தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு மத்திய முன்னாள் அமைச்சர் மானமிகு ஆ.ராசா அவர்களின் உரை வீச்சு :
தபால்துறையில்
மத்திய அமைச்சராக நான் வந்தேன் என்றால்
அது தந்தை பெரியாராலும் அம்பேத்கராலும்தான்!
அன்றைக்கு தபால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் கொண்டு போய் கடிதங்களை கொடுக்கமாட்டார்கள்
அந்தத் தபால்துறையில் மத்திய அமைச்சராக நான் வந்தேன் என்றால் அது தந்தை பெரியாராலும் அம்பேத்கராலும்தான்!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.இராசா நெகிழ்ச்சியுரை!
சென்னை, செப். 28- ஒரு கால கட்டத்தில் தபால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் தெருவுக்கு வந்து தபாலைக் கொடுக்க மாட்டார்கள். ஒரு கல்லில் வைத்து விட்டுச் சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட நாட்டில் நான் அந்தத் துறையின் அமைச்சராக வர முடிந்தது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், அம்பேத்கரும்தான் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள்.
17.9.2016 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே, வரவேற்புரை நிகழ்த்தியிருக்கின்ற பொதுச்செயலாளர் அன்புக்குரிய சகோதரர் அன்புராஜ் அவர்களே, உரையாற்றி அமர்ந்திருக்கின்ற அன்பிற்குரிய தேர்ந்த சிந்தனையாளர் அண்ணன் பழ.கருப்பையா அவர்களே, மதிப்பிற்குரிய சுப.வீரபாண்டியன் அவர்களே, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நன்றியுரை நிகழ்த்தவிருக்கின்ற சகோதரி இன் பக்கனி அவர்களே, நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டி ருக்கின்ற திராவிட இயக்கச் சிந்தனையாளர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களே, தொ.மு.ச. செயலாளர் அண் ணன் சண்முகம் அவர்களே, கயல் தினகரன் அவர்களே, முன்னாள் மேயர் சா.கணேசன் அவர்களே, காசிமுத்து மாணிக்கம் அவர்களே, வா.மு.சேதுராமன் அவர்களே, மங்கள முருகேசன் அவர்களே, பேராசிரியர் செல்லையா அவர்களே, இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உரை யாற்றியிருக்கின்ற அன்பிற்குரிய சகோதரி வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வந்திருக்கின்ற தமிழ்ச் சான் றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, பத்திரிகையா ளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத் தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய உரையை
சுருக்கமாக நிறைவு செய்கிறேன்
மதிய உணவு நேரத்தையும் தாண்டி, தந்தை பெரியாரு டைய பிறந்த நாள் நிகழ்ச்சியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். எனவே, சூழ்நிலை கருதி என்னு டைய உரையை சுருக்கமாக நிறைவு செய்ய விரும்புகிறேன்.
எனக்கு முன்னால் உரையாற்றிய நம்முடைய பழ.கருப் பையா அவர்களும், சுப.வீரபாண்டியன் அவர்களும், எனக்குச் சொல்லாமல் சென்றிருக்கிறார்கள், நாங்கள் எவ்வளவு சிக்கனமாக உரையாற்றி இருக்கிறோமோ, அதைவிட நீ சிக்கனமாக உரையாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பெரியார் இன்றைக்குத் தேவைப்படுகிறாரா? என்று ஒரு கேள்வி.
அதே பக்கம் இன்னொரு கேள்வி, பெரியாரால் இந்த மண்ணில் என்ன சாதிக்கமுடிந்திருக்கிறது? என்று ஒரு கேள்வி.
பெரியார் இன்னமும் நிற்கிறார் என்று சொன்னார்!
நம்முடைய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னார்கள், பெரியார் என்னவெல்லாம் சாதித்திருக் கிறார்கள் என்பதை, அன்றாட நிகழ்வுகளில், அவர்களே பதிவு செய்த விஷயங்களையெல்லாம் சொல்லி, பெரியார் இன்னமும் நிற்கிறார் என்று சொன்னார்.
நான் இன்னும்கூட சட்ட ரீதியாக அல்ல - அரசியல் ரீதியாக அல்ல - ஆட்சி ரீதியாகக்கூட அல்ல - எவ்வளவு பெரிய ஒரு புரட்சியை நாம் செய்திருக்கிறோம் என்பதை நான் வேறு ஒரு வடிவத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில குறிப்பிட்டேன்.
செம்மொழி மாநாட்டிற்காக நான் அப்பொழுது வகித்த அமைச்சர் பதவியின் காரணமாக, அஞ்சல் துறையின் சார்பில், ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டபொழுது, அந்தத் தபால் தலையைப் பெற்றுக் கொண்டவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அந்த மேடையில் சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் இருந்தார்கள்.
பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார்!
அப்பொழுது நான் ஒன்றை சொன்னேன், நான் இந்தத் தபால் தலையை வெளியிடுவதில், அதிலேயும் தலைவர் கலைஞர் அவர்களுடைய முன்னிலையில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இங்கே பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று நான் குறிப்பிட்டேன்.
என்ன காரணம் என்றால், 1927 ஆம் ஆண்டிலிருந்து 1929 ஆம் ஆண்டுவரை சைமன் கமிசன் இந்திய நாட்டை சுற்றுப்பயணம் செய்து ஒரு அறிக்கையைக் கொடுத்தது. அந்த அறிக்கையை வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் இங்கே குறியாக இருந் தார்கள். ஏனென்றால், அவர்கள் சுற்றிவந்தால், இந்திய சமூகத்தினுடைய அவலம் தெரிந்துவிடும். ஜாதிகளாக, மதங்களாகப் பிரிந்து கிடக்கின்ற, தனி மனித வக்கிரம் தெரிந்துவிடும் என்றெல்லாம் எண்ணி, சைமனே திரும்பிப் போ என்று சொன்னார்கள்.
சைமனே வா என்று
இரண்டு குரல்கள் ஓங்கி ஒலித்தன!
சைமனே திரும்பிப் போ! என்று சொன்ன நேரத்தில், இந்தியாவில் இரண்டே இரண்டு குரல்கள் ஓங்கி ஒலித்தன - ''சைமனே இங்கே வா!'' என்று. ஒன்று தந்தை பெரியாரின் குரல். இன்னொரு குரல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் குரல்.
தோழர்களே, அதுவல்ல செய்தி! எல்லோரும் அறிந்த செய்திதான். ஆனால், அதைக்காட்டிலும் நான் ஓரிடத்தில் படித்து மலைத்துப் போனேன். நான் சட்டக்கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும்பொழுது, 1935 ஆவது சட்டம் கவர்ன்மெண்ட் ஆஃப் இண்டியா ஆக்ட் 1935 என்று சொல்வார்களே, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சட்டம். இந்த அரசியல் சட்டத்தைப்போல, 1935 ஆம் ஆண்டில், வெள்ளைக்காரர்கள் ஒரு அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதற்குப் பெயர் கவர்ன்மெண்ட் ஆஃப் இண்டியா 1935. இந்திய அரசு சட்டம் 1935. அதனைப் படிக்கின்றபொழுது, அந்தச் சட்டத்திற்கு அடிப்படையாக இரண்டு ஆவணங்கள் இருப்பதாக, அந்த சட்டத்தினுடைய முகப்பில் சொல்கிறார்கள். ஒன்று, சைமன் கமிசன் அறிக்கை.
ஒயிட் பேப்பர் 1930 -
சைமன் கமிசன் 1920
ஏறத்தாழ 18 ஆயிரம் கிலோ மீட்டர் அந்தக் கமிசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதில் யாரெல்லாம் சாட்சி யமளித்தார்கள். நீதிக்கட்சியின் சார்பில், அய்யா அவர்கள் சொல்லி, நம்முடைய ஏ.டி.பன்னீர்செல்வம் சாட்சியமளித் தார்கள்; அம்பேத்கர் அவர்கள் சாட்சியமளித்தார்கள். அந்த அறிக்கை ஒருபுறம் அடித்தளம்.
இன்னொன்று அதற்குப் பின்னாலே, 1930 ஆம் ஆண்டில், இந்தியாவினுடைய அரசியல் நிர்வாகம் சமூகத் தைப்பற்றிய வெள்ளையறிக்கை - ஒயிட் பேப்பர் 1930. இந்த ஒயிட் பேப்பர் 1930 - சைமன் கமிசன் 1920 தான், 1935 ஆம் ஆண்டில் வந்த அரசியல் சட்டத்திற்கு அடிப் படை ஆதாரங்களாக இருந்தன.
இதோடு நின்றுவிடவில்லை. அந்த ஒயிட் பேப்பரில் என்ன இருக்கிறது என்பதை நான் படித்துப் பார்த்தேன். பார்லிமெண்ட்டிற்குப் போன பிறகு.
அந்த ஒயிட் பேப்பரில் ஓரிடத்தில் வருகிறது - இந் தியாவில் ஜாதியினுடைய தாக்கம் எப்படி இருந்தது என்றால் - இதைத்தான் நான் செம்மொழி மாநாட்டிலும் சொன்னேன்.
அன்றைக்குத் தபால்காரர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள்
எப்படி இருந்தது என்றால், ஒரு கிராமத்தில் ஒரு தபால்காரன் போனால் - அப்பொழுதெல்லாம் தபால் காரர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள். அக்கிர காரத்திற்கு நேரடியாகச் சென்று கொடுப்பார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, சூத்திரர்களுக்கு வந்தால், வீதியில் நின்று தூக்கி எறிந்துவிட்டு, சோலை மலை, லட்டர் வந்து இருக்கிறது, தூக்கிப் போட்டு இருக்கிறேன் எடுத்துக் கொள் என்று திண்ணையில் போடுவாராம்.
அதற்குப் பிறகு பஞ்சமன் வீட்டிற்குப் போனால் - தபாலே வராதாம். அதிகப்படியாக பஞ்சமனுக்குத் தபாலே வராது. ஒருவேளை அவர்களின் வீட்டிற்கு தபால் வந்தால், அந்தத் தபாலை, சேரிக்குப் பக்கத்தில் ஒரு கல்லை நட்டு, எல்லா தபாலையும் அந்தக் கல்லின்மேல் கட்டி வைத்துவிட்டு, ''டேய், பசங்களா, வந்து இந்த லெட்டரையெல்லாம் எடுத்துக்கோங்கடா'' என்று சொல்வாராம்.
பெரியாரும், கலைஞரும் அந்தத் துறைக்கே அமைச்சராக்கி இருக்கிறார்கள்!
எந்தத் தெருவுக்குள் தபால் கார்டை கொண்டு செல் லக்கூடாது என்று அஞ்சல் துறையை ஒரு காலத்தில் ஆட்டி வைத்தார்களோ, எந்த வெள்ளை அறிக்கை சொன்னதோ, அந்த சமூகத்தில் பிறந்த இராசாவை - பெரியாரும், கலைஞரும் அந்தத் துறைக்கே அமைச் சராக்கி இருக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். என்னுடைய உரையைக் கேட்டு, எல்லோரும் கைதட் டினார்கள்.
மேடையில் அமர்ந்திருந்த பிரணாப் முகர்ஜி கேட்டிருக்கிறார், என்ன சொன்னார், இவ்வளவு பேர் கைதட்டுகிறார்களே என்று.
அவரே சொல்வார், கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு நான் டில்லி சென்றதும் அவரிடம் சொன்னேன். பிரணாப் முகர்ஜிக்கே பெரிய விஷயமாக இருந்தது, பெரியாரைப்பற்றி சொல்லிய பொழுது.
இந்த மண்ணில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் பெரியாராலும், அம்பேத்கராலும் ஏற்பட்டன
ஆக, அன்றாட நிகழ்வுகளில் மட்டுமல்ல, கிருஷ்ண னால், அக்கிரகாரத்திற்கு மட்டுமல்ல, இந்த மண்ணில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் பெரியாராலும், அம்பேத்கராலும் ஏற்பட்டன என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? பெரியா
ர் என்ன சொன்னார், சாதாரணமாக சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?
138 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலரில் முதல் பக்கத்திலே வெளிவந்திருக்கிறது.
சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?
அய்யா சொல்கிறார்,
இது மற்ற அரசியல் கட்சிகள் போல அல்ல; எங்களு டைய நோக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிற, அடைக் கப்பட்டு இருக்கிற அறிவுக்கு விடுதலை கொடுக்கின்ற இயக்கம். அதனால் இந்த மண்ணில் மனிதர்களுக்கும் - பெண்களுக்கும் - எல்லோருக்கும் சமத்துவம் வரவேண்டும் என்பதற்கான இயக்கம்.
அம்பேத்கர் அவர்களும் அதையே சொன்னார்!
இதில் உனக்கு என்ன பிரச்சினை. இதைத்தானே நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறோம். அம்பேத்கர் அவர்களும் இதைத்தானே சொன்னார்.
Hindus are the only people in the world who's relation between man to man has been consecrated by Religion has inviolate eternal and sacred.
ஒரு சக மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் உள்ள உறவை மதத்தால் புனிதமாகவும், மாறக்கூடியதாக, மாற முடியாததாக ஆக்கி வைத்திருக்கின்ற பெருமை உலகத்திலேயே இந்து மதத்திற்குத்தான் உண்டு.
இதைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியில் சொல்கிறார், எங்களுக்கும், பிராமணர்களுக்கும் என்ன பிரச்சினை
By Brahminism I do not mean, the previlage and power they are enjoying today.
இன்றைக்கு அவர்கள் வைத்திருக்கின்ற செல்வாக்கை யும், அரசியல் நிர்வாகத்தில் இருக்கின்ற திறமைக்காகவோ, அல்லது ஒப்பற்ற இடத்திற்காகவோ அவர்களை நான் பார்ப்பனியம் என்று சொல்லப் போவதில்லை.
பார்ப்பனீயத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?
நான் சொல்லுகின்ற பார்ப்பனியம்,
by Brahminism I mean it is a negation of liberty
equality and freternity
பார்ப்பனீயத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம். சமத்துவம் - சகோதரத்துவம் இவைகளுக்கு எதிரியாக இருக்கின்ற எந்தக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால், பிராமணியத்தை எதிர்க்கிறோம்.
இன்றைக்கு மாறிவிட்டதா? இன்றைக்கு என்ன நிலைமை?
குஜராத்தில் ஹிட்லரை பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறார்கள்!
புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். குஜராத்தில் 10 ஆவது பாடப் புத்தகத்தில் ஹிட்லரைப் பற்றி ஒரு பாடம்.
அதில் ஜெர்மானியர்களின் அரசியல் சமூக விழுமியங் களைக் காப்பாற்றிய ஒரு மகத்தான வீரன் ஹிட்லர். அவன் போற்றுதலுக்குரியவன், வணக்கத்திற்குரியவன்.
இந்தியாவில் அல்ல உலகத்தில் இருக்கின்ற எந்த ஒரு நாட்டிலும் இந்த அவலம் நடந்தேறியதில்லை. ஆனால், குஜராத்தில் பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டமாக வைக்கப் பட்டு இருக்கிறது.
ஒருமுறை ஜெய்பால் ரெட்டி சொன்னார், நானும் அமைச்சராக இருந்தேன் அப்பொழுது.
'துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், புத்தகத்தை வைத்து தீவிரவாதம் செய்கிறீர்களே, உங்களை நாடு மன்னிக்காது' என்று சொன்னார்.
டி.என்.ஜா எழுதிய 'ஹோலி கவ்'
அதேபோன்று பசு மாட்டை வைத்து அரசியல் செய்கிறார்கள். டி.என்.ஜா ஹோலி கவ் நூல்.
கி.மு.1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பசு மாட்டுக் கறியை அவிற் பாகமாக மாட்டுக் கறியை சமைத்தவர்கள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள். இன்றைக்கு மற்றவர்களை சாப்பிடக் கூடாது என்பது மட்டுமல்ல, அதை வைத்து ஒரு அரசியல் நடத்தலாம் என்றால், என்ன காரணம்.
ஆக, பெரியார் கொடுத்திருக்கின்ற கொடையால், நமக்கு வழங்கியிருக்கின்ற உரிமையால் இன்னமும் நின்று கொண்டிருக்கிறார் - நடந்துகொண்டிருக்கின்ற அவலத் தால் இன்னமும் அவர் தேவைப்படுகிறார்.
நாலு முடி விழுந்தால், எதற்குச் சமமோ, அதைப்போல ஒரு ஆயிரம் பேர் சாகலாம்
ஒன்றைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
குலக்கல்வித் திட்டம் வந்தபொழுது, பெரியார் கொடுத்த அறிக்கையை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
தமிழர்களே, பெரியோர்களே, நமக்கு இருக்கிற ஜன சமுத்திரத்தில், ஜன எண்ணிக்கையை கணக்குப் பார்க்கின்றபொழுது, இந்தப் போராட்டத்தில் ஒரு ஆயிரம் பேர் செத்தால், தலைவாரிக் கொள்கிறபொழுது, நாலு முடி விழுந்தால், எதற்குச் சமமோ, அதைப்போல ஒரு ஆயிரம் பேர் சாகலாம் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
இருபெரும் தலைவர்களும் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
எனவே, அப்படிப்பட்ட ஒரு போராட்டத்திற்கு இன் றைய இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும் என்பதற் காகத்தான் இருபெரும் தலைவர்களும் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தலைவர் கலைஞர் அவர்களும், ஆசிரியர் அவர்களும்.
நான் ஒன்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும். நேற்றைய தினம் இரவு 10 மணியளவில், தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து நானும், டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன் போன்றவர்கள். நாளை காலை 9.30 மணிக்கு அய்யா சிலைக்கு மாலை போடவேண்டும் என்று சொன்னபொழுது, அருகிலிருந்த உதவியாளர் சொன்னார், அய்யா நீங்கள் மெதுவாகக்கூட செல்லலாம் என்றார். அவருடைய வயது காரணமாகவும், உடல்நிலை காரண மாகவும். அதை உள்வாங்கிக் கொண்டார் தலைவர் கலைஞர்.
நாங்கள் என்ன நினைத்தோம், தலைவர் தாமதமாகத் தானே கிளம்புவார். பெரியார் சிலைக்குத்தானே மாலை போடப் போகிறோம் என்று 10.30 மணிக்குச் சென்றோம். தலைவருடைய காரை என்னாலும் பிடிக்க முடியவில்லை; துரைமுருகன் அவர்களாலும் பிடிக்க முடியவில்லை. 9.10 மணிக்கே தயாராகிவிட்டார். அவருடன் காரில் செல்ல வில்லை. மாலை போட்டு முடிந்தவுடன், அவசர அவசர மாக காரில் ஏறினோம்.
தலைவர் கலைஞர் அவர்கள், ''ஏன்யா லேட்'' என்று கேட்டார்.
இல்லீங்கய்யா, 9.30 மணிக்குத்தான் போவீர்கள் என்று நினைத்தோம் என்று சொன்னேன்.
உழைக்காமல் ஒரு நாளும் ஓய்வெடுக்கமாட்டேன்
உடனே கலைஞர் சொன்னார், ''பெரியார் ஒருமுறை திருச்சியில் பேசினார். அவரை ஓய்வெடுத்துக் கொள்ளுங் கள் என்று சொன்னார்கள்; காலையில் இரண்டு இட்லி சாப்பிடுகிறேன். மதியம் ஒரு கைப்பிடி அளவு பிரியாணி சாப்பிடுகிறேன். இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுகிறேன். இதையெல்லாம் விளைவித்தவன், இதற்காக உழைத்தவன் எங்கோ இருக்கிறான். அவனுக்காக உழைக்காமல் ஒரு நாளும் ஓய்வெடுக்கமாட்டேன் என்று சொன்னாரய்யா பெரியார்; அவருக்கு நேரம் தாழ்த்தி போகலாமா?'' என்று கேட்டார்.
ஆக, இப்படிப்பட்ட தலைவர்கள் - காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கிறபொழுது ஆசிரியர் பேசினார், பழ.கருப்பையா பேசினார், சுப.வீரபாண்டியன் பேசினார். மூன்று பேருடைய நிகழ்ச்சியையும் கலைஞர் பார்த்தார். பார்த்துவிட்டு கேட்டார், ஆசிரியர் ஏன் சோர் வாக இருக்கிறார்? என்று கேட்டார்.
ஆசிரியர் அவர்கள், தலைவர் கலைஞர் ஏன் சோர்வாக இருக்கிறார் என்று கேட்பார்கள்.
ஆனால், இரண்டு பேரும் இன்னமும் பெரியா ரைப்போல் உழைக்கவேண்டும் - இந்த மண்ணிற்காக உழைக்கவேண்டும் - மனிதர்களுக்காக உழைக்கவேண்டும் என்கிற எண்ணத்தை நாம் பெற்று இருக்கின்ற காரணத் தினால், இந்த இரண்டு தலைவர்களையும் போற்றி புகழ்ந்து, இவர்களை உருவாக்கிய தலைவர் பெரியார் வாழ்க! அவர் புகழ் வாழ்க! அவர் கொள்கைகள் ஓங்குக! என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்..