“நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.
ராஜீவ் கொலைக்கு முன்:
தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்
ஜூலை 1991:
ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.
செபடம்பர் 1991:
சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.
‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.
1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.
ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.
ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.
1992
தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.
‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.
1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.
தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.
1993
புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.
1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.
கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.
பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.
ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.
1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.
2002
புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.
ஜூலை 2002:
விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.
செப்டம்பர் 2002:
பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
செப்டம்பர் 2007
தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.
2008:
அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.
மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது பிரதமராக வேண்டும் என்கிறது, அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?
இறுதிக்கட்ட போரின் போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் ஏன் போர்நிறுத்த பெரிய முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் பலருடைய கேள்வி ?
இதோ விடைகள்
http://shanthibabu.blogspot.com/2012/04/blog-post_27.html