தொகுப்புகள்

Search This Blog

Sunday, December 31, 2017

அரசியலை புரிந்துகொள்ள முயலுங்கள்...

ஐயா சிங்கராயர் ஆரோக்கியசாமி

திமுகவைப் பொருத்தவரை  இந்தியாவில் உள்ள மற்ற  மற்ற  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மனதில்  நன்மதிப்புகொண்ட  ஒரு உயர்வான  எண்ணம் கொண்டிருப்பதற்குப் பல  நற்காரணங்கள்  உள்ளன. ஒரு குடும்பத்தில்,ஒரு கிராமத்தில் அதனதன் தலைவர்கள் எப்படி மரியாதைக்குறியவர்களோ,
அதேபோல, இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளில் மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாகவும்,
தலைமைப் பண்பும்,
கொண்ட கொள்கையின் மூலம் அறிவுறை சொல்லும் அளவிற்கான தன்மைகளைக் கொண்டிருப்பதற்கு, எக்கட்சியிலும் காணப்படாத
திமுகவின் கொள்கைகளே காரணம். பல பத்தாண்டுகளுக்கு முன்பே திராவிடம்  விதைத்த விதைதான் இன்று மற்ற மற்ற மாநிலங்களில் முளைக்க ஆரம்பித்திருக்கிறது.துவக்கத்தில் நம்மை மொழி வெறியர்களாகப் பார்த்தவர்களே தற்போது  நமது பெருமையை , நாம் போராட்ட குணத்தை இப்பொழுதுதான்  பெருமையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

      இப்படி,
இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் பல்கலைக்கழகமான திமுகவின் கொள்கைகளை, பிறர் புரிந்துகொண்ட அளவிற்கு இன்றைய பொதுவான இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்கிற கசப்பான உண்மை மட்டுமே விடையாக வருகிறது.
    தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு திமுக உறுப்பினர்களின் வாக்குகள்  மட்டுமே பயணைத் தராது. எக்கட்சியையும் சாராத பொதுமக்களின் வாக்குகளும் கிடைக்கப்பெறும்போதுதான் அது மக்களுக்கான வெற்றியாக மாறி தமிழினமும்,தமிழ் மொழியும் பாதுகாக்கப்படும், பாதுகாக்கப்படுகிறது.
     இப்படி ,
இனமும் மொழியும் காக்கப் பாடுபடும் இயக்கத்திற்குத்தான் ஆபத்துக்களும் சேர்ந்தே வரும்.
(1)கற்பனைகூட பன்னமுடியாத 1,75,000 கோடி என ஒரு இயக்கத்தையே அழிப்பதற்காக,
(2)அதிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இந்தியாவின் உயர் பதவியில் இருக்கிறார் என்கிற இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே சதி வலைகள் மிக மிகக் கவனமாகத் திட்டமிட்டு பின்னப்பட்டு அதை கயவர்களால் நடத்தியும் காட்டப்பட்டது.
இதனால் பெரும் பின்னடைவு திமு கழகத்திற்கும் ,இந்தியா என்கிற பல இனங்கள் ஒன்றுகூடி வாழும் இந்திய நாட்டிற்குமே ஆகும்.
       பத்திரிகையாளர் திரு.ராதாகிருஷ்ணன் கூறியதைப்போல இல்லாத ஒன்றை வெளியிட முடியாது என்பதால் மிகக் கவனமாகச் சதித்திட்டம் தீட்டி, அதை கசியவிடுவதைப்போல திருட்டுத்தனமாகக் கசியவிட்டு,  ஊடகங்களைப் பேசவைத்து,
ஊடகங்களுக்கு பெரும் பணம் கொடுத்து,
கேவலம் ஆட்சியைப் பிடிப்பதற்காக என்னென்ன தில்லுமுல்லுகள் களவாணித்தனமாகச்  செய்ய முடியுமோ அத்துனை களவாணித்தனங்களும் , அயோக்கியத்தனங்களும் புனையப்பட்டு
சர்வாதிகாரத்தனம் அத்துனையும் செய்து
சர்வாதிகாரர்களே ஆட்சியையும் பிடித்து
ஆட்சி செய்து வருகிறார்கள் என்றால் இது உலக மகா பொய்யர்களால் மட்டுமே முடியும். அவர்களாலே முடிந்தது. அவர்கள்தான் பாஜக என்கிற பாசிச கட்சி.
     பொய்யைக் கொண்டு,பொய்களை மூட்டை மூட்டையாகக் கொண்டு ஆட்சியலமர்ந்தவர்கள், உண்மையைப்  பேசி ஆட்சி செய்ய வரவில்லை. அவர்களுக்கு உண்மை பேசவும் தெரியாது என்பதே எதார்த்தம். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்.
ஒரு உண்மையை மறைக்க பல பொய்கள் என ஆட்சி செய்துவருவதாலேயே கல்புர்கிகள் கொலை துவங்கி , அனிதா கொலை வரை நடந்து வருகிறது. இனியும் பாஜக நீடித்தால் இந்தியாவே தாங்க முடியாத, இழப்புகளை மட்டுமே சந்திக்கும் காலமாக மாறும் என்பதே உண்மை.
2 ஜி யால் இந்தியாவில் பலன்பெற்றது பாஜகவும்,பாபர் மசூதி இடிப்புக்கு ஆட்களை அனுப்பிய அதிமுகவும்தான்.
    ஒரு பக்கம் பாஜகவால் உலக அளவில் இந்தியா என்கிற கூட்டாட்சி நாடு அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் அதிமுக என்கிற கட்சியால் தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
    இப்படியெல்லாம் எழுதுவது  திமுகவுக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அல்ல. இன்றைய தேவை தமிழுக்கு, தமிழகத்திற்கு அவசியத் தேவை திமுக மட்டுமே என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். இந்த சிங்கராயர் ஆரோக்கியசாமி எழுதி எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால்,
பல உண்மைகள் மறைக்கப்பட்டு,மிகப்பெரிய சதிவலைகள் பின்னப்பட்டு,சதி செய்து, பாஜகவும்,அதிமுகவும் ஆட்சியைப் பிடித்த வரலாறை இன்றைய இளைஞர்கள்  அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது.
     புரிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் இளைஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் வரப்போகும் இழப்புகளைச் சந்திக்க நாம் உயிரோடு இருக்க வாய்புகள் மிக மிகக் குறைவே. வடலூரில் எரிக்கப்பட்டதுபோல நாமும் எரிக்கப்பட்டு விடுவோம்.
இளைஞர்களே கவனம் தேவை. 
குற்றவாளிகள் பாஜகவாகவோ ,அதிமுகவாகவோ இருக்கமாட்டார்கள். இந்த இருவரையும் ஆதரித்த கொடுஞ்செயலாளர்களாக மக்களே இருப்பார்கள்.
சிந்திப்பவன்தான் மனிதன்.
சிந்திக்க மறந்தவன் மனிதனாக இருக்க முடியாது.
   தமிழகம் அறிவற்ற மாநிலமாக
   தமிழர்கள் அறிவற்றவர்களாக ஆக்கப்படுவதற்குத் திமுகவே தடையாக இருக்கிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்.கே நகரில் தேர்தல் ஆணையம் அவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் திமுக கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையத்தை மௌனியாக இருக்கச் சொல்லி,
தேர்தலில் பாஜகவும் கலந்து கொள்வதுபோல ஒரு நாடகத்தை நடத்தி திமுகவுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தனது மறைமுகத் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
    இனியும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நமக்கான பெயர் வேறு. புரிந்துகொள்ள முயலுங்கள்.
    வேலூர் சிங்கராயர்.

Wednesday, December 27, 2017

இந்தியை திணிக்கும் கார்ப்ரேட்

ஏன் பெரிய வணிக நிறுவனங்கள் ஒரு மொழி, ஒரு நாடு என்னும் கருத்தை ஆதரிக்கின்றனர்.

ஏன் நாம் அதை எதிர்க்க வேண்டும்?

உதாரணமாக, இந்தியாவின் அனைத்து மக்களும் ஹிந்தி திரைப்படங்களை மட்டுமே பார்த்தால், பாலிவுட்டில் மட்டுமே  சில இசை இயக்குநர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி, கன்னடம், அசாமிஸ், குஜராத்தி திரை துறையினரை கொன்று விடும்.

சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா, பெங்களூரு, திஸ்பூர், காந்தி நகர் போன்ற இடங்களில் வேலையின்மைக்கு இது வழிவகுக்கும். திறமை அழியும் போது உள்ளூர் பன்முகத்தன்மை கலாச்சாரமும் இறந்து போகும். ஒரு போதும் , திரு. இளையராஜா , அல்லது திரு. ரஹமான், என பட்டியல் நீண்டு இருக்காது. நம்மை புரிந்து கொள்ளும் உணர்வும் இசை, நமது மொழியில் இருக்க வேண்டும் . வேறு எந்த இசை இயக்குனராலும் நம்மை திரு.இளையராஜாவை  போல்  மெய் மறக்க வைக்க முடியுமா ?

மொழி ஏகாதிபத்தியத்திலுருந்து நம்மை பாதுகாக்கின்றது.

COCO-COLA, PEPSI நிறுவனங்கள் நாம் எல்லோரும் ஒரு மொழியை கற்று கொண்டால் அந்த வேலை வாய்ப்பினை அந்த மொழியை தாய் மொழிய கொண்டவர்களுக்கு போய் சேரும். காரணம் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஹிந்தி இருக்கும் பகுதியில் தான் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. விளம்பரங்களை எடுத்து கொள்வோம். தமிழகத்தில் COCO-COLA, PEPSI விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றால் நமது தமிழ் நடிகர்கள் திரு விஜய், திரு சூர்யா, செல்வி திரிஷா அகியோர் நாடி விளம்பரத்தில் நடிக்க கணிசமான தொகை கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதில் சிலர் யோசிக்கலாம், செல்வி திரிஷா, செல்வி நயன்தாரா,திரு விஜய் அவர்களுக்கு பணம் வருவதால் நமக்கு என்ன லாபம் என்று. ஆனால் அதை ஒரு சின்ன வட்டத்திற்குள் பார்க்க கூடாது. நம் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அவர்கள் அந்த பணத்தை அந்த அந்த மாநிலங்களில் தான் முதலீடு செய்வார்கள். வீடு மனை, வீடு, தோட்டம், STUDIO, வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகளை வாங்குவார்கள், அல்லது கட்டுவார்கள். இப்படி செய்யும் பொழுது நேராகவோ மறைமுகமாகவோ அந்த மாநிலத்தின் மக்கள் மொழியினால் மேன்மை அடைவார்கள். அதே போல் மும்பையில் இருக்க கூடிய நடிகருக்கு விளம்பரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அந்த பிராந்தியம் மட்டுமே வளர்ச்சி பெரும். ஆனால் இப்பொழுது தமிழ் பேசுபவர் தமிழகத்திலும் தெலுங்கு பேசுபவர்  தெலுங்கானாவிழும், ஆந்திராவிலும் , கன்னடம் பேசுபவர் கர்நாடகாவிலும் பணி அமர்த்தப்படுவர். இது போல் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஒரு சேர சமமாக பெற முடியும்.

ஒவ்வொரு ஊரிலும் விளம்பர முகவர் மூலம் பெரும் வருவாய், உள்ளூர் வேலைவாய்ப்பு வருமானம் மற்றும் முதலீட்டிற்கு வழி வகை செய்யும்.

இதன் மூலம் பணப்புழக்கம் தனிப்பட்ட ஒரு பிராந்தியத்திலேயே முடங்கி விடும் அபாயம் உள்ளது.  ஆனால் நம் பன்முக தன்மையின் மூலம் அது தடுக்கப்பட்டுள்ளது.

அதே போல உதாரணமாக தொலைபேசி மூலம் பலர் நம்மை அழைக்கிறார்கள். அப்போது அவரவர் அவருடைய தாய் மொழி மட்டுமே பேசுவேன் என்னும் முடிவு எடுத்தால் நம்மால் பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களுக்கு முன் ICICIமும்பையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்று தமிழில் தெரிவித்தேன். அவர் மறுபடியும் (ஆங்கரேசி), இங்கிலிஷ் என்று ஆரம்பித்தார். எனக்கு ஆங்கிலமும் தெரியாது என்றேன். அரை மணி நேரம் கழித்து திரு சுப்பிரமணியம் என்பவரை என்னை  அழைக்க வைத்தார்கள். அங்கே ஒரு தமிழனுக்கு இது வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்கு இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.       

அதே போல் மலேஷியா வாழ் தமிழர் ஒருவர் VOLVO நான்கு சக்கர வாகனம் வாங்க ஷோரூம் சென்றார். அங்கே அந்த வாகனத்தில் தமிழில் டிஸ்பிலே வரவில்லை, ஆதலால் உங்கள் தயாரிப்பில் பழுது உள்ளது. என்று கூறி காசோலையை தராமல் சென்று விட்டார். ஒரே வாரத்தில் வோல்வோ நிறுவனம் அந்த வாகனத்தின் தமிழ் டிஸ்பிலே வருமாறு செய்து அவருக்கு அந்த வாகனத்தை விற்றார்கள். உலகத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் தமிழ் மென்பொருள் கூடுதலாக   பொறுத்த இந்த சம்பவம் அடித்தளம் ஆனது. இதுபோல் நாம் ஒவொருவரும் நம்மால் இயன்ற வரை முயற்சி செய்தோமானால் நம்முடைய மொழி இனம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்க படும்.

மேலும், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், ராம்ராஜ், நல்லி சில்க்ஸ், என உள்ளூர் வியாபார நிறுவனங்களின் பெயர் நீளும். இது போல் நம் மொழி கலாச்சாரமும் வளர வித்திடும். இதை விடுத்து பிக் பஜார் ரிலையன்ஸ் நிறுவனங்களின் மூலம் நாம் நம் உளுத்தம் பருப்பிற்கும், வெண்டைக்காயிற்கும் ஹிந்தியில் பெயர் கற்று கொண்டு இருக்கும் நிலை ஏற்படும்.

நமது கிராமம் நமது மாவட்டம் நமது மாநிலம் இது போன்ற நமது பணம் யாரை சென்றடைகின்றது. அதனால் நமது பகுதிக்கு ஆதாயம் இதுற்கும் என்பதை உணர வேண்டும். உதாரணத்திற்கு அஞ்சப்பர், சரவணா பவன், அன்னபூரண, திண்டுக்கல் தலப்பாக்கட்டி, வேணு பிரியாணி, ஜூனியர் குப்பண்ணா, சங்கம், அம்மா மெஸ், குமார் மெஸ், இது போன்ற நிறுவனங்கள் இயங்கினால் அவர்களிடையே முதலீடு அந்த அந்த பகுதியின் வளர்ச்சிக்கு பயன் படும். உதாரணமாக கோவை சேர்ந்த மிக பெரிய PRICOL, பண்ணாரி அம்மன் குழுமம்,  சேர்ந்து “சிறுதுளி” என்னும் அமைப்பை உருவாக்கி குளம் குட்டைகள், தூர் வருதல்  மரக்கன்று நடுதல் அதனை பராமரித்தல், நொய்யல் ஆற்றை சீரமைத்தல், நீர் ஆதாரங்கள் மேம்படுத்தல் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து கொடுத்தால் போன்ற பசுமை பணிகளை இவ்வமைப்பின் மூலம் செய்து வருகிறார்கள். அதே போல திருப்பூர் நகரில் உள்ள CLASSIC POLO நிறுவனம்  பல பசுமை விரும்பிகளை ஒன்று சேர்த்து “வனத்துக்குள் திருப்பூர்” என்ற மிக சிறந்த சேவையை செய்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கூடம் கட்டி கொடுப்பது, குளங்கள் தூர் வருதல், லட்சக்கணக்கான மரங்களை திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நட்டு மேலும் அவற்றை மூன்று வருடங்களுக்கு பராமரித்து வருகிறார்கள்.

திருநெல்வேலியில் BELL / STANDARD FIRE WORKS, குழுமம் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் போன்றவற்றில் மிக சிறந்த சேவையை செய்து வருகின்றனர். அதே போல் திருநெல்வேலி அல்வாவை எடுத்து கொள்வோம், அங்கே இருக்கக்கூடிய லட்சுமி ஸ்வீட்ஸ், ஷாந்தி ஸ்வீட்ஸ், இருட்டு கடை அல்வா, போன்ற நிறுவங்களின் வர்த்தகம் பெறுக பெறுக அவர்கள் அந்த பகுதியிலேயே முதலீடு செய்வர், வேலை வாய்ப்பினை உருவாக்கும், வளர்ச்சி ஏற்படும்.அதை விடுத்து தேசிய அல்வாவை உருவாக்கி, அந்த அல்வாவை ஒரே ஒரு நிறுவனம் லட்சக்கணக்கான டன் அல்வாவை தயாரித்து நாடெங்கும் அனுப்பினால், திருநெல்வேலிக்கு என்ன பயன் ?

முடிந்தவரை, உள்ளூர் கடைகள், (உள்ளூர் - உங்கள் கிராமத்தில், உங்கள் நகரம், உங்கள் மாவட்டம், உங்கள் மாநிலம்) இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் மற்றும் அவர்கள் பிராந்திய வளர்ச்சி அடித்தளமாகும்.    

பல ஆண்டுகளுக்கு முன்னர் FORD, அமெரிக்க குளிர்சாதன அறைகளில் உட்கார்ந்து, கார் ஒன்றை அறிமுகப்படுத்தியபோது, ​​நிறுவனம் இந்திய டென்னிஸ் வீரரை  விளம்பரத்திற்கு தூதராக நிர்ணயித்து சிறந்த தொலைக்காட்சி விளம்பரத்தைத் தொடங்க முடிவு செய்தனர் . விளம்பர மோசமாகவும் , பின்னர் ஒரு ஃபோர்ட் ஊழியர் இந்தியாவில், கிரிக்கெட்டில் தான் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்  என்பதை சொன்னார் . எடுபடாத காரணத்தினால் பின்னர் திரு. சச்சின் டெண்டுல்கர் விளம்பர தூதராக நிர்ணயிக்கப்பட்டார். இது தான் உள்ளூர் அறிவு .

இதை  போலவே, கலாச்சாரம் சுமத்தப்படுவதற்கு எதிராக மட்டுமல்லாமல், ஒரு மொழி பல வழிகளில் ஒரு பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளதை பல உதாரணங்கள் மூலம் நாம் சிந்திக்க முடியும் . எல்லோரும் தங்கள் மொழியை ஆதரிக்க வேண்டும் மற்றும் வேறுபாடுகள்  மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்..

இந்தியாவில் ஒரு மிக சிறிய கூட்டம் சில நாடுகளின் உதாரணத்தை காட்டி அது போல் இந்தியாவிற்கும் ஒரு மொழி வேண்டும் அல்லது ஹிந்தி கற்காமல் நம் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் என்று கூறி வந்தனர். இப்பொழுது அவர்கள் தமிழ்நாட்டிலே வேலைக்கு வந்து இருக்கும் வடஇந்தியர்களுடன பேசுவதற்கு  நாம் ஹிந்தி கற்க வேண்டும் என்று புதிய கருத்தை சொல்கின்றனர்  ஊர் உலகம் முழுவதும் நாம் பிழைப்பிற்காக எந்த நாட்டிற்கோ ஊருக்கோ செல்கின்றோமோ அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்  என்பதே வழக்கு. இந்தியா நாடு பல தேசிய இனங்களை பல்வேறு மொழி பேச கூடியவர்கள், கொண்ட ஒரு நாடு. இந்தியாவின் பெருமையே அதனுடைய பண்முகதன்மையும், அதில் இருந்து ஏற்படும் ஒற்றுமையும் தான்.

ஒருமைப்பாட்டிற்கும், ஒரே மாதிரி இருப்பதற்கும் பெரிய வித்யாசம் இருக்கிறது.

தேச பற்று என்பது தேசிய கீதத்தை திரையரங்குகளில் பாடுவதும் அல்லது ஹிந்தி பேச முயற்சி செய்வதிலும் இல்லை.  மக்கள், அவர்களின் பன்முகத்தன்மை, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மதிப்பைப் பொறுத்து உண்மையாகவே அவர்களின்பால் மரியாதை செலுத்துதல் ஆகும்.

இந்தியாவில் தேசிய விலங்கு, கீதம், பறவை உண்டு, ஆனால் தேசிய உணவு அல்லது மொழி இல்லை என்பதை உணர்தல் வேண்டும். நினைவில் வைத்துக் கொள்வோம், எப்படி சப்பாத்தியோ இட்லியோ இந்தியாவின் தேசிய உணவாக மாற முடியாதோ மொழியும் அது போல தான்.

(குறிப்பு: தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் குஜராத்தி பெங்காலி, துளு, போன்ற அவரவர் தாய் மொழியின் மீது பற்று இருக்கிறது என்பதால் ஹிந்தி அரசுகளால் தொடர்ந்து திணிக்க படுகின்றது என்ற காரணத்தினால் எதிர்கிறோமோ தவிர, ஹிந்தி மொழி மீதோ ஹிந்தி பேசும் மக்கள் மீதோ எந்த காழ்புணர்ச்சியோ வெறுப்போ கிடையாது. ஹிந்தி திணிப்பை எதிர்க்க கூடிய அனைவருமே ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஹிந்தியை பேணி பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுவோம்.)

-  கார்திகேய சிவசேனாபதி

Saturday, December 23, 2017

1,76,000,00,00,000 மாய எண்

1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்! - தி இந்து தமிழ்

1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

ஊதிப் பெருக்கப்பட்ட எண்!

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.

இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.

பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.

அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

எல்லா நீதிகளையும் வீட்டுக்கு

அனுப்பிய ஊழல் விவாதம்!

உண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.

விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!

இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”

நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா?

வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”

ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”

அப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!

- சமஸ், தி இந்து தமிழ்