இந்து மதம் எங்கே போகிறது?
“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்துமதம் இந்திய மதமா? தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
 இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.
இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?
இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
27.8.2010 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. மராட்டியம், அய்தராபாத் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பேசும்போது, நாட்டில் சமீபகாலமாக நடக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் புதுவகையான காவிதீவிரவாதம் சம்பந்தப்பட்டுள்ளது. என்று உண்மையைப் பேசி இருக்கின்றார்.
உடனே சிவசேனா கட்சி எம்.பிக்கள் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.
அது என்ன என்றால் இந்துக்களின் நாட்டில் ஓர் இந்து எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்.
இதைப் போலவே காஷ்மீர் பிரச்சினை விவாதம் வரும்போது, முரளி மனோகர் ஜோஷி சிதம்பரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவரும் ஒரு கேள்வி கேட்டு இருக்கின்றார்.
அது என்ன என்றால்,காவி என்பது அமைதியின் சின்னம். அதைத் தீவிரவாதத்துடன் ஒப்பிட முடியாது. இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அதற்கேற்ற எதிர்விளைவுகள் ஏற்படும். பிறகு ஏன் அப்படிக் கூறவேண்டும்?என்று மிரட்டும் தொனியில் கேட்டு இருக்கின்றார்.
இதற்கு மேலும் அவர்களை வளரவிட்டால் நாடு என்ன கெதிக்கு ஆளாகும் என்று, நாட்டின் வளர்ச்சியின் மேல் அக்கறை உள்ளவர்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்.
இந்த போலி மதவாதிகளின் பொய்த்திரையை கிழிக்கும் காலம் வந்துவிட்டது. பல்வேறு மதத்தை, மொழியை, இனத்தை, கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்களைக் கொண்டு பரந்து விரிந்து கிடக்கும் இந்திய நாட்டை, ஆரிய சாங்பரிவார் கும்பல் எதற்கு எடுத்தாலும் இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே,
இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?
முதலில் இந்து என்ற மதம் உண்டா?
இந்தக் கேள்விக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் 125,126 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கின்றார் என்றால்,
இந்து என்பது நமது பூர்வீகப் பெயரல்ல. வைதீக மதம், சனாதன மதம், என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவுமில்லை.
நமது ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை.
இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சங்கராச்சாரியே சொல்லிவிட்டார்.
சங்கராச்சாரியைப் போலவே இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மைக்கேல் X எதிர் வெங்கடேஸ்வரன் (65 லிகீ 108) என்ற வழக்கில் நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றார்.
அந்தத் தீர்ப்பில், இந்து மதம் என்று (நான்) குறிப்பிடும்போது அச்சொல்லின் பொருள் தெளிவற்ற ஒன்றாக இருப்பதை உண்மையில் உணர்ந்தே இருக்கின்றேன்.
நாம் புரிந்துகொண்டுள்ள பொருளில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது (அச் சொல்) இந்தியாவில் தோன்றியதுமன்று.
இந்துக்கள் தங்கள் மதத்திற்கு அப்பெயரை எப்பொழுதும் பயன்படுத்தியதுமில்லை. ஆனால் அச்சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது.
மதம் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் குறிப்பிட அச்சொல் வசதியின் காரணமாகப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்புச் சொல்லிவிட்டது இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று.
இந்தத் தகவலை புத்தர் ஓர் இந்துவா? என்ற புத்தகத்தில் டாக்டர் சுரேந்திர அஜ்நாத் என்பவர் மேற்கோளுக்காக கையாண்டுள்ளார்.
அதே புத்தகத்தில் பக்கம் 11 இல் இந்து என்ற சொல்லுக்கான பொருளையும், இந்துத்வாவாதிகள் அதைப் பயன்படுத்திய விதத்தையும் விவரித்துள்ளார்.
இந்து என்றால் திருடன் என்று சொன்னால்; நாக்கை அறுப்பேன் மூக்கை அறுப்பேன் என்று சொல்லும் வேதாந்திகள் முக்கியமாக இதைக் கவனிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சங்கதி இதுதான்.
இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
19ஆம் நூற்றாண்டின் இந்துத் தலைவர்கள், குறிப்பாக ஆரிய சமாஜத்தினர் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை.
இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் கூட, போரில் வென்றவன் தோற்றவரை இழித்துப் பழிப்பது போல் அமைந்துள்ளதாகக் கருதியதால், பயன்பாட்டில் இச்சொல் அவர்களால் தவிர்க்கப்பட்டது.
அதற்குப் பதிலாக ஆரியர் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினர். ஹிந்தி என்ற சொல்லையே கூட அவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர்.
ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த் ஹிந்தி என்பதற்குப் பதிலாக ஆரிய மொழி என்ற சொல்லையே பயன்படுத்தினார்.
ஆனால் இன்று கண்மூடித்தனமான இந்து மயமாக்கல் நடைபெற்று வருவதால் இச்சொல்லைப் பயன்படுத்த எவரொருவரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. என்கிறார் சுரேந்திர அஜ்நாத்.
பாருங்கள் இந்து என்ற சொல்லின் பொருள் அசிங்கமாக இருப்பதால் அந்தச் சொல்லையே பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கின்றார்கள்.
நியாயப்படி இந்து என்ற சொல் திருடர்களையும், வழிப்பறி செய்பவர்களையும் குறிக்கின்ற சொல்.
ஆனால் சட்டப்படி அந்தச் சொல் யாரை யாரை எல்லாம் குறிக்கின்றது?
இந்திய அரசியல் சட்டம் 25 ஆவது விதி 2 ஆவது பிரிவு, விளக்கம் 2 இல் இந்து என்ற சொல் எவற்றைக் குறிப்பதாக சொல்லப்பட்டிருப்பதாவது;
விளக்கம் 2. (2) ஆவது கூறின் (6) கிளைக்கூறின் படி உள்ள இந்து என்ற சொல், சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் குறிப்பதோடு இந்துக் கோயில், மதச்சார்பற்ற இடங்கள் என்பதும், அத்தகைய சீக்கிய, ஜைன, புத்த சமயக் கோயில்களையும் மற்ற மதச்சார்பற்ற இடங்களையும் குறிப்பதாகும்
இந்த சட்ட விளக்கத்தில் இந்து என்ற சொல் சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் என்று வரும் வரிகளைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நல்லவேளை இந்த மூன்று மதங்களையும் உருவாக்கியவர்கள் முன்னமே செத்துப்போய்விட்டார்கள்.
இந்து மதம் என்றால் இதுதான் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட தெளிவாக இல்லை.
இருக்கும் விளக்கத்தில்கூட சீக்கிய, ஜைன, மற்ற மதங்கள் எல்லாம் அரசமைப்புச் சட்டம் எழுதுவதற்கு முன்பு இருந்ததைப்போல தனித் தனியே பிரிந்து விட்டால், இந்து மதத்தில் என்ன இருக்கும்?
வெறும் சைபர்தானே இருக்கும்?
இந்த இலட்சணத்தில் இந்து நாடு, இந்து நாடு என்கிறார்களே காவிகள். இந்த மதமே இல்லை பிறகு எங்கே இந்து நாடு?
இதை எல்லாம் கொஞ்சம் ஆழமாக யோசிக்கும் போது ஓர் அய்யம் இயல்பாகவே எழுகிறது. அந்த அய்யம் என்ன என்றால், இந்து மதம் இந்தியாவில் பெரும்பான்மை மதமா? சிறுபான்மை மதமா? என்பதுதான்.
இந்த அய்யம் எழக்காரணமும் உள்ளது. இந்து என்ற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல, இந்து என்று ஒரு தனி மதம் இல்லவே இல்லை.
அப்படி இவர்கள் கூறும் மதக் கூட்டணியும் ஒன்றுக் கொன்று முரண்பாடானது. இவையும் போக அய்யத்திற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது.
அது என்ன என்றால், இந்து மதத்தின் முதன்மையாமான அம்சம் ஜாதி முறை. நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன் ஆனால் அவற்றை நான் நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று கீதையில் கண்ணன் சொல்கிறான.
இந்த நான்கு வருணங்களில் அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்களில் உயர்வானவன் பிராமணன்.
மற்ற மூன்று வருணத்தாரும் அவனுக்குக் கீழானவர்கள். அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்கள் என்கிறது இந்து மதம், இதுதான் கீதை, இதுதான் மனுதர்ம சட்டம்.
இதுவரை இந்து மதத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு கீதையும் மனுதர்ம சட்டமும் பிராமணர்களின் உயர்வுக்காகவே படைக்கப்பட்டவை; இந்து மதம் என்று சொல்லப்பட்டது கூட பிராமணர்களால் படைக்கப்பட்டது என்பதாகும்.
இந்திய வரலாற்றுப்படி இந்து மதத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் பிராமணர்கள் யார் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். எல்லா வரலாற்று ஆசிரியர்களும் இக்கூற்றை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
ஆக, நமக்கு அய்யம் வரக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் பிறக்காத, இந்திய நாடும் அல்லாத, நாடோடிகளாய் இந்தியாவிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த பிராமணர்கள், இந்தியாவில் உள்ள மதத்தில் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?
இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மக்களை இழிவுபடுத்தி இந்தியர் அல்லாதவர்களை உயர்வு படுத்தும் ஒரு மதம் எப்படி இந்திய மதமாக இருக்க முடியும்?
அன்னியர்களுடைய மதம் இந்தியாவில் எப்படி பெரும்பான்மை மதமாக இருக்க முடியும்?
இவற்றுக்கெல்லாம் சங்பரிவார்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?
இந்துத் தீவிரவாதம் என்று சிதம்பரம் சொல்லி விட்டாராம் அதற்காக குதிக்கிறார்கள். நாம் ஒன்று கேட்கலாம்_முஸ்லிம் காரன் மதானி குண்டு வைத்தால் அது முஸ்லீம் தீவிர வாதம், சரி, பிரக்யாசிங் குண்டு வைத்தால் அது எந்தத் தீவிரவாதம். தயவு செய்து சொல்லுங்கள்.
காவி புனிதமானதாம்! யாருக்கு புனிதமானது?
கோவிலுக்குள்ளேயே சங்கரராமனை கொலை செய்த சங்கராச்சாரி உட்பட கொலைகாரர்களுக்கும் நடிகை ஒருவரோடு உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டதால் நாட்டு மக்களால் செருப்படிபட்ட நித்தியானந்தாக்களைப் போன்ற காமவெறியர்களுக்கும் தான் காவி புனிதமானது.
எதற்கு எடுத்தாலும் இந்துநாடு, இந்து நாடு என்கிறீர்களே இந்திய மக்களாகிய எங்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தால் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் பகவத் கீதையில், அத்யாயம் 9, 32 ஆவது சுலோகமான,
பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சுயமாகப் பரகதியடைகின்றனர் என்று சொல்லப்பட்ட சுலோகத்திற்கு சுவாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கின்ற வியாக்கியானமாவது, மனபரிபாகத்திற்கு ஏற்றாற்போல் பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது.
ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர்.
பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம்.
ஆகப் பொதுவாக பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும் இழிச்சொல் அல்ல.
இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள்.
அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு.
ஜடப் பொருளை எண்ணுகின்றளவு ஜடப் புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது.
அத்தகைய பிரவிருத்தியை உடையவர்கள் எல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத் தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர்.
இவ்வுலகம் ஒன்றை மட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை என்று இருக்கின்றது.
உழைக்கும் மக்களாகிய, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய எங்களை, இழிந்த பிறவிகள் என்று சொல்லும் இந்து மதம் எங்கள் மதமா? இதற்குப் பெயர்தான் புனிதமான மதமா?
ஆனால் இந்து மதம் இந்தியாவின் மதம், அது புனிதமானது என்று காட்டுவதன் மூலமும், கிறித்துவ, முஸ்லிம் அல்லாத பிற எல்லா மதமும் இந்து மதம் என்று காட்டுவதன் மூலமும், அன்னியப் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்றும், அவர்களும் இந்தியர்கள் என்று காட்டும் மோசடிதானே இந்தத் தீவிர வாதம்?
இதைக் கண்டித்தது, இந்தப் போலி பொய்த்திரையைக் கிழித்து இவர்கள் யார் என்று இந்தியர்களுக்குத் தெரிவிப்பது தவறா?
இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! -
ஆக்கம்:- திருப்பூர் நா. சுதன்ராஜ். கட்டுரை "விடுதலை" 04-09-2010 நாளிதழில் பிரசுரமானது.