Monday, December 19, 2011

அரசு பால் + ஹசாரே பால்= கோல்மால்


அரசு லோக்பால் - ஜன் லோக்பால் என்றால் என்ன ?
அன்னா ஹசாரேவிற்க்கு அரசியல் சட்டம், அரசுலோக்பால் பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இவர் சொல்லும் ஜன்லோக்பால் சட்டம் வந்துவிட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அதுஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம்இருக்கட்டும்.

அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால்,

ஹசாரேவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படைஎன்ன...?

"ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல்கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான்என்பது புரிந்திருக்கும்.

ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹசாரேயின் ஜன்லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும்என்பதுதானே உண்மை...? ’
இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம்கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இதுயாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம்எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள்சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன்லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள்விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லதுதனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்றகுற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள்அவை.

அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்துவிலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத்மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்கமுடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடிபோன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டைமுன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாதநிறுவனங்கள் (Non Government Organisations) மீதும்நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால்,
அவற்றை அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பால் குழுவன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஊழல்  நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயேநடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின்சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல்மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானதுகூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில்ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்னசெய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன;வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவிபெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீபொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தைஉருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்.

விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவைமிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலேதான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம்என்று அண்ணா சொல்வது ஏன்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவைநடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி,பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்றஅடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டுநிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம்போட்டு, பேனர் தூக்கியது தவிர என்னகிழித்திருக்கிறார்கள்?

ஹசாரே முன்னிறுத்தும் வடிவம், அரசு முன்னிறுத்தும் வடிவம்இரண்டில் எது சட்ட வடிவமானாலும் உயர் நீதி மன்றத்தில் ஓர்எளிய ரிட் மனு மூலம் அது பொடிப் பொடியாகும் சாத்தியம்அதிகம். அதிலும் ஹசாரே முன்னிறுத்தும் வடிவம் சொல்லவே வேண்டாம் .

ஹசாரேயின் உண்ணாவிரதம் ஏன் என்ன பயன் ?

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் அவர் பிளவுபட்டசமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம்இருந்தார்.

அண்ணா ஹசாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்குஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்றுவிரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒருஎதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்றபெருமூச்சுடன்!

ஆனால், ஹசாரேவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறுஎன்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டாமா?

ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22நிபந்தனைகளில், வெறும் 6 தான் ஹசாரேவின் கோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிகமுக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன?

"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்றுநாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது,"என்றுதான் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்,"என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள்என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்பவிதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும்,முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும்உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான்அண்ணா ஹசாரே குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!
ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல்சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று ஹசாரேவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்றஅவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்றுசட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும்.
அப்படியே இருந்தாலும், அதுகுறித்து ஹசாரேகவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவேஅவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில்இருக்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்விதமாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஹசாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் அவரை ஆதரிப்பதை நிறுத்துவிட்டு யோசிப்பவர்கள் எத்தனைபேர், நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளது என்னை திட்டப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

ஏன் என்றால் இதை ஏற்ப்பதும் ,மறுப்பதும் அவரவர் விருப்பம் .என்னை பொறுத்தவரை ஊழலுக்கு ஏதிரான இந்த போராட்டம் தவறில்லை அதை வழிநடத்தும் நபர் சரியில்லை என்பது மட்டுமே , தவறான நபரை ஆதரித்தது நம் மக்கள் என்ற தீராத பழிக்கு ஆளாக வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .


நன்றி:-மயில்ராவணன் 

Sunday, December 18, 2011

கூடங்குளம், முல்லை பெரியாறு -ஜோதிட தீர்வா?


சோதிடத்தை நம்பிக் கெட்டவர்கள்!

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டு அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் சோதிடத்தின் வழிகாட்டலோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு! 

அப்படி சோதிடத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வு சோதிடர் சொன்னபடி சிறப்பாகஅமைந்ததா?

தினமணி நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலம் உங்கள் கையில் என்ற சோதிடப்பகுதி வெளியிடப்படுகிறது. அப்பகுதியில் மக்கள் தங்கள் துன்ப துயரங்களைக் கூறி என் கஷ்டம் தீருமா? நோய் தீருமா?பரிகாரம் உண்டா? திருமணம் நடைபெறுமா? வேலை கிடைக்குமா? என்றெல்லாம் கேட்டு எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பொருத்தம் என்றார் சோதிடர் - தனித்து வாழ்கிறார் பெண்!சோதிட நம்பிக்கை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தபெண்ணுக்கு கணவரின் சாதகத்தோடு பொருத்தம் பார்த்து,மிகவும் சரியான பொருத்தம் வாழ்வு சிறப்பாக அமையும்10 பொருத்தத்தில் பத்தும் நன்றாகயிருக்கிறது என்றெல்லாம் சோதிடர் சொல்லிய பிறகு நாள்,நட்சத்திரம், லக்கினம் என்றெல்லாம் மங்கலகரமான நேரம் பார்த்து திருமணம் நடைபெற்றது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் என்னுடைய கஷ்டம் தீருமா என்று கண்ணீர் சிந்தி 6.4.2001-இல் தினமணி சோதிடர் பகுதிக்கு தபால் எழுதியிருக்கிறார்.

அதில் என் கணவரால் பலவிதக் கொடுமைகளுக்குஆளாக்கப்பட்ட நான் தற்போது 7 வயது மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன். என் கஷ்டம் தீருமா? என்று சோதிடரிடம் கேட்டிருக்கிறார்.

அப்பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர்வாழ்க்கை சிறப்பாக அமையுமென்றார் சோதிடர்! ஆனால் கணவரால் சித்திரவதைக்குள்ளாகி தனிமையில் கஷ்டப் படுகிறார்! 

பொருத்தம் பார்த்த சோதிடரைக் கேட்டால், இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியத்தால் அல்லது தோஷத்தால்இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறி தப்பித்துக் கொள்வார்!

பூர்வ பாவ புண்ணியத்தால் எல்லாம் நடக்குமென்றால் பிறகு ஏன் சோதிடம் பார்த்தபோது பொருத்தம் நன்றாக இருக்கிறதென்று சொல்ல வேண்டும்.

சோதிடம் பார்த்துத் திருமணம் செய்து கொண்டஅப்பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனது போல் ஏராளமான பெண்களின் வாழ்க்கையும் அவ்விதம் கஷ்டப்படும் நிலையில் இருக்கக் கூடும்! 

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடப் பொருத்தம் சோகத்தில் முடிந்தது

23.1.2005 ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் தீயில் கருகி பலியானார். மணமகள் ஜெயஸ்ரீ பலத்த தீக்காயங்களுடன் தப்பித்தார். இவ்விபத்தில் 55 பேர் பலியானார்கள். 

இக்கோரவிபத்தால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. இந்தக் குடும்பமும் அய்தீக குடும்பந்தான். அய்தீக ஆசாரப்படி மணமக்களின் ஜாதகத்தை துல்லியமாக அலசி ஆராய்ந்து பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து சோதிடர் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த போதே மணப்பந்தல் தீப்பிடித்து மணமகன் பலியாகி, மணமகள் தீக்காயமுற்று உறவினர்கள் 55 பேர் இறந்து விட்டனர். திருமணப் பொருத்தம் பார்த்த சோதிடர் இதற்கு என்ன பதில் கூறுவார்?

தனி மனிதன் வாழ்வையும், துல்லியமாகச் சோதிடத்தில் கூற முடியும் என்று நம்புகிறவர்கள் இதற்கு என்ன காரணம் சொல்லுவார்கள்? 

சோதிடக் கணிப்பில் இந்தக் கோர சம்பவம் நடக்குமென்று தெரியாமல் போய்விட்டதா! சோதிடம் நம்பத் தகுந்ததல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்?

சோதிடத்தை நம்பி கருவைக் கலைத்தார்!ஒருவருக்குத் திருமணமாகி 4 ஆண்டிற்குப் பின் அவரதுமனைவி கருவுற்றார்! கணவர் சோதிடரை அணுகி தனக்குக் குழந்தை பிறந்தால் என் ராசி எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இது முதல் குழந்தை ஆகவேராசிப்படி உடல் குறைபாடு உள்ளதாகப் பிறக்கும் என்று சோதிடர் சொல்ல அதை நம்பிய கணவர் உடனடியாகக் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்துவிட்டார். 

கருவைக் கலைப்பதில் தவறு ஏற்பட்டு மனைவிக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை மிகவும்பாதித்திருக்கிறது. அதை எடுத்து விட வேண்டுமென்று கூறி மனைவியின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள். 

சோதிடர் சொன்னதைக் கேட்டு முட்டாள் தனமாக நடந்து கொண்டதால் இனி குழந்தை பெற முடியாத அளவிற்கு கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இச்செய்தி 22.1.2006 தினத்தந்தி குடும்பமலரில் வந்துள்ளது.

உதாரணத்திற்குத்தான் ஒன்று இரண்டு சம்பவங்கள் இங்குகுறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதுபோன்று சோதிடத்தை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.


பொருத்தம் பார்த்த இலட்சணம்!12.11.2006-இல் தினமலரில் வந்த செய்தி. சங்கீதாவின்தந்தை, மகளுக்கு மாப்பிள்ளை தேடினார். சங்கீதாவின் சாதகத்தில் செவ்வாய்தோஷம் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சோதிடர்! 

சென்னைக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் வசதி படைத்த இராசு என்பவரின் சாதகம் சங்கீதாவின் சாதகத்துடன் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சோதிடர் சொல்ல திருமணம் பேசி தடபுடலாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சங்கீதா பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்! சோதிடர் பொருத்தம் பார்த்துச் சொன்ன அந்தமாப்பிள்ளை ஆண்மையில்லாதவர்!

வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கூட சாதகத்தால்கணித்துச் சொல்ல முடியும் என்று கூறும் சோதிடர்கள் பொருத்தம் பார்த்துச் சொன்ன இலட்சணம் இப்படி! 

சங்கீதாவின் வாழ்க்கையைப் போல் சோதிடர்களால்பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், ஏராளம்!

இன்று சிலபோலிகள் பத்திரிகைகளில் கூடங்குளம், முல்லை பெரியாறுக்கும் ஜோதிடத்தில் தீர்வு சொன்னதை பார்த்து சிரிப்புதான் வந்தது   
நன்றி-பார்தி 

Friday, December 9, 2011

திராவிட கலாச்சார மீட்டெடுப்பு


ஆரிய மாயை – சில உண்மைகள்…! (பகுதி – 2)

19 மற்றும் 20 – ம் நூற்றாண்டுகளில் நடந்த சில மறுமலர்ச்சிகளால் தமிழ் தன் இழந்த பெருமையை எல்லாம் திரும்பப் பெற்றது. காலங்களைக் கடந்து வாழும் ஒரு மொழியும் கலாச்சாரமும் என்றும் அழிக்கபடுவதில்லை. சில காலம் மறைத்து வைக்கப்படுவதுண்டு. ஆனால், அம்மொழியானவள் தன்னை வெளிப்படுத்த தலைசிறந்த மகன்களை தானே பெற்றெடுப்பாள். தமிழ்த்தாயும் அங்ஙனமே. முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த சிலர், தமிழரின் மொழி வளத்தை கண்டு இங்கு தங்கி தமிழ்ச்சேவை புரிந்தனர். கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோர் அப்படித்தான். தமிழ் மக்கள் பலர், தமிழின் பெருமைகளை உணரத்துவங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டு முடிவிலும், பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், பல சங்க கால தமிழிலக்கியங்கள் வெளிக்கொணரப் பட்டன. தஞ்சை மாவட்டத்தின் பல சிற்றூர்களில் பல அந்தணர்களின் வீட்டுப் பரணில் உறங்கிக் கிடந்த இந்த தமிழ் நூல்கள் யாவும் உ.வே சாமிநாதன், தாமோதரன் பிள்ளை, ஆகிய பெரியோர்களால் வெளியே கொண்டுவரப் பட்டு பதிப்பிக்கப்பட்டன. தமிழ் ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த இலக்கியங்களைக் கொண்டிருந்ததை நாம் அறிந்து கொண்டோம்.
பின்னர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் மிக முக்கியமான மாற்றாங்கள் நடந்தேறின. இரண்டு தலைசிறந்த மனிதர்கள் தமிழையும், திராவிட கலாச்சாரத்தையும் மீட்டெடுத்தனர். அவர்கள், மகாகவி பாரதியும், தந்தை பெரியாரும் தான். பாரதியார், தேனின் இனிய தமிழ்க் கவிதைகளை வடித்தார். மிகச் சிறிய வயதில், எளிய இனிய கவிதைகளை எழுதினார். மிகப் பெரும் சமூக மற்றும் மொழியியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ஆரிய மாயையை தமிழனுக்குச் சுட்டிக் காட்டினார். சாதி, மத, இன பேதங்களைச் சாடினார். பெண்ணடிமையை இடித்துரைத்தார். சொல்வதோடு நின்று விடாமல் வாழ்ந்தும் காட்டினார். தன் அக்ரகாரத்தில் சூத்திரனை அழைத்துச் சென்றார். தன் மனைவியை சமூக நிகழ்ச்சிகளுக்கு கூட்டிப் போனார். அவர் ஒரு மாபெரும் மனிதப் பிறவியானார். நம் துரதிருஷ்டம் அவரால் நீண்ட நாள் வாழ இயலவில்லை.
அடுத்து தந்தை பெரியார். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்த ஈரோட்டுப் பெரியார், திராவிடர்களின் தனித்தன்மையை அவர்களுக்கு உணர்த்துவதில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். தமிழ் தனித்தன்மை பெற்று பெருமையுறுவதைக் கண்ட ஆரிய ஆதிக்க சக்திகள், அதற்கு ஒரு வழி கண்டறிந்தன. சமஸ்கிருதத்தின் வழித்தோன்றலான இந்தி மொழியை இந்தியாவெங்கும் பரவச் செய்வது தான் அது. 1935-ம் ஆண்டு சென்னை மாகாணத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், ராஜாஜி முதல்வரானார். கட்டாய இந்தி கல்வித் திட்டம் கொண்டு வந்தார். அதன் படி, இந்தி மொழிப் பாடம் கட்டாயமாக்கப் படும். அனைத்து வகுப்பு மாணவர்களும் இந்தி மொழியைப் படிக்க வேண்டும். ஒரு இனத்தின் மீதும், சமூகத்தின் மீதும் நடத்தப் பட்ட இந்த திணிப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார். பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தி மொழியை திணிப்பதை உடனே நிறுத்த வேண்டுமென அவர் போராடினார். இருந்தாலும் ராஜாஜி நிறுத்துவதாயில்லை. எப்படியோ ஒருவழியாக 1942-ம் ஆண்டு ஆங்கில கவர்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த சட்டத்தை நீக்கினார். 

அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் கூட, இந்திய சுதந்திரத்துக்குப் பின் நேருவும், காந்தியும் கலந்து பேசி, இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன் படி 15 ஆண்டுகள் இந்தியும், ஆங்கிலமும் நாட்டின் மொழியாக இருக்கும். அதன் பிறகு ஆங்கிலம் அறவே ஒழிக்கப்பட்டு இந்தி மொழி மட்டுமே நாட்டின் தேசிய மொழியாக இருக்கும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்தனர். சுதந்திரத்துக்குப் பின் 1962-ம் ஆண்டு அலுவல் பணிச்சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு ஆங்கிலப் புழக்கம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், 1965-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கா.ந.அண்ணாதுரை, இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டத்தை துவக்கினார். அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் இந்தப் போராட்டத்தை ஒடுக்கினார். இந்தியப் பிரதமராயிருந்த சாஸ்திரி அவர்களும் உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் இந்தியை தேசிய மொழியாக்குவதில் உறுதியாய் இருந்தனர். சென்னை மாகாணத்திற்குட்பட்ட காங்கிரசார் காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றோர் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த காங்கிரசாரும் எதிர்த்தனர். சாஸ்திரியும், நந்தாவும் பொறுமை காத்தனர். தமிழகம் முழுதும் இந்தி திணிப்புக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கோப்புகளின் படி சுமார் 70 பேரும், செய்தித்தாள்களின் படி, சுமார் 500 பேரும் உயிரிழந்தனர். தங்கள் மொழியை விரும்பிப் படிக்க, தங்கள் மொழியை அழிக்க நினைக்கும் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். நடுவண் அமைச்சரவையில் இருந்த உணவுத்துறை அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் தன் பதவியை விட்டு விலகப் போவதாய் அறிவித்தார். சாஸ்திரி தன் அமைச்சரவையிலெயே ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் ஆங்கிலம் நீடிக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 
இந்தியைத் திணிக்க நினைத்த காங்கிரஸ் அரசாங்கம் 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அண்ணாதுரை வெற்றிப் பெற்று முதல்வரானார். இன்றுவரை காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. இனிமேலும் பிடிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்திக்கு எதிரான போரா…? 
இந்தி எதிர்ப்பு போர் என்று சில பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்படும் இந்த போராட்டம் உண்மையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பான போர் அல்ல. இந்தி மொழியைத் திணிக்க எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போராட்டம். இந்த இந்தி திணிப்புக்கு எதிரான போர் அவசியமானதா….? இது வெறும் அரசியல் சார்புடையது மட்டுமா…? இந்த கேள்விகள் இன்று நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. அதற்குக் காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் ஆரிய மாயை. 
“சே… இந்தி படிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்…” என்று நம்மில் பலர் புலம்புவதுண்டு. அப்படி அந்த இந்தி படிப்பது அவசியமானதா…?
இந்தி மொழி என்பது ஒரு சிறந்த மொழியாகும். மிகவும் எளிமையான அமைப்பு உடையது. யார் வேண்டுமானாலும் எளிதில் பயின்று கொள்ள முடியும். இந்தியாவில் இன்று பெரும்பான்மையான மக்களால் பேசப்படுவதும், உலகில் சீன மொழிக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் பேசும் மொழியுமாகும். பல தீஞ்சுவை இலக்கியங்கள் நிரம்பப்பெற்ற மொழியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து வாழும் மொழியுமாகும். இந்தி மொழியை தமிழன் என்றுமே வெறுப்பதில்லை. அம்மொழி தங்கள் மீது திணிக்கப்படுவதைத் தான் வெறுக்கிறான். மூவாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியை தங்கள் தாய்மொழியாக வரப்பெற்ற நாம், ஏன் அதை விட்டு வேறு மொழியை கட்டாயத்துக்குட்பட்டு கற்க வேண்டும்…? அவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படும் போது, நாளைடைவில் தமிழ் மொழியின் சிறப்பு குன்றச்செய்வதே அவர்கள் நோக்கம். இந்திக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நம் தாய் மொழியை அது சார்ந்த கலாச்சாரத்தை நாம் இழக்க நேரிடலாம்.
ஏற்கனவே இன்னும் 200 ஆண்டுகளில் இந்தியாவில் மிக முக்கிய மொழிகள் பல இல்லாமல் அழிந்து போகும் என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது. அந்த அழிவின் பட்டியலில் தமிழ் சென்று சேர வேண்டுமா… பலவாறாக நமது முன்னோர்கள் காத்த நமது மொழியையும் கலாச்சாரத்தையும் நாம் இழக்க வேண்டுமா என்ன…? நமது அண்டை மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப் பட்டதன் விளைவாக அவர்கள் தங்கள் தாய் மொழியை மறந்துவிட்ட கொடுமைகள் இப்போது நடந்துதான் வருகின்றன. பல கோடி தெலுங்கு பேசும் மக்கள், இன்று சில சிறப்பான சொற்பயன்பாடுகளை தங்கள் தாய்மொழியில் இழந்துவருவதாக தாய்மொழிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், மராட்டிய மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் தங்கள் தாய்மொழியை விட இந்தி பேசுபவரே அதிகம். மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் தாய்மொழியை இழக்கின்றனர். 
இன்று ரயில்வே துறை, அஞ்சல் துறை, வங்கித் துறை போன்ற நடுவண் அரசின் துறைகள் இந்தியை மட்டுமே முக்கிய மொழியாக கொண்டு செயல்படுவதால் நம்மவர்கள் அவற்றில் வேலை வாங்குவதும் பதவி உயர்வு வாங்குவதும் கடினமாக ஒன்றாய் மாறிவிடுகிறது. அதைக் கண்டு நாம் “இந்தி படித்திருக்கலாமோ…?” என்று விசனப்படுவதுமுண்டு. இவையெல்லாம் ஆரிய மயக்கத்தின் தற்கால வடிவங்களாகும்.
அஞ்சல் சார்ந்த பல சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் படிவங்களும், கோப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருப்பதை நம்மில் பலர் கவனிக்க மறந்திருப்போம். வங்கிகளில் இருக்கும் பல வண்ண சீட்டுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கூட அவ்வாறு தானிருக்கும். ஏனெனில் அஞ்சலகமும், வங்கியும் நடுவண் அரசின் துறைகள். அவர்கள் மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்கின்றனர். நடுவண் அரசின் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் நடத்தப் படுகின்றன. இவ்வாறு நடத்துவதன் மூலம் இந்தியைத் தாய்மொழியாக கொண்டோர் மட்டும் நிறைய வேலைவாய்ப்பை பெறச்செய்வதில் நடுவண் அரசு மறைமுகமாக ஆரிய மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஒருவேளை இந்தி மொழியைப் பாடமாக பயின்றிருந்தால் நாமும் அவ்வாறு வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம் என நம்மை நினைக்கத் தூண்டுவதே அவர்களின் முக்கிய குறிக்கோள். அவ்வாறு நினைப்பதன் மூலம், நம் அரசியல்வாதிகள் செய்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை தவறு என சித்தரிக்கும் முயற்சிகள் இவை.
உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அந்நாடுகளில் எல்லாம் வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், எழுதவும் அதையே அலுவல் மொழியாக பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் நிலை சற்று வேறுபட்டது. இங்கு பல மொழிகள் உள்ளன. அவற்றை எல்லாம் அலுவல் மொழியாக ஆக்குவது சற்று கடினம். நடைமுறைச் சிக்கல்கள் உள்ள விஷயமது. ஆனால், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழிகளை எல்லாம் முக்கிய மொழியாக கருதி அவற்றை அலுவல் மொழியாக ஆக்கலாம். சுமார் 25 மொழிகள் அவ்வாறு இந்தியாவில் உள்ளன. அவற்றை அலுவல் மொழியாக மாற்றுவது என்பது கடினமான விஷயமோ, நடைமுறைக்கு உதவாததோ அல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை செய்வதில்லை. 
அவற்றோடன்றி நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் யாவும் வட இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலேயே நடத்தப்படுவதைக் காணலாம். தென்னிந்தியா பெரும்பாலும் புறக்கணிக்கப்படும். அதனாலேயே பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் ஆட்சிகளை இழந்து மாநில கட்சிகள் ஆட்சிக் கட்டிலேறின. மாநிலக் கட்சிகளாலேயே அந்த மாநிலங்கள் பெரும்பாலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். அவ்வாறின்றி தேசியக் கட்சி ஆட்சிக்குட்பட்ட கேரள மாநிலம் இன்றும் தொழில்வளர்ச்சியில் மிகவும் பிந்தங்கிய மாநிலமாகவே உள்ளது. தமிழ்நாடு இன்று தொழில் வளர்ச்சியில், மகாராஷ்டிரம், குஜராத்திற்கு அடுத்த மூன்றாவது இடத்திலும், நகரமயமாதலில் முதலிடத்திலும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்திலும், கல்வி வளர்ச்சியில் முதலிடத்திலும் உள்ளது. இவை எல்லாம் நம் மாநிலக்கட்சிகளினால் நடந்தேறியவையே…!
நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தினாலும், தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. தமிழும் அதில் ஒன்று. மலேய நாட்டில் தமிழ் வழிக் கல்வி என்பது மிகச் சாதாரணமான ஒன்று. தமிழர்கள் மிகச் சிலவாக வாழும் தென்னாப்பிரிக்க குடியரசில் கூட தமிழில் நீங்கள் தேர்வு எழுத முடியும். அப்படியிருக்க, 7 கோடி தமிழர்கள் வாழ்ந்துவரும் தமிழரின் தாய்நிலமான இந்திய தேசத்தில் இன்னும் அந்த முறை ஏற்புடையதாயில்லை நடுவண் ஆட்சியாளர்களுக்கு.

நன்றி :- திரு.கோபி