தொகுப்புகள்

Search This Blog

Thursday, December 21, 2017

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் - 1

"தன்னை அறிதல்””  என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும்  “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.

 

“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித  கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி” என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா?“ஆம்””என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.”“இல்லை””என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரி, சரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்””என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா?

 

“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது?””இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது””

 

 “ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா?””என எதிர் கேள்விபோட்டார். “”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.””என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.

 

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு”” என்ற திருக்குறளை நம் நாட்டின்  குடியரசுத் தலைவராக இருந்த  ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்””என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.

 

நண்பர்  கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்து, கரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார்  “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.”

 

 “யோகாவும் தியானங்களும்” தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல.  “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம்”இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதா? இல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.

 

அதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.இன்றைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா, தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று  கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.

 

நீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழக, வாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.

தொடரும் ....
சு.பொ.அகத்தியலிங்கம்.

No comments:

Post a Comment