தொகுப்புகள்

Search This Blog

Wednesday, September 11, 2024

இந்தியாவும் மதுவிலக்கும்

அண்ணன் திருமாவளவன் சொல்வதைப்போல் இந்தியா பூரண மதுவிலக்கு நாடாக அறிவித்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்..
முன்குறிப்பு:-


கொஞ்சம் நீண்ட கட்டுரைதான்..
நான் சரக்கடிப்பேன் என்பதற்காக இதை சாதகமாக எழுதவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.. 😜😜
********************************
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மதம், கலாச்சார, அல்லது சட்ட காரணங்களுக்காக மது விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்துள்ளன..  இந்த நாடுகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள்.. 
சவுதி அரேபியா, குவைத், லிபியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சுடான். பாகிஸ்தான்,  பங்களாதேஷ், மாலத்தீவுகள் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நாடுகள்..
இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக இஸ்லாமிய சட்டம் (ஷரியா), மது போன்ற போதைப்பொருட்களை உட்கொள்வதை தடை செய்கிறது.  இருப்பினும், இந்த நாடுகளில் சில, தனியார் கிளப்புகள் அல்லது சிறப்பு அனுமதி போன்ற சில நிபந்தனைகளில் முஸ்லீம் அல்லாதவர்களை மது அருந்த அனுமதிக்கின்றன..

இந்தியா தன்னை மது விலக்கு நாடாக அறிவித்து, மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு நாடு தழுவிய தடை விதித்தால், அது குறிப்பிடத்தக்க மற்றும் பரவலான சமூக, பொருளாதார மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். 

அரசாங்க வருவாய் இழப்பு, வேலை இழப்பு, சமூக நடத்தை மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதன் தாக்கம் ஆழமாக இருக்கும்.  சில சாத்தியமான விளைவுகள் என்னவென்று பார்ப்போம்..

அரசாங்க வருவாய் இழப்பு: மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மது வரி கணிசமாக பங்களிக்கிறது.  நாடு தழுவிய தடையானது கலால் வரியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தும், இது பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும்.. சரி இதைக்கூட ஏதோ வேறு வகையில் சரி செய்து கொள்ளலாம்..

வேலைவாய்ப்பில் பாதிப்பு: உற்பத்தி, விநியோகம், சில்லறை விற்பனை உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய மதுபானத் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.  மது உற்பத்தி சார்ந்த பிற  தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலை இழப்பை ஏற்படுத்தும்..

விவசாயத்தின் மீதான குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. மது தொழில் கோதுமை, திராட்சை, கரும்பு, முந்திரி, தேங்காய், மற்றும் அரிசி போன்ற விவசாய பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள் தேவை குறைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

சுற்றுலா பாதிப்பு: சுற்றுலா, குறிப்பாக மது மற்றும் மது கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலங்களில் (பாண்டிச்சேரி, கோவா அல்லது கேரளா ) எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.  சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அதன் மூலம் வரும் வேலை வாய்ப்பும் அரசு வருமானமும் குறைய நேரிடும் ..

சரி பொருளாதார வேலை வாய்ப்பு போன்றவற்றில் தாக்கத்தை விட இதனால் ஏற்படும் சமூக விளைவுகளையும் பார்ப்போம்..

சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்.. வரலாற்று ரீதியாக, மதுவிலக்கு பெரும்பாலும் கறுப்புச் சந்தையின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  கடத்தல், சட்டவிரோத மது உற்பத்தி  மற்றும் ஊழல் அதிகரிக்கும்.  சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட மது வகைகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றது மற்றும் விஷத்தன்மை கொண்டதாக மாறுவதற்கும்  வழிவகுக்கும் என்பதால், இது  உடல் உபாதைகளுக்கும் உயிரிழப்பிற்கும்  வழிவகுக்கும்.. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் ரகசியமாக தயாரிப்பவர்களையும் கண்காணிக்க ஒரு பெரும் காவல் படை அல்லது கண்காணிப்பு படை தேவைப்படும், இது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது..

மேலும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கோவா போன்ற மதுபானத்துடன் வலுவான கலாச்சார தொடர்புகளைக் கொண்ட  ஒரு மாறுபட்ட நாடு இந்தியா. இவ்வளவு ஏன் நம் தமிழ் கலாச்சாரத்தில் பல காலமாக மதுவை பயன்படுத்துவதாக பல இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.. தற்போது கூட கிராமப்புற நாட்டார் தெய்வங்களுக்கு மது படைக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது..  முழு தடை இந்த பகுதிகளில் எதிர்ப்பை சந்திக்கலாம், இது உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புகள் அல்லது அரசியல் ஸ்திரமின்மைக்கு வழி வகுக்கலாம்..
இந்தியாவில் பல கலாச்சார, மத மற்றும் சமூக நடைமுறைகள் உள்ளது.  ஒரு திடீர் தடையானது பாரம்பரிய கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் சமூகக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும், குறிப்பாக மதுவை கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளும் சமூகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

நாடு தழுவிய மதுவிலக்கை அமல்படுத்தும் போது சட்டவிரோத உற்பத்தி, கடத்தல் மற்றும் மது விநியோகத்தை எதிர்த்துப் போராட பெரும் படை தேவைப்படும்.  இது காவல்துறையின் வளத்தை சீர்குலைத்து பல துறைகளில் ஊழலுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உண்டு.

நீதித்துறைக்கு அதிக சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு .. கடுமையான மதுவிலக்கு சட்டங்கள் மூலம், தடையை மீறுவது தொடர்பான வழக்கு நீதித்துறைக்கு அதிக சுமையாக இருக்கலாம், இது காலதாமதம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால்..
மது தொடர்பான உடல்நலப் பிரச்சினையான கல்லீரல் நோய், உடல்நல குறைவு,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் மது துஷ்பிரயோகம் தொடர்பான குடும்ப வன்முறை, போதையில் ஏற்படும் வன்முறைகள் மற்றும் கொலைகள்  போன்றவற்றைக் குறைக்கலாம்..

ஆனால் தற்போது  மது பழக்கம் உள்ளவர்களிடம் உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், மனநலப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது..

இந்தியா கடந்த காலங்களில் மதுவிலக்கை சோதனை செய்தது.  குஜராத் மற்றும் பீகார் போன்ற பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளன, ஆனால் இந்த தடைகளை அமல்படுத்துவது பெரும்பாலும் கடினமாக உள்ளது மற்றும் சட்டவிரோத சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  1970 களில் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது, ஆனால் பலர் மது அருந்துவதைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் பொருளாதார விளைவுகளாலும்  அது திரும்ப பெறப்பட்டது.

உலகளவில், மதுவிலக்கு பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுத்தது,  அமெரிக்காவின்  தடை காலத்தில் (1920-1933), தற்கொலைகள், குற்றங்கள் மற்றும் கொள்ளையடித்தல் ஆகியவற்றில் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டது. அதன் பிறகு அது திரும்ப பெறப்பட்டது ... குறைந்த மக்கள் தொகை கொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலைமை என்றால் இந்தியாவை சற்று யோசித்துப் பாருங்கள்..

இந்தியாவை மதுவிலக்கு நாடாக அறிவிப்பது பொருளாதார சீர்குலைவுகள் மற்றும் கறுப்பு சந்தை வளர்ச்சியில் இருந்து சமூக அமைதியின்மை மற்றும் சட்ட ஒழுங்கு சவால்கள் வரை பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும்.  இது மது தொடர்பான சில உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் குறைக்கும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே வேளையில், ஒட்டுமொத்த தாக்கம் தீர்வுகளை விட அதிகமாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது., குறிப்பாக இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில்.  முழுமையான தடை விதிப்பதை விட பொறுப்பான நுகர்வுடன் சமநிலைப்படுத்தும் ஒழுங்குமுறை  படுத்தும் நடவடிக்கையே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்..

நன்றி
இப்படிக்கு உங்கள்
பாபு சாந்தி

Friday, June 7, 2024

நீங்கள் யார் பக்கம் ? மோடியா ராமரா ?

அயோத்தி ராமர் கோயில் தொகுதியில் பாஜக தோற்றது பாஜகவினருக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கே பேர் அதிர்ச்சிதான் .. 
நன்றி விசுவாசமும் இல்லாத ஹிந்துக்கள்..

ராம்ர் கோவில் கட்டிக் கொடுத்த எங்கள் மோடியை தோற்கடிக்க எப்படி மனசு வந்தது..

மோடிக்கு வாக்களிக்காத எவனும் ஒரிஜினல் ஹிந்து இல்லை..

ராமர் கோயில் தொகுதியில் 85 சதவீதம் இந்துக்கள் இருந்தும் எப்படி தோற்றது ?
இவர்கள் நல்ல இருக்க மாட்டார்கள்...

இதெல்லாம் சமூக வலைதளங்களில் சங்கிகள் போட்ட பதிவுகள்..

ஆனால் இதற்கு முன்பு பல சமூக செயல்பாட்டாளர்கள் ராமர் கோயில் அரசியல் செய்யப்படுகிறது என்று சொன்னபோது இதே சங்கீகள் இது வாக்குக்காக செய்யப்படவில்லை என்று மறுத்தார்கள்.. ஆனால் தற்போது ராமர் கோயில் கட்டியும் வாக்களிக்கவில்லை என்று புலம்புவது அப்பட்டமாக ராமர் கோவில் அரசியல் வெற்றிக்காக செய்யப்பட்ட என்பதை அம்பலப்படுத்துகிறது..

வரலாற்றுத் தோல்வி..
இது எதனால் நடந்தது? எப்படி நடந்தது?.
ராமர் தண்டனை வழங்கினாரா ?

நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் ஒளிர்கிறது அது போல் இந்தியாவை ஒளிர வைப்போம் மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தது பாஜக.. ராமர் கோயில் கட்ட நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்ற பிம்பம் ஊதி பெருக்கப்பட்டது .. இடம் வாங்குவது முதல் கட்டிடம் கட்டும் டெண்டர் வரை பல ஊழல்கள் நடந்தேறி ஒரு வழியாக அரைகுறையாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது குழந்தை ராமரை நரேந்திர மோடி கையைப் பிடித்து கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல பல கட்டவுட்டுகள் மீம்கள் தெறிக்க விடப்பட்டது.. 500 வருட ஏக்கம் தீர்ந்து விட்டதாகவும் ராமருக்கே கோயில் கட்டிய மகான் மோடி என்றும் புகழாரம் சூட்டப்பட்டு கடவுள் ராமரை விட மோடியை பிரம்மாண்டமாக சித்தரித்தார்கள் சங்கிகள்..
ஆனால் ராமர் கோயில் கட்டும் பொழுது அதைச் சுற்றி இருந்த சுமார் 800 வீடுகள் 2000 கடைகள் பல கோயில்கள் மசூதிகள் இடிக்கப்பட்டு பல பேர் வாழ்வாதாரம், இருப்பிடம் என மொத்த வாழ்க்கையும் இழந்தவர்கள் ஏராளமானோர்.. இவர்கள் அனைவரும் இந்துக்கள்தான்..வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா வாசிகளுக்கும் மிகப் பிரம்மாண்டமான வசதிகள் செய்யப்பட்டது.. ஆனால் காலம் காலமாக அங்கு வாழ்ந்த பல இந்துக்களின் வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டது ..
அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் தன்னுடைய மத வெறிக்காகவும் பல அப்பாவி இந்துக்களின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டது .. கடவுள் ராமர் என்று ஒருவர் இருந்திருந்தால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார்.. 
ஆனால் இது கடவுள் பக்திகாகவோ ராமரை பரப்புவதற்காகவோ அவர்கள் செய்யவில்லை. அந்தக் கடவுளுக்கே நான் தான் கோயிலை கட்டினேன் என்று நரேந்திர மோடியின் பிம்பத்தை ஊதி 2024 ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிறகு தங்கள் கொள்கையான ஒரே நாடு இந்து ராச்ட்ரா போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்தவே இவை அனைத்தும் செய்யப்பட்டது..

எந்த அடிப்படை அரசியல் புரிதலும் இல்லாமல் கல்வி வேலை வாய்ப்பு அவர்களுக்கான வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்துவிட்டு பிரம்மாண்டமான கோயிலை கட்டினேன் என்று சொல்லும் மூடர்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பது வேதனை.. 
சம்பந்தமில்லாமல் பக்தியின் பெயரால் மதத்தின் பெயரால் ஒரு மாபெரும் நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது என்றால் அதை கூர்ந்து ஆராய்ந்து அதற்கு பின் இருக்கும் மர்மமான அரசியலையும் அதிகார வெறியையும் ஆராய்ந்து மனிதநேயத்துடன் நியாயத்தின் பக்கம் நின்று போராடுவதே பகுத்தறிவு..
பாட புத்தகங்களை மட்டும் படித்த மேதாவிகளுக்கு அது புரியாது.
காரல் மார்க்ஸ் அம்பேத்கர் பெரியார் போன்றவர்களை படித்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்..

புரிந்தவர்கள் இதை நாலு பேருக்கு எடுத்து சொல்லுங்கள் புரியாதவர்கள் எப்பவும் போல என் மீது வன்மத்தை கக்கிவிட்டு செல்லுங்கள்..
நடுநிலை என்பதே பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பக்கம் நிற்பதுதான்..
அங்கு பாதிக்கப்பட்ட பல்லாயிரம் இந்துக்களுக்காக நான் நிற்கிறேன்..
அப்ப நீங்க ?
இப்படிக்கு உங்கள் பாபு சாந்தி🙏🙏

Sunday, April 21, 2024

காட்ட வித்து கள்ளு குடிச்சா கவுண்டனா?

கொங்கு பகுதியில் உள்ள கவுண்டர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்த காலம், பிறகு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக கட்சி ஆரம்பித்தபோது தீவிர திராவிட பற்றாளர்களாக மாறியவர்கள் சிலர், அந்த சமயத்தில் இலவச மின்சாரம், கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, என்று தன் ஜாதிக்கான அங்கீகாரத்தை பெற்று விவசாயம், தொழில், கல்வி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு விரைவாக முன்னேறினார்கள்..
பல லோ கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மிடில் கிளாஸ் மற்றும் ஹையர் கிளாஸாக உயர்ந்தது அந்த சமயத்தில்தான் .. பிறகு எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்தவுடன் பல பேர் பிரிந்து சென்று அதிமுகவில் இணைந்தார்கள்.. மீதமிருந்தோர் மதிமுக பிரிந்த போது மதிமுகவில் சேர்ந்தார்கள்... இது நான் விசாரித்து கேள்விப்பட்ட அரசியல்.. 1996 க்கு பிறகு நான் நேரடியாக அனுபவ பூர்வமான அரசியலை சொல்கிறேன் கேளுங்கள்..
மதிமுக செல்ஃப் எடுக்காது என்று தெரிந்தவுடன் மதிமுகவில் இருந்த என் தூரத்து உறவினர்கள் சிலர் தீவிர மதிமுகவிலிருந்து வேறு பல கட்சிகளுக்கும் தாவினார்கள்.. அதில் சிலர் திமுகவிற்கும் வந்தார்கள்..
பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக அறிவித்தபோது அவர்களே அதற்கும் சென்றார்கள்.. தேமுதிக ஆரம்பித்து சில நாட்களிலேயே கொங்குநாடு முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது ..நம்ம சமூகத்திற்கு இன்று ஒரு கட்சி வந்துவிட்டது ஆகவே அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்று பல பேர் பல கட்சிகளில் இருந்து விலகி  கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்..
கருமத்தப்பட்டியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது .. பிறகு பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், நாகராஜ்  தனித்தனியாக பிரிந்தது கட்சில் பிளவை ஏற்படுத்தியது..  நாட்கள் கடந்தன. ஜெயலலிதா மறைந்தார். அதிமுக எடப்பாடியின் கையில் வந்தவுடன் நம்ம ஜாதியில் ஒரு முதல்வர், அவரையே ஆதரிப்போம் என்று  அதிமுகவை ஆதரிக்க துவங்கினார்கள். சில தீவிர ஜாதி வெறியர்கள் எடப்பாடியை கடுமையாக எதிர்த்தார்கள்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் விந்தையானது.. கள்ளச்சி கால்ல விழுந்தவனெல்லாம் கவுண்டனே இல்ல என்றார்கள்..
(இந்த இடம்தான் மனச தேத்திக்க வேண்டிய இடம் சிரிக்காம படிக்கவும்)

தற்போது அந்த இரு பிரிவுகளிலும் இருந்து ஒரு குரூப் நம்ம ஜாதியில் ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைத்துவிட்டார். ஆதலால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
இவர்களில் ஈமு கோழி, ஃபைன் பியூச்சர், மை வி3 என எளிதாக பணம் சம்பாதிக்க நினைத்து பணத்தை இழந்தவர்கள் .. கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்துவிட்டால் பேராசையும், சுயநலமும் கூடவே வந்துவிடும் போல் தோன்றுகிறது.. பொருளாதாரம் உயர அறிவும் கல்வியும் உயர வேண்டும் ..
எனக்கு தெரிந்த வகையில் வெகு சில கவுண்டர்கள் மட்டுமே தீவிர கொள்கை பற்றாளராக நீண்ட நெடுங்காலமாக திமுகவில்  இருக்கிறார்கள்..

நான் இங்கே குறிப்பிட்டது பொதுவாக அனைவரையும் அல்ல, பெரும்பாலானவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெரிய அரசியல் ஆர்வம் இல்லாமல் காத்தடிக்கும் பக்கம்  சாயும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்..  தற்போது  பொள்ளாச்சியிலிருந்து ஒரு  இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பெண் பேசிய ஆடியோ வைரலானது..
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சமூகம் தன் அடுத்த தலைமுறையை  அன்னியனுக்கு அடமானம் வைத்து விடும் என்பதுதான் வரலாறு..
சரியான வரலாற்றை படியுங்கள் பகுத்தறிவோடு செயல்படுங்கள்.. நன்றி ..

Thursday, March 7, 2024

பார்ப்பனர் எதிர்ப்பு நியாயமா அநியாயமா ?

தொடர்ந்து பார்ப்பன சமூகத்தை பெரியார்வாதிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு பேசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன். 

முகநூலில் இருக்கும் பல பார்ப்பன இளைஞர்களுக்கும் அந்த உணர்வு இருக்கும் 

“ என்னடா இது எப்ப பாத்தாலும் எல்லாரும் பார்ப்பனர்களை குறை சொல்லிட்டே இருக்காங்களே” என்று தோன்றும். 

இப்பிரச்சனையை அவர்கள் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும். 

“பார்ப்பனர் உசத்தி” என்ற தியரியை குறைந்தது ஆயிரம் வருடங்களாவது அரசர்களின் உதவியோடு பார்ப்பனர்கள் செய்து வந்திருக்கிறார்கள். 

-பார்ப்பனர் உசத்தி
-பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை கூடாது.
-சிவனே ஆனாலும் பார்ப்பனன் தலையை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்து விடும்.

கொஞ்சம் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராண கதைகளை இக்கோணத்தில் வாசித்தால் இதை புரிந்து கொள்ளலாம். 

அதாவது 97 % மக்களுக்கு 3 % மக்கள் உசத்தி உசத்தி என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அவர்களை நம்பவும் வைத்திருக்கிறார்கள்.

என் வீட்டு ப்ரிட்ஜை சரி செய்ய ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டாம் சேல்ஸுக்கு ப்ரிட்ஜுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

சும்மானாலும் அது பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரர் “ இத வாங்கிக்கோ சார். இதுக்கு முன்னாடி ஐயர் யூஸ் பண்ணின ப்ரிட்ஜ். நல்லா இருக்கும்” என்றார். 

ஒரு குளிர்பெட்டியை ஐயர் உபயோகித்தால் அது எப்படி மதிப்புள்ளதாக மாறும் என்று புரியவே இல்லை.

மக்கள் மத்தியில் இன்னமும் பார்ப்பனர் என்றால் உசத்தி என்ற எண்ணம் இருக்கிறதுதான். 

இது ஒரே நாளில் வந்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. 

என்ன திட்டத்தின் மூலம் பார்ப்பனர் உசத்தி என்பது மக்கள் மத்தியில் ஏற்றப்பட்டது? 

உலகில் ஐம்புலன்களை பெற்று மனிதனாக பிறந்து விட்டாலே அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். 

பிரச்சனையை தீர்க்க பெரும் சக்தி ஒன்றிடம் பிரார்த்தனை செய்வது மனித இயல்பு. அப்படித்தான் கடவுள் உருவாகிறார். 

பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

அல்லது ஏற்கனவே மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளை அவர்கள் வழிபாட்டு முறைகளோடு இணைக்கிறார்கள். 

“நிமித்தம்” சொல்வதன் மூலம் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

கடவுளுக்கு அடுத்தது பார்ப்பனன்தான் என்ற தியரியை மக்களுக்குள் எளிதாக் மதத்தின் மூலமாக திணிக்கிறார்கள். 

இதனால்தான் பார்ப்பனர்கள் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” என்பதை ஒத்துக் கொள்வதில்லை. 

கடவுளுக்கு அடுத்து கோவிலில் அங்கே ஒரு பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

அங்கே ஒரு பறையரும், அருந்ததியரும், தேவரும், நாடாரும், வன்னியரும் நின்று பூஜை செய்து கொண்டிருந்தால் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பம் மக்களிடையே மறைந்து விடும்.

ஸோ இப்படி இந்து மதத்துக்குள் பின்னி பிணைந்து பார்ப்பனர்கள் அவர்கள் பற்றிய இமேஜை மக்களிடையே உயர்த்திக் கொள்ளும் போதுதான் பெரியார் எதிர்க்கிறார். அம்பேத்கர் அதை எதிர்க்கிறார்.
 
பாமர மக்கள் “எப்படி ஒரு பார்ப்பனர் உசத்தி” என்று கேட்கும் போதெல்லாம் கடவுளை கைக்காட்டி “கடவுள் சொன்னாராக்கும். கடவுள் எழுதி வைச்சிருக்கிறார்” என்றெல்லாம் பார்ப்பனர்கள் பதில் சொல்லி நம்ப வைத்தனர். 

அதனால்தான் பெரியார் பார்ப்பனர்கள் கைகாட்டும் கடவுளையே எதிர்க்க ஆரம்பித்தார். 

இப்படி யோசித்து பாருங்கள். 

உங்கள் வகுப்பு லீடர் ஆசிரியர் இல்லாத நேரம் ஆசிரியர் சொன்னதாக பெரும் அதிகாரம் செய்கிறான். 

மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான். எதிர்த்து கேட்டால் “ டீச்சர்தான் எனக்கு பவர் கொடுத்தாங்க” என்று சொல்கிறான். 

குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டும் போது “என்னடா உங்க டீச்சர். நா அவுங்க கிட்டையே கேப்பேன். டீச்சர காட்டி எங்கள அதிகாரம் செய்றியா? என்று ஸ்டாப் ரூமை நோக்கி செல்வோமா இல்லையா? “ 

அதைத்தான் பெரியாரும் செய்தார். 

கடவுள் ஒரு பெரும் சக்தி என்று நான் நம்புகிறேன் என்ற லாஜிக்கை பெரியார் எதிர்க்கவில்லை. 

சரி அது உன் நம்பிக்கை இருந்துவிட்டு போ என்றுதான் சொல்கிறார். 

ஆனால் கடவுள் பெரும் சக்தி, அவரின் ஒரே பிரதிநிதி பார்ப்பனர்கள்தான் என்று அதற்கு ஒரு லாஜிக் புராண கதைகளை இட்டு கட்டும் போதுதான் பெரியார் அதே லாஜிக்கை வைத்து அந்த புராண கதைகளை ஆராய்ந்து உண்மையை மக்களிடதில் அம்பலப்படுத்துகிறார். 

மதன காமராஜன் கதை என்றொரு கதை கொத்து உண்டு. 

அதில் ஒரு பார்ப்பன இளைஞன் உலக அனுபவம் வேண்டி தேசம் விட்டு தேசம் செல்கிறான். 

காட்டை கடக்கும் போது வேடன் ஒருவன் எதிர்படுகிறான் 

“ ஐயா நீங்கள் இந்த இரவை காட்டின் இருட்டில் கடந்தால் மிருகங்கள் தாக்கி இறந்து போவீர்கள். ஆகையால் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று அழைக்கிறான். 

பார்ப்பனனும் செல்கிறான். அங்கே சிறிய பரண் ஒன்று இருக்கிறது. 

கீழே தூங்கினால் புலி தின்றுவிடும் என்று பரண் அமைத்து அங்கே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். 

வேடனின் மனைவி அப்பரணில் பார்ப்பனனும் தூங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். 

அது இருவர் தூங்கும் பரண் எப்படி மூவர் தூங்க முடியும் என்று சொல்கிறாள். 

ஆனால் வேடனோ “பாவம் இந்த பார்ப்பனன் அஞ்சி நடுங்கி போய் இருக்கிறான். இவனுக்கு நாம்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று மூன்று பேரும் சமாளித்து பரணில் படுக்கிறார்கள். 

வேடன் இடது ஒரம் , மனைவி வலது ஒரம் , பார்ப்பனன் மத்தியில் என்று படுத்து தூங்குகிறார்கள். 

இரவில் அசைந்து தூங்கும் போது வேடன் பரணில் இருந்து விழுந்து விடுகிறான். 

அவனை புலி தின்று விடுகிறது. 

மறுநாள் காலை பார்ப்பனன் வருத்தம் தெரிவித்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடுகிறான். 

ஒருவருடம் கழித்து அந்த நாட்டின் மன்னனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பார்ப்பனன் தியானம் செய்கிறான். 

அந்த தியானத்தின் போதுதான் தனக்கு பரணில் இடம் கொடுத்து உயிர் நீத்த வேடனே அப்புண்ணியத்தால் இளவரசனாக பிறந்ததாக கண்டுகொள்கிறான். 

சரி அந்த வேடனின் மனைவி என்னவானாள் என்று தியானம் செய்கிறான். அவளும் அந்த பிராமணன் சென்ற ஒரிரு நாளில் விஷமுள் குத்தி இறந்து விடுகிறாள். 

இப்போது அவள் எங்கே பிறந்திருக்கிறாள் என்று பார்த்தால் அவள் ஒரு சேரியில் பன்றிகுட்டைக்கு அருகே இருக்கும் வீட்டில் பிறந்திருக்கிறாளாம். 

கதையை கவனியுங்கள் 

- பார்ப்பனருக்கு உதவி செய்தால் அவர் மறுபிறவியில் இளவரசனாம்.

- பார்ப்பனருக்கு உதவி செய்ய மறுத்தால் அவர் பன்றிகுட்டை சேரியில் பிறப்பாராம்.

இது போன்ற ஏராளமான பார்ப்பன சாதி போற்றும் கதைகளை நம்மிடையே அனைத்து பழங்கதைகளும் திணித்திருக்கும். இப்படி திணித்து திணித்துதான் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

சமதர்ம சமூகத்தில் இந்த போலி பிம்பம் உடையத்தானே வேண்டும். 

அது தேவையில்லாத பிம்பம்தானே. 

அது சமத்துவத்துக்கு எதிரான பிம்பம்தானே. அந்த பிம்ப உடைப்பை ஒவ்வொருவரும் செய்யும் போதுதான் அது பார்ப்பனர்கள் மனதை புண்படுத்தி விடுகிறது. 

அந்த பிம்ப உடைப்பின் அவசியத்தை ஒரு சமூகநீதி ஆர்வலராக நீங்கள் புரிந்து கொள்ளும் போது நீங்களும் பெரியார்வாதிகளுடன் சேர்ந்து அப்பிம்பத்தை உடைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

எந்தவிதமான உண்மையும் இல்லாமல் வெறுமே இட்டுக்கட்டல் மூலம் பிம்பம் நமக்கெதுக்கு என்று அதற்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவீர்கள்.

- Vijay Bhaskarvijay பதிவு

Saturday, January 20, 2024

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..


நிஷா, ஜல், தானே, வர்தா, ஒக்கி, நிவர் வரிசையில் நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

என் முன்னோர்கள் வந்தார்கள் சென்றார்கள், நானும் அப்படியே செய்ய நினைத்தேன்..
ஆனால் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி இருந்தது..
நான் கடந்து சென்ற கதையை சொல்கிறேன் கேளுங்கள்..
நான் குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகி 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.. ஏனென்றால் என் முன்னோர்கள் வந்த பொழுதெல்லாம் 10 முதல் 20 சென்டி மீட்டர் மழையை கொட்டிச் சென்றாலே சென்னை மிதக்கும்..

எப்பவும் போல இல்லாமல் இந்த முறை நான் உருவாகும் பொழுதே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.. எனக்கு கோபம்.. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று தல தோனியை போல் அடி பட்டையை கிளப்ப பூஸ்ட் குடித்துவிட்டு என் வலிமையை கூட்டி தயாரானேன்.. 
அதில் 20 சென்டிமீட்டர் பொழிந்தாலும் எதுவும் ஆகாது என்று மக்களுக்கு நம்பிக்கை விதைத்தார் மாசற்ற மனிதர் ஒருவர்.. 
இப்படித்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கோம் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று டி நகரில் நின்று எகத்தாளம் பேசினார் மண்டியிட்ட மனிதர் ஒருவர்.. ஆட்சி மாறியது காட்சியும் மாறியது 2021ல் என் தங்கச்சி பருவமழைக்கே பல்லை இளித்தது டி நகர்..

என் பலத்தை ஏற்றி கொண்டு நகரத் துவங்கினேன், 10 சென்டிமீட்டர் 20 சென்டிமீட்டர் என்று மழை பொழிவை கூட்டினேன்.. என்ன ஆச்சரியம், கொட்டியவுடன் ஆங்காங்கே காணாமல் போகிறது தண்ணீர்.. எனக்கு கோபம் தலைக்கேறியது உடனே பிரேக் போட்டு கீர் டவுன் செய்து 10 கிலோமீட்டர் என்று வேகத்தை குறைத்து அண்ட சராசரங்களும் நடுங்கும் அளவிற்கு அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை என்பதை போல் நின்று நிதானமாக இரவு பகலாக என் வேலையை காட்டினேன்.. 

அப்படி இருந்தும் என்னால் புறநகர் சென்னையான வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற சில இடங்களை தவிர எங்குமே தண்ணீரை நிரப்ப முடியவில்லை.. விசாரித்த போதுதான் தெரிந்தது, சரியாக திட்டமிட்டு ஏரிகளில் தண்ணீரை குறைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று.. 

உடனே 4 ஆயிரம் கோடி எங்கே என்று கொக்கரித்தது சில கூட்டம்... அடேய் அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சென்னையை அழித்திருப்பேன்..
அப்படி இருந்தும் பள்ளிக்கரணை ஏரி கரைகள் உயர்த்தப்படாதது குற்றம் தானே?
குற்றம்தான் யார் செய்த குற்றம்?
கரையோரத்தில் இருக்கும் கோயில்களை கட்டியவர் குற்றமா? கோயிலை இடித்தால் இந்து மதத்திற்கு எதிரி என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் குற்றமா ?அல்லது பழிச்சொல் வந்தால் பரவாயில்லை என்று அந்தக் கோயிலை இடித்து கரையை பலப்படுத்தி உயர்த்தாமல் இருந்தவர்களின் குற்றமா?
எது எப்படியோ என் ஆசை கொஞ்சம் நிறைவேறியது..
ஊரே தத்தளிக்க முன்னெச்சரிக்கை இல்லாமல் மதியற்ற ஒருவர் மாண்புமிகுவின் மனைவிக்கு அலைபேசியில் உதவி கேட்டு அழைத்த சர்ச்சைகள் ஆங்காங்கே.. எப்பவும் போல நான்கு பேர் வீடியோ எடுக்க மூட்டை தூக்கும் முட்டாள் கூட்டம் ஒரு பக்கம்..  
வாம்மா மின்னல் போல திடீரென்று வந்து நொட்டை சொல்லும் மண்டியிட்ட மாமனிதர் ஒரு பக்கம். 
இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த உணவை எடுத்து நாடகம் போடும் நாடக கம்பெனி ஒரு பக்கம்...
வாயில் மட்டுமே வடை சுடும் ராஜ் பவன் ராங்கி எங்கு சென்றார் என்ற கேள்விகள் ஒரு பக்கம்...
இருந்தாலும் என் முன்னோர்கள் வந்து சென்றதற்கும் இதற்கும் பல வேறுபாடுகளை காண முடிகிறது.. பவர் இல்லாமல் வந்து பத்து நாள் முடக்கி போட்டு பல பேரை பலி வாங்கிய என் முன்னோர்களை காட்டிலும் பத்து மடங்கு பவரோட வந்த என்னால் அதில் பாதி சேதாரம் கூட செய்ய முடியவில்லை.. திட்டமிட்டு பவர் கட் செய்து ஆங்காங்கே மக்களை பாதுகாத்து என் பவரை குறைத்துவிட்டது இந்த அரசாங்கம்..
அப்படி இருந்தும் நடுநிலை அமுக்கிகள் (translate in English) என்று சொல்லிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் சொல்வதைப்போல ஒரு பக்கம் தானே காட்டுனீங்க என்பதைப் போல் அவதூறுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன சில அமுக்கிகள்..
பாதம் தாங்கிகள், ஆட்டுக் கூட்டங்கள் எல்லாம் ஆங்காங்கே குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போது பறந்து வந்த ஒன்றிய ஆய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஈஸியாக திரும்பிவிட்டது என்று நற்சான்றிதழ் கொடுத்து கொக்கரித்த கூட்டங்களின் வாயில் வாழைப்பழம் வைத்தது.. 
இதிலும் ஒரு சூட்சமம் இருக்கலாம்.. ஜாக்கிரதையாக இருங்கள் ஒன்றிய நிவாரண தொகையை குறைத்துக் கொடுக்க பாராட்டு பத்திரம் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது..
எது எப்படியோ மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என் வலிமை என்னவென்று.. என்னை சமாளித்த அரசுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
என்னால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.. 
எங்கள் குடும்பத்திலிருந்து இனிய எவராவது வருவாராயின் பல மடங்கு பலத்துடன் வருவோம்..
அரசாங்கம் மட்டுமல்ல மக்களாகிய நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்..
அரசாங்கம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாட்டர் பீட் போடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமேசானில் நான்கு பேர் செல்லும் படகு எட்டாயிரம் ரூபாய்தான் வரும் வீதிக்கு ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் சந்திப்போம்.. நன்றி

இப்படிக்கு உங்கள் அன்பு மிக்ஜாம் புயல்..