சமுக உறவில் தேடுங்கள்

Loading

Wednesday, December 27, 2017

இந்தியை திணிக்கும் கார்ப்ரேட்

ஏன் பெரிய வணிக நிறுவனங்கள் ஒரு மொழி, ஒரு நாடு என்னும் கருத்தை ஆதரிக்கின்றனர்.

ஏன் நாம் அதை எதிர்க்க வேண்டும்?

உதாரணமாக, இந்தியாவின் அனைத்து மக்களும் ஹிந்தி திரைப்படங்களை மட்டுமே பார்த்தால், பாலிவுட்டில் மட்டுமே  சில இசை இயக்குநர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி, கன்னடம், அசாமிஸ், குஜராத்தி திரை துறையினரை கொன்று விடும்.

சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா, பெங்களூரு, திஸ்பூர், காந்தி நகர் போன்ற இடங்களில் வேலையின்மைக்கு இது வழிவகுக்கும். திறமை அழியும் போது உள்ளூர் பன்முகத்தன்மை கலாச்சாரமும் இறந்து போகும். ஒரு போதும் , திரு. இளையராஜா , அல்லது திரு. ரஹமான், என பட்டியல் நீண்டு இருக்காது. நம்மை புரிந்து கொள்ளும் உணர்வும் இசை, நமது மொழியில் இருக்க வேண்டும் . வேறு எந்த இசை இயக்குனராலும் நம்மை திரு.இளையராஜாவை  போல்  மெய் மறக்க வைக்க முடியுமா ?

மொழி ஏகாதிபத்தியத்திலுருந்து நம்மை பாதுகாக்கின்றது.

COCO-COLA, PEPSI நிறுவனங்கள் நாம் எல்லோரும் ஒரு மொழியை கற்று கொண்டால் அந்த வேலை வாய்ப்பினை அந்த மொழியை தாய் மொழிய கொண்டவர்களுக்கு போய் சேரும். காரணம் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஹிந்தி இருக்கும் பகுதியில் தான் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. விளம்பரங்களை எடுத்து கொள்வோம். தமிழகத்தில் COCO-COLA, PEPSI விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றால் நமது தமிழ் நடிகர்கள் திரு விஜய், திரு சூர்யா, செல்வி திரிஷா அகியோர் நாடி விளம்பரத்தில் நடிக்க கணிசமான தொகை கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதில் சிலர் யோசிக்கலாம், செல்வி திரிஷா, செல்வி நயன்தாரா,திரு விஜய் அவர்களுக்கு பணம் வருவதால் நமக்கு என்ன லாபம் என்று. ஆனால் அதை ஒரு சின்ன வட்டத்திற்குள் பார்க்க கூடாது. நம் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அவர்கள் அந்த பணத்தை அந்த அந்த மாநிலங்களில் தான் முதலீடு செய்வார்கள். வீடு மனை, வீடு, தோட்டம், STUDIO, வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகளை வாங்குவார்கள், அல்லது கட்டுவார்கள். இப்படி செய்யும் பொழுது நேராகவோ மறைமுகமாகவோ அந்த மாநிலத்தின் மக்கள் மொழியினால் மேன்மை அடைவார்கள். அதே போல் மும்பையில் இருக்க கூடிய நடிகருக்கு விளம்பரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அந்த பிராந்தியம் மட்டுமே வளர்ச்சி பெரும். ஆனால் இப்பொழுது தமிழ் பேசுபவர் தமிழகத்திலும் தெலுங்கு பேசுபவர்  தெலுங்கானாவிழும், ஆந்திராவிலும் , கன்னடம் பேசுபவர் கர்நாடகாவிலும் பணி அமர்த்தப்படுவர். இது போல் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஒரு சேர சமமாக பெற முடியும்.

ஒவ்வொரு ஊரிலும் விளம்பர முகவர் மூலம் பெரும் வருவாய், உள்ளூர் வேலைவாய்ப்பு வருமானம் மற்றும் முதலீட்டிற்கு வழி வகை செய்யும்.

இதன் மூலம் பணப்புழக்கம் தனிப்பட்ட ஒரு பிராந்தியத்திலேயே முடங்கி விடும் அபாயம் உள்ளது.  ஆனால் நம் பன்முக தன்மையின் மூலம் அது தடுக்கப்பட்டுள்ளது.

அதே போல உதாரணமாக தொலைபேசி மூலம் பலர் நம்மை அழைக்கிறார்கள். அப்போது அவரவர் அவருடைய தாய் மொழி மட்டுமே பேசுவேன் என்னும் முடிவு எடுத்தால் நம்மால் பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களுக்கு முன் ICICIமும்பையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்று தமிழில் தெரிவித்தேன். அவர் மறுபடியும் (ஆங்கரேசி), இங்கிலிஷ் என்று ஆரம்பித்தார். எனக்கு ஆங்கிலமும் தெரியாது என்றேன். அரை மணி நேரம் கழித்து திரு சுப்பிரமணியம் என்பவரை என்னை  அழைக்க வைத்தார்கள். அங்கே ஒரு தமிழனுக்கு இது வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்கு இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.       

அதே போல் மலேஷியா வாழ் தமிழர் ஒருவர் VOLVO நான்கு சக்கர வாகனம் வாங்க ஷோரூம் சென்றார். அங்கே அந்த வாகனத்தில் தமிழில் டிஸ்பிலே வரவில்லை, ஆதலால் உங்கள் தயாரிப்பில் பழுது உள்ளது. என்று கூறி காசோலையை தராமல் சென்று விட்டார். ஒரே வாரத்தில் வோல்வோ நிறுவனம் அந்த வாகனத்தின் தமிழ் டிஸ்பிலே வருமாறு செய்து அவருக்கு அந்த வாகனத்தை விற்றார்கள். உலகத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் தமிழ் மென்பொருள் கூடுதலாக   பொறுத்த இந்த சம்பவம் அடித்தளம் ஆனது. இதுபோல் நாம் ஒவொருவரும் நம்மால் இயன்ற வரை முயற்சி செய்தோமானால் நம்முடைய மொழி இனம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்க படும்.

மேலும், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், ராம்ராஜ், நல்லி சில்க்ஸ், என உள்ளூர் வியாபார நிறுவனங்களின் பெயர் நீளும். இது போல் நம் மொழி கலாச்சாரமும் வளர வித்திடும். இதை விடுத்து பிக் பஜார் ரிலையன்ஸ் நிறுவனங்களின் மூலம் நாம் நம் உளுத்தம் பருப்பிற்கும், வெண்டைக்காயிற்கும் ஹிந்தியில் பெயர் கற்று கொண்டு இருக்கும் நிலை ஏற்படும்.

நமது கிராமம் நமது மாவட்டம் நமது மாநிலம் இது போன்ற நமது பணம் யாரை சென்றடைகின்றது. அதனால் நமது பகுதிக்கு ஆதாயம் இதுற்கும் என்பதை உணர வேண்டும். உதாரணத்திற்கு அஞ்சப்பர், சரவணா பவன், அன்னபூரண, திண்டுக்கல் தலப்பாக்கட்டி, வேணு பிரியாணி, ஜூனியர் குப்பண்ணா, சங்கம், அம்மா மெஸ், குமார் மெஸ், இது போன்ற நிறுவனங்கள் இயங்கினால் அவர்களிடையே முதலீடு அந்த அந்த பகுதியின் வளர்ச்சிக்கு பயன் படும். உதாரணமாக கோவை சேர்ந்த மிக பெரிய PRICOL, பண்ணாரி அம்மன் குழுமம்,  சேர்ந்து “சிறுதுளி” என்னும் அமைப்பை உருவாக்கி குளம் குட்டைகள், தூர் வருதல்  மரக்கன்று நடுதல் அதனை பராமரித்தல், நொய்யல் ஆற்றை சீரமைத்தல், நீர் ஆதாரங்கள் மேம்படுத்தல் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து கொடுத்தால் போன்ற பசுமை பணிகளை இவ்வமைப்பின் மூலம் செய்து வருகிறார்கள். அதே போல திருப்பூர் நகரில் உள்ள CLASSIC POLO நிறுவனம்  பல பசுமை விரும்பிகளை ஒன்று சேர்த்து “வனத்துக்குள் திருப்பூர்” என்ற மிக சிறந்த சேவையை செய்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கூடம் கட்டி கொடுப்பது, குளங்கள் தூர் வருதல், லட்சக்கணக்கான மரங்களை திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நட்டு மேலும் அவற்றை மூன்று வருடங்களுக்கு பராமரித்து வருகிறார்கள்.

திருநெல்வேலியில் BELL / STANDARD FIRE WORKS, குழுமம் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் போன்றவற்றில் மிக சிறந்த சேவையை செய்து வருகின்றனர். அதே போல் திருநெல்வேலி அல்வாவை எடுத்து கொள்வோம், அங்கே இருக்கக்கூடிய லட்சுமி ஸ்வீட்ஸ், ஷாந்தி ஸ்வீட்ஸ், இருட்டு கடை அல்வா, போன்ற நிறுவங்களின் வர்த்தகம் பெறுக பெறுக அவர்கள் அந்த பகுதியிலேயே முதலீடு செய்வர், வேலை வாய்ப்பினை உருவாக்கும், வளர்ச்சி ஏற்படும்.அதை விடுத்து தேசிய அல்வாவை உருவாக்கி, அந்த அல்வாவை ஒரே ஒரு நிறுவனம் லட்சக்கணக்கான டன் அல்வாவை தயாரித்து நாடெங்கும் அனுப்பினால், திருநெல்வேலிக்கு என்ன பயன் ?

முடிந்தவரை, உள்ளூர் கடைகள், (உள்ளூர் - உங்கள் கிராமத்தில், உங்கள் நகரம், உங்கள் மாவட்டம், உங்கள் மாநிலம்) இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் மற்றும் அவர்கள் பிராந்திய வளர்ச்சி அடித்தளமாகும்.    

பல ஆண்டுகளுக்கு முன்னர் FORD, அமெரிக்க குளிர்சாதன அறைகளில் உட்கார்ந்து, கார் ஒன்றை அறிமுகப்படுத்தியபோது, ​​நிறுவனம் இந்திய டென்னிஸ் வீரரை  விளம்பரத்திற்கு தூதராக நிர்ணயித்து சிறந்த தொலைக்காட்சி விளம்பரத்தைத் தொடங்க முடிவு செய்தனர் . விளம்பர மோசமாகவும் , பின்னர் ஒரு ஃபோர்ட் ஊழியர் இந்தியாவில், கிரிக்கெட்டில் தான் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்  என்பதை சொன்னார் . எடுபடாத காரணத்தினால் பின்னர் திரு. சச்சின் டெண்டுல்கர் விளம்பர தூதராக நிர்ணயிக்கப்பட்டார். இது தான் உள்ளூர் அறிவு .

இதை  போலவே, கலாச்சாரம் சுமத்தப்படுவதற்கு எதிராக மட்டுமல்லாமல், ஒரு மொழி பல வழிகளில் ஒரு பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளதை பல உதாரணங்கள் மூலம் நாம் சிந்திக்க முடியும் . எல்லோரும் தங்கள் மொழியை ஆதரிக்க வேண்டும் மற்றும் வேறுபாடுகள்  மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்..

இந்தியாவில் ஒரு மிக சிறிய கூட்டம் சில நாடுகளின் உதாரணத்தை காட்டி அது போல் இந்தியாவிற்கும் ஒரு மொழி வேண்டும் அல்லது ஹிந்தி கற்காமல் நம் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் என்று கூறி வந்தனர். இப்பொழுது அவர்கள் தமிழ்நாட்டிலே வேலைக்கு வந்து இருக்கும் வடஇந்தியர்களுடன பேசுவதற்கு  நாம் ஹிந்தி கற்க வேண்டும் என்று புதிய கருத்தை சொல்கின்றனர்  ஊர் உலகம் முழுவதும் நாம் பிழைப்பிற்காக எந்த நாட்டிற்கோ ஊருக்கோ செல்கின்றோமோ அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்  என்பதே வழக்கு. இந்தியா நாடு பல தேசிய இனங்களை பல்வேறு மொழி பேச கூடியவர்கள், கொண்ட ஒரு நாடு. இந்தியாவின் பெருமையே அதனுடைய பண்முகதன்மையும், அதில் இருந்து ஏற்படும் ஒற்றுமையும் தான்.

ஒருமைப்பாட்டிற்கும், ஒரே மாதிரி இருப்பதற்கும் பெரிய வித்யாசம் இருக்கிறது.

தேச பற்று என்பது தேசிய கீதத்தை திரையரங்குகளில் பாடுவதும் அல்லது ஹிந்தி பேச முயற்சி செய்வதிலும் இல்லை.  மக்கள், அவர்களின் பன்முகத்தன்மை, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மதிப்பைப் பொறுத்து உண்மையாகவே அவர்களின்பால் மரியாதை செலுத்துதல் ஆகும்.

இந்தியாவில் தேசிய விலங்கு, கீதம், பறவை உண்டு, ஆனால் தேசிய உணவு அல்லது மொழி இல்லை என்பதை உணர்தல் வேண்டும். நினைவில் வைத்துக் கொள்வோம், எப்படி சப்பாத்தியோ இட்லியோ இந்தியாவின் தேசிய உணவாக மாற முடியாதோ மொழியும் அது போல தான்.

(குறிப்பு: தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் குஜராத்தி பெங்காலி, துளு, போன்ற அவரவர் தாய் மொழியின் மீது பற்று இருக்கிறது என்பதால் ஹிந்தி அரசுகளால் தொடர்ந்து திணிக்க படுகின்றது என்ற காரணத்தினால் எதிர்கிறோமோ தவிர, ஹிந்தி மொழி மீதோ ஹிந்தி பேசும் மக்கள் மீதோ எந்த காழ்புணர்ச்சியோ வெறுப்போ கிடையாது. ஹிந்தி திணிப்பை எதிர்க்க கூடிய அனைவருமே ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஹிந்தியை பேணி பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுவோம்.)

-  கார்திகேய சிவசேனாபதி

No comments:

Post a Comment