தொகுப்புகள்

Search This Blog

Thursday, January 31, 2019

சுடப்பட்ட காந்தியின் கொடும்பாவி

காந்தியின் கொடும்பாவி
=======================
.
காந்தியின் 'கொடும்பாவி'யை சுட்டுக் கொல்லும் இந்து மகாசபையினரின் வீடியோ எனக்கு அதிர்ச்சியை அளித்தாலும்  பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஆரம்பம் முதலே இவர்கள் இதே நிலையில்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதே இந்து மகாசபையின் ஒரு தலைவர்தான் ஓரிரு வருடங்கள் முன்பு கோட்ஸேவுக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். இப்போது இவர்கள்.

இன்று காந்தி படத்தை சுட்ட அந்தத்தலைவிக்கு தெரிந்திருக்காது: சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஹிந்து மகாசபா துவங்கப்பட்ட போது  அதற்கு வருகை தந்து சிறப்பித்தவர்களுள் காந்தியும் ஒருவர். அப்போது வெறும் மத-ரீதியான ஆன்மீக இயக்கமாக மட்டுமே துவக்கப்பட்ட இது பின்னரே தீவிரவாத இயக்கமாக உருமாறியது. அதற்கு முக்கிய காரணிகள் இருவர்: வீர் சவர்க்கர் மற்றும் ஹெட்கேவார். முதலாமவர் காந்தியின் படுகொலை சதியில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் (பின்னர் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலையானார்.). இரண்டாமவர் தனியாகப் பிரிந்து ஆர்எஸ்எஸ் எனும் இன்னொரு இயக்கத்தை துவங்கினார்.

ஆர்எஸ்எஸ் வருகைக்குப் பிறகு இந்து மகாசபையின் கொள்கைகளுக்கு வேறு ஒரு போட்டி ஆள் வந்து விட்டதால் அவர்கள் 'மவுசு' குறைய ஆரம்பித்து காணாமல் போயினர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக திரும்ப முளைத்து இந்த கோட்ஸே வழிபாடு தொடர ஆரம்பித்து வருகிறது. காரணம் மத்தியில் மாறிய ஆட்சிதான் என்று சொல்ல வேண்டியதில்லை. நேருவை காய்ச்சுவது போல வெளிப்படையாக விமர்சிக்கா விட்டாலும் ஆர்எஸ்எஸ்சுக்கோ பாஜகவுக்கோ காந்தி மீது பெருத்த உவப்பு இல்லை. அவரின் அகிம்சை, மத நல்லிணக்கம், சமரச தீர்வு வழிமுறை போன்ற எதுவுமே இவர்களுக்கு ஒவ்வாதவை. அதனால்தானோ என்னவோ தூய பாரத திட்டத்துக்கு ப்ராண்ட் அம்பாஸடராக காந்தியை நேர்ந்து விட்டு விட்டார் பிரதமர்.

அது தவிர்த்துப் பார்த்தால் காந்தி ஒழிந்தது நல்லதுதான் என்று எண்ணும் நிறைய பேர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருக்கவே செய்கிறார்கள். வாக்கரசியல் காரணமாக அவர்களால் வெளிப்படையாக இப்படி கொடும்பாவி நட்டு பொம்மை துப்பாக்கியால் சுட முடியவில்லை. சுட்டவன் படத்துக்கு  மாலை அணிவித்து வணங்க இயலவில்லை. ஆகவே, மாறாக, சுட்டவனின் சதிக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டவன் (சவர்க்கர்) படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிகிறது.

ஆனால் காந்தியை கொன்று வன்முறை வழியில் இந்து மதத்தை கொண்டு செல்ல இவர்கள் தீட்டிய திட்டம் பலிக்கவில்லை. இந்தியாவுக்காக, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, மத நல்லிணக்கத்துக்காகவே காந்தி சாக விரும்பி இருக்கிறார். ‘துப்பாக்கி குண்டுகள் துளைத்து ஆனால் வலியில் கூச்சலிடாமல் கடவுள் பெயரை உச்சரித்து காந்தி உயிரிழந்தான் என்று செய்தி வந்தால் மட்டுமே நீங்கள் அழைக்கும் மகாத்மா பட்டத்துக்கு ஓரளவேனும் தகுதி உடையவனாவேன்,’ என்று சொன்னவர். அவர் விருப்பத்தையே கோட்ஸே நிறைவேற்றி இருக்கிறான். எதிர்பார்த்தபடியே தேசமே அவர் மறைவில் அதிர்ந்து போய், நேருவின் அதிரடி செக்யூலர் முயற்சிகளுக்கு துணை நின்றது. இந்துத்துவ கொள்கைகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது. காந்தியின் சாவுக்கு ஒரு அர்த்தம் வந்தது.

ஆனால் இப்போது அந்த சாவு வீணாகப் போகும் ஆபத்தில் இருக்கிறோம். இந்து முஸ்லீம் விரோதங்கள் திரும்பவும் கிளறப்படுகின்றன. சமூகங்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் கனஜோராக நடக்கின்றன. காந்தி முனைந்து, கடும் முயற்சியில் சாத்வீகப்படுத்திய இந்து மதத்தின் வெட்டப்பட்ட கொம்புகள் திரும்ப வளர்க்கப்படுகின்றன. தொடர்ந்து சீவப்படுகின்றன.

காந்தியை நேரடியாக கொல்ல முடியாமல் போனவர்கள், அதற்கு பதிலாக காந்தியின் இந்தியா, அவர் கனவு கண்ட நல்லிணக்கம், சாதி மத சமத்துவம், சமரச வழியிலான தீர்வுகளை ஒட்டிய வாழ்வு நெறிகள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
காந்தியின் அன்புக்கும் அகிம்சைக்கும் அவசியமில்லாமல் செய்து விட்டால் காந்தி என்று ஒருவர் இருப்பதோ இல்லாததோ பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லைதானே?

எனவே, காந்தியின் ‘கொடும்பாவி’ சுடப்படுவதைக் கண்டு நாம் இப்போது அதிர்ச்சி அடையத்தேவையில்லை. காந்தி உண்மையாகவே சுடப்பட்டு செத்தும் போய் விட்டார். இப்போது இரண்டு மூன்று காமெடியன்கள் தீபாவளி துப்பாக்கியால் அவர் படத்தை சுடுவது நமக்கு கோபம் தரத்தேவையில்லை. ஏனெனில், நல்லவேளையாக இந்தக் காமெடியன்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லை.

ஆனால் பங்கு இருக்கும் இயக்கங்கள் அவரின் கனவு இந்தியா, அவரின் சத்தியாகிரகம், அவர் உழைத்து உயிரையே தந்த மத நல்லிணக்கம் போன்றவற்றை  கண் முன்னே தொலைக்க முனைவது கண்டு அதிர்ச்சி கொள்வோம். கோபம் கொள்வோம். அந்த மதவாத, பிரிவினை சக்திகளுக்கு அதிகாரத்தில் பகிர்வு தர உறுதியாக மறுப்போம். அந்தக்கொள்கைகளை திரும்பவும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டி உழைப்போம்.

நன்றி :- Sridhar Subramaniam