"நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்குமென்றால் நான் இந்தப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) எடுக்க முன்வரட்டும்"
தமிழக சட்டமன்ற மேலவை 1986ல் கலைக்கப்படுவதற்கு முன்னால் மேலவையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பேசியதுதான் மேலே இருப்பது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கலைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற மேலவையைத் திரும்பக் கொண்டுவருவதற்கு திமுக அரசு முறைப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.
நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை இருப்பது போல சட்டமன்றங்களுக்கு மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிரம்பிய அவை சட்டப்பேரவை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் நியமன உறுப்பினர்களும் நிரம்பியது மேலவை. படித்தவர்கள், பண்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போன்றவர்கள் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துக்காக உருவாக்கப்பட்டது மேலவை.
இந்த அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைத்தவர்கள். சட்ட நிபுணர் லட்சுமணசாமி முதலியார், ஆந்திர கேசரி டி. பிரகாசம், மூதறிஞர் ராஜகோபாலாச்சாரியார், நீதிக்கட்சித் தலைவர்களான பி.டி.ராஜன், டாக்டர் நடேசன், மூத்த காங்கிரஸ் தலைவர் பக்தவத்சலம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். கலைஞர். ம.பொ.சி போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மேலவையில் இடம்பெற்றுள்ளனர். சுவைமிக்க விவாதங்கள் பல நடந்துள்ளன.
கனவான்கள் சங்கமிக்கும் இடம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த அவை ஒருகட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பின்வாசல், மக்களைச் சந்தித்து வெற்றிபெற இயலாதவர்கள் பதவிக்கு வருவதற்கான கொல்லைப்புறம் என்றெல்லாம் விமரிசிக்கப்பட்டது. 1952 தேர்தலில் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக யாரை முதல்வராக்குவது என்ற கேள்வி எழுந்தபோது அதற்குப் பொருத்தமானவராகக் கருதப்பட்டவர் ராஜாஜி.
ஆனால் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லை. மேலவை உறுப்பினராகவும் இல்லை. இந்த இரண்டு அவைகளில் ஒன்றில் உறுப்பினராக இருப்பவர் முதலமைச்சராகலாம். அதன்படி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட ராஜாஜி, பிறகு மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களைச் சந்திக்காமலேயே முதலமைச்சராகிவிட்டார் ராஜாஜி என்று எதிர்கட்சிகள் விமரிசித்தன.
அதேபோல 1967 தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய அண்ணாவோ நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சரானார். பிறகு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சிக்குப் பணியாற்றுபவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், கட்சித் தலைமைக்கு வேண்டியவர்கள் ஆகியோரும் மேலவைகளில் இடம்பெறத் தொடங்கினர். குறிப்பிடத்தகுந்த உதாரணம் எம்.ஜி.ஆர் மேலவை உறுப்பினரானது. 1962 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பல இடங்களுக்கும் நேரடியாகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா. ஆனால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர்.
1985ல் ஈழத்தமிழர்கள் இலங்கையில் தாக்கப்படுவதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதியும் அன்பழகனும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. இந்தச் சமயத்தில்தான் பிப்ரவரி 1986ல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியிருந்தது. அஇஅதிமுகவுக்கு படுதோல்வி. எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த முக்கியத் தோல்வியாக அந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வி கருதப்பட்டது.
இந்தத் தோல்விக்கு சில மாதங்களுக்கு முன்புதான் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர், பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த தோல்வி எம்.ஜி.ஆரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தது. அதுவும் சட்டமன்ற மேலவைக்கு.
பட்டதாரிகளும் ஆசிரியர்களும் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அப்போது நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் பூர்த்தி ஆகிவிட்டதால் அந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மற்ற இரண்டு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். ஆக, நான்கில் ஒரு தொகுதியிலும் அஇஅதிமுக வெற்றி பெறவில்லை. எம்.ஜி.ஆருக்கு மீண்டும் ஒரு தோல்வி கிடைத்தது.
அடுத்து, மேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அமைச்சரவை பரிந்துரை செய்யும் மூவரை மேலவை உறுப்பினர்களாக ஆளுநர் நியமிக்கமுடியும். எம்.ஜி.ஆர் அரசு அறிவித்த மூன்று பேரில் ஒருவர், பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர். ரகசிய போலீஸ் 115, ஊருக்கு உழைப்பவன், மீனவ நண்பன் போன்ற படங்களில் நடித்தவர். இதயக்கனி படத்தில் எம்.ஜி.ஆருக்காக ஒற்றைப் பாடலுக்கும் ஆடியிருந்தார். பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டிருந்த அவரைக் கைதூக்கிவிட நினைத்தார் எம்.ஜி.ஆர். மேலவைக்கு வர வாய்ப்பு கொடுத்தார். அவரும் மேலவைக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த இடத்தில்தான் இன்னொரு பிரச்னை வந்தது. நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கடன் பிரச்னை காரணமாக ஏற்கெனவே திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆகவே அவரை மேலவைக்கு நியமித்தது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகைகள் தோண்டித் துருவ ஆரம்பித்துவிட்டன.
பெரிய அளவிலான தொகையைக் கடன் பாக்கி வைத்திருக்கிறார் நிர்மலா என்று தெரிந்ததும் நீதிமன்றத்தில் அவர் சார்பாக முதலில் ஏழு லட்சம் ரூபாய் கட்டப்பட்டது. பிறகு மூன்று லட்ச ரூபாய் கட்டப்பட்டது. பணம் கட்டியது யார் என்ற கேள்வி பகிரங்கமாக எழுப்பப்பட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் இருந்து ராஜினாமா கடிதம்தான் பதிலாக வந்தது.
மேலவையில் திமுகவின் பலம் உயர்ந்தது. இதன்மூலம் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி வரப்போகிறார் என்று ஊடகங்கள் எழுதின. கருணாநிதியும் அதை ஆமோதித்தார். இதற்கிடையே சட்டமன்ற மேலவை முற்றிலுமாக நீக்கிவிடலாம் என்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படக்கூடும் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலவையை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடும் நடவடிக்கையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனாலும்
14 மே 1986 அன்று சட்டமன்றத்தில் மேலவை நீக்குதல் தீர்மானம் நாவலர் நெடுஞ்செழியனால் முன்மொழியப்பட்டது. வாக்கெடுப்பு தொடங்கியது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன. இந்திரா காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறியது. தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்ற மேலவை நீக்கப்பட்டது!
25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமையப்பெற்று கூடிய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது .
காபியை கோப்பையில் வைத்துக் குடித்தால் சூடாக இருக்கும். அதையே சாஸரில் ஊற்றிப் பருகினால் பதமாக இருக்கும். சட்டமன்றம் கோப்பை போல; மேலவை, சாஸர் போல. ஒரு விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசினால் அனல் பறக்கும். அதுவே, மேலவையில் பேசப்படும்போது நிதானமான முறையில் நாசூக்காகப் பேசப்படும். இது மேலவை பற்றி அண்ணா சொன்னது.
இந்த மாதிரி வெற்று அலங்கார பேச்சிற்க்கும் விளக்கெண்ணை விளக்கங்களுக்கும் மொத்த குத்தகையாளர் தி மு க தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! இதை ஒரு பதிவாக நீங்கள் போட்டிருக்கவே வேண்டாம்!
ReplyDelete