2011 மகளிர் தினம் 101 வது ஆண்டாகிறது , இதை உத்வேகப்படுத்தும் வகையிலும் பெண்கள் என்ற ரீதியிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றிய படி நகரும் உலகில் 101வது மகளிர் தினமும் தாண்டப்படுகிறது
ஆண்கள் பறவையை நேசிக்கின்றனர்
பறவைகள் கூட்டினுள் வாழ்கின்றன
காலம் காலமாய் அவர்கள் எமை
இப்படி ஆக்கினர்
இரண்டாம் தரத்தில் இருத்தினர்
இந்தக் கூட்டை நொருக்குவோம்
வாருங்கள் தோழியரே
பெண்விடுதலை ஏந்தி
இணைவோம்.
எழுந்து வாருங்கள்
அணிதிரளுங்கள்
(1972)
இந்தப் புகழ்மிக்கப் பாடல் 1972ம் ஆண்டு சிட்னி நகர வீதியை நிறைத்த பாடல். சுமார் 5000பெண்களின் அணிதிரளுக்குள் மூச்சாய் ஒலித்த பாடல் இன்னும் அந்தப் பாடலின் ஓசை பெண்விடுதலையை தழுவியபடி வாழ்ந்து ஒலிக்கத்தான் செய்கிறது.
மார்ச் 8.
உலகெங்கிலும் அடிமை விலங்கைச் சுமந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இத்தினம் அர்த்தம் கொண்ட தினமாகும். காலங்காலமாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் மார்ச் 8 இல் தங்களது குரலை ஓங்கச் செய்து தமது உரிமைகளை வலியுறுத்துகின்றனர். ஆணாதிக்க கருத்தியலை கேள்வி கேட்கின்றனர். வாழ்க்கைக்காய் போராடும் மனித இனத்தில் வாழ்க்கையோடு போராடும் பெண் இனத்திற்காய் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதியை உலகப் பெண்கள் தினமாக பெண்கள் அமைப்புக்கள் கொண்டாடி வருகின்றனர்.
1909 ஆண்டு அமெரிக்காவின் நியுயோர்க்கில் உள்ள நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த பெண்கள் தமக்கான உரிமைகளைக் கோரி வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தீ விபத்தில் பல நூற்றுக் கணக்கான பெண்கள் பலியாகினர்.
1910
1910 ஆண்டு 17 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சர்வதேச சோசலிச பெண்கள் மகாநாட்டை டென்மார்க்கில் உள்ள கொப்பன்காகன் நகரில் நடத்தினார்கள். அப்பொழுது சர்வதேச மகளிர் தினம் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜேர்மனியின் சோசலிச பெண்ணிலைவாதியான கிளாரா செக்கினால் முன் வைக்கப்பட்டது.
1911ம் ஆண்டு முதன்முதலாக ஜேர்மனி, சுவிற்சலாந்து, ஒஸ்றியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இணைந்து சர்வதேச மகளிர் தினமாக மார்ச்19 இனை கொண்டாடினர்.
1917ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ரஷ்யாவில் உள்ள சென் பீற்றர்ஸ்நகரில் நடாத்தப்பட்ட போராட்டத்தையடுத்து 1921ன் மார்ச் 8ம்திகதியே சர்வதேச பெண்கள் தினம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டது. ரஷ்யப் பெண்ணிலைவாதியான அலெக்சான்றிடா கொலன்ராயாவும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்று முதல் சர்வதேசப் பெண்கள் சம உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். அதாவது சமஉரிமை, வேலை நேரம், சம ஊதியம், வாக்குரிமை, தொழில் வாய்ப்பில் பாராபட்சமின்மை, பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு என்பவற்றை முன்வைத்து போராடினர். பெண்களை விபச்சாரங்களில் ஈடுபடுத்தல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படல் போன்ற பல விடயங்களை முன்வைத்து அவற்றிற்கெதிராக காலத்திற்குக் காலம் போராட்டங்களை நடத்தினர்.
1945 காலப்பகுதியில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் அரசியல் சமஉரிமை அங்கீகரிக்கப்பட்டாலும் சுவிற்சலாந்தில் உள்ள பெண்களுக்கு இவ்உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1959ம் ஆண்டு 1ம் திகதி பெப்ருவரி மாதம் சுவிஸில் பெண்களுக்கு வாக்குரிமை கோரிக்கையின் மீது நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 66.9வீதமான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என வாக்களித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக 1975இல் அயர்லாந்தில் சம்பள உயர்வுக்காக நடாத்திய வேலைநிறுத்தப் போராட்டமானது வெற்றியளித்தது. தொடர்ந்து 1981இல் தேர்தல் வாக்குரிமைக்காகச் செய்த போராட்டம் சட்டத்தையே மாற்றியமைக்கச் செய்தது. 1991 யூன் மாதத்தில் சுவிஸில் உள்ள பேர்ண் மாநகரத்தில் ~~பெண்விரும்பினால் எல்லாம் ஸ்தம்பிதம் அடையும்|| என்ற கோசத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கிட்டதட்ட 5லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். 15000க்கும் மேற்பட்ட பெண்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் அணிதிரண்டனர். பின்னர் முதலாவது சுவிற்சலாந்துப் பெண் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஜேர்மனியின் பல பெண்கள் அமைப்புகள் இவ் ஊர்வலத்திற்கு ஆதரவாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 80 ஆண்டுகாலமாக பெண்கள் போராடியதன் விளைவாக ஆண்கள் தமது கரங்களில் மட்டும் வைத்திருந்த வாக்களிக்கும் உரிமையை பெண்களும் பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தின் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் 1960ம் ஆண்டு கோப்பன்காகனில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. 73நாடுகளைச் சேர்ந்த 729 மாநாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். அரசியல் பொருளாதார சமூக உரிமைகளுக்கான பிரகடனங்களை இம்மாநாடு வலியுறுத்தியது.
1975ம் ஆண்டுதான் ஐ.நா இனால் உத்தியோகபூர்வமாக சர்வதேச பெண்கள் தினம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் முன்னரே கியூபா அரசினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதன் ஒருபகுதியாக 1975இல் கியூபா வீட்டுவேலைகளில் ஆண் பெண் இருபாலாருக்குமான பங்கேற்பு சம்பந்தமான திருமண சட்டவிதிகளையும் கொண்டு வந்தது.
இந்தப் போராட்டங்களின் இன்னொரு பக்கத்தை சார்ந்த பெண்கள் யுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். யுத்தப் பிரதேசங்களில் பெண்கள் மீதான் வன்முறைக்கும் மக்களுக்கான மருத்துவ வசதிகளுக்காகவும் குரல் கொடுத்தனர். 1943இலேயே ஜேர்மனியின் பாசிசத்திற்கு எதிராகவும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை காட்டினர்.
“ஆண்கள் போர் வீரர்கள், நாட்டின் சேவகர்கள்
பெண்கள் தாய்மார்கள், ஆண்களின் சேவகர்கள்”
என்ற கிட்லரின் ஆணாதிக்கக் குரலை நொருக்கி எறிந்தார்கள்.
பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தால் பல பெண் செயற்பாட்டாளர்கள் அன்றைய சோவியத் யூனியனின் சோசலிச சார்பானவர்கள் என்றுகூட அரசியல் சாயம் பூசப்பட்டனர்.
இவ்வாறு பெண்களின் உரிமைகளுக்காக இடைவிடாது போராடி, ஆண் அதிகாரத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து சர்வதேசப் பெண்கள் அமைப்பினர் அணிதிரல்கள் மூலம் உரிமைகள் பலவற்றை வென்றனர்.
இந்தப் போர்க்குணாம்சமான குரலானது,
- பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்தது, பல உரிமைகளை வென்றது.
- ஆண் அதிகாரங்களை கேள்வி கேட்டது, அதிகார உயர் நிறுவனமான பாராளுமன்றம் வரை பெண்களை பங்கேற்க வைத்தது.
- ஆண் உலக எழுத்துக்களை தாண்டி இன்றைய பெண்ணிய கோட்பாடுகள் வரை பெண் எழுத்து உலகை உருவாக்கும் முயற்சிகள் முன்னேறிவருகின்றன.
நாம் பறவையை நேசிக்கிறோம்
அதன் பறப்பில் சுதந்திரத்தைக் காண்கிறோம்,
கூட்டை நொருக்கி நாமும் பறப்போம் -அதில்
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.
நன்றி - CSED
வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteமகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..
உங்களை பற்றிய கட்டுரையை புதிய தலைமுறை இதழில் படித்தோம்.. வாழ்த்துக்களும், வணக்கங்களும்..
ReplyDelete