தொகுப்புகள்

Search This Blog

Showing posts with label கடவுள் ?. Show all posts
Showing posts with label கடவுள் ?. Show all posts

Friday, September 14, 2018

விநாயகர் உனக்கு சொந்தமா ?

திராவிட மக்களின் வழிபாட்டு தெய்வங்களின் வரலாறுகளை புராண, ஆபாச குப்பை கொண்டு மறைத்துவிட்டனர், சுயனலமிகளான பார்ப்பனர்கள்! புத்தரின் 2000 அம்சங்களில் தலையாயது யானை பிறவியெடுத்த புத்தரின் அவதாரம்! புத்தரின் சிஷ்ய கோடிகளாக சேர்ந்த பார்ப்பன சிந்தனையாளர்களே, பிழைப்பிற்காக இத்தகைய கதைகளை(புராணங்களை) இட்டுக்கட்டினர்! புத்தர் உபயோகித்த, சாதாரண மக்கள் புழங்கிய, பிராகிருதத்தை விடுத்து சமஷக்ருதத்தை புகுத்தினர்! பின்னர் சமயம் பார்த்து பவுத்த அரசுகளை வீழ்த்தி பார்ப்பன ஆதரவு அரசுகளை அமைத்த போது, பவுத்த வேடமிட்ட பார்ப்பன பூசாரிகள் வினாயகனையும், விஷ்ணுவையும் வழிபட ஆரம்பித்தனர்! சக வம்சத்து அரசர்கள் தாஙகள் பவுத்தர்கள் என்று கூறிக்கொண்டனர்! மீண்டும் பார்ப்பன மதம் தலையெடுத்தவுடன் விஷ்ணு கோத்திரத்துடன் வேத மதத்தவர் ஆயினர்! இப்போதும் வைணவர்கள் மற்ற சைவ வேத பிரமாணங்களை ஏற்றுக்கொள்வதில்லை!

முதலில் பிள்ளையார் என்பது ஒரு கிராம தேவதையாகதான் நம் முன்னோர் வழிபாட்டு வந்தனர். ஆனைமுகம், மனித உடல் கொண்ட அந்த கடவுள் சிவனின் பிள்ளையானது பின்னர் வந்த ஆரியர் உண்டாக்கிய கதைதான்.

முருகன் என்ற குறவர் கடவுளை ஸ்கந்தன் என்று சிவனின் இந்திரியத்தில் இருந்து பிறந்த குழந்தை என்று மாற்றி கதை உருவாக்கியவர்களும் அவர்களே.

திருப்பதி மலை மேல் இருப்பதும் அந்த ஊர் மக்கள் கும்பிட்ட வன தேவதைதான். ஆனால் அதனை வெங்கடேச பெருமாளாக மாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். இன்றும் திருப்பதி சாமியின் பின்புறம் பார்த்தால் தெரியும், நீண்ட சடை இருப்பது தெரியும். அது பெண் தெய்வத்தின் சிலை தான்.

அய்யப்பன் கடவுள் கூட உள்ளூர் மலை மக்கள் வழிபட்ட கடவுள் தான். அதற்கு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (ஆணுக்கும், பெண் வடிவம் தரித்த ஆணுக்கும்) பிறந்த குழந்தை என்று கதை கட்டி அங்கும் கல்லா கட்டினார்கள்.

நம் முன்னோர்கள் எந்த வித தடையும் என்றி நேரடியாக கடவுளை தொட்டு வணங்கிய காலம் மாறி இன்று பார்ப்பனர்கள் மட்டும் தொட்டு வணங்கவும், நான் தொலைவில் நின்று பார்த்து விட்டு திரும்பும் அவலம் நடைபெறுகிறது.

Monday, October 24, 2016

மரமாகிய மனிதர்கள்

கண்டிப்பாக படியுங்கள்.

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.

Sunday, October 16, 2016

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?

*அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்*

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.

எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.

உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன்.

அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன்.

நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமி யிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்?

நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன்.

சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன்.

என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள்.

க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசை யிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம்.

அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.

பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம்.

அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A Good One For Superstitious People" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று.

மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள்.

பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள்.

ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்....

நன்றி:- whatsapp

Saturday, October 1, 2016

உண்மையான கடவுள் யார்.....?


உலகில் பல கடவுள்கள் &  மதங்கள் இருக்கலாம்,  
ஆனால் உண்மையான கடவுள் யார்.....?


உண்மையாக ,சத்தியத்தின் வழி நடக்க சொல்லும் கிரிஸ்துவத்தின் ஏசுவா....?

அமைதியையும்,நன்மார்க்கத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் நபிகளா....?


அனைத்தும் சமம் என்று கீதையில் கூறும் இந்துக்களின் கண்ணனா.....?


ஆசையை துறக்க சொல்லும் பவுத்த மதத்தின் கெளதமபுத்தரா...?

இல்லை ,


சிவனா..?பிரம்மாவா...?மேரி மாதாவா...? ஒருவரும்  இல்லை ஒன்றுதான்....

தாய் தம் குழந்தைகளிடம் காட்டுவதும்,
காதலன் காதலியிடம் காட்டுவதும்,
கணவன் மனைவி இடம் காட்டுவது போல மட்டும் இல்லாமல் ,
நமக்கு அறிமுகம் இல்லாத,புதியவர்கள்,சக பிரயாணிகள்...
நம்மை பார்த்து உதிர்க்கும் சிறு புன்னகை, சிறு உதவும் தருணங்கள்,அல்லது ஐந்தறிவுள்ள விலங்கினங்கள் செய்யும் கொஞ்சலும், சிறு குழந்தைகளின் சிரிப்பும், இக்காரணிகளை உருவாக்கும்......

அன்பும், அவை வெளிவரும் உயிர்களும்தான் கடவுள் 




நன்றி- செந்தில் நாதன்

Monday, September 26, 2016

"சாத்தான் மிக பெரியவன்"

"சாத்தான் மிக பெரியவன்"

வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது.

அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல்.

முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி.

வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார்.

செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்..

அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்..

தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்டாலும் எப்பேர்பட்ட கொலை பாதகத்தை செய்தாலும் எல்லா மத கடவுள்களுமே வெறுமனே வேடிக்கை பார்ப்பதையே தொழிலாக கொண்டிருக்கின்றன.

பெண்களின் இயல்பான உடல்மாற்ற மாதவிடாயை தீட்டு என ஒதுக்கி கூனி குறுக வைக்கிற இந்து மதம். பெண்களோடு கடவுளர்கள் புணர்கிற காட்சிகளை கோவில்களில் சிலை வடித்து புனிதபரவசத்தில் கையெடுத்து கும்பிட சொல்கிறது.

ஆயிரம் சமத்துவம் பேசினாலும் கன்னியாஸ்திரிகள் திருப்பலி நிறைவேற்ற முடியாது. திருச்சபையின் அதிகாரம் பொருந்திய பொறுப்புகளான ஆயர், கர்தினால், போப் உள்ளிட்ட பதவிகளை பெண்கள் நினைத்து பார்க்கவும் கூடாது என்கிறது கிறிஸ்தவம்.

புர்கா ஒழுங்காக அணியாத பெண்ணை கல்லால் அடித்து கொன்றும் கால் விரல் நகம் தெரிய நடந்த பெண்ணின் கால்களை வெட்டியும் காரணமே இல்லாமல் பெண்களை விவாக ரத்து செய்து, அதுவும் சம்பந்தபட்ட பெண் உட்பட யார் அனுமதியும் தேவையில்லாமல், ஆண் ஐந்து பெண்கள்வரை மணந்து கொள்ளலாம் என கழுத்தில் மிதிக்கிறது இஸ்லாம்.

எல்லாம் வல்லவரான, எங்கும் நிறைந்தவரான, தூணிலும் துரும்பிலும் இருக்க கூடிய , முக்காலமும் உணர்ந்த, நன்மையே உருவான, கருணை மிகு கடவுள் அகோர சிரிப்போடு இவைகளை வேடிக்கை பார்த்து பொழுதுபோக்குவதன்றி வேறொன்றும் செய்தானில்லை.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், கடவுளை உண்டாக்கிய மனிதன் தான் சாத்தானையும் உண்டுபண்ணினான். ஆனால் உங்கள் கடவுளர்களை விட சாத்தான் மிக பெரியவனும் அதி வல்லமையுமுடையவனாய் இருக்கிறான்.

ஆம், உங்கள் அறியாமையும் அறிவுக்கொவ்வாத மூடபழக்கவழக்கங்களும் மதவெறியும் ஆதிக்கவெறியும் தான் அந்த சாத்தான். அந்த சாத்தானை ஒழிக்க வெறுமனே கற்கள் போதாது, மந்திரங்களோ கயிறோ அந்த சாத்தானை அசைத்துகூட பார்க்காது.

தேவையெல்லாம் பகுத்தறிவு. அதுதான் சாத்தானை கொல்லும் ஒரே ஆயுதம். நீங்கள் பகுத்தறிவை கைக்கொள்ளாதவரையில் சாத்தானுக்கு நீங்கள் பலியாவதை எந்த பெரிய கடவுளாலும் தடுக்க முடியாது. தெளியுங்கள்!

நன்றி:- Leo Joseph D

Sunday, September 18, 2016

கடவுள் பயமே வேண்டாமா?

கடவுள் பயமே வேண்டாமா?"

பிறந்ததில் இருந்து இன்று வரை நீங்கள், நான், அனைவருமே, கடவுளோ, வேதமோ செய்யக்கூடாது என்று கூறிய விசயங்கள் எத்தனையோவற்றை செய்துவிட்டு, இதெல்லாம் சின்ன தப்பு, கடவுள் நம்மை கண்டுக்கமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம் கூறியிருக்கின்றோம். யாராவது மறுக்கின்றீர்களா? சிறு சிறு பொய்கள் சொல்லும் விசயத்தில் ஆரம்பித்து, ஏமாற்றுதல், பிறர் மனம் நோகச் செய்தல்.. இப்படி தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது.

இந்த கடவுள் பயம் விசயத்தில் இன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலைதான் அதிகம் காண்கின்றோம். அவரவர் வசதிக்கேற்ப தவறுகள் செய்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்து கொள்கின்றோம். சின்ன பென்சிலை திருடியவன், நான் என்ன தங்க செயினையா திருடினேன், இது பெரிய தவறு அல்ல என்று நினைக்கின்றான். தங்க செயின் திருடுபவன் நான் என்ன கடையையேவா கொள்ளை அடிச்சேன். ஒரே ஒரு செயின். அதுவும் அந்த கடைக்காரன் கொள்ளை அடிச்சு சேர்த்தது. இதை கடவுள் கண்டுக்கமாட்டாரு.. அந்த கடைக்காரனோ அத்தனை கடவுள் படத்தையும் கடையில மாட்டி வச்சிட்டு, கிலோவுக்கு கால் கிலோ தாமிரம் சேர்க்கிறான். இப்படித்தான் வியாபாரம் பண்ணனும். இது ஏமாத்து கிடையாது. கடவுள் கோவிச்சுக்கமாட்டாருன்னு சமாதானம் சொல்லிக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய், சாமி உனக்கு தங்கத்தாலே தேர் வாங்கித்தர்றேன்னு சொல்லி, சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறான்.

நான் மேலே சொன்ன அவலங்கள் இன்றைக்கு நடைமுறையில் இல்லயென்று உங்களில் யாரேனும் மறுக்க முடியுமா? இதேபோல்தான் இன்றைக்கு கடவுள் சம்பந்தமான எல்லா விசயங்களுமே அவரவர் வசதிக்கேற்றார்போல் flexible ஆக வளைத்துக் கொள்ளும் விசயமாயிற்று. தவறுகளை செய்துவிட்டு காப்பதற்கு கடவுள் இருக்கின்றார் என்று கடைசியில் மனிதன் சென்று சேரும் இடமாக கடவுள் மாறிவருகின்றார்.

வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு இப்போது யாரும் கடவுளுக்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த எண்ணிக்கை குறைவுதான். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் என்ற அளவிற்கு மனித நாகரிகம் சீர் கெட்டுக் கிடக்கின்றது. ஆலயங்களிலேயே தவறுகள் நடக்கின்றன. தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்களும் இந்த பூமியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடவுள் பயம் குறைவதால் உண்டாகும் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. எனது எதிர்பார்ப்பு, கடவுள் பெயரால் நடந்து வந்த அக்கிரமங்கள் குறையும். கடவுள் விசயம், சென்டிமென்ட் என்று சட்டம் தயங்கும் விசயங்களில், நாளை இந்த நம்பிக்கை சென்ற பின்பு சட்டம் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை இன்னும் பயனுள்ள விசயங்களில் செலவழிக்க இயலும்.

நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு கடவுள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற பயங்கள்தான் இல்லை. சட்டத்திற்கு பயப்படுகின்றேன். தவறு செய்ய பயப்படுகின்றேன். தவறு செய்தால், மாட்டிக்கொண்டு அதனால் ஏற்படப்போகும் மான, அவமான உணர்வு விசயங்களுக்கு பயப்படுகின்றேன். இதையெல்லாம் தாண்டி, என்னையே நீ செய்தது சரியா என்று கேட்கும் எனது மனசாட்சிக்கு பயப்படுகின்றேன். இந்த பயங்கள் எல்லோருக்குமே இருக்கின்றது. இந்த உலகில் வாழ இந்த மூன்று பயங்களுமே போதுமானது என்பதுதான் எனது எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் இந்த நம்பிக்கைகளால் நன்மைதான் எனும்போது விட்டுவிடலாம். அதைத்தான் நானும் இதுநாள் வரை செய்து வருகின்றேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஒதுங்கி, எனது நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்கும் செயலை செய்யக்கூடாது என்று எண்ணுகின்றேன். ஆனால், நடக்கும் சமூக அவலங்களைப் பார்க்கும்போது நாம் ஒதுங்குவது தவறோ என்று தோன்றுகின்றது.

நன்றி..அறுசுவையில் இருந்து பாபு என்ற வாசக நண்பர்...