தொகுப்புகள்

Search This Blog

Monday, May 25, 2026

பொய்யின் வேகம் – உண்மையின் பொறுமை


இன்றைய அரசியல் சூழலில் ஒரு ஆபத்தான மாற்றம் தெளிவாகக் கண்ணில் படுகிறது.
ஒருகாலத்தில் அரசியல் என்பது கொள்கை, தத்துவம், வரலாறு, மக்கள் நல சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடந்தது. இன்று அதற்கு பதிலாக “யார் அதிகமாக வைரலாகிறார்கள்?” என்பதே முக்கியமான அளவுகோலாக மாறி வருகிறது.

சமூக வலைதளங்கள் தகவலை மக்களிடம் கொண்டு செல்லும் ஜனநாயக கருவியாக இருக்க வேண்டியது. ஆனால் நடைமுறையில் அது உணர்ச்சியை தூண்டும் குறும்படங்கள், அரை உண்மைகள், திட்டமிட்ட பொய்கள் மற்றும் சினிமா பாணி அரசியலின் மேடையாக மாறிவிட்டது.

இந்த சூழலில் நடிகர் விஜயின் அரசியல் அணுகுமுறை குறித்து பலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
வெறும் கோபம், ஏமாற்றம், ஆட்சிக்கு எதிரான உணர்ச்சி போன்றவற்றை தூண்டி, அதனை அரசியல் ஆதரவாக மாற்றும் முயற்சி சமூக வலைதளங்களில் தீவிரமாக நடக்கிறது. உண்மைக்கு ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், தொடர்ந்து ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூறினால் அது உண்மையாக தோன்றும் என்ற மனநிலையே இன்று சில பிரச்சாரங்களின் அடிப்படையாக உள்ளது.

ஒரு நிமிட இன்ஸ்டாகிராம் ரீலில் பேசப்படும் பொய்,
பத்து வருட ஆட்சிச் சாதனையை விட வேகமாக மக்களை சென்றடைகிறது.

ஏன் இப்படியாகிறது?

ஏனெனில் பொய் எளிமையானது.
அது யோசிக்க வேண்டிய அவசியம் தராது.
அது கோபத்தை தூண்டும்.
ஒரு எதிரியை காட்டும்.
ஒரு நிமிடத்தில் உணர்ச்சியை கிளப்பிவிடும்.

ஆனால் உண்மை அப்படியல்ல.

உண்மை விவரங்களை கேட்கும்.
வரலாற்றை புரிந்துகொள்ளச் சொல்லும்.
கொள்கைகளை அறியச் சொல்லும்.
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை, கல்வி, பொருளாதாரம் போன்ற ஆழமான விஷயங்களை பேசும்.

அதனால்தான் திமுக போன்ற கொள்கை அடிப்படையிலான இயக்கங்களுக்கு சமூக வலைதள அரசியலில் சவால்கள் அதிகமாக இருக்கின்றன.
திராவிட இயக்கம் என்பது ஒரு தேர்தல் இயந்திரம் மட்டும் அல்ல; அது நூற்றாண்டு சிந்தனை. சமூக மாற்றத்தின் வரலாறு. சாதி ஒழிப்பு, கல்வி உரிமை, பெண்கள் முன்னேற்றம், மாநில சுயாட்சி போன்ற அடித்தள கருத்துகளால் உருவான இயக்கம்.

ஆனால் இன்றைய டிஜிட்டல் அரசியலில்,
“என்ன செய்தார்கள்?” என்பதைக் காட்டிலும்
“எப்படி பேசுகிறார்கள்?” என்பதே முக்கியமாகி வருகிறது.

ஒரு அரசு உருவாக்கிய திட்டத்தை விளக்க பல நிமிடங்கள் தேவைப்படுகிறது.
ஆனால் “அவர்கள் எதுவும் செய்யவில்லை” என்று சொல்ல சில விநாடிகள் போதும்.

அதுவே இன்றைய தகவல் போரின் மிகப்பெரிய சிக்கல்.

இருப்பினும் வரலாறு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லுகிறது:
பொய்கள் வேகமாக ஓடும்; ஆனால் நீண்ட தூரம் செல்லாது.
உண்மை மெதுவாக நடக்கும்; ஆனால் நிலைத்து நிற்கும்.

காலத்தால் சோதிக்கப்பட்ட இயக்கங்கள் உணர்ச்சியால் மட்டுமே உருவாகவில்லை.
அவை கொள்கையால் கட்டப்பட்டவை.
மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவை.

புதிதாக திறக்கப்படும் ஒரு கடைக்கு முதல் சில நாட்களில் கூட்டம் அலைமோதலாம்.
ஆனால் தரம் இல்லையெனில் அந்த கூட்டம் விரைவில் குறைந்து விடும்.
அதே நேரத்தில் தரத்தையும் நம்பிக்கையையும் காக்கும் கடை மெதுவாக வளர்ந்தாலும், நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

அரசியலும் அதுபோலத்தான்.

உணர்ச்சியை மட்டுமே விற்பனை செய்யும் அரசியல் சில காலம் பரபரப்பை உருவாக்கலாம்.
ஆனால் கொள்கை, சாதனை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீது நிற்கும் அரசியல்தான் இறுதியில் மக்களின் நம்பிக்கையை வெல்லும்.

ஏனெனில் ஒரு நாட்டின் எதிர்காலம் ரீல்களால் நிர்ணயிக்கப்படாது;
நிலையான சிந்தனைகளால் தான் நிர்ணயிக்கப்படும்.

Friday, May 15, 2026

தடம் மாறும் அரசியல்

நீங்கள் இப்போது முகநூலைக் கவனித்தால் ஓர் உண்மை புரியும். 

இத்தனை வருடங்களாய் சட்டமன்ற நிகழ்வுகளையோ பாராளுமன்ற நிகழ்வுகளையோ தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்குப் பத்து பதிவுகள் போடுகின்றனர். அவர்களில் 90% பெண்கள். 

அப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பலரையும் தேடித் தேடிப் படித்தேன். 
செல்லத்துக்கு டிரஸ்ஸை மாத்தி விடுங்கடா 

கருப்பு கோட்டைக் கழட்டிட்டு இன்னிக்கு புளூல வாங்கடி தங்கம்.

என் ஆளுக்கு நல்ல தூக்கமில்ல போல. டல்லா இருக்காரு.

சி.எம் ஷோஃபாவுல நிறைய இடம் காலியா இருக்கே. நானும் அங்க வந்துரட்டுமா புஜ்ஜிமா.

டை அடிச்சிட்டு வெள்ளை வேட்டி சட்டைல வாங்கண்ணா. அப்பத்தான் மாஸ் அள்ளும். 

நீ என்னத்தை வேணாலும் உளறுண்ணா. நா உன்னயவே பாத்துட்டிருக்கேன். 

நீ எதுவுமே செய்ய வேணாம் கியூட்டான்டி. இப்பிடி தினம் வந்து போஸ் கொடுமா.

இவைதான் அந்த மாதரசிகள் அடைந்திருக்கிற திடீர் அரசியல் விழிப்புணர்வின் எச்ச சொச்சங்கள்.. சீரியஸாய் அரசியல் பேசுகிறவர்களும் ' எங்களுக்கு ஓட்டுப் போட்ட கட்சியோட ஆதரவுலதான் நீங்க முதலமைச்சரா உக்காந்திருக்கீங்க ' என்று உதய் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம் என்று அறிவுரை வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள்  சட்டமன்றத்தைக் கூட  audio luanch நடக்கிற இடமாகவே பார்க்கிறார்கள்.இன்னும் சிலர் இவரை பேரறிஞர் அண்ணாவோடெல்லாம் ஒப்பிட்டு  எரிச்சல்படுத்துகிறார்கள்.
அண்ணா காமராஜரைப் பார்க்கப் போனது media promotionகாக அல்ல. ஆனால் இவர் நடத்திக் கொண்டிருப்பது அக்மார்க் political shooting.  தளபதி பட்டத்தை ஸ்டாலினிடம் இருந்து பிடுங்கியது போல் இப்போது புகழேந்தி ஐயா என்கிற brand name க்கும் குறி வைத்திருக்கிறார். இனி நாகரிக அரசியலுக்கும் நான் மட்டும்தான் authority என்கிற திமிரான முன்னெடுப்பன்றி வேறில்லை. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் லாட்டரி ஆன்டியின் துவார பாலகர்களை மட்டும் தனியே சந்தித்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து விடும் என்பதற்காக மீடியாக்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிற கண்கட்டு வித்தை.

 Vijay TV நடத்தும் செல்லக் குரலுக்கான தேடலுக்கு fire விடுவது போல் தமிழக மக்கள் இந்தச் செல்ல முதலமைச்சருக்கான தேடலின் முடிவில் எந்த சீனைப் பார்த்தாலும் புளகாங்கிதம் அடைந்தபடி Tv க்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். தேடிப் போன அரசியல் தலைமைகளின் வீடுகளிலும் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர மற்ற இடங்களில் பிரபல நடிகர் வீட்டுக்கு வந்ததால் உருவான திடீர் பரவசத்தையும் கொஞ்சலான உடல்மொழியையும் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அரசியல் தலைவர்களின் குடும்பங்களே இப்படி நடந்து கொண்டால் சாதாரண ஆன்டிகளை என்ன சொல்ல முடியும்?

இன்னும் கொஞ்ச நாட்களில் சட்டமன்றத்தில் விஜய்யை எதிர்த்து யாராவது பேசினால் இந்த அரை மேக்கப் ஆன்டிகள்
" நீ பேசாம திரும்பி நடிக்க வந்துருண்ணா. இவனுகள்லாம் காட்டு மிராண்டிகள்." என்று அழுத விழிகளோடு வீடியோ போடுவார்கள்.ஆண் ஆச்சர்யக் குறிகள் ' சட்டமன்றத்திற்குள் புகுந்து எதிர்கட்சியினரை சுட்டுக் தள்ளும்படி ' போலீஸை வலியுறுத்தி மிரட்டல் ரீல்ஸை வெளியிடுவார்கள்.
தரவுகள் மக்கள் பிரச்சினைகள் அறிவுப் பூர்வமான விவாதங்கள் தவறுகளைச் சுட்டுதல் தமிழகத்தின் வளர்ச்சி சமூக நீதி நலத்திட்டங்கள்  மதச்சார்பின்மை எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. இவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது தனிநபர் சாகசத்துக்கான கொண்டாட்டம். அதற்கு எதிராக கருத்துச் சொல்லும் அத்தனை பேரும் toxic boomers.

அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் உயர் அரசு அதிகாரிகள் காவல்துறை என்று மொத்தச் சமூகமும்  முழு அரசியல்வாதியாக மாறி விட்ட காரியக்கார நபரை இன்னும் உச்ச  நடிகராகவே கருதிப்  புளகாங்கிதம் அடைகின்றனர். இதன் விளைவுகளை நாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக அனுபவிக்கப் போகிறோம். Full mejarity யில் ஜெயித்திருந்தால் விஜய் சட்டமன்றத்தில் காட்டியிருக்கிற முகமே வேறு. வேல் பெல் கோஷ்டிகள் தவெகவில் முழுமையாக ஐக்கியமாகிற நாளில் பக்கா மாஸ் தன் original முகத்தை உலகிற்கு வெளிக்காட்டுவார். இப்போது fire விட்டுக் கொண்டிருக்கிற innocent முற்போக்குகளுக்கு அப்போதுதான் பித்தம் தெளியும். காரியக்கார முற்போக்குகள் அப்போதும் தம் கட்டிப் பேச மார்க்ஸ் பெரியார் ஏங்கல்ஸ் அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களில் இருந்து ஏதாவது ஒரு வரியை இப்போதே  கண்டுபிடித்து பாதாள அறையில் ஒளித்து வைத்திருப்பார்கள். 

மொத்தத் தமிழகமும் ஒரு நடிகன் மீதான வெறியில் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்ப்பதற்கே எரிச்சலாய் இருக்கிறது. இந்த எழவுக்காகவா அத்தனை தலைவர்களும், போராட்டங்களும். இரண்டே மாதங்களில் நோகாமல் முதலமைச்சராவது எப்படி ? என்றொரு புத்தகம் எழுதினால் தமிழ்நாடு உலகப் புகழை அள்ளும் வாய்ப்பிருக்கிறது.