Friday, April 27, 2018

திமுக மீது தொடரும் வதந்தி

திமுக எம்.ஜி.ஆரினால் இரண்டாக உடைக்கப்பட்டதற்குப் பிறகு ஒரு பக்கம் பேச்சு, எழுத்து, நிர்வாகம் என அனைத்திலும் திறன்பெற்ற கலைஞர். இன்னொரு பக்கம் ஒரு இழவுக்கும் லாயக்கில்லாத மத்திய அரசின் அடிமை எம்.ஜி.ஆர். ஆனால் 1969-1976 வரையிலான கலைஞரின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களும், மிராசுதாரர்களும் கலைஞருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரை தூக்கிவைத்துக் கொண்டார்கள். இந்த ஆளை விட்டால் கலைஞரை கவிழ்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். காங்கிரசில் இருந்த மிராசுதாரர்கள் கூட எம்.ஜி.ஆர் பக்கம் தாவியதற்கு காரணமும் அதுதான். ஒருபக்கம் எம்.ஜி.ஆரை வள்ளல், தர்மப்பிரபு, ஏழைப்பங்காளன் என பரப்பினார்கள். மறுபுறம் கலைஞரை முறியடிக்க அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் அவரைப் பற்றிய பொய்யும், புரட்டும், வதந்தியும்.

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியின்போது ஒருநாள் கலைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என திடீரென ஒருநாள் பரப்பினார்கள். பள்ளியில் இருந்த எனக்கு அது இன்னமும் பச்சையாக நினைவிருக்கிறது. இதுபோல் ஏராளமான வதந்திகளைச் சொல்லமுடியும். கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது அவர் நிர்வாகத்தின் மீதும், ஆட்சியின் மீதும்கூட இப்படியான பொய்கள் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. சர்க்காரியாவில் தொடங்கி, அந்தப் பொய்களின் தொடர்ச்சி இன்று வாட்சப் காலத்தில் காவிரி விவகாரம் வரை தொடர்கிறது.

நேற்று ஒரு தோழி, "ஸ்டாலின் யாரையும் ரேப் பண்ணாரா முன்னாடி?" எனக் கேட்டார். "இல்லை. அது வதந்தி," எனக் கோபத்தோடு மறுத்தேன். இப்போது ஸ்டாலினையும் வதந்தி ஆயுதம் விட்டுவைக்கவில்லை.

போனவாரம் ஒரு நாம் தமிழர் ஜந்து ட்விட்டரில், "பாத்திமா பாபு... ஸ்டாலின்," என உளறினான். உடனே நான் நேரடியாக பாத்திமா பாபுவை டேக் செய்து, "மேடம் உங்கள் மீது அவதூறு சொல்லும் ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்," என எழுதியதும் வதந்தி பரப்பிய அந்தக் கிருமி ஓடிவிட்டது.

இதோ இன்று பாத்திமா பாபுவே பொறுக்கிகள் பலகாலமாக பரப்பிவரும் வதந்திக்கு, "முகநூல் லைவ் ஆடியோ," வில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு பின்னூட்டத்திலும் மறுப்பை தெரிவித்தோடு, “பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்படிப் பரப்புகிறார்கள்,” எனப் புலம்பியும் உள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், ஆட்சித்திறன் பற்றியும் சொல்ல ஆயிரம் உண்மைகள் இருந்தும் அது எதுவும் பேசப்படுவதே இல்லை. (யாராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுவதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன்) ஆனால் எதனால் இத்தனை ஆண்டுகாலமாக கலைஞர் மீதும், திமுக மீதும் வதந்திகளைப் பரப்புகிறார்கள்? அதை ஏன் பார்ப்பன ஊடகங்களும், சமூகநீதிக்கு எதிரான கயவர்களும் தொடர்ந்து சொல்லிச் சொல்லி உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்களின் ஒரே எதிரி திமுக. ’சோ’ சொல்லியதைப் போல தமிழின விரோதிகளின் பரம்பரை எதிரி திமுக மட்டும்தான்.

நான் இறுதியாகச் சொல்வது இதுதான். திமுக விமர்சிக்கப்படவே கூடாத கட்சி அல்ல. ஆனால் அதில் நேர்மையும், உண்மையும் வேண்டும். தயவுசெய்து பத்துபேர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு பொய்யை உண்மை என நம்பி பரப்பாதீர்கள்.
தமிழ்நாடு சீரழிந்தது சொல்லப்படாத உண்மைகளாலும், தொடர்ந்து சொல்லப்பட்ட பொய்களாலும் தான். நன்றி.

நன்றி -அசோக்.R (டான் அசோக்)
Don Ashok - Ashok.R

1 comment: