ஆ.ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.க. செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்கூறியுள்ளார்.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
பொதுக்குழு முடிவில் இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை.பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ஆ.ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறதுஎன்றும் கூறினார்.
கபில்சிபல் விளக்கம்
2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல்விளக்கமளித்துள்ளார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த மாதம் 31-ஆம் தேதி அமைச்சர் கபில் சிபலிடம் அளித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2 நிறுவனங்களுக்கு ஆ.ராசா சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கை குறித்து டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றார். 1991 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு கொள்கையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்தே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகள் மீறப்பட்டதாகவும் 2003ஆம் ஆண்டுக்கு பின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்தார்.விதி மீறல் தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment