Monday, April 23, 2012

முடிந்தால் இதை படித்து பார் ?


நூல்களை அரிய செல்வமாகப் மதித்துப் போற்றியது நம் வரலாறு 
இன்று புத்தக தினம் ....
ஆனால் இன்று புத்தகம் படிப்பவர்கள் எத்தனை பேர்? என்பதுதான் கேள்வி.
இல்லை இல்லை புத்தக வாசிப்பில் தற்போது ஒரு புதிய எழுச்சி  உதயமாகியுள்ளது என்பது அலையலையாக மக்கள் புத்தகக் கண்காட்சிகளுக்கு வந்து போவதிலிருந்து தெரிகிறது.

"நல்ல புத்தகம், நல்ல நண்பனை போன்றது " என்ற வரிகள் புத்தகம் படிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.

சில‌ புத்த‌க‌ங்க‌ளை அதிக‌ ஆர்வ‌த்தோடு வாசிக்க‌த் தொட‌ங்கும்போது அவ‌ற்றிலிருந்து எடுத்துக்கொள்ள‌ எதுவுமில்லையென்ற‌ வெறுமை வ‌ந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில‌ புத்த‌க‌ங்க‌ளோ சில‌வேளைக‌ளில் சுவார‌சிய‌மான‌ வாசிப்ப‌னுவ‌த்தை எதிர்பாராது த‌ந்துவிடுகின்ற‌ன‌. புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்..எப்படி என்றால்,எல்லோருமே ஏதாவது ஒரு நோக்கத்துடன் அல்லது எதிர்பார்ப்புடன் தானே புத்தகங்களை தேடுகின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகத்தை படிக்க விரும்பலாம்.இன்னொருவர் செல்வந்தாராக வழிகாட்டக்கூடிய புத்தகத்தை தேடலாம்.

கொஞ்சம் தீவிர வாசகர்கள் கடவுள் உண்டா என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை படிக்க விரும்புவார்கள்.வாழ்க்கையில் முக்கிய்மானவை எவை என்னும் கேள்விக்கான புத்தகத்தையும் சில தேடலாம்.

இப்படி புத்தகங்கள் விடை அளிக்க கூடிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.இப்படிதான் எல்லா புத்தகமும் ஏதோவொருகேள்விக்கு பதில் அளிக்கிறது... 

அந்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு தனி உலகத்தில் நாம் வாழ்வது போன்றது. அவற்றை வாசிப்பது என்பது நாம் சுவாசிப்பது போன்று. அத்தகைய புத்தக வாசிப்பு தொலைக்காட்சி இருக்கும் காலத்திலும் சரி அது இல்லாத காலத்திலும் சரி புத்தகங்கள் நிறைய பேருக்கு எப்போதும் ஒரு நெருங்கிய தோழனாக, இருந்தது உண்டு. 

பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே.

படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.

தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடு கிறதோ, சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல்களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிறஅங்கீகாரங்களும்நம்மை தேடி வரும்.

ஆனால் சமீபத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்றழைக்கப்படும் அண்ணா நூற்ராண்டு நூலகத்தை தமிழக அரசு மாற்றும் முடிவை எடுத்துள்ளது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது ...

1 comment:

  1. என்ன படித்திருக்கிறீர்கள் என்று ஒரு பிரபலத்திடம் கேட்ட போது நேற்று இரவு வரை படித்தேன் என்றாராம். வாழ்க்கை முடிவது வரை வருவதுதான் இந்த வாசிப்பு பழக்கம். ஆனால் இளைய தலைமுறையினரிடம் வருடத்திற்கு ஒருமுறை புத்தகம் வாங்கும் பழக்கம் இருக்கிறதே தவிர படிக்கும் பழக்கம் இல்லை. அவர்கள் வாங்கும் புத்தகம் என்று பார்த்தால் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் மட்டுமே. இந்த நிலை மாற வேண்டும். படிக்கும் பழக்கம் உருவாக வேண்டும்.

    ReplyDelete