தொகுப்புகள்

Search This Blog

Sunday, September 18, 2016

கடவுள் பயமே வேண்டாமா?

கடவுள் பயமே வேண்டாமா?"

பிறந்ததில் இருந்து இன்று வரை நீங்கள், நான், அனைவருமே, கடவுளோ, வேதமோ செய்யக்கூடாது என்று கூறிய விசயங்கள் எத்தனையோவற்றை செய்துவிட்டு, இதெல்லாம் சின்ன தப்பு, கடவுள் நம்மை கண்டுக்கமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம் கூறியிருக்கின்றோம். யாராவது மறுக்கின்றீர்களா? சிறு சிறு பொய்கள் சொல்லும் விசயத்தில் ஆரம்பித்து, ஏமாற்றுதல், பிறர் மனம் நோகச் செய்தல்.. இப்படி தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது.

இந்த கடவுள் பயம் விசயத்தில் இன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலைதான் அதிகம் காண்கின்றோம். அவரவர் வசதிக்கேற்ப தவறுகள் செய்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்து கொள்கின்றோம். சின்ன பென்சிலை திருடியவன், நான் என்ன தங்க செயினையா திருடினேன், இது பெரிய தவறு அல்ல என்று நினைக்கின்றான். தங்க செயின் திருடுபவன் நான் என்ன கடையையேவா கொள்ளை அடிச்சேன். ஒரே ஒரு செயின். அதுவும் அந்த கடைக்காரன் கொள்ளை அடிச்சு சேர்த்தது. இதை கடவுள் கண்டுக்கமாட்டாரு.. அந்த கடைக்காரனோ அத்தனை கடவுள் படத்தையும் கடையில மாட்டி வச்சிட்டு, கிலோவுக்கு கால் கிலோ தாமிரம் சேர்க்கிறான். இப்படித்தான் வியாபாரம் பண்ணனும். இது ஏமாத்து கிடையாது. கடவுள் கோவிச்சுக்கமாட்டாருன்னு சமாதானம் சொல்லிக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய், சாமி உனக்கு தங்கத்தாலே தேர் வாங்கித்தர்றேன்னு சொல்லி, சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறான்.

நான் மேலே சொன்ன அவலங்கள் இன்றைக்கு நடைமுறையில் இல்லயென்று உங்களில் யாரேனும் மறுக்க முடியுமா? இதேபோல்தான் இன்றைக்கு கடவுள் சம்பந்தமான எல்லா விசயங்களுமே அவரவர் வசதிக்கேற்றார்போல் flexible ஆக வளைத்துக் கொள்ளும் விசயமாயிற்று. தவறுகளை செய்துவிட்டு காப்பதற்கு கடவுள் இருக்கின்றார் என்று கடைசியில் மனிதன் சென்று சேரும் இடமாக கடவுள் மாறிவருகின்றார்.

வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு இப்போது யாரும் கடவுளுக்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த எண்ணிக்கை குறைவுதான். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் என்ற அளவிற்கு மனித நாகரிகம் சீர் கெட்டுக் கிடக்கின்றது. ஆலயங்களிலேயே தவறுகள் நடக்கின்றன. தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்களும் இந்த பூமியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடவுள் பயம் குறைவதால் உண்டாகும் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. எனது எதிர்பார்ப்பு, கடவுள் பெயரால் நடந்து வந்த அக்கிரமங்கள் குறையும். கடவுள் விசயம், சென்டிமென்ட் என்று சட்டம் தயங்கும் விசயங்களில், நாளை இந்த நம்பிக்கை சென்ற பின்பு சட்டம் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை இன்னும் பயனுள்ள விசயங்களில் செலவழிக்க இயலும்.

நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு கடவுள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற பயங்கள்தான் இல்லை. சட்டத்திற்கு பயப்படுகின்றேன். தவறு செய்ய பயப்படுகின்றேன். தவறு செய்தால், மாட்டிக்கொண்டு அதனால் ஏற்படப்போகும் மான, அவமான உணர்வு விசயங்களுக்கு பயப்படுகின்றேன். இதையெல்லாம் தாண்டி, என்னையே நீ செய்தது சரியா என்று கேட்கும் எனது மனசாட்சிக்கு பயப்படுகின்றேன். இந்த பயங்கள் எல்லோருக்குமே இருக்கின்றது. இந்த உலகில் வாழ இந்த மூன்று பயங்களுமே போதுமானது என்பதுதான் எனது எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் இந்த நம்பிக்கைகளால் நன்மைதான் எனும்போது விட்டுவிடலாம். அதைத்தான் நானும் இதுநாள் வரை செய்து வருகின்றேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஒதுங்கி, எனது நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்கும் செயலை செய்யக்கூடாது என்று எண்ணுகின்றேன். ஆனால், நடக்கும் சமூக அவலங்களைப் பார்க்கும்போது நாம் ஒதுங்குவது தவறோ என்று தோன்றுகின்றது.

நன்றி..அறுசுவையில் இருந்து பாபு என்ற வாசக நண்பர்...

No comments:

Post a Comment