகள், பொருளாதாரத்தைப் பிடிப்பதற்காக நாடு பிடிப்பதாகும்.

ஆக, மனிதனோ, மிருகமோ, பொருளாதாரமே நாடு.
நாட்டுப் பற்று, தேசிய உணர்வு, மொழி, பண்பாடு, வரலாறு இவையெல்லாம் அந்த பொருளாதாரத்தைக் காத்து நிற்பவைகள் மட்டுமே. ஒரு நாட்டின் தலையாய கடமை, ஒரு அரசின் தலையாய கடமை தம் நாட்டின் பொருளாதாரத்தை அன்னிய சக்திகளிடம் இருந்து காப்பதே ஆகும்.

இந்நிலையில், இந்தி என்பது மக்கள் பயன்பாட்டிற்கும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது என்று எண்ணுகிறிர்களா? சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டுப் போராடியவர்களை வாயிலேயே சுட்டுக் கொன்ற அரசுகளுக்கு, மக்கள் நலன் மேல் அவ்வளவு அக்கறையா என்ன?

நிச்சயம் கிடையாது. இந்தியா என்பது ஒரு நாடு கிடையாது, நாடுகளின் ஒன்றியம். அதாவது, இந்தியா என்பது ஒரு பொருளாதாரம் கிடையாது, பொருளாதாரங்களின் கூட்டமைப்பு. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கரான்சி இருந்தால் (டாலர் என்று வைத்துக்கொள்வோம்), 1 தமிழ் நாடு டாலர் 30 இந்தியா ரூபாய்க்கு  ஈடாக இருக்கக்கூடும். ஏனெனில், தற்பொழுது பிகாரில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும், தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும் வெவ்வேறு. இரண்டும் வெவ்வேறு பொருளாதாரங்கள். இந்தியை அனுமதித்தால், தமிழர் வேலையெல்லாம் மற்றவர்களுக்கு செல்வது இந்த வேறுப்பாட்டால்தான். உதாரணம் - கார் ஒட்டுவதற்கு குறைந்த சம்பளத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து ஆள்கள் கிடைப்பார்கள். தமிழர்களும் அந்த குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டும் அல்லது வேறு துறைக்குச் செல்ல வேண்டும். இப்படி எல்லாத் துறையிலும் நடக்கும் பொழுது நம் பொருளாதாரமே கிழ் இறங்கும், நம் வசதி வாய்ப்புகள் குறையும். பிகாரின் குறைந்த பொருளாதாரம் தம் லாபத்திற்காக, தமிழர் பொருளாதாரத்தைக் காவு கேட்கும்.

இப்பொழுது ஆரம்ப பத்திகளை மீண்டும் படிக்கவும். பொருளாதாரங்களைப் பிடிப்பதே, நாடு பிடிப்பதாகும்.

இந்தி படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

தமிழ் நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போய்விடும். கைவிட்டுப் போய்விடும்.

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தியை அனுமதிப்பதால் தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நேரடி ஆபத்து என்கின்ற பொழுது தமிழ் நாடு அரசு தம் பள்ளிகளிலேயே இந்தியை அனுமதிக்க இயலாது. தேவையும், விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

நீங்கள் ஒருவர் இந்தி படித்து வெளிமாநிலங்களுக்கு செல்லலாம் என்று நினைத்தால், அங்கிருந்து அதே இந்தி முலம் 10 பேர் உள்ளே வருவார்கள் (நாம் 8 கோடி, அவர்கள் 100 கோடிக்கு மெல்). உதாரணத்திற்கு, தற்பொழுது தனியார் துறையில் மேலாளர் பதவி தவிர்த்து பெரும்பாலும் வேலையில் இருப்பவர்கள் தமிழர்கள், முக்கியமாக தென் மாவட்டங்களைச் சார்ந்தோர். இதற்கு முக்கிய காரணம் சென்னையில் இந்தி இல்லை என்பதால் வட நாட்டினர் சென்னைக்கு வர கடைசி முக்கியத்துவமே தருவர், ஆகையால், அதிகளவு போட்டி கிடையாது. 10 பேருக்குள் மட்டுமே போட்டி. 10 பேருமே தமிழர்கள். இந்தி படித்தால் 100 பேருக்குள் போட்டி. 90 பேர் தமிழர் அல்லாதவர்.போட்டிக்கு நாம் தயங்கவில்லை.  யதார்த்தத்தைப் பேசுவோம்.

இந்த உதாரணம் வியாபாரத்திற்கும் பொருந்தும்.

மொத்தத்தில் இந்தி படித்தால் வெளி மாநிலத்திற்கு சென்று வியாபாரம், வேலை செய்வது நடக்குமா என்பது தெரியாது, ஆனால், தமிழ்நாட்டில் வேலை, வியாபாரம் தமிழர்களுக்கு இல்லாமல் போகும்.

பெற்றோர் எல்லாரும் இந்தி வேணும்னு சொல்லும் பொழுது அதைத் தடுக்க நீங்க யார்?

8 கோடி மக்களும் விரும்பினாலும், தமிழ் நாட்டுப் பொருளாதாரத்தை காப்பதற்காக தமிழ் நாடு அரசு இந்தியை அனுமதிக்கக் கூடாது. அரசின் தலையாயக் கடமை இது. தமிழ் நாட்டு அரசு மட்டுமின்றி, உலகில் எந்தவொரு அரசும் இதையே செய்யும்.

தமிழ் மொழி, தமிழ் மொழியென்று சொல்லிச் சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமின்றி பல்லாயிரம் வருடங்களின் பொருளாதார ஆளுமைகளை உள்ளடங்கியது. தமிழர்கள் பல பொருளாதாரங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். வலிமையாக இருந்துள்ளனர். தற்பொழுது, தமிழ் மொழி, தமிழ் மொழி என்றுரைப்பது மீண்டும் நம் வலிமையைப் பெற்றுச் சக்தி மிக்க பொருளாதாரமாக மாறுவதற்குத்தான். அதன் வழி நம் சரியாகவே பயணிக்கிறோம் என்பது கண்கூடு.

மொத்தத்தில், போரிட்டு நம் பொருளாதாரத்தைப் பிடிக்காமல், இந்தி திணிப்பு முலம் நம் பொருளாதாரத்தை, நம் வாழ்வாதாரத்தை, நம் வளத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அதாவது, செலவே இல்லாமல் வரவை எளிதாக இந்திய ஒன்றியம் பெயரில் அடையப் பார்க்கிறார்கள்.

சில கேள்விகள் இயல்பு,

இந்தியப் பொருளாதாரத்துடன் தமிழர் பொருளாதாரம் இணைந்தால், தமிழருக்கு தீங்கு என்று எப்படி நிச்சயமாக சொல்றிங்க?

இரு பொருளாதாரங்கள் இயல்பாக இணையலாம். கட்டாயப்படுத்தினால், இரண்டில் ஒரு பொருளாதாரத்திற்கு நட்டம். அப்படி நட்டம் என்பதால்தான், கட்டாயம் உள்வருகிறது. உலகளவில், இரு பொருளாதாரங்கள் பரிவர்த்தனைக்கு Trade treaties போடுவார்கள். அதாவது, தொழில் ஒப்பந்தங்கள். இரு நாட்டு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆலோசித்துப் போடப்படும். இரு தரப்புக்கும் நட்டமின்றி பார்த்துக் கொள்ளப்படும். ஆனால், இந்தியாவில் தன்தோன்றித்தனமாக ஜி.எஸ்.டி, சாகர்மாலா, ஹட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்றவைகள் கட்டாயமாக தமிழர் பொருளாதரத்தில் திணிக்கப்படுகிறது. இதில் எப்படி தமிழருக்கு நன்மை நடந்திட முடியும்?

ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியை அனுமதித்த பின் ஏன் தமிழ்நாடு மட்டும் முரண்டுப்பிடிக்கிறது?

அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்தி மொழி நன்மை செய்கிறது. ஆகையால் அனுமதித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கேரளா பொருளாதாரத்தில்  படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தங்கள் மக்களுக்காக அடுத்தவர் பொருளாதாரத்தை அண்டி வாழ வேண்டி உள்ளதால், அவர்கள் இந்தி படிக்க வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திராவிலும் இதே நிலைதான். ஏன் மொழிக்காக உயிரே தரும், மொழியால் தம் பாதியில்ஒரு நாடே உருவான மேற்கு வங்காளத்திலும் இந்திக்கு கடுமையான எதிர்ப்பு இல்லை. ஏனெனில், அவர்கள் பொருளாதாரத்திற்கும் அது நன்மை செய்வதாக உள்ளது.

மொத்தத்தில், இந்தித் திணிப்பு என்பது மொழிப் பிரச்சனை இல்லை, பொருளாதாரப் பிரச்சனை. நம் வாழ்வாதாரப் பிரச்சனை.

எதிர்ப்போம்...

எழுத்து,
பா.ச. பாலசிங்

சரிபார்ப்பு
ப. உதயகுமார்