சமுக உறவில் தேடுங்கள்

Loading

Tuesday, April 3, 2018

ஆ.ராசா A.RAJA spectrum 2G

ஆ.ராசாவின் சமீபத்திய  நேர்காணல்கள் விதந்தோதப்படுகின்றன.  இன்றைக்கு ஆ.ராசா நீதிமன்றத்தில் வென்று வந்தவர்; அதுபோக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு திமுக பிரமுகர்கள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் தொடை நடுங்கும். ஆனால் 4 வருடங்களுக்கு முன்பு இந்தி சேனல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.

விசாரணை செய்பவன் ரஜத் “ஷர்மா”  நீதிபதியாக "ராஜகோபாலன்”  ஆடியன்ஸ் முழுக்க முன்கற்பிதத்துடன் அமர்ந்திருக்கும் வடக்கத்திய பாமரர்கள். எப்பேர்ப்பட்ட அவதூறுகளை நேரடியாகச் சுமத்தினாலும் யாரும் மறுக்கப்போவதில்லை. அரங்கினுள்ளேயும் வெளியேயும் அதுதான் நிலைமை.

தீர்ப்பு வராத நிலையில், திமுக ஆதரவாளர்களே  ஆ ராசாவை முழுவதும் நம்ப இயலாத அந்தச் சூழலில், சிபிஐ,அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம், சிஏஜி உட்பட நாடே ஆ.ராசாவுக்கு எதிர்மனநிலையில் இருக்க... ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கிறார் அந்த நபர்.

உதாரணத்திற்கு அந்த ஸ்டூடியோ அமைப்பைப் பாருங்களேன். அதிலிருக்கும் கூண்டில் வந்து அந்த நேரத்தில் அமர்வதற்கு எத்தனை தைரியமும், என்றைக்கிருந்தாலும்  இந்த  வழக்கில் நாம் நிச்சயம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும்?

ஒருவேளை அங்கு ஆ ராசா குற்றஞ்சாட்டிய அமைப்புகளுக்கு எதிராக  உச்சஸ்தாயியில் எதுவும் பேசினால் அதுவே கூட  மத்திய அரசையும், வழக்கை விசாரிக்கும் டிரையல் கோர்ட்டையும் எரிச்சலூட்டும் வாய்ப்புமிருந்தது. அவையனைத்தையும் தாண்டி ஆ ராசா அங்கே ஒரு மணி நேரம் வாதாடியிருக்கிறார்.  கூட்டணி உறவு தவிர்த்து மற்றைய  அத்தனை கேள்விகளுக்கும் நேரிடையான பதில்கள்! கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இந்தியில்.. 90% கேள்விகள் ராசாவைச் சீண்டும் நோக்கில் பார்வையாளர்களிடம் கைதட்டல் பெறுவதற்காகவே கேட்கப்படுகின்றன.

தொகுப்பாளர் கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி, ஆ ராசா பதிலிறுக்கும் முன்னமே ஒவ்வொரு முறையும்  கைதட்டும் வடக்கத்தியர்கள்,  இந்தி புரியாமலும், உடைந்த ஆங்கிலத்தாலும் ராசாவுக்கு ஓரிரு இடங்களில் சற்று வார்த்தைகள் குளறும்போது ஓவென்று சத்தமிடுகின்றனர்.

ஆச்சரியப்படத்தக்க வகையில்  நிகழ்ச்சி முடியும் தறுவாயில் கொஞ்சம் கொஞ்சமாக ராசா பார்வையாளர்களைக் கன்வின்ஸ் செய்கிறார். யோசித்துப் பாருங்கள் எந்த ஊழல் குற்றவாளி பொது forum இல் வந்து இப்படி அமர்ந்து பதில் சொல்வான்? என்ன தேவை இருக்கிறது மீடியா முன்பு வந்து சிதையில் இறங்க வேண்டுமென்று?   So called Iron lady ஜெயாவுக்கு இந்த வக்கு இருந்திருக்கிறதா?  ஆனால்  உண்மையிலேயே நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார் ராசா.

கட்சியா தனி நபரா என கணக்குப் போட்டு ராசாவை பலிகொடுத்திருக்க திமுகவுக்கு எத்தனையோ நியாயங்கள் இருக்கலாம். நாட்டில் இருக்கும் எந்தக் கட்சியும் அதைத்தான் செய்திருக்கும். ஆனால்  கலைஞர் அதைச் செய்யவில்லை. தகத்தகாய சூரியனே என்றார்.

அன்றைக்கு கலைஞர் தேவையில்லாமல் தலித் கார்டை உபயோகிக்கிறார் என்று நானும் கருதியதுண்டு. அதற்காக இப்போது உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.   

And.,  ஆ.ராசா you beauty!  ❤️

https://m.youtube.com/watch?v=e86_u94WzWo

ராஜா ராதாமணாளன்

Tuesday, March 20, 2018

ரத யாத்திரையா ? ரத்த யாத்திரையா ?

ஆண்டாளை இழுத்து ரோட்டில் விட்டு அவமானப்பட்டும், பெரியார் சிலையில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டும் வெட்கப்படாத கூட்டம் இப்போது ராமனின் ரதத்தில் ஏறி வந்து ரத்தம் குடிக்கப் பார்க்கிறது.

விசுவ இந்து பரிசத் "ராம ரத யாத்திரை"யை தமிழகத்தில் நடத்தி, இந்து உணர்வை தூண்டலாம் என பார்க்கிறது.

இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நீண்ட காலத் திட்டத்தோடு தான் ஒர் காரியத்தில் இறங்கும். அப்படி தான் இந்தியாவை கைபற்றும் திட்டத்தில் அயோத்தியை கையிலெடுத்தது.

அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதியானது, அங்கு ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது என அறிவித்தனர். 1980 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான விசுவ இந்து பரிசத் களத்தில் குதித்தது.

பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவோம் என்று அறிவித்தது. இதற்கு துணையாக சங் பரிவார் போர் அறிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் தான் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், காங்கிரஸிற்கு எதிராக வி.பி.சிங் தலைமையில் ஜனதாதள் ஆட்சி அமைக்க  கம்யூனிஸ்ட்களும், பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவளித்தன.

காங்கிரஸ் கட்சியில் உத்தரபிரதேச முதல்வராக, மத்திய நிதியமைச்சராக பணியாற்றிய போதே  நேர்மையான, துணிச்சலான, அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் வி.பி.சிங்.

மத்திய அரசில் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைந்திருந்த, மண்டல் கமிஷன் அறிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது.  இயற்கையாக சமூகநீதியில்  அக்கறை கொண்டவர் வி.பி.சிங். கூட்டணித் தலைவரான கலைஞரின் உத்வேகத்தால், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார் வி.பி.சிங்.

பதறிப் போனது பா.ஜ.கட்சி. வட மாநிலங்களில் ஆதிக்க சாதிகளின் துணையால் அரசியல் அதிகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக கைப்பற்றிக் கொண்டிருந்தது பா.ஜ.க. ஆதிக்க சாதியினர் கோபம் கொழுந்து  விட்டது மண்டல் அறிக்கைக்கு எதிராக. டெல்லியில் ஓர் மாணவர் தீக்குளித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் வி.பி.சிங் அரசிற்கு ஆதரவளித்தால், தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் நிலை பா.ஜ.கவிற்கு. அதே சமயம் மண்டல் கமிஷனை நேரிடையாக எதிர்த்தால், பிற்பட்ட வகுப்பினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் நிலை.

இந்த இக்கட்டான நிலையில் தான், அதில் இருந்து தப்பிக்க,  விசுவ இந்து பரிசத்தின் "ராமர் கோவில்" பிரச்சினையை கையில் எடுத்து, திசைதிருப்பி ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தனர் பா.ஜ.கவினர்.

அதற்கான வழி முறையாகத் தான், அத்வானியின் ரத யாத்திரை திட்டம் தீட்டப்பட்டது.

1990 செப்டம்பர் 25 அன்று சோம்நாத் நகரில் ரத யாத்திரை புறப்பட்டது. அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியில் ராத்திரையை முடிப்பதாகத் திட்டம். குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் வழியாக உத்தரபிரதேச அயோத்தியை அடைவது பாதை திட்டம். அயோத்தியை அடைந்து, பாபர் மசூதியை இடிக்க திட்டம்.

இதற்குள் ஒரு நாளைக்குள் பயணிக்கும் 300 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு இடங்களில் உரையாற்றி எழுச்சி ஏற்படுத்துவது எனத் திட்டம். திட்டமிட்டபடி பயணம் துவங்கியது, திட்டமிட்டபடி கலவரம் வெடித்தது, யாத்திரை கடந்த பின்.

யாத்திரை பீகாரில் நுழைய இருந்தது. பீகாரில் ஜனதாதள் கட்சியின் முதல்வராக இருந்தார் லல்லுபிரசாத் யாதவ். கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார்.

பீகார் மாநிலத்தில் நுழைந்த அத்வானியை கைது செய்தார் லல்லுபிரசாத். அதற்கு பிறகும் உத்தரபிரதேசத்தில் அயோத்தியை நோக்கி பா.ஜ.கவினர் பயணித்தனர். ஒன்றரை லட்சம் பேரை கைது செய்து, பாபர் மசூதியை தாக்காமல் காத்திட்டார் உத்தரப்பிரதேசத்தின் அன்றைய முதல்வர் முலாயம்சிங்.

பிறகு நரசிம்மராவ் பிரதமராக இருந்த நேரத்தில், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவை என்ற பெயரில், பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர் பா.ஜ.க சங் பரிவார் கூட்டத்தினர். இதனை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் விசுவ இந்து பரிசத் அமைப்பினர்.

அடுத்து, பாபர் மசூதியை கட்டும் இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று மார் தட்டினர் பா.ஜ.க மற்றும்  வி.எச்.பியினர்.

1996 மே 16 ஆம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 1996 ஜூன் 1 வரை தான் நீடித்தது. அப்போது ராமர் கோவிலை விசுவ இந்து பரிசத்தால் கட்ட முடியவில்லை.

பிறகு மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. இந்த முறை 1998 மார்ச் 19 முதல், 2004 மே 22 வரை முழு அய்ந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது பா.ஜ.க. இந்த முறையும் விசுவ இந்து பரிசத்தால் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை.

பிறகு பா.ஜ.க தனிப்பெரும் மெஜாரிட்டியோடு  ஆட்சியை பிடித்தது. 2014 மே 26 அன்று வாராது வந்த மாமணியாய் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். நான்காண்டுகள் ஆட்சி முடியப் போகிறது இப்போது.

அந்தோ பரிதாபம், இப்போதும் விசுவ இந்து பரிசத் கட்சியினரால் ராமர்  கட்ட முடியவில்லை.

ராமர் கோவில் காட்டுவது அவர்கள் நோக்கமல்ல.  ராமர் பெயரால் நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதும், இந்து - முஸ்லீம் பிரச்சினையை உண்டாக்குவதும், அதன் பேரால் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் நோக்கம்.

அதனால் ராமர் கோவிலை கட்ட, பொதுமக்கள் ஆதரவை கேட்டு என்ற பெயரில், மீண்டும் ராம ரத யாத்திரையை துவங்கி விட்டது விசுவ இந்து பரிசத்.

இந்த ராமர் ரத யாத்திரையை தான் தமிழகத்தில் நுழைய திட்டமிட்டுள்ளனர் விசுவ இந்து பரிசத்தினர்.

ஆனால் இப்போது அத்வானி ரதயாத்திரையை வழி நடத்தவில்லை. பாவம் அத்வானி, ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி நிற்கிறார். ஆர்.எஸ்.எஸ் அத்வானிக்கு மாற்றாக ஆள் தயார் செய்யும்.

# நாடகம் தொடர்கிறது, நடிகர்களே மாறியுள்ளனர், கலவரமே நோக்கம் !

:-எஸ்.எஸ்.சிவசங்கர்.

Sunday, March 11, 2018

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுக எதிரியா ?

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுகவை எதிர்க்கும் மூன்றாவது அணியினருக்கும்:

,காவிகளின் தமிழக ஊடுருவல் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் லேடியா மோடியா பிரச்னைக்கு பின் ஜெ.யையும் வீழ்த்திய பின் முதலில் தீபா வை புரோமோட் செய்தனர் தோல்விக்குப் பின் மைத்ரேயனையும் பாண்டியராஜனையும் வைத்து ஓபிஎஸ் மூலம் அதிமுகவை வளைக்கப்பார்த்தனர் தோல்வி.பின்னர் பயமுறுத்தி ஈபீஎஸ்ஸை தினகரனிடமிருந்து பிரித்து ஓபிஎஸ்ஐயும் சேர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்தும் எதிர்ப்பு பலமாகவே இடைதேர்தலிலும் நோட்டாவிடமே தோல்வி அடைந்த அவமானத்தில் தற்போது நடிகர்களை சாமர்த்தியமாக அரசியலில் நுழைக்கும் புராஜக்கெட் A B C தமிழ்நாடு திட்டம் போட்டுள்ளனர்.
புராஜக்ட் A திட்டமான நடிகர்கள் நுழைவும் அதற்கு எதிர்ப்பலை பலமாக உருவாகி விட்டதால் புராஜக்ட் B திட்டமான திராவிடத்திற்கெதிரான தமிழ் தேசியவாதிகளை ஊக்கப்படுத்தி திராவிட அரசியலை வீழ்த்த எத்தனிக்கின்றனர்.அதற்கு ஆதாரமாக சமீபத்தில் பலருடைய கடும் கண்டனாத்திற்காளான மூக்குடைப்பட்ட ஒரு நரி திராவிடத்தால் தமிழ்தேசியம் பாதிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போது நான் சொல்ல விழைந்தது என்ன வெனில் உங்களுடைய ஆதங்கத்தில் உண்மை இருந்தாலும் திராவிட ஆட்சியில்தான் உங்களது தமிழ்தேசிய குரலே ஒலிக்கிறது ஒலிக்க ஆம்பித்ததும் நடவடிக்கைகள் எடுத்ததும் நடந்துள்ளது.அப்படி இல்லாது போனால் நீங்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு நசுக்கப்படுவீர்கள் இந்த காவிகளின் ஆட்சியில்.
திராவிட. ஆட்சிகளில் நிறையஅளவிற்கு தமிழ் தமிழர் பெருமை சமூக நீதி இத்யாதி எல்லாம் முன்னேற்றம் அடைந்ததையே பிடிக்காத காவிகள் அதை முறியடிக்க எப்படி எப்படி எத்தனித்தனர் என்பதை வரலாறு சொல்லும்.திராவிட ஆட்ச கட்சிகளை பிளவு படுத்தி தனக்கு சாதகமாக செயல்படும் போலி திராவிட ஆட்சிகளை நிறுவி அந்த ஆட்சிகளின் மூலமாக உங்கள் ஜனநாயக குரலையும் நசிக்கி வைத்ததை எல்லாம் எண்ணிப்பார்க்கனும் உண்மையான தமிழ்தேசியவாதிகளாக இருந்தால். ?
உங்கள் குரல்களில் நியாயம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடையும் நிலையில் உங்கள் அரசியல் கட்சி கட்டமைப்பு இல்லை.வாக்கு பிரிவுதான் நடக்கும்.அந்த  கட்டமைப்பு வர நீண்ட காலமாகும்.
ஆக திராவிட ஆட்சி அமைந்தால்தான் அதற்கு எதிர்கட்சியாக ஜனநாயக முறையில் வளரமுடியும்.
இதை ஆழ்ந்து சிந்திக்காமல் திராவிட ஆட்சியின் சில பல தவறுகளுக்கு விமர்சித்தால் அது வாக்கு சிதறலுக்கும் இன்ன பிற காவிகளின் சூழ்ச்சி அரசியலுக்கு பலியாகும் அவல நிலைக்கும் தள்ளப்படுவீர்கள்.
உதாரணமும் தமிழ்நாட்டரசியலிலேயே உண்டு.
நன்கு வளர்ந்து வந்த விஜயகாந்த் பாரியாளின் மைத்துனரின் பேச்சை கேட்டு 2014 ல் காவிகளிடம் கூட்டு வைத்ததால் இன்று தேய்ந்துக் கொண்டே போகும் நிலையில் உள்ளது.அதே போல மேலும் பல கட்சிகளும் உண்டு.
அதனால் காவிகளின் B டீம் என்ற அவப்பெயரை அடையாதீர்கள்.

நன்றி :- முகமது

Thursday, February 22, 2018

திமுக என்று ஒரு கட்சி இருந்ததா..?


தமிழ்நாட்டில் திமுக என்று ஒரு கட்சி இருந்ததா..?

என்று கேட்கும் அளவிற்கு நான் திமுகவை ஒழித்துவிடுவேன் --சசிகலா 15-2-17
கூவத்தூர் MLA க்கள் சிறைவைப்பு முகாமில் பேசியது...

1960 களில் ராஜாஜி ..திமுகவை மூட்டை பூச்சிபோல் நசுக்குவேன்..என்று கொக்கறித்தார்..

1967 ல் பக்தவசலம் திமுகவுக்கு 6000 அடி குழி தோண்டி புதைச்சிடுவோம்..
என்று பூச்சாண்டி காட்டினார்..

1971 ல் காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்..என ஆணவம் காட்டினார்...

1975 ல் மிசாவை காட்டி
மிரட்டினார் இந்திரா..
"மிசா"ன்னு பயமுறுத்தினா
தமிழ்நாட்டுகுள்ள வர
"விசா" வாங்கி வரவேண்டும் என
கலைஞர் பதிலுரைத்தார்..

1977 ல் MGR திமுகவுக்கு கல்லறை கட்டுவேன்...என தொழிலை மாற்றி பேசினார்..

1982 ல் ஜெயலலிதா ..கருணாநிதியின் விலா எலும்பை முறிப்பேன்..ரத்த காட்டேரியாய் கொக்கரித்தார்..

மீண்டும்..1991ல் ஜெயலலிதா ..நான் பாப்பாத்திதான்..!
நானே நிரந்தரம்..
என்னை ஆட்டவோ..அசைக்கவோ..
முடியாதுன்னு கொக்கரித்தார்..
96 ல் MLA ஆக கூட முடியாமல் திமுக வின் தொண்டன் சுகவனத்திடம்
தோற்றார்..

நான் மேலே குறிப்பிட்ட தலைவர்களுக்கு ..
சசிகலாவை ஒப்பிட்டு பேச நான் நாகரீகமற்றவன் இல்லை..

சமீபத்தில்கூட பொண.ராதாகிருஷ்ணன் போகி தீயில் திமுக வை போட்டு கொளுத்துங்கள்..
வாய் கொழுப்பெடுத்து உளறியபோது..
திமுக வை எவனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று செருப்படி கொடுத்தார் தளபதி...

திமுக வரலாறு தெரியுமா..
பொதுமேடையில் உலக தலைவர்களில் ஒருவரான இந்திராவையே
1976 மிசா கால கொடுமைகளுக்காக ..
1980 ல் மன்னிப்பு கேட்கவைத்த இயக்கம் திமுக..

திமுகவை அழிப்பேன்..ஒழிப்பேன் சொன்னவர்கள் எல்லாம்..
மண்ணுக்குள்ள போயிருக்காங்க ...அல்லது
உன்னைப்போல் கம்பிக்குள்ள போயிருக்காங்க..

எங்க கட்சி அலுவலகத்தை
முன்னறிவிப்பு இல்லாம..ஒரு நாள் காலைல தலைவர் பேராசிரியர் இருக்கும்போதே ..MGR தன் அதிகாரிகள் மூலமாக காலி செய்ய சொல்லி பொருட்களை தூக்கி போட்டார்..அதன் பிறகே
அறிவாலயம் கண்டார் கலைஞர்..!!

இன்று MGR வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில..
வாழ யாருமே இல்லாம சிதிலமடைஞ்சு இருக்கு..

இன்று போயஸ் தோட்டத்திலும் அதே நிலை..இனி யார் அங்கே..?

சிவன் சொத்து குலநாசம்னு கிராமத்துல சொல்வதுண்டு..

ஆனால் திமுக வை தொட்டவனெல்லாம் ..
கெட்டான்..
என் தலைவருக்கும்..
தளபதிக்கும்..
கட்டிடகலையில் நல்ல ரசனை..

நிறைய மணிமண்டபம் கட்டி திறந்து
வைத்துள்ளார்கள்..

ஆணவ கொக்கரிப்புகளாளேயே  ஒன்றும் செய்யமுடியவில்லை விதைகள் எம்மாத்திரம்..!

Jayakumar Ariyalur

Wednesday, January 24, 2018

இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

தமிழகத்தில் இருக்கும்  கடவுள் மறுப்பாளர்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

ஒன்றை மிக​ தெளிவாக​ புரிந்து கொள்ளுங்கள். கடவுள் மறுப்பு கொள்கைக்காக​ இந்து மதம் விமர்சிக்கப்படுவதில்லை.

தமிழர்களை வேசியின் பிள்ளைகள் என்றும், தமிழ் மொழியை நீச​ மொழி என்றும், தமிழர்களை சூத்திரர்கள் என்றும், பிறப்பின் அடிப்படையில் தமிழர்களை  தாழ்ந்தவர்கள் என்றும் இந்து மத​ கோட்பாடுகள் கூறுவதால் தான் இந்து மதத்தை தமிழகத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் மற்ற​ மதங்களையும் விமர்சிக்கிறார்கள். ஆனால்  இந்து மத​ கோட்பாடுகளே தமிழர்களை இழிவு செய்வதால் இந்து மதத்தை மற்ற​ மதங்களை காட்டிலும் அதிகமாக​ விமர்சிக்கிறார்கள்.

மேலும் ஒர் இடத்தில் எந்த​ மதம் பெரும்பான்மையாக​ இருக்கிறதோ அதுவே கடவுள் மறுப்பாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படும். உதாரணமாக​ அமெரிக்காவில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சர்ச் வாசலில் நின்று கூட​ கிறிஸ்தவ​ மதத்தை விமர்சிப்பார்கள். அவர்களிடம் 'ஏன் கிறிஸ்தவ​ மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறாய், அமெரிக்காவில் இருக்கும் இந்து கோவில்களின் முன் நின்று ஏன் விமர்சனம் செய்வதில்லை' என்று எந்த​ அமெரிக்கரும் சென்று  கேள்வி கேட்பதில்லை. ஒர் இடத்தில் எந்த​ மதம்  பெரும்பான்மையாக​ இருக்கிறதோ அதுவே கடவுள் மறுப்பாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படும் என்ற​ பகுத்தறிவு அமெரிக்கர்களிடம் இருக்கிறது.

ராமர் எந்த​ கல்லூரில் Engg படித்தார் என்று கலைஞா் கேட்டதை போல் இயேசுவை பார்த்தோ அல்லாவை பார்த்தோ கலைஞா் கேட்பாரா?

கலைஞா் தானாக​ அந்த​ கேள்வியை கேட்கவில்லை. ராமர் பெயரை சொல்லி தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர​ திட்டத்தை ஆரிய சக்திகள் நிறுத்த​ முயன்றதால் தான் அந்த​ கேள்வியை கலைஞா் கேட்டார். 

இது போன்று இயேசுவின் பெயரை சொல்லியோ அல்லாவின் பெயரை சொல்லியோ தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டம் ஏதாவது தடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு தடுக்கப்பட்டால் கலைஞா் இது போன்ற​ கேள்வியை மற்ற​ மதத்தை பார்த்தும் முன்வைப்பார். தமிழகத்தில் அவ்வாறு ஒரு சம்பவம் கூட​ நடக்காத​ போது கலைஞருக்கு மற்ற​ மதத்தை பார்த்து அந்த​ கேள்வியை கேட்க​ வேண்டிய​ அவசியம் இல்லை.

இந்து மதத்தை யாரும் விமர்சிக்க​ கூடாது என்றால் இந்து மதத்தின்  கோட்பாடுகளை கூறி இந்து கடவுளின் பெயரை சொல்லி பிறரை ஒடுக்கும் செயல்களை இந்து மதவாதிகள் நிறுத்த​ வேண்டும்.

Terance JP

Tuesday, January 16, 2018

ஆண்டாள் ஏக்கமும், இன்றைய தாக்கமும்

ஆண்டாளின் கடவுளின் மேல் காமம்.

அதாவது ஆண்டாள் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.

‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். 

பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா?

 மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’

ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!

உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’

கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.

Sunday, January 14, 2018

இயற்கை விழா பொங்கல்

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

  பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும். ஆங்கிலத்தில் ‘Harvest Festival’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

மதத் தொடர்பாகப் பார்ப்பனர் கட்டிவிட்ட கதை

  என்றாலும் பார்ப்பனர் இதை மதத் தொடர்பு ஆக்குவதற்காக வேளாண்மை, வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முதன்மை ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து வேளாண்மையில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

  இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடாமல், இம்மாதிரியான இந்திர விழா பற்றி கிருட்டிணன் பொறாமைப்பட்டு தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்த தாகவும், இந்த இந்திரவிழா, கிருட்டிணமூர்த்தி விழாவாக மாறியதைக் கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு இந்த கிருட்டிண மூர்த்தி விழா ஈடேறாமல், நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி   விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாகயிருந்த கால் நடைகள், ஆடுமாடுகள் அழியும் வண்ணமாகப் பெரு மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள், கிருட்டிண மூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருட்டிணமூர்த்தி மக்களையும், ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை(கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதாகவும், இதனால், இந்திரன் வெட்கமடைந்து, கிருட்டிணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கிக் கிருட்டிணன் எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக மக்கள் முதல்நாள் எனக்காகப் பொங்கல் பண்டிகை யாகவும், பொங்கலுக்கு மறுநாள் பண்டிகை உனக்காக மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடும்படியும் சமரசம் செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான, ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

  இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது, மக்களுக்குக் கடவுளான கிருட்டிணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையும், மறுநாளைக்கு ஒரு கதையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்தி பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும், மூடநம்பிக் கையையும் புகுத்திவிட்டார்கள்.

பார்ப்பன ஆதிக்கத்தின் சுயநல சூழ்ச்சி

  நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படி இருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகசீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டுமென்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

  பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரமக் காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச்சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதற்கழகு.

– பெரியார் ஈ.வெ.ராமசாமி

 [விடுதலை