இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு யார் காரணம்? இந்த இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி. என்னை பொறுத்தவரை இலங்கை தமிழர்களின் இந்த முடிவில்லா வாழ்வாதார போராட்டத்திற்கு மூவர் தான் முக்கிய பொறுப்பாளர்கள். அவர்கள் இந்திரா காந்தி அம்மையார், எம்ஜீஆர் அவர்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்.
1983-ஆம் வருடம், இலங்கையில் இனப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்திரா காந்தி அம்மையார் நினைத்திருந்தால் தனி ஈழத்தை எளிதாக பெற்று தர முடிந்திருக்கும். இலங்கை அரசு இனப்போரை நிறுத்தாவிட்டாலும் தனி ஈழம் அமைய ஒப்புதல் தராவிட்டாலும் இந்தியாவிற்கு போரை தவிர வேறு வழியில்லை என்று அம்மையார் அறிவித்திருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். தமிழர்களின் உரிமையை பெற்றுத்தர இந்திய ராணுவ விமானங்கள் யாழ்பாணத்தில் தரை இறங்கும் என்று ஒரு அறிவுப்பு செய்திருந்தாலே இலங்கை அரசு பணிந்திருக்கும். பங்களாதேஷை பாகிஷ்தானை விட்டு பிரித்த துணிவு மற்றும் ரஷ்யாவின் பக்க பலம் இவை இரண்டும் ஆசியாவில் சக்தி வாய்ந்த தலைவராக இந்திரா காந்தி அம்மையாரை மாற்றியிருந்தது. அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜீஆர் அவர்கள் மிக சரியான முறையில் இந்த பிரச்சினையை அம்மையாரிடம் எடுத்து சென்றிருந்தால் இலங்கை தமிழருக்கு அப்போதே விடிவு கிடைத்திருக்கும். தமிழ் ஈழம்தான் வேண்டும் என்று எம்ஜீஆர் அவர்கள் வலியுறுத்தி இருந்தால் இந்திரா காந்தி அம்மையார் நிச்சயமாக அதற்க்கு உதவியிருப்பார். எந்த காரணத்திற்க்காகவோ அந்த இரு தலைவர்களும் தமிழ் போராளிகளுக்கு ஆயுதங்களும் பண உதவியும் செய்து மிக நீண்ட போராட்டத்திற்கு விதை போட்டு விட்டார்கள்.
1984-ஆம் ஆண்டு இலங்கையில் இனப்போராட்டம் மிகத்தீவிரமாக இருந்தபோது எம்ஜீஆர் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த தமிழ் போராளிகள் இயக்கங்களை ஒரு சந்திப்புக்கு அழைத்திருந்தார். திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அந்த சந்திப்பு நடக்கும் ஒரு நாள் முன்பு அதே போன்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கலைஞர் கூட்டிய கூட்டத்திற்கு EPRLF, TELO மற்றும் EROS போன்ற அமைப்பை சார்ந்த பிரதிநிதிகள் செல்கிறார்கள். விடுதலை புலிகள் அந்த கூட்டத்திற்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். கலைஞர் அவர்கள் நடத்திய் சந்திப்பால் கோவமடைந்த எம்ஜீஆர் மறுநாள் நடக்கவிருந்த கூட்டத்தை ரத்து செய்கிறார். அத்துடன் அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரனை மட்டும் தன்னை வந்து சந்திக்க சொல்கிறார். ஆனால் பிரபாகரன் தான் செல்லாமல் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை அனுப்பி வைக்கிறார். அந்த சந்திப்பின்போது எம்ஜீஆர் பாலசிங்கத்தை பார்த்து ஏன் நீங்கள் கலைஞர் கூட்டிய கூட்டத்திற்கு செல்லவில்லை என்று கேட்கிறார். அதற்கு பாலசிங்கம் “கலைஞர் தங்களை முந்தி கொண்டு தனக்கு பெயர் வருவதற்காக அந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். ஆனால் அது போன்ற அரசியல் விளையாட்டுக்குள் நாங்கள் சிக்கி கொள்ள விரும்பவில்லை அதனால் நாங்கள் செல்லவில்லை” என்று சொல்கிறார். அதற்கு எம்ஜீஆர் நீங்கள் தமிழக அரசியலை நன்கு தெரிந்து வைதிருக்கீர்கள் உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். உடனே பாலசிங்கம் இந்திய அரசு ஆயுதம் மற்றும் பண உதவியை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு எம்ஜீஆர் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க, பாலசிங்கம் பதில் சொல்ல தயங்குகிறார். அனால் பாலசிங்கத்துடன் சென்று இருந்த சங்கர் என்பவர் உடனடியாக இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்கிறார். உடனே எம்ஜீஆர் அவ்வளவுதானா, அது போதுமா என்று கேட்கிறார். அதற்க்கு அவர்கள் அப்போதைக்கு அது போதும் என்கிறார்கள். சரி, நாளை இரவு பத்து மணிக்கு வாகனத்துடன் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளவும் என்கிறார் எம்ஜீஆர்.

ஆச்சர்யம் தாங்க முடியாமல் இருவரும் சென்று பிரபாகரனிடம் நடந்ததை சொல்கிறார்கள். பிரபாகரனாலும் அதை நம்ப முடியவில்லை. மறுநாள் இரவு வாகனத்துடன் எம்ஜீஆர் இல்லம் வருகிறார்கள். முதல்வர் அவர்களை வாயில் வரை வந்து அழைத்து செல்கிறார். அவர்களை அந்த இல்லத்தின் அடிதளத்திற்கு அழைத்து சென்ற முதல்வர் அங்கு இருந்த ஒரு அறையின் காவலர்களிடம் அவர்களுக்கு 20 பெட்டிகள் கொடுக்க சொல்கிறார். அந்த அறையில் பணப்பெட்டிகள் நம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறையில் இருந்தது போல் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது. அந்த பணபெட்டிகளுடன் அந்த இரவில் செல்ல பாலசிங்கம் தனக்கு அச்சமாக இருக்கிறது என்று சொல்ல, முதல்வர் தமிழக காவல்துறை தலைவரை தொலைபேசியில் அழைத்து உடனயாக இரண்டு வாகனங்களுடன் காவலர்களை அனுப்ப சொல்கிறார். அந்த இரவில் காவலர் வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க பணபெட்டிகளுடன் சென்னை நகரில் ஊர்வலமாக சென்று தங்கள் இடத்தை அடைகின்றனர் பாலசிங்கமும் அவருடன் கூட வந்தவர்களும். இந்த பணத்தை கொண்டுதான் பிரபாகரன் தன் முதல் AK-47 துப்பாக்கிகள் கொள்முதலை செய்கிறார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பாலசிங்கம் தான் எழுதிய “விடுதலையை நோக்கி” என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். ஆனால் எம்ஜீஆரிடம் பணம் வாங்கி ஆயுதங்கள் வாங்கிய பிரபாகரன் இலங்கை அரசுக்கு எதிராக அதை உபயோகபடுதியதைவிட சக போராளி இயக்கங்களுக்கு எதிராகத்தான் அதை பயன்படுத்துகிறார். அவருடைய ஒரே நோக்கம் தமிழ் ஈழத்தில் தன்னை விட வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதுதான். தனக்கு ஒத்து வராத பல தமிழ் தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்தார் அமிர்தலிங்கம் போன்ற மிதவாத கொள்கையுடைய காந்தியவாதிகளையும் பிரபாகாரனின் ஆயுதங்கள் பலி வாங்கின
.
இந்திரா காந்தி அம்மையாரோ அல்லது எம்ஜீஆர் அவர்களோ மனது வைத்திருந்தால் அமிர்தலிங்கம் போன்ற அரசியல் அனுபவமும், இலங்கை தமிழர்களின் மேல் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்த தலைவர்களுக்கு ஆதரவு அளித்து இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் எந்த காரணத்தினாலோ அவர்கள் வன்முறையில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்களை ஆதரித்து ஆயுதங்களையும் பண உதவிகளையும் வழங்கினர். கைகளில் கொடூரமான ஆயுதங்களும், பையில் ஏராளமான பணமும் கிடைத்தவுடன், அந்த இளைஞர்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர் எவராக இருப்பினும் தன் தமிழ் இனத்தையே சார்ந்தவர்களாக இருந்தாலும் சுட்டு கொன்றனர். இதற்க்கெல்லாம் எம்ஜீஆர் அவர்களும் இந்திரா காந்தி அம்மையாரும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் கலைஞர் அவர்கள் தமிழ்ப்போராளிகள் தங்களுக்குள்ளே அடித்துக்குகொல்வதால்தன் இலங்கை பிரச்சினைக்கு முடிவு காண முடியாமல் போனது என்று பலமுறை கூறியுள்ளார்.
1986-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் ஈழ தமிழர் அமைப்புகளின் இடையில் ஒற்றுமை வேண்டி ஈழ தமிழர்கள் ஆதரவு இயக்கம் (டெசோ) என்ற ஒரு அமைப்பை தொடங்குகிறார். மதுரையில் நடந்த அதன் முதல் கூட்டத்தில் வாஜ்பாய், N.T. ராமராவ், சுப்ரமண்யம் சுவாமி போன்ற எதிர் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அனால் அதற்கு மறுநாளே விடுதலைபுலிகளால் TELO இயக்க தலைவர் சிறி சபாரத்தினம் மிக கொடூரமாக சுட்டு கொல்லபடுகிறார். சபாரத்தினத்தை கிட்டு தலைமயில் ஒவ்வொரு வீடாக தேடி கொண்டு வரும் விடுதலை புலிகள் தங்கள் கண்களில் படும் பல டெலோ இயக்க போராளிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டு கொல்கிறார்கள். கடைசியில் சபாரத்தினத்தை கண்டு பிடித்தவுடன் அவர் மறைந்திருந்த இடத்திலிருந்து தப்பி ஓடும்போது நடுத்தெருவில் கிட்டு அவர் காலில் சுடுகிறார். சபாரத்தினம் கிட்டு முன் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டும் அவர் மிருகத்தனமாக சுட்டு கொல்லபடுகிறார். இந்த நிகழ்ச்சி விடுதலை புலிகளின் அரக்க குணத்திற்கு மிகப் பெரிய சாட்சி.
கலைஞர் முயற்சியால் ஏற்படும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இந்த எதிர்கட்சி தலைவர்களின் ஒற்றுமை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு அபாய மணியாக ஒலிக்கிறது. கலைஞருக்கோ அல்லது மற்ற எதிர் கட்சிகளுக்கோ இலங்கை பிரச்சினையால் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும் நெடுமாறன் அவர்கள் அடிக்கடி கூறுவது போல எம்ஜீஆர் தமிழ் ஈழம் மலர ஆசைப்பட்டார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நெடுமாறன் அவர்களின் கருத்து தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஒத்து சொல்லப்படும் ஒன்று. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை. உண்மையில் எம்ஜீஆர் உடைய கவனமெல்லாம் கலைஞருக்கு எந்த பலனும் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான். எம்ஜீஆர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று இப்போது கூறுவதெல்லாம் வரலாற்றை முற்றிலுமாக திரிக்கும் முயற்சி. அவருடைய ஒரே பணி இந்திரா காந்தி அம்மையாருக்கும் ராஜீவ் காந்திக்கும் அவர்கள் மனம் கோணாமல் அவர்களின் முழு நேர சேவகனாகவும் இருப்பதுதான். அதனால்தான் ராஜீவ் சொல்படி பிரபாகரன் கேட்கவில்லை என்றதும் சிறிதும் யோசிக்காமல் அவரை முழுவதுமாக கைகழுவிவிட்டார்.
இப்போது பலமுனைகளிருந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்று குரல் எழுகிறது. ராஜபக்ஷே போர்குற்றவாளி என்றால், பிரபாகரனும் போர் குற்றவாளிதான். போர்க்களத்தில் எல்லாவற்றையும் ராவணன் இழந்து நின்ற போது இன்று போய் நாளை வா என்று ராமன் காட்டிய பெருந்தன்மையை ராஜபக்ஷே போன்ற பிணம்தின்னி கழுகுகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் பிரபாகரன் தன் இனைத்தையே தனக்கு கேடயமாக நிறுத்திக்கொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றிருக்ககூடாது. இதனால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கும். அந்த மனித கேடயதிலிருந்து தப்பி ஓட முயற்சித்த தமிழர்களை விடுதலைபுலிகள் கொடூரமாக கொலை செய்தனர். இருபக்கமும் மாட்டி கொண்டு எந்த பாவமும் அறியாத அந்த தமிழர்கள் சிக்கி சீரழிந்தது இனப்படுகொலைகளின் மிக உச்சகட்ட நிகழ்வு. தமிழர் உரிமை வேண்டி போராடியதை குறிக்கும் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத சோகமும், கண்ணீரும், ரத்தமும் நிறைந்த கருப்பு பக்கங்கள்.
.

சமீபத்தில் மருதமூரான் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றை படித்தேன். அதில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனக்கு எல்லாளன் என்கிற மக்களின் உயிரின் மீது அக்கறைகொண்ட- போர் தர்மம் உணர்ந்த தமிழ் அரசனைத்தான் பிடிக்கிறது. 40 வருடங்கள் இலங்கையினை ஆட்சி செய்த பெருமையுள்ளன் எல்லாளன். 70 வயதில் போரில் மக்களின் உயிர் அதிகளவில் பலிவாங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக எதிரி மன்னனான இளைஞன் துட்டகைமுனுவுடன் நேருக்கு நேராக மோதியவன். மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காகவே தெரிந்து கொண்டு தோற்றவன். அவரின் வீரத்தையும்- மக்களின் அக்கறையையும் உணர்ந்து துட்டகைமுனுவே சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு. மக்களின் உயிர்களின் மீது அக்கறைகொண்டு, தன்னுயிரை மக்களுக்காகக் கொடுத்த உண்மையான தலைவன் எல்லாளனின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதையே பெருமையாக கருதுகிறேன்! வரலாறுகள் அடிக்கடி திருத்தி எழுதப்பட்டே வந்திருக்கிறது. மற்றுமொரு எல்லாளன் மீண்டும் பிறந்து வருவான். நிச்சயமாக நம்புகிறேன்!!”
“எனக்கு எல்லாளன் என்கிற மக்களின் உயிரின் மீது அக்கறைகொண்ட- போர் தர்மம் உணர்ந்த தமிழ் அரசனைத்தான் பிடிக்கிறது. 40 வருடங்கள் இலங்கையினை ஆட்சி செய்த பெருமையுள்ளன் எல்லாளன். 70 வயதில் போரில் மக்களின் உயிர் அதிகளவில் பலிவாங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக எதிரி மன்னனான இளைஞன் துட்டகைமுனுவுடன் நேருக்கு நேராக மோதியவன். மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காகவே தெரிந்து கொண்டு தோற்றவன். அவரின் வீரத்தையும்- மக்களின் அக்கறையையும் உணர்ந்து துட்டகைமுனுவே சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு. மக்களின் உயிர்களின் மீது அக்கறைகொண்டு, தன்னுயிரை மக்களுக்காகக் கொடுத்த உண்மையான தலைவன் எல்லாளனின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதையே பெருமையாக கருதுகிறேன்! வரலாறுகள் அடிக்கடி திருத்தி எழுதப்பட்டே வந்திருக்கிறது. மற்றுமொரு எல்லாளன் மீண்டும் பிறந்து வருவான். நிச்சயமாக நம்புகிறேன்!!”
இப்படியெல்லாம் தன்னலம் பார்க்காத தமிழ் மன்னர்கள் இலங்கையில் இருந்தார்கள். ஆனால், பிரபாகரனும், மிஞ்சியிருந்த விடுதலைபுலிகளும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் இனத்தையே கேடையமாக பயன்படுத்தினர். இதுவா தான் இனத்தை காப்பாற்ற போராடுவதாக கூறும் வீரர்களுக்கு அழகு? தங்கள் இனத்தை தாங்களே அழிப்பதற்காகவா இவ்வளவு நாள் ஒரு இயக்கம் நடத்தினார்கள்?
நான் திமுகவை சேர்ந்தவன் அல்ல. எப்போதுமே நடுநிலையோடு இருக்க முயலும் ஒரு சாதாரண பத்த்ரிக்கையாளன். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம். எப்படி கலைஞருக்கு ஈழ தமிழருக்கு எதிரானவர் என்ற தோற்றம் கிடைத்தது? தமிழக மக்கள் எப்போதுமே ஈழ பிரச்சினையை முன்னிருத்தி தேர்தலில்களில் வாக்களித்ததில்லை. 1983-ஆம் ஆண்டு தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை இலங்கை தமிழர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக ராஜினாமா செய்கிறார். ஆனால் அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் இந்திரா காந்தி அம்மையாரின் மரணமும் எம்ஜீஆர் அவர்களின் உடல் நலமின்மையும் தான் தமிழக மக்களுக்கு பெரிதாக தெரிகிறது. தனது பதவியை துறந்தார் மற்றும் இலங்கை தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமைக்கு முயற்சி செய்தார் என்றா தமிழக மக்கள் கலைஞருக்கு வாக்களித்து அரசாலும் உரிமையை தந்தனர்?
1986-ஆம் ஆண்டு அவர் இலங்கை தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமை ஏற்பட எடுத்த முயற்சி திட்டமிட்டே சபாரத்தினம் படுகொலை மூலம் தடுத்து நிறுத்தபடுகிறது. மேலும், எம்ஜீஆர் மறைவுக்கு பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அம்மையார் அவர் மேல் வைக்கும் குற்றச்சாட்டு அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது. இதை வைத்து திமுக ஆட்சியை ராஜீவ் காந்தி ஆதரவுடன் மத்தியில் அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் கலைக்கிறது. அதற்க்கு பின் வந்த தேர்தலில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்திலுமே படுதோல்வியை தழுவுகிறது. இப்போதும் தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி மரணம்தான் மிகப்பெரிய விஷயமாக படுகிறது. அவரால் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய அமைதிபடையின் தமிழர்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் தமிழக வாக்காளர்கள், விடுதலைபுலிகளும் தமிழர்கள் தானே அவர்களுக்கு தானே கலைஞர் உதவினார் அதில் என்ன தவறு என்று அவரை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்தவில்லை. பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் மரணத்தை விட தமிழகத்திலுள்ள தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தியின் மரணம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் அதன் பின் நடந்த தேர்தலில் அண்ணாதிமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாறு காணாத அளவுக்கு ஆதரவளித்தார்கள். தனது செயல் ஒரு தேச நலனுக்கு எதிரான ஒரு செயல் என்று தெரிந்தும் இலங்கை அரசால் அவமானப்பட்டு திருப்பியனுப்பட்ட இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து சென்னை துறைமுகம் வந்ததும் அதை வரவேற்க செல்லமாட்டேன் என்று துணிவோடு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கூறினார். இதற்கெல்லாம் தமிழக மக்கள் செய்த கைம்மாறு அவருடைய கட்சியை அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைய செய்ததுதான்.

2009-ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருந்தபோதும் ஒரு மாநிலத்தின் முதல்வராகிய கலைஞர் என்ன பெரிதாக செய்திருக்க முடியும். அந்த கட்டத்தில் இந்தியாவின் கையைவிட்டே போர் நிலவரம் சென்று விட்டது. கலைஞர் மத்திய அரசுக்கு தனது கட்சியின் ஆதரவை விலக்கிகொண்டிருந்தாலும் இங்கே அம்மா உடனடியாக காங்கிரசுக்கு கை கொடுத்திருப்பார். அப்போது யாரவது இலங்கையில் நடக்கும் தமிழ் இனப்படுகொலையை பற்றி கேட்டிருந்தால் அவர் இலங்கையில் இருப்பவர்கள் தமிழர்களே அல்ல அவர்கள் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி வழியாக இலங்கை சென்ற மலையாளிகள் என்று கூட சொல்லிருப்பார். போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று போர் தர்மத்திற்கு புது இலக்கணம் கூறி காங்கிரஸ் கூட்டணிக்கு துண்டு போட்டுவிட்டு காத்துகொண்டிருந்தவர் அல்லவா அவர்?
கலைஞர் செய்த ஒரே தவறு பிரபாகரனால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது, நான் என்றும் பிரபாகரனை ஆதரிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்காததுதான். அப்படி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அவரை யாரும் இன்று குற்றம் கூறமுடியாது.
இறுதியாக நான் எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான். இனிமேலும் இந்திய அரசையோ அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளையோ நம்பாதீர்கள். இங்குள்ள சில அரசியல் வியாபாரிகள் உங்கள் பிரச்சினையை வைத்து தங்களை விளம்பரபடுதிக்கொள்ளவும் தங்கள் வாழ்வை வளமாக்கிகொள்ளவும் முயல்கிறார்கள். இவர்களால் உங்களுக்கு எந்த தீர்வையும் ஏற்படுத்தி தரமுடியாது. இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு உங்களுக்குள்ளே சில நல்ல தலைவர்களை உருவாக்குங்கள். ஆயுதமேந்திய போராட்டம் ஒரு நிலைக்கு மேல் வெற்றியை தராது என்று உணருங்கள். ஒரு நாள் சூரியன் உங்களுக்காகவும் உதிப்பான். அந்த விடியலை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடுங்கள். இந்தியாவின் மூலமாக, தமிழகத்தின் சார்பாக இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் உங்களுக்காக என்ன அதிகபட்சம் செய்ய முடியும் ?
பதவு உதவி பார்த்திபன்
நன்றி :- சசி
பல தகவல்கள் நம்பும்படியாக இல்லை. இதற்கெல்லாம் ஆதாரங்கள் கூறப்படவில்லையே!
ReplyDeleteஉங்களது சிறுகதை அருமையாக உள்ளது. கிளைமாக்ஸ் சூப்பர்.
ReplyDelete