தொகுப்புகள்

Search This Blog

Thursday, November 4, 2010

நீங்கள் நல்லவர்களா?




"ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?" என்ற கேள்வி பலருடைய மனத்தில் எழுகின்றது. பொதுவாக அதற்குப் பதில் தெரிவதில்லை. மற்றவர்கள் அதற்குப் பதில் சொன்னாலும் திருப்தி வருவதில்லை. உயரமான மாணவர்கள், ஏன் பரீட்சையில் தவறுகிறார்கள் என்றோ, அழகானவர்கள் ஏன் சில சமயம் அறிவில்லாமல் இருக்கிறார்கள் என்றோ நாம் கேட்பது இல்லை. பரீட்சையில் தேறுவதற்கும் உயரமாக இருப்பதற்கும், அதைப்போல் அழகிற்கும், அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று நாமறிவோம். இருந்தாலும் நல்லவர்கள் வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். நல்ல குணமென்பது நம்முடைய ஒழுக்கத்தைக் காட்டுகிறது. வருமானம் மற்றும் செல்வ வளமென்பது வேலை செய்வதில் நமக்குள்ள திறமையிலிருந்து வருகிறது. ஒழுக்கமும், திறமையும் வேறு, வேறு அம்சங்கள் என்பதை நாம் கருதுவதில்லை.
சில நல்லவர்கள் ஏழ்மைக்கும், அநீதிக்கும் ஆளாகிறார்கள் என்பதை மட்டுந்தான் நாம் பார்க்கிறோமேயொழிய, ஏழையாகவுள்ள அந்நல்லவர்களில் பலர் திறமையில்லாமல் இருக்கிறார்கள் என்பதை நாம் கருதுவது இல்லை.
நல்லவர்கள் ஏழ்மையில் வாடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நல்லவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் பார்வைக்கு நல்லவர்களாக இருக்கலாமேயொழிய, உண்மையில் நல்லவர்களாக இல்லாமலிருக்கலாம். இரண்டாவதாக, இவர்களில் பெரும்பாலானோர் செயல்திறன் குன்றியவர்களாவும், சோம்பேறிகளாகவும் இருக்கலாம். மூன்றாவதாக, கடவுள் பக்தியுள்ளவர்கள் இயற்கையாக நல்லவர்களாக இருப்பார்கள் என்று ஓர் எதிர்பார்ப்புள்ளது. இதுவும் உண்மையில்லை.
பக்தர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி உண்மை பேசுதல். பெரும்பாலான 'பக்தர்கள்' இதில் தேறமாட்டார்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாதவர்கள் நல்லவர்களாக நம் நாட்டில் கருதப்படுகிறார்கள். அதுவொரு நன்னடத்தை என்றாலும், பூரண நல்ல குணத்திற்கு அது அடையாளமாகாது.
நன்மைக்கு ஆன்மீகரீதியான விளக்கம் என்னவென்றால், அறிவும் உண்மையும் சேரும்பொழுது நன்மை பிறக்கிறது என்பதாகும். அதாவது உண்மைக்கு அறிவு விளக்கம் கிட்டும்பொழுது நன்மை உண்டாகிறது. இப்படிப்பட்ட நன்மையைத் தன்னகத்தே கொண்டவர் சமூகத்தில் இருந்தால், அவர் எங்கிருந்தாலும் நல்ல நிலைமையிலேயே இருப்பார்.
நல்லவர்களைப் பற்றி சமூகத்தில் பல அபிப்பிராயங்கள் உள்ளன. சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறியவர்கள் சமூகத்தில் நல்லவர்களாகக் கருதப்படுகிறார்கள். சடங்குகளும், சம்பிரதாயங்களும் பழமையின் எடுத்துக்காட்டுகளேயொழிய, பகுத்தறிவின் நிரூபணங்களாகா. பழைமைக்கும், நவீன வாழ்க்கைக்கும் இடையே இன்று ஒரு மோதலும், போராட்டமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
பழைமையில் ஊறியவர்கள் அதற்குரிய சடங்கு, சம்பிரதாயங்களை விடாமல் அதே சமயத்தில் புதுமைக்குரிய நாகரீக வசதிகள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புகின்றார்கள். மேலும், நவீன வாழ்க்கைக்கு உண்டான கருத்துகள், மனோபாவம் மற்றும் நம்பிக்கைகளையும் நாடுகிறார்கள்.
பழையதை விடாமல் அதற்கெதிரான புதியதையும் நாடும்பொழுது இரண்டிற்குமிடையேயுள்ள மோதல் வலுக்கிறது. முரண்பாடு உள்ள இடங்களில் துன்பம், செயல்திறன் குறைவது, ஏழ்மை மற்றும் சமூக ஏற்றத் தாழ்வு என்றெல்லாமே சேர்ந்துகொள்ளும். சுமுகநிலை உள்ள இடங்களில் தான் வளர்ச்சி, வருமானம் மற்றும் மகிழ்ச்சி எல்லாம் காணப்படும்.
நல்லவனாக இருப்பதைவிட தன்னை நல்லவனாக மற்றவர்கள் கருதவேண்டும் என்பது மனிதனுக்கு முக்கியம். பார்வைக்கு நல்லவர் என்று பெயரெடுத்தவர்களிடம் உண்மையில் நல்ல குணங்கள் இல்லையென்றால், நெடுநாள் அவர்களால் தங்களுக்குக் கிடைத்த நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. என்றேனும் ஒரு நாள் சுயரூபம் வெளிவந்தே தீரும்.
ஆகவே, சமூகத்தின் பார்வையில் நல்லவர்களாகத் தெரிபவர்களும் உண்மையிலேயே ஆன்மீக நற்குணங்கள் பொருந்தியவர்களும் மிகவும் வித்தியாசப்பட்டவர்கள். தோற்றத்திற்கும், உண்மைக்கும் ஏற்றவாறு பலன்களும் வித்தியாசமாகவே இருக்கும்.

"எண்ணம் போல் வாழ்வு"

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"

1 comment:

  1. மனிதன் மற்றெல்லாவற்றையும் விட மேம்பட்டவன்.
    அவன் மனிதானாக இருந்தாலே போதுமானது.
    அவன் நல்லவனா கெட்டவனா என்பது
    அவனுக்கு மட்டுமே தெரியும்.
    அடுத்தவர்களுக்கு உதவி செய்து செலழிக்கவேண்டாம்.
    அடுத்தவர்மீது ஒரு குறைந்தபட்ச
    புன்னைகையை ஈந்தாலே போதும்.
    மனிதம் வளரத்துவங்கும்.

    ReplyDelete