தொகுப்புகள்

Search This Blog

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, September 11, 2024

இந்தியாவும் மதுவிலக்கும்

அண்ணன் திருமாவளவன் சொல்வதைப்போல் இந்தியா பூரண மதுவிலக்கு நாடாக அறிவித்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்..
முன்குறிப்பு:-


கொஞ்சம் நீண்ட கட்டுரைதான்..
நான் சரக்கடிப்பேன் என்பதற்காக இதை சாதகமாக எழுதவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.. 😜😜
********************************
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மதம், கலாச்சார, அல்லது சட்ட காரணங்களுக்காக மது விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்துள்ளன..  இந்த நாடுகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள்.. 
சவுதி அரேபியா, குவைத், லிபியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சுடான். பாகிஸ்தான்,  பங்களாதேஷ், மாலத்தீவுகள் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நாடுகள்..
இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக இஸ்லாமிய சட்டம் (ஷரியா), மது போன்ற போதைப்பொருட்களை உட்கொள்வதை தடை செய்கிறது.  இருப்பினும், இந்த நாடுகளில் சில, தனியார் கிளப்புகள் அல்லது சிறப்பு அனுமதி போன்ற சில நிபந்தனைகளில் முஸ்லீம் அல்லாதவர்களை மது அருந்த அனுமதிக்கின்றன..

இந்தியா தன்னை மது விலக்கு நாடாக அறிவித்து, மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு நாடு தழுவிய தடை விதித்தால், அது குறிப்பிடத்தக்க மற்றும் பரவலான சமூக, பொருளாதார மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். 

அரசாங்க வருவாய் இழப்பு, வேலை இழப்பு, சமூக நடத்தை மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதன் தாக்கம் ஆழமாக இருக்கும்.  சில சாத்தியமான விளைவுகள் என்னவென்று பார்ப்போம்..

அரசாங்க வருவாய் இழப்பு: மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மது வரி கணிசமாக பங்களிக்கிறது.  நாடு தழுவிய தடையானது கலால் வரியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தும், இது பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும்.. சரி இதைக்கூட ஏதோ வேறு வகையில் சரி செய்து கொள்ளலாம்..

வேலைவாய்ப்பில் பாதிப்பு: உற்பத்தி, விநியோகம், சில்லறை விற்பனை உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய மதுபானத் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.  மது உற்பத்தி சார்ந்த பிற  தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலை இழப்பை ஏற்படுத்தும்..

விவசாயத்தின் மீதான குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. மது தொழில் கோதுமை, திராட்சை, கரும்பு, முந்திரி, தேங்காய், மற்றும் அரிசி போன்ற விவசாய பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள் தேவை குறைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

சுற்றுலா பாதிப்பு: சுற்றுலா, குறிப்பாக மது மற்றும் மது கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலங்களில் (பாண்டிச்சேரி, கோவா அல்லது கேரளா ) எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.  சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அதன் மூலம் வரும் வேலை வாய்ப்பும் அரசு வருமானமும் குறைய நேரிடும் ..

சரி பொருளாதார வேலை வாய்ப்பு போன்றவற்றில் தாக்கத்தை விட இதனால் ஏற்படும் சமூக விளைவுகளையும் பார்ப்போம்..

சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்.. வரலாற்று ரீதியாக, மதுவிலக்கு பெரும்பாலும் கறுப்புச் சந்தையின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  கடத்தல், சட்டவிரோத மது உற்பத்தி  மற்றும் ஊழல் அதிகரிக்கும்.  சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட மது வகைகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றது மற்றும் விஷத்தன்மை கொண்டதாக மாறுவதற்கும்  வழிவகுக்கும் என்பதால், இது  உடல் உபாதைகளுக்கும் உயிரிழப்பிற்கும்  வழிவகுக்கும்.. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் ரகசியமாக தயாரிப்பவர்களையும் கண்காணிக்க ஒரு பெரும் காவல் படை அல்லது கண்காணிப்பு படை தேவைப்படும், இது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது..

மேலும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கோவா போன்ற மதுபானத்துடன் வலுவான கலாச்சார தொடர்புகளைக் கொண்ட  ஒரு மாறுபட்ட நாடு இந்தியா. இவ்வளவு ஏன் நம் தமிழ் கலாச்சாரத்தில் பல காலமாக மதுவை பயன்படுத்துவதாக பல இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.. தற்போது கூட கிராமப்புற நாட்டார் தெய்வங்களுக்கு மது படைக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது..  முழு தடை இந்த பகுதிகளில் எதிர்ப்பை சந்திக்கலாம், இது உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புகள் அல்லது அரசியல் ஸ்திரமின்மைக்கு வழி வகுக்கலாம்..
இந்தியாவில் பல கலாச்சார, மத மற்றும் சமூக நடைமுறைகள் உள்ளது.  ஒரு திடீர் தடையானது பாரம்பரிய கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் சமூகக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும், குறிப்பாக மதுவை கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளும் சமூகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

நாடு தழுவிய மதுவிலக்கை அமல்படுத்தும் போது சட்டவிரோத உற்பத்தி, கடத்தல் மற்றும் மது விநியோகத்தை எதிர்த்துப் போராட பெரும் படை தேவைப்படும்.  இது காவல்துறையின் வளத்தை சீர்குலைத்து பல துறைகளில் ஊழலுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உண்டு.

நீதித்துறைக்கு அதிக சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு .. கடுமையான மதுவிலக்கு சட்டங்கள் மூலம், தடையை மீறுவது தொடர்பான வழக்கு நீதித்துறைக்கு அதிக சுமையாக இருக்கலாம், இது காலதாமதம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால்..
மது தொடர்பான உடல்நலப் பிரச்சினையான கல்லீரல் நோய், உடல்நல குறைவு,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் மது துஷ்பிரயோகம் தொடர்பான குடும்ப வன்முறை, போதையில் ஏற்படும் வன்முறைகள் மற்றும் கொலைகள்  போன்றவற்றைக் குறைக்கலாம்..

ஆனால் தற்போது  மது பழக்கம் உள்ளவர்களிடம் உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், மனநலப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது..

இந்தியா கடந்த காலங்களில் மதுவிலக்கை சோதனை செய்தது.  குஜராத் மற்றும் பீகார் போன்ற பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளன, ஆனால் இந்த தடைகளை அமல்படுத்துவது பெரும்பாலும் கடினமாக உள்ளது மற்றும் சட்டவிரோத சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  1970 களில் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது, ஆனால் பலர் மது அருந்துவதைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் பொருளாதார விளைவுகளாலும்  அது திரும்ப பெறப்பட்டது.

உலகளவில், மதுவிலக்கு பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுத்தது,  அமெரிக்காவின்  தடை காலத்தில் (1920-1933), தற்கொலைகள், குற்றங்கள் மற்றும் கொள்ளையடித்தல் ஆகியவற்றில் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டது. அதன் பிறகு அது திரும்ப பெறப்பட்டது ... குறைந்த மக்கள் தொகை கொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலைமை என்றால் இந்தியாவை சற்று யோசித்துப் பாருங்கள்..

இந்தியாவை மதுவிலக்கு நாடாக அறிவிப்பது பொருளாதார சீர்குலைவுகள் மற்றும் கறுப்பு சந்தை வளர்ச்சியில் இருந்து சமூக அமைதியின்மை மற்றும் சட்ட ஒழுங்கு சவால்கள் வரை பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும்.  இது மது தொடர்பான சில உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் குறைக்கும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே வேளையில், ஒட்டுமொத்த தாக்கம் தீர்வுகளை விட அதிகமாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது., குறிப்பாக இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில்.  முழுமையான தடை விதிப்பதை விட பொறுப்பான நுகர்வுடன் சமநிலைப்படுத்தும் ஒழுங்குமுறை  படுத்தும் நடவடிக்கையே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்..

நன்றி
இப்படிக்கு உங்கள்
பாபு சாந்தி

Monday, April 29, 2019

நீங்க படிச்சா மட்டும் போதும்...

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம்,  சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"

'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு,  ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"

இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.
இலவசத்தால் தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் அரைகுறை அரசியல் விமர்சகர்களுக்கு இது சமர்ப்பணம்.
#திராவிடம்_மறவேல்

-Nambikai

Saturday, February 16, 2019

காஷ்மீரில் நடந்த காதுகுத்து

லைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு...!

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில இப்படி ஒரு குண்டு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப் பட்டது என்பது எங்கையோ இடிக்கிறது.

எப்படியும் ரேடியோ தகவல்களை ஒற்றுக் கேட்டல், வீதிக்கு வீதி சோதனை சாவடிகள், எவனையும் எந்த கேள்வி இல்லாமல் சோதனையிடும் அதிகாரம், தினம் தோறும் ரோந்து நடவடிக்கை எல்லாம் இருந்தும் ஒரு காரில் 350 கிலோ வெடி மருந்துடன் வந்து ஒரு ரானுவ வாகனத்தை மோதி வெடிக்க வைக்க் முடியும் என்றால் அது ஒன்னும் பொட்டலம் கட்டி பக்கெட்டில் எடுத்து வரும் சமாச்சரம் இல்லை. இப்போது C4 போன்ற ப்ளாஸ்டிக் வெடிமருந்துகளை துல்லியமாக கண்டு பிடிக்கும் டிடெக்ட்டர்கள் இருக்கின்றன.

சரி ஒரு அரசால் தங்களுக்கு எதிரான பயங்கரவாத இயக்கத்தை வைத்து குண்டு வைக்க முடியுமா? சின்ன உதாரணம், இந்திராவின் ஆட்சிக் காலத்தில் 80 களில் இந்திய புலனாய்வுத் துறை காஷ்மீர் பகுதிகளில் செய்த ஆப்ரேஷ்னுக்கு பெயர் ரெட் ரோஸ். ஒன்னும் இல்லை, அந்த பகுதியில் உள்ள காஷ்மீர் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத சப்ளை செய்வது. பாக்கிஸ்தானில் உள் நாட்டு கலவரம் செய்வதற்க்கும், காஷ்மீர் பகுதியில் அமைதி இன்மையை நிரந்தரமாக வைப்பதற்க்கும். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் ஈழ இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கப் பட்டது. இதை அந்த நாட்களில் இந்திய புலனாய்வு துறையில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன் இலங்கையில், அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆட்சி முடிந்து அடுத்து ஆட்சிக்கு வந்த ஆர் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்ஸானாயக்க, பாதுக்காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன ஆகியோரை விடுதலை புலிகளை கொண்டு கொன்றொழித்தார். பின்னாட்களில் அவரும் அதே புலிகளால் கொல்லப் பட்டார்.  இப்படி உலகம் முழுக்க இந்த நடமுறை இருக்கிறது.

யாரும் பதவி என்று வந்து விட்டால் யோக்கியனில்லை. அதிலும் பிஜேபிக்கு வாழ்வா சாவா நிலை. ஆட்சி கைய விட்டு போனால் அதன் விபரீதம் புரிந்து இருப்பார்கள்.
பல ஆயிரம் கொலைகள் செய்து முதல்வர் பதவியை தக்க வைக்க தெரிந்த ஒருவரால் மரணத்தில் பிரதமர் பதவியை தக்கவைக்க மறுக்க மாட்டார் என்று எப்படி நம்ப முடியும் ?

Saturday, February 9, 2019

இந்துக்களை கொல்வது முஸ்லிமா?

இதுவரை தமிழத்தில் கொலைசெய்யப்பட்ட

#RSS_BJP_இந்து_முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

1) #நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

2) #பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு

3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் #ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்

4) #கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.

5) #ராமேஸ்வரம்_குட்டநம்பு
கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

6) தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு 24.01.2007
குண்டு வைத்தவர்: ஆர் எஸ் எஸ் ரவிபாண்டியன்
காரணம்: தன் அண்ணன் குமார் பாண்டியன் மரணத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை எனும் அதிருப்தியில். ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த.

7) வேலூர் பாஜக மருத்துவரணி செயளாலர் #டாக்டர்_அரவிந்த்_ரெட்டி
கொலை - 23.10.2012
கொளையாளிகள் (உதயா, சந்திரன், ராஜா, தரணி)
காரண்ம்: கள்ளத் தொடர்பு

8) #ஆடிட்டர்_ரமேஷ்
கொலை - 19.07.2013
கொளையாளி: இன்னும் பிடிபடவில்லை
காரணம்: கள்ளத் தொடர்பு
பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப் பட்டார்,
முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார்
(கட்டிய மனைவி நன்றாக திடமாக இருக்கும்பொழுது,
இரு பெண்களும் ரமேஷ் மீது உள்ள மரியாதையால்தான் தற்கொலை/இறந்தார்கள் என்று நம்புவோமாக).

9, #சசிகுமார் கொலை 22;8;2016 இந்து முன்னணியின் கோவை மாவட்ட நிர்வாகி
கொலையாளி ; இந்து முன்னனி நிர்வாகி ஆனந்த் படுகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்  காரணம்; கள்ளக்காதலால் கொல்லப்பட்டார்

7 & 8 கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் இந்துத்வவாதிகளை திருப்தி படுத்துவதற்காக  சில முஸ்லிம்களையும் கைது செய்து இன்று வரை போதிய ஆதாரமின்றி விசாரணைக் கைதிகளாகவே தொடர்கின்றனர்.

அது ஏன் எல்லா டிரௌசரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு படுகொலை செய்யப் படுகின்றனர்?
எல்லோருமே அப்படியா?
அப்படியல்ல. சமூகவிரோதிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு இயக்கமும் தன்னை யாரும் நெருங்காமல் இருக்க ஹிந்து  எனும் போர்வையும் தேவைப் படுகிறது.
அதனால்தான் சமூக விரோதிகள் பெரும்பாலானோர் சங் பரிவார இயக்கங்களில் இணைகின்றனர்.
அதுவே அவர்களுக்கு சிறந்த புகலிடமாகவும் இருக்கிறது.

இவர்களை ஹிந்துக்கள் எனும் வரம்பில் வைத்து பார்க்கக் கூடாது.
இவர்களை ஹிந்து மக்கள்தான் முதலில் புறக்கணிக்க வேண்டும்.

இறந்தவனைப் பற்றி கவலைப் படும் கூட்டமல்ல அவை.
இறந்தவனை வைத்து மதக் கலவரம் ஏற்படாதா என்று ஏங்கி ஒவ்வொரு முறையும் ஏமாறும் கூட்டம்

Thursday, February 7, 2019

சுடலை என்கிற ஸ்டாலின்


ஆம் எங்கள் தளபதி சுடலை தான்!

ஸ்டாலின் என்கிற பொதுவுடமைத் தலைவனின் பெயரை தன் மகனுக்கு சூட்டினார் கலைஞர் கருணாநிதி! அந்தப் பெயரை பார்ப்பனர்கள் சிலர் ‘சுடலை’ என்று மாற்றி கேலியாக பேசிவருகின்றனர். அவர்களுக்கு ஒன்று தெரியாது.. சுடலை என்பது அவர்கள் நினைப்பது போல கேவலமான பெயர் அல்ல. அதுவும் வீரத்துக்கு அடையாளமான தமிழர்களின் சிறுதெய்வத்தின் பெயர் தான்! தமிழர்களின் குலதெய்வத்தின் பெயர்!

பார்ப்பனர்கள் தங்களுடைய வேத மதத்தை தமிழகத்தில் திணிக்கும் வரை தமிழர்கள் சிறுதெய்வங்களையே வணங்கினார்கள்.

முனியாண்டி, மதுரை வீரன், கறுப்பு, நொண்டி முனி, முத்துப்பட்டன், கொடலமாடன், சுடலமாடன் என்று நூற்றுக்கணக்கான சிறுதெய்வங்கள் தமிழர்களுக்கு உண்டு. ஊருக்கு ஆபத்து வந்தபோது யார் முன்வந்து தங்கள் உயிரையும் கொடுத்து மக்களைக் காப்பாற்றினார்களோ அவர்களுக்கு தமிழர்கள் சிலை வைத்து வணங்கினார்கள். கையில் அரிவாளுடன், குதிரையின் மேல் அமர்ந்து இருக்கும் இவர்களை தான் தமிழர்கள் தெய்வங்களாக கும்பிடுவார்கள். நாட்டார் வழிபாடு என்று பண்பாட்டு ஆய்வாளர்கள் இதனை குறிப்பிடுவார்கள்.

பின்னால், பார்ப்பனீயம் தமிழகத்துக்குள் நுழைந்து அவர்களுடைய பெருந்தெய்வங்கள் தான் உயர்ந்தது என்றும் காலங்காலமாக தமிழர்கள் வணங்கிவந்த நாட்டார் தெய்வங்களை சிறுமைப்படுத்தவும் தொடங்கினர்.

நாட்டார் தெய்வங்கள் எல்லாம் காட்டிற்குள் இருக்கும், ஊர் எல்லையில் இருக்கும், மக்களோடு மக்களாக இருக்கும். ஆனால், பார்ப்பனர்களின் பெருந்தெய்வங்களோ, பெரிய சுற்றுச்சுவருக்குள், உயர்ந்த கோபுரங்களின் கீழே இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் அங்கு செல்வார்கள். நாட்டார் தெய்வங்களோ இன்றுவரை உழைக்கும் மக்களால் வணங்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது.

நாம் நாட்டார் தெய்வங்களுக்கு ஆடு, கோழி படைப்பதைக் கூட பார்ப்பனர்கள் மோசமான பண்பாடுபோல சித்தரித்தார்கள். அசைவத்தைவிட சைவமே சிறந்தது, சைவ உணவு சாப்பிடுவோர் தான் உயர்ந்தவர்கள் என்றும் ஆக்கினர்!

இப்போது சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் ஏன் ‘சுடலை’ என்கிற சுடலமாடன் பெயரை கேலிக்குரிய பெயராகப் பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும். தமிழர்கள் எப்படி ‘பார்த்தசாரதி’ என்கிற பார்ப்பனப் பெயரை கேலியாக பயன்படுத்துகிறோமோ அதற்கு பழிக்குப்பழியாக ‘சுடலை’ என்கிற பெயரை கேவலமாக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்கள் ஸ்டாலினை ‘சுடலை’யாகத்தான் பார்ப்பார்கள். காரணம், அது தமிழர்களுடைய நாட்டார் தெய்வத்தின் பெயர். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அடிமைத் தமிழர்கள் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ‘சுடலை’ ‘சுடலை’ என்று கேலி பேசுகிறார்கள்! பார்ப்பனர்களின் காலை நக்குவதையே வரலாற்றுக் கடமையாகக் கருதி தமிழர்களின் குலதெய்வமான ‘சுடலைமாடனை’ கொச்சப்படுத்துகிறார்கள் சில அடிமைகள்!

மிகச்சிறந்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய நூலில் தமிழர்களின் குலதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் பற்றி இவ்வாறு எழுதினார்,

“The subaltern heroes invert the pre-existing power structure by appropriating different signs of authority of the elite…… They in their own ways turn the iniquitous world upside down and usurp those normally elusive signs of authority.”

ஏற்கனவே நிலவிவந்த அதிகாரபீடங்களை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, மேட்டுக்குடியிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று சாதாரண உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்தவர்கள் தான் நாட்டார் தெய்வங்கள். அதில் ஒன்று தான் ‘சுடலைமாடன்’!

அந்த வகையில் பார்த்தால், சமஸ்கிருதம் தான் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது, சைவம் தான் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது, வைதீகம் தான் உயர்ந்தது, தமிழர்களின் வழிபாட்டுமுறை தாழ்ந்தது என்று சொல்லும் வஞ்சப் பார்ப்பனர்களின் கோட்டையைத் தகர்த்து, தமிழர்களின் உரிமையை நிலைநாட்டப் போர்க்களத்தில் நிற்கும் தளபதி ஸ்டாலின் எங்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு ‘சுடலை’ தான்!

எழுதியவர்: எழுத்தாளர் கருங்குயில்

Thursday, January 31, 2019

சுடப்பட்ட காந்தியின் கொடும்பாவி

காந்தியின் கொடும்பாவி
=======================
.
காந்தியின் 'கொடும்பாவி'யை சுட்டுக் கொல்லும் இந்து மகாசபையினரின் வீடியோ எனக்கு அதிர்ச்சியை அளித்தாலும்  பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஆரம்பம் முதலே இவர்கள் இதே நிலையில்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதே இந்து மகாசபையின் ஒரு தலைவர்தான் ஓரிரு வருடங்கள் முன்பு கோட்ஸேவுக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். இப்போது இவர்கள்.

இன்று காந்தி படத்தை சுட்ட அந்தத்தலைவிக்கு தெரிந்திருக்காது: சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஹிந்து மகாசபா துவங்கப்பட்ட போது  அதற்கு வருகை தந்து சிறப்பித்தவர்களுள் காந்தியும் ஒருவர். அப்போது வெறும் மத-ரீதியான ஆன்மீக இயக்கமாக மட்டுமே துவக்கப்பட்ட இது பின்னரே தீவிரவாத இயக்கமாக உருமாறியது. அதற்கு முக்கிய காரணிகள் இருவர்: வீர் சவர்க்கர் மற்றும் ஹெட்கேவார். முதலாமவர் காந்தியின் படுகொலை சதியில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் (பின்னர் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலையானார்.). இரண்டாமவர் தனியாகப் பிரிந்து ஆர்எஸ்எஸ் எனும் இன்னொரு இயக்கத்தை துவங்கினார்.

ஆர்எஸ்எஸ் வருகைக்குப் பிறகு இந்து மகாசபையின் கொள்கைகளுக்கு வேறு ஒரு போட்டி ஆள் வந்து விட்டதால் அவர்கள் 'மவுசு' குறைய ஆரம்பித்து காணாமல் போயினர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக திரும்ப முளைத்து இந்த கோட்ஸே வழிபாடு தொடர ஆரம்பித்து வருகிறது. காரணம் மத்தியில் மாறிய ஆட்சிதான் என்று சொல்ல வேண்டியதில்லை. நேருவை காய்ச்சுவது போல வெளிப்படையாக விமர்சிக்கா விட்டாலும் ஆர்எஸ்எஸ்சுக்கோ பாஜகவுக்கோ காந்தி மீது பெருத்த உவப்பு இல்லை. அவரின் அகிம்சை, மத நல்லிணக்கம், சமரச தீர்வு வழிமுறை போன்ற எதுவுமே இவர்களுக்கு ஒவ்வாதவை. அதனால்தானோ என்னவோ தூய பாரத திட்டத்துக்கு ப்ராண்ட் அம்பாஸடராக காந்தியை நேர்ந்து விட்டு விட்டார் பிரதமர்.

அது தவிர்த்துப் பார்த்தால் காந்தி ஒழிந்தது நல்லதுதான் என்று எண்ணும் நிறைய பேர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருக்கவே செய்கிறார்கள். வாக்கரசியல் காரணமாக அவர்களால் வெளிப்படையாக இப்படி கொடும்பாவி நட்டு பொம்மை துப்பாக்கியால் சுட முடியவில்லை. சுட்டவன் படத்துக்கு  மாலை அணிவித்து வணங்க இயலவில்லை. ஆகவே, மாறாக, சுட்டவனின் சதிக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டவன் (சவர்க்கர்) படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிகிறது.

ஆனால் காந்தியை கொன்று வன்முறை வழியில் இந்து மதத்தை கொண்டு செல்ல இவர்கள் தீட்டிய திட்டம் பலிக்கவில்லை. இந்தியாவுக்காக, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, மத நல்லிணக்கத்துக்காகவே காந்தி சாக விரும்பி இருக்கிறார். ‘துப்பாக்கி குண்டுகள் துளைத்து ஆனால் வலியில் கூச்சலிடாமல் கடவுள் பெயரை உச்சரித்து காந்தி உயிரிழந்தான் என்று செய்தி வந்தால் மட்டுமே நீங்கள் அழைக்கும் மகாத்மா பட்டத்துக்கு ஓரளவேனும் தகுதி உடையவனாவேன்,’ என்று சொன்னவர். அவர் விருப்பத்தையே கோட்ஸே நிறைவேற்றி இருக்கிறான். எதிர்பார்த்தபடியே தேசமே அவர் மறைவில் அதிர்ந்து போய், நேருவின் அதிரடி செக்யூலர் முயற்சிகளுக்கு துணை நின்றது. இந்துத்துவ கொள்கைகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது. காந்தியின் சாவுக்கு ஒரு அர்த்தம் வந்தது.

ஆனால் இப்போது அந்த சாவு வீணாகப் போகும் ஆபத்தில் இருக்கிறோம். இந்து முஸ்லீம் விரோதங்கள் திரும்பவும் கிளறப்படுகின்றன. சமூகங்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் கனஜோராக நடக்கின்றன. காந்தி முனைந்து, கடும் முயற்சியில் சாத்வீகப்படுத்திய இந்து மதத்தின் வெட்டப்பட்ட கொம்புகள் திரும்ப வளர்க்கப்படுகின்றன. தொடர்ந்து சீவப்படுகின்றன.

காந்தியை நேரடியாக கொல்ல முடியாமல் போனவர்கள், அதற்கு பதிலாக காந்தியின் இந்தியா, அவர் கனவு கண்ட நல்லிணக்கம், சாதி மத சமத்துவம், சமரச வழியிலான தீர்வுகளை ஒட்டிய வாழ்வு நெறிகள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
காந்தியின் அன்புக்கும் அகிம்சைக்கும் அவசியமில்லாமல் செய்து விட்டால் காந்தி என்று ஒருவர் இருப்பதோ இல்லாததோ பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லைதானே?

எனவே, காந்தியின் ‘கொடும்பாவி’ சுடப்படுவதைக் கண்டு நாம் இப்போது அதிர்ச்சி அடையத்தேவையில்லை. காந்தி உண்மையாகவே சுடப்பட்டு செத்தும் போய் விட்டார். இப்போது இரண்டு மூன்று காமெடியன்கள் தீபாவளி துப்பாக்கியால் அவர் படத்தை சுடுவது நமக்கு கோபம் தரத்தேவையில்லை. ஏனெனில், நல்லவேளையாக இந்தக் காமெடியன்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லை.

ஆனால் பங்கு இருக்கும் இயக்கங்கள் அவரின் கனவு இந்தியா, அவரின் சத்தியாகிரகம், அவர் உழைத்து உயிரையே தந்த மத நல்லிணக்கம் போன்றவற்றை  கண் முன்னே தொலைக்க முனைவது கண்டு அதிர்ச்சி கொள்வோம். கோபம் கொள்வோம். அந்த மதவாத, பிரிவினை சக்திகளுக்கு அதிகாரத்தில் பகிர்வு தர உறுதியாக மறுப்போம். அந்தக்கொள்கைகளை திரும்பவும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டி உழைப்போம்.

நன்றி :- Sridhar Subramaniam