தொகுப்புகள்

Search This Blog

Monday, April 30, 2012

மதம், வேதம், கடவுள் கபோதி


இந்த பதிவு, இன்றும் நமக்கு உகந்ததாகவே இருக்கிறது ... காரணம் நம் போராட்டம் இன்னும் தொடர்கிறது... ஆனால் இது சுமார் 85 வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாரின் 30-01-1927லில் வந்த"குடிஅரசு"- தலையங்க செய்தி


பொறுமையாக வாசித்துப் பொறுங்கள் நண்பர்களே .....

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கென்று வெகுகாலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோட்சம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசியம், தேசியப்பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிக்கைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேச பக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசியப் பத்திரிக்கைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திக் கொண்டு,

நம்மைத் தாழ்த்தி மிதித்து மேலேறிப் பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக் கொண்டு விட்டார்கள்.
இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் அப்பத்திரிக்கைகளின் மூலம் ஏமாறுவதும் அப்பத்திரிகைகளின் மூலம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும் வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழ் நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலிருந்தும், அன்னிய ஆட்சிக் கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டுமானால் இப் பார்ப்பனப் பத்திரிக்கைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அவைகளுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே முடியாத நிலைமையில் இருக்கிறோம்.

அவைகள் செய்யும் அக்கிரமங்களை நினைக்கும் போது நமது மக்கள் மனிதர்கள் தானா? மனிதப்பிறவிதானா? இப்பிறப்புக்கு மானம் வெட்கம் என்கிற தன்மைகள் இருக்கின்றனவா என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிக்கைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும் நாம் சந்தேகமற -மனப்பூரணமாய்த் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாய்ப்போவதற்காக அப்பத்திரிகைகளையே வாங்கிப் படிப்பதென்றால், யாராவது நம்மை அறிவு புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக் கூடுமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

பிறரைக் குற்றம் சொல்லும்போதுமாத்திரம், கள்ளு சாராயம் குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் மறுபடியும் அதைக் குடிக்கிறார்களே என்ன புத்தி கெட்ட ஜனங்கள், மானங்கெட்ட ஜனங்கள் என்கிறோம், ஆனால் அந்தப்புத்தியும் மானமும் நமக்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்பவர்கள் நம்மில் 1,000க்கு ஒருவரைக் கூடக்காணோம். பார்ப்பனப்பத்திரிக்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மாத்திரமில்லாமல். நம்முடைய இழிவுக்கும் தாழ்மைக்கும் அழிவுக்கும் நடத்தப்படுகிறது என்பதை அறிந்திருந்தும், அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்குப் புத்தியும் மானமும் இருக்கிறதா என்பதைக் கவனிப்பதில்லை. உதாரணத்திற்காக ஒரு பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்.

சாதாரணமாக சுதேசமித்திரன் என்னும் பத்திரிகை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருடைய பணத்தையே மூலதனமாகக் கொண்டது. அதன் பத்திராதிபர்கள், உப பத்திராதிபர்கள் மானேஜர்கள் முதலியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அவர்கள் சம்பளமோ மாதம் 1500, 1000, 800, 600 இப்படி அனுபவிக்கிறார்கள். இப்பத்திராதிபர் பார்ப்பனரல்லாதாரை ஒழித்துப் பார்ப்பன ஆதிக்கம் தேடுகிற பிரச்சாரம் தவிர, வேறு வேலை ஏதாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

நம்மை நாமே கெடுத்துக்கொள்ள நமது பணமே உதவவேண்டுமா? அதற்கு விளம்பரம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே! அதை வாங்கிப் படித்துக் கெடுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்களே! இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா அல்லது இப்பார்ப்பனர்கள் எதையாவது இரகசியமாய்ச் செய்கிறார்களா? நேருக்கு நேராக நம்மைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள், உங்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை புத்தி அறிவு இவைகள் கிடையாது.

ஆதலால் நாங்கள் உங்களை ஏமாற்றுகிறோம். உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களில் யாரோ சிலர் கத்தினால் கத்தட்டும் எங்களுக்குக் கவலை இல்லை. இதற்காக நாங்கள் கொஞ்சமும் பயப்பட்டு எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்களையும் முட்டாள்களையும் நாங்கள் சுவாதீனம் செய்து கொண்டு உங்கள் கத்தல்களை ஒழிக்க எங்களுக்குத் தெரியும் ஒரு கை பார்க்கலாம் வாருங்கள் என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். இதற்கொன்றும் மார்க்கமில்லையாவென்றுதான் கேட்கிறோம்.

குடிஅரசு தோன்றிய பிறகு, மித்திரன் சுமார் 2000 சந்தாதாரர்களுக்கு மேலாகவே இழக்க நேரிட்டும் இன்னமும் பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குக்காரர்களை இரகசியமாகச் சேர்த்து பணம் சம்பாதிக்கப்பட்டு வருகிறது.
நம்மவர்கள் முன்னேற்றத்திற்கென்றே நடத்தப்பட்டு வருகிற பத்திரிகைகளைக் கையில் தொடுவதற்கும் நமது மக்கள் அஞ்சுகிறார்கள் என்றால், நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது? சாதாரணமாக திராவிடன் பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா?

அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா? யாரையாவது போய் ஐயா, திராவிடன் பத்திரிகை தங்களுக்கு வருகிறதா? இல்லையானால் ஒன்று வரவழையுங்கள் அதைப் படித்துப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதனால் நம்மவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தையும் உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங்கள் என்றால், திராவிடனா? அதிலென்ன இருக்கிறது? அதைப் பார்த்தாலே என்னமோ போல இருக்கிறதே?அந்தப் பெயரே நமக்குப் பிடிக்கவில்லையே என்று சொல்லிவிடுகிறார்கள். இதை தங்களுக்குத் தோன்றுகிறபடி. வாஸ்தவமாகத் தானே சொல்லுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். கட்டின பெண்ஜாதியை விட தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி கொள்ளுகிறவர்களைப் பார்த்து, என்னப்பா கட்டின பெண்ஜாதியை வீட்டில் வைத்து விட்டுத் தாசி வீட்டிற்குப்போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும் கொள்ளுகிறாய் என்றால், மேல் கண்ட மாதிரி பதில் சொல்லுகிறான். அதாவது வீட்டில் என்ன இருக்கிறது?

அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை அவள் நடந்துகொள்ளுகிற மாதிரியே மனதிற்கு அசிங்கமாகப் படுகிறது. ஒரு கட்டிலுண்டா? மெத்தையுண்டா? வாசனையுண்டா? அடிப்பதுண்டா, கிள்ளுவதுண்டா, சட்டி பானை கழுவுகிறவள் தானே என்று ஆரம் பித்து விடுகிறானேயல்லாமல், இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல் அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான். அப்படிப்போல் நம்மை மயக்கி ஏய்த்து, நம்மைப் பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும்.

ஒருநாள் முழுவதும் படிப்பதற்கும் விஷயமிருக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம். நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும், பொழுது போக்கு விஷயமுமாகத்தானே இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும் விடாமல், காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் திராவிடன் பத்திரிகையை ஆதரிப்பதோடு, கட்டின பெண்டைத் தெருவில் அலையவிட்டுத் தாசி வீடு காத்துத் திரிவதுபோல் திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம்தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.

-------------

தந்தை பெரியார் -"குடிஅரசு" தலையங்கம் - 30-01-1927

ஜாதி ,சாமி , சம்பிரதாயம் , மூட பழக்கங்கள் , வேண்டுதல் , பரிகாரம் , செய்வினை , ராசி , வாஸ்து , ஜாதகம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு , அறிவியல் , ஆராய்ச்சி , மனிதநேயம் , பகுத்தறிவு , சமுக அக்கறை என நாம் பயணித்தால் இவ்வுலகம் மகிழ்ச்சியுடன் பயணிக்கும் ......

1 comment:

  1. இக்கட்டுரை தந்தை பெரியாரால் எழுதப்பட்டு 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
    எவ்வளவு பேர் திருந்தியிருக்கிறார்கள்?
    அடிபட்டுச் சீரழிந்த போதும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டம் இது.
    இதை இப்போது எடுத்தாண்டமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete