தொகுப்புகள்

Search This Blog

Saturday, December 18, 2010

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு


இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.

சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.

அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.

ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!

 நன்றி -GK
-

2 comments: