செந்தில் பாலாஜிக்களின் கைதும்; மோகன் பாகவத்துகளின் இந்து ராஷ்ட்டிரக் கனவும்.
========================================
தனது தவறுகளுக்காக செந்தில் பாலாஜி ஆயிரம் முறை தண்டிக்கப்பட வேண்டியவரெனில் அதையும் விட குரூர குற்றங்களுக்காக மோடியும், அமித்சாவும், அவரின் எஜமானர்களும் கோடி முறை தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆயிரம் செந்தில் பாலாஜிக்கள் தண்டிக்கப்பட்டாலலும் ஒரேயொரு அமித்சாவோ மோடியோ அல்லது மோகன்பகவத்தோ தண்டிக்கப்படலாகாது என்ற நவ இந்தியாவின் சனாதான சட்டத்தை நாட்டின் கூட்டு மனசாட்சியாக்க முயல்கிறது இந்துத்வ நவநாஜியிச பார்ப்பணீயம். '2025- இந்து ராஷ்ட்ர இந்தியா' என்ற தனது தீயநோக்கத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற மூர்க்கத்தோடு திரியும் அது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய அமைப்பையோ, தனி நபரையோ விடுவதாகவேயில்லை.
2019ல் மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்தே நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்வின் பின்னனியில் இருப்பதும் இதுதான். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி வேட்டையாடப் பட்டிருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.சமூக ஊடகங்களில் செந்தில் பாலாஜி குறித்து நேர்காணல் அளிக்கின்ற பலரும் "செந்தில் பாலாஜியை நான் நியாயப்படுத்தவில்லை" என்றொரு தூய்மை வாதத்தையும் சேர்த்தே சொல்லுகிறார்கள். ஆனால் சங்கப்பரிவாரங்களின் குறி செந்தில்பாலாஜியல்ல. நாளையே செந்தில் பாலாஜி கட்சி தாவ தயாரெனில் இதுகாறும் அவர் அனுபவித்த சொகுசுகள் கடந்து இதைவிட சுகமானதொரு வாழ்வு அவருக்கு கிடைக்கக்கூடும். இன்னும் சரியாகச் சொல்வதெனில் அத்தனை பேரங்களும் தோல்வியுற்ற நிலையில்தான் சாமபேத தானம் கடந்து தண்டத்தை கையில் எடுத்துள்ளது ஒன்றிய அரசு. இல்லையெனில் 2011-16 நடந்து நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை தோண்டியெடுத்து அதில் 18 மணிநேரம் தொடர்ச்சியாக விசாரிக்கத் தேவையென்ன? அப்படி விசாரித்தும் நீதி மன்றத்தில் புதிதாக எந்த குற்றச் சாட்டையும் வைக்கமுடியாத அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டு காவல்துறை ஏறக்குறைய எட்டாண்டுகளுக்கு முன்பு என்ன குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளதோ அதைத்தான் நேற்றைய முன்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் கூறியுள்ளது.
எனில் 18 மணி நேரம் நடந்ததுதான் என்ன பேரமும், ஆங்காரமும், மிரட்டலுமின்றி வேறென்ன இருந்துவிடப் போகிறது.? பிரதான எதிர்கட்சி முக்கியஸ்தர்களிடம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்பது ஒன்று அவர்களை மோடிகும்பலுடன் சேர்த்து வைப்பது. அல்லது ஒத்து வராதவர்களை சிறையில் அடைப்பது. வேறென்னத்தை பிடுங்கியுள்ளது இத்துறை?
எனவே அதிகாரத்தின் இரை செந்தில் பாலாஜியல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் எவ்விதக் குறுக்கீடுகளுமற்று, கேள்விகளுமற்று, ஜனநாயகத் தரித்திரமற்று சனாதான இந்து ராஷ்ட்ரமாக கட்டமைத்து சுகபோகமாய் ஆளப்போகின்ற நாளுக்காக, ஒரு மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப்போகும் அத்தருணத்திற்காக கடந்த நூறாண்டுளாக ஒவ்வொரு வினாடியாக காத்துக் கொண்டிருக்கும் பகவத் கும்பலுக்கு அத்தகைய கனவைச் சிதைக்கும் யாருமே எதிரிகள்தான், சாதாரண எதிரிகளல்ல, குரூரமாய்த் தண்டிக்கப்பட வேண்டிய எதிரிகள். நாடெங்கும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி முக்கியஸ்தர்களில் தமிழ்நாட்டில் திமுகவின் சார்பில் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் பாஜகவின் அரசியல்தளத்தை தகர்த்தவர் செந்தில் பாலாஜி. ஆனால் வெறும் நான்கைந்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்காகவா இப்படி வெளிப்படையான விகாரமும், வன்மமும் கட்டவிழ்த்து விடுகிறது? நிச்சயம் இல்லை. திராவிடம், என்றொரு சித்தாந்தமும், அதனை பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கும் திமுக என்றொரு பேரியக்கமும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்,தமிழன், தமிழ்நாடு என்ற மொழியின் மீதும், இனத்தின் மீதும், நிலப்பரப்பின் மீதும் பார்ப்பணீயக் கும்பல் கொண்டுள்ள குலை நடுக்கமே இத்தகைய வன்மத்தின் வெளிப்பாடுகள். ஏனெனில் எதிர்காலத்தில் இந்து ராஷ்ட்ரம் எனவொன்று அமைந்தே விட்டாலும் சர்வ சத்தியமாய் அதற்கு எதிர்வினையாக முழுமையானதொரு போராட்டம் துவங்கிற இடம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதைத்துவங்குகின்றவன் தமிழனாகத்தான் இருப்பான். தமிழ் என்ற மொழி அநீதிக்கு எதிரான சிறுபொறியையும் நாடெங்கிலும் பற்ற வைத்து அவர்களின் நூற்றாண்டுக் கனவைத் தகர்க்கக்கூடும். நித்திரையில் சுக ஸ்கலித கனவினூடே வரும் பேய்க்கனவைப் போலத்தான் அவர்களுக்கு தமிழ், தமிழன், தமிழ்நாடு. எனவேதான் இந்தியாவில் எந்த மாநிலத்திலுமில்லால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளுநரே ,அர்ஜூன் சம்பத்தாக அவதாரமெடுத்து ஒரே பாரதம், ஒரே கலாச்சாரம், சனாதான தர்மம், தமிழ்நாடு பதத்திற்கு பதிலாக தமிழகம், ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தனித்த கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் மீதான ஒவ்வாமை என வாந்தியெடுத்துத் திரிகின்றார்கள்.
எனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் தூய்மைவாதம் பேசுகின்ற அனைவரும் திமுகவிற்கும், அதன் தலைவருக்கும் அதே தூய்மைவாதம் வாழங்கியுள்ள வாய்ப்புகளை மறந்து பொதுப்புத்திக்கு பலியாகின்றார்கள் அல்லது பொதுபுத்தியை கட்டமைக்கின்றார்கள்.
ஹின்டன் பெர்க் பகிரங்கமாக அம்பலப்படுத்திய பிறகும் பிரதமருக்கு அதானி உற்ற நண்பராக இருக்க முடியும். நண்பரின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்கவும் வக்கற்ற அமலாக்கத்துறை, நாடெங்கும் நடப்புக் குற்றங்களின் அறிக்கைகளைக்கூட கிடப்பில் போட்டு வைத்திருக்கின்ற அமலாக்கத்துறையும், இன்று வரையில் அதுகுறித்து நாட்டு மக்களிடம் வாய் திறக்காமல், அதைக் கேள்விக்கு உட்படுத்திய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து அவரின் பாஸ்போர்ட் வரையிலும் முடக்க முயற்சித்து அவரின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடுக்க முயன்ற பிரதமரும் செந்தில்பாலாஜியிடம் மட்டும் முஷ்டிமடக்கி நியாயத்தை கோருகின்ற நீதியென்பது பெரும் அநீதி. தீமையிலும் பெருந்தீமை. நாட்டுமக்களின் கூட்டு மனசாட்சியையே அநீதிக்கு இணங்க பழகச் செய்யும் அவலம். இத்தகைய அவலத்தை ஒரு பிரதமரே நடத்திக் கொணீடிருப்பதென்பது தேசத்தின் தீவினை. எனவேதான் ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜியென்ற தனி நபர்களானாலும் சரி, அல்லது காங்கிரஸ் மற்றும் திமுக என்ற இயக்கங்களானாலும் சரி தங்களின் எதிர்கால நோக்கத்திற்கு பாதகமாக இருக்கும், இருப்பார்கள் என்ற எதனையும், எவரையும் அழித்தே விடநினைக்கிறது பாகவத்கும்பல்.
இத்தகைய நிற்கதி நிலையில் நிலையில் நெஞ்சு வலியிலும் மிரட்டலுக்கு பலியாகாமல் இருந்த ஒரு சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதற்கான தார்மீகம் இயல்பாகவே அவருக்கு அமைந்து விடுகிறது. குடியரசு தலைவரை அவமதித்து திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவில், பாலியல் குற்றவாளியான பிரிஜ்பூஷனுடன் ஒரு பிரதமர் கலந்து கொள்வதும், அநீதியிழைக்கப்பட்ட தனது சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதன் வாயிலாக 'நான் உன்னுடன் இருக்கின்றேன். இயக்கம் உன்னோடு இருக்கிறது', என்ற ஆறுதலையும் சமப் படுத்துபவர்களின் நோக்கம் என்ன? நீதி, அநீதி என வரும்போது தெளிவாக நீதியின் பாற்பட்டு நிற்பது எத்தனை முக்கியமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது பெருந்தீமை அல்லது சிறுதீமை என வரும்போது சிறுதீமையை தேர்ந்தெடுப்பது. ஒருவேளை ஸ்டாலின் சென்று சந்திக்கவில்லையெனில் 'செந்தில் பாலாஜியை கைவிட்டு விட்டாரா ஸ்டாலின்?' பாஜகவிற்கு பயந்து விட்டாரா ஸ்டாலின்? அமைச்சருக்கே இக்கதியெனில் தொண்டனின் கதியென்ன?' எனும் ஊளைகள் வராதென்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆர்ப்பரிக்கும் ஊடக அலைகளுக்கு பதில் சொல்லப்போவது யார்? அட அத்தனையையும் விட்டு விடுவோம். 'கட்சிக்காக இத்தனை உழைத்தேனே, கொங்குவை கட்சி வசமாக்கினேனே, சொல்லப்போனால் ஒருவிதத்தில் அத்தகைய அடையாளத்தினால்தானே இத்தகைய குரூரங்கள்? இருப்பினும் தலைமை நம்மை நிர்கதியாக்கி விட்டதே' என பாதிக்கப்பட்டவரும் அவரின் குடும்பமும் நினைத்தால் அவர்களுக்கு என்ன பதில்? ஒரு தலைமை வழங்குவதை விடவும் மேலான ஆறுதலை வேறெவரா வழங்கி விடவியலும்? செந்தில் பாலாஜி கண்டுகொடாமல் விடப்பட்டால் மீதமுள்ள சகாக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? நாளை நமக்கும் இதே கதிதானா ? என அவர்கள் நினைத்தால் திமுகவின் கதியென்ன?
எனவே நடைமுறையின்படி பார்த்தோமெனில் தனது அமைச்சரவை சகாவை ஸ்டாலின் சென்று சந்தித்ததில் கிஞ்சிற்றும் குறையில்லை. தனது சிறகினடிகளை குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப்பறவை போல தனது, சகாக்களை அவர் பாதுகாக்கத்தான் வேண்டும்., ஒவ்வொருவருவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழ்வினைகள் அதற்கான நேரத்தில் உருத்து வந்து ஊட்டட்டும் அது இயற்கையின் நீதி. ஆனால் கொள்ளையனை கொலைகாரண் தண்டிப்பதென்பது மனு நீதி.
சரி செந்தில் பாலாஜிக்கு முன்பும், பிறகும் இத்தகைய தவறுகள் நடைபெறவே இல்லையா? நாடெங்கிலும் இப்போதும் போக்குவரத்து துறை மட்டுமல்லாது இருக்கின்ற அத்தனை துறைகளிலும் லஞ்சமற்று நேர்மையாகத்தான் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனவா? செந்தில் பாலாஜி ஒருவர்தான் இன்றைய நேரத்தில் முதன்மையாக தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றவாளியா? வியாபம்- துவங்கி 40%ஐ லஞ்சமாக கேட்கின்றார்கள் என மோடிக்கே நேரடியாக கடிதம் எழுதிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அனைத்து கேவல நிகழ்வுகள் பற்றியும், இவை அத்தனை சீரழிவுகளையும் தமது அதிகாரத்தின் கீழ் நடத்திக் கொண்டிருப்பவர்கள் குறித்து நீதித்துறையின் பதில் என்ன? குஜராத் அரசு மருத்துவமனைகளை அவைகள் மருத்துவமனைகளா? அல்லது பாதாள சாக்கடையா? என நெஞ்சு பொறுக்காமல் வினவிய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மொத்த ஊடகங்களையும் கையில் வைத்துக்கொண்டு பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் குறித்து எதிர்மறையான எச்செய்தியையும் வெளிவராமல் ஒரு இரும்புத்திரை மாநிலங்களாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் வெளிப்படைத்தன்மையை கேள்வி கேட்பது அதிகாரத்திமிரும், அற்பவாத லட்சியமுமேயன்றி வேறில்லை.
ஹிட்லரின் காலத்தில் நாம் இல்லை. நாஜியிச குரூரங்கள் என்பது நமக்கு சரித்திரங்களேயன்றி சம்பவங்களாக நாம் கண்டிருக்கவில்லை. ஆனால் நம் சமகாலத்தின் ஆகக்கேடான காட்சிகளை இன்னும் சமீபத்தில் எதிர்கொள்ள இருக்கின்றோம். ஹிட்லரோடு ஜெர்மனியில் நாஜியிசம் ஒரு முடிவுக்கு வந்தது. முசோலினியோடு இத்தாலியில் ஃபாசிஸம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம் அவை அரசியலிலும், ஆட்சியிலும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் ஜெர்மனியின் நாஜியிசத்தையும், இத்தாலியின் ஃபாஸிசத்தையும், இஸ்ரேலின் ஜியோனிசத்தையும் தன்னகத்தே வரித்து வைத்திருக்கும் இந்திய இந்துத்வ பார்ப்பணீயமோ இயக்கம் வேறு, கட்சிவேறென இருகூறாக இருக்கிறது. பின்னின்று அரசை நிறுவவும், கட்டுப்படுத்தவும் செய்கின்றது. எனவேதான் ஹிட்லர் மற்றும் முசோலினியைப் போல தனிநபரோடு முடிந்து விடக்கூடிய துயரமல்ல இந்தியத்துயரம். இது அழிவுச் சிந்தனையையும், பகையையும், வெறுப்பையும் இயல்பிலேயே தோற்றுவித்து நாட்டு மக்களை அதற்கேற்ப பழக்குகிறது. எனவே இதனை வீழ்த்தி சுபிட்சத்தை நிலைநாட்டுவதென்து தனிநபராலோ, ஒரேயொரு இயக்கத்தாலோ, ஒரு ஆட்சி மாற்றத்தாலோ ஆகக் கூடியதல்ல. மக்களனைவரும் ஒன்றுபட்டு தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பினூடாகத்தான் அவைகளை சாதிக்கவியலும். எனவே பிரச்சனைகளின் அடிப்படையை கண்டறிவதை விடவும், அடிப்படையான பிரச்சனையை கண்டடைவதே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது. "எமது எதிர்கால சந்ததிகளேனும் சுதந்திர ஃபலஸ்தீனில் வாழ்வார்கள்"என்றாளொரு எட்டுவயதேயான ஃபலஸ்தீன சிறுமி. அப்படியேதான் நம்பத் தோன்றுகிறது. எமக்கும். எமது நாட்டை சூழ்ந்திருக்கின்ற சூழ்ச்சியும், பகைமையும், வெறுப்புணர்வும் நீங்கி, இதனை தோற்றுவித்தவர்கள் அனைவரும் முழுமையாக தோற்றோடி நவஉலகில் மீண்டும் ஒரு முன்மாதிரியான, எது குறித்தும் அச்சமற்ற முழு சுதந்திர இந்தியாவாக என் நாடு திகழும். எம் சகோதரர்கள் யாவரும் தமக்குள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையான தத்துவத்தின் பாற்பட்டு நிம்மதியான சுதந்திரக்காற்றை சுவாசிக்கக்கூடும்.
நன்றி வணக்கம்..
மிகச் சிறந்த, மிகவும் பயனுள்ள, அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு.
ReplyDelete