தொகுப்புகள்

Search This Blog

Monday, November 6, 2023

பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா

நான் கண்டதும் கொண்டதும் 
அந்த ஒரே தலைவரைத்தான்.

இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார், 
நான் அவருடன் இணைந்த போது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்கு முன் முப்பது ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கின்றார்.

இந்த " ஆண்டுகள் " தமிழரின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகள்.

" திடுக்கிட வைக்கிறாரே! 
திகைப்பாக இருக்கின்றதே! 
எரிச்சல் ஏற்படுத்துகின்றாரே
ஏதேதோ சொல்லுகிறாரே! 

இவரை விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! 
நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று பலர் ப
ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர்.

ஆனாலும் மூலையில் நின்றாகிலும்,மறைந்து இருந்தாகிலும் அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அந்தப் பேச்சு ஐம்பது ஆண்டுகளுக்கப் மேலாக நடந்தபடி இருந்தது. 

எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள், தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்.

கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; 
அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; 

அவருடைய பேச்சோ தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது.

மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு காடுகளை கழனி வளம் பெறச் செய்து கொண்டு 
ஓசை நயத்துடன்,ஒய்யார நடையுடன்! 

அங்கே பேசுகிறார், 
இங்கே பேசுகிறார், 
அதைக் குறித்துப் பேசுகிறார், 
இதைக் குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது.

மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் - எது நேரிடினும் - 
என்ற உரிமைப் போர், 
அவருடைய வாழ்வு முழுவதும். 

அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. 
அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. 

இன்று அனைவரும் பெற்றுள்ளனர் 

இன்று தமிழகத்தில் தூய்மையுடன், மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்து உரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அறிவுப்புரட்சியின் முதற்கட்ட வெற்றி இது! 
இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! 

இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது வியர்த்துப் போகின்றனர். 

அப்படியா! முடிகிறதா!நடக்கிறதா!விட்டு வைத்து இருக்கின்றார்களா? என்று கேட்கின்றார்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர் காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகரங்களில்
 என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்த போது 
ஒவ்வொரு ஊரிலேயும் இதுபோலத்தான் கேட்டனர். 

யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!

அந்தப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய பெரிய ஏடுகளை, எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை, 
கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபங்களில் போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! 

இங்கு?

இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? 
அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? 
எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

ஏ! அப்பா ! 
ஒரே ஒருவர் 
அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்து வீசுகிறாரே என்று 

இந்த நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டு இருந்த பழமை அலறலாயிற்று! 

புதுப்பதுப் பொருள் கொடுத்தும்,
பூச்சு மெருகு கொடுத்தும் 
இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும்,

விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது என்பதனை அறியாதார் இல்லை!

எனவேதான் 
பெரியாருடைய பெரும் பணியை ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல,
ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று நான் கூறுவது வாடிக்கை. "

- பேரறிஞர் அண்ணா -