தொகுப்புகள்

Search This Blog

Monday, February 10, 2020

தமிழரின் மதம் என்ன?

தமிழரின் மதம் என்ன? 

தமிழர்தான் இந்து, இந்துதான் தமிழர் என்று சில பிதற்றல்கள் அதிகமாகிவரும் நிலையில் இந்த பதிவு அவசியமாகிறது.

தமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.

ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை அல்லது புரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள கடவுள் பாசம் அவர்களிற்கு இடங்கொடுப்பதில்லை. பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம் தான் தமிழர்களது மதம் என்று நம்புகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அரைகுறை புரிதல் உடையவர்கள் என்பதுதான் உண்மையாகும். கருத்தில் முரண்படுபவர்கள் ஆதாரபூர்வமாக விவாதிக்க வரலாம். 

உண்மையில் இந்து மதம்(வைதீகம்/சண்மதம்/சனாதனம்) என்பது தமிழர் மதம் இல்லை. இது ஆரிய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழர்களிடம் இடைகாலத்தில் திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எடுத்துக்கூறியும் புரியாதவர்கள் இந்து வழிபாட்டில் சமஸ்கிருதம் ஏன் என்பதற்கு விடையை கூறட்டும். 

சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சிவவழிபாடு ஏறத்தாழ கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் மதமாக உருவாக்கப்பட்டது. நாயன்மார்கள் சமய குரவர்கள் சைவ புராணங்கள் எல்லாம் தோன்றியது இந்த காலப்பகுதிகளில்தான். அதற்கு முன்பு இருந்தே ருத்ரன் என்று ஆரியர்கள் வழிபட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு மதமாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த காலப்பகுதியில்தான். கி.மு 7ம் நூற்றாண்டுகளிற்குபிறகு தென்னிந்தியா வந்த பார்ப்பனர்கள் கி.பி 4ம் நூற்றாண்டில் வடக்கில் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தும்வரை பெரிதாக தமிழகத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. குப்தர்கள் காலத்தில்தான் புராண இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் எழுத்துரு பெறுகின்றது.. அதன்பின்புதான் இந்துமதம் வேகமாக வளர்கின்றது.

தமிழரின் சங்க இலக்கியங்களில் (கி.மு 4ம் நூற்றாண்டிற்குமுன்) எங்கேயும் சிவனையோ மற்ற இந்து கடவுள்களையோ தமிழர் வழிபட்டதாக எந்த செய்தியும் இல்லை. வேண்டுமானால் இன்னொரு பெயரை இன்னொரு பெயரோடு தொடர்புபடுத்த வேண்டுமானால் செய்வார்கள். உதாரணமாக மாயோன்தான் கிருஷ்ணன் என்றும் சேயோன்தான் முருகன் என்பதுபோன்றும். இன்றைக்கு திருக்குறளில்கூட இந்துக்கடவுளரின் பெயர்களை முடிச்சுப்போட ஆரம்பித்துவிட்டார்கள்.

சங்க காலத்திற்கு பின்பு சங்கம் மருவிய காலம் கி.மு 100 - கி.பி 600 நூற்றாண்டளவில் ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்றவை தமிழகதில் செழிப்புடன் வளருகின்றது. இவையும் வடக்கில் இருந்துதான் வந்ததாக இருந்தாலும் இம்மதங்கள் தோன்ற மூலவேராக இருந்த மெய்யியல் கருத்துக்களில் பெரும்பாலும் தமிழர்களின் மெய்யியல் சிந்தனையே ஆகும். (ஆசீவகம் வடக்கில் இருந்துதான் வந்ததா அல்லது இங்கேயே உருவாகியதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. தெரிந்தவர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் உதவியாக இருக்கும்)
இருப்பினும் இம் மதங்கள் வலியுறுத்தும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் தமிழர்களிடம் திணிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்கள் ஏதாவது ஒரு வகையில் புலால் உண்ணுபவர்களே, தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்கும் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஏற்றவாறு மாமிசம் சாப்பிடும் பலி கொடுத்தும் வந்துள்ளனர் என்பதும் இலக்கிய நூல்களில் உள்ளது, இவை பாவத்திற்குறிய செயல்களாக கருதப்படவில்லை.

தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான தொல்காப்பியத்தில் நடுகல் வழிபாடு மற்றும் திணை நிலம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால நூலாகும். 

நடுகல் வழிபாடு என்பது முன்னோர்களின் (வீரமரணம் அல்லது முன்னோர்களில் சிறந்தவர்கள்) நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இவையே பின்நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியது.

மேலும் தொல்காப்பித்தில்..

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்று அக்கால தமிழர்கள் மதசார்பற்று இயற்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்று கூறுகிறது. இதைதவிர மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இதுவே பின்நாட்களில் ஆரிய புராண இதிகாசக்களில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற மூதாதையர்களை முருகன், விஷ்ணு, இந்திரன், வருண பகவான் என்பதுபோல் ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு மாற்றப்பட்டுள்ளது. ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போட்டு தமிழரை அழிக்க தமிழரின் கலாச்சாரத்தையே பயன்படுத்தும் ஆரிய முறை. இதுதான் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரிய முறை. சங்ககால தமிழ் மக்கள் வாழ்விற்கும் இன்றுள்ள இந்து கடவுள்களிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உள்ளது என்பவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து இந்த கடவுளர்களின் பெயரை ஒருமுறை காட்டிவிடவும். சேயோன்தான் ஸ்கந்தன் மாயோன்தான் விஷ்ணு எனும்வேலை வேண்டாம். 

இதுமட்டுமின்றி தொல்காப்பியத்தில் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் உள்ளது.
இவ்வாறு மெய்யியலை உணர்ந்து, இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் மெய்யியல் தேடலில் உருவானதே பல கண்டுபிடிப்புகளான மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல. ஆனால் இன்று ஆரிய மதம் எனும் வலையில் சிக்கி மெய்யியலை மறந்து சாதிகளாக பிரிந்துகிடக்கிறோம். சாதி வைத்திருந்தால்தான் அவன் தமிழன் என்பதுபோல் சில அரசியல் வியாதிகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக உருவாகியுள்ளார்கள். இது மீண்டும் ஆரிய மாயைக்குள் சிக்கும்செயல்.

மீண்டும் பழந்தமிழரின் மெய்யியல் வாழ்கையை பின்பற்றி வந்தால் அறிவையும், மனதையும், உடலையும் செழுமைபடுத்தி இவ்வையுலகம் வியக்கும் வகையில் சாதி மதம் கடவுள் அற்று வாழ்வோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதற்கு தமிழருக்கு தமிழர் என்றால் யார் அவன் உண்மையான அடையாளம் என்ன என்பது புரியவேண்டும். 

ஆரியர்கள் எவ்வாறு தமிழரை உள்வாங்கி செரித்துக்கொண்டார்கள் என்பதுபற்றிய விரிவான பதிவு ஏற்கனவே எமது குழுவில் இட்டுள்ளேன். அதையும் பாருங்கள்.

 நன்றி :- வேணுகோபால் சங்கர்

No comments:

Post a Comment