தொகுப்புகள்

Search This Blog

Wednesday, October 27, 2010

வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்



1947 இல் இந்தியா விடுதலையடைந்து 1950 இல் குடியரசு நாடானது. புதிய இந்திய அரசியலமைப்பின் கீழ் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் சென்னை மாநிலத்தின்(பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணம், இந்தியக் குடியரசில் சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது) ஈரங்க சட்டமன்றத்தின் மேலவையாக நீடித்தது. இந்த அவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத நிரந்தர அவையாக இருந்தது. அதன் உறுப்பினர்களின் பதவிகாலம் ஆறாண்டுகள். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்றனர். அவையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் நாற்பதிலிருந்து அதிகபட்சம் கீழவை உறுப்பினர் எண்ணிகையில் மூன்றிலொரு பங்காக இருந்தது. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கீழிலுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.
விகிதம்தேர்ந்தெடுக்கும் முறை
1/6கலை, அறிவியல், இலக்கியம், கூட்டறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்
1/3சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/3மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/12இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1/12பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்
மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. 1952-53 காலகட்டத்தில் அது 72 ஆக இருந்தது. அக்டோபர் 1, 1953 இல் ஆந்திரமாநிலம் பிரிந்து போனதால் 51 ஆகக் குறைந்தது. 1956 இல் 50 ஆகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை 1957 இல் மீண்டும் உயர்ந்து 63 ஆனது. அதன் பின்னர் 1986 இல் மேலவை கலைக்கப்படும் வருடம் உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆகவே இருந்தது. உறுப்பினர்களுள் கீழவையும் உள்ளாட்சி அமைப்புகளும் தலா 21 பேரை தேர்ந்தெடுத்தன; ஆசிரியர்களும், பட்டதாரிகளும் 6 பேரைத் தேர்ந்தெடுத்தனர். மீதமுள்ள 9 பேர் அமைச்சரவையின் பரிந்துரைக்கேற்ப ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருக்கவில்லை. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. 1969 இல் சென்னை மாநிலம் “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, மேலவையின் பெயரும் தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று மாற்றப்பட்டது.

2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையில் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 1989, 1996 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற போதும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய ஆதரவில்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. திமுக அரசுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிமுக அரசுகள் திமுக வின் தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. 2006 இல் மு. கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வரான பின் அதற்கான பணிகள் தொடங்கின. மே 24, 2006 இல் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் ஆளுநர் உரையில் மேலவையை மீண்டும் கொண்டுவர சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 12, 2010 இல் தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 4 2010 இல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைச் சட்டம், 2010 நடுவண் அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த இரு நாட்களில் அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது..30 செப்டம்பர் 2010 அன்று குடியரசு தலைவரால் மேலவை தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது மேலவையை மீண்டும் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக வாக்களிக்கும் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தாங்களாகவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
ஏன் என்றால் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் , நீங்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.



No comments:

Post a Comment