பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.
“பராசக்தி”க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்! “பராசக்தி” படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது.
படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி. “பராசக்தி”க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர்.
தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்’ சீனிவாசன் இருந்தார். இவர், “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அவர் “பராசக்தி” படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: “பராசக்தியில் ஆக்ரோஷமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை”.
இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்! “பராசக்தி” பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், “பராசக்தி”க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் “ஹவுஸ்புல்” தான்.
படத்தின் “கிளைமாக்ஸ்”, பராசக்தி கோவிலிலேயே சிவாஜியின் தங்கையாக நடிக்கும் ஸ்ரீரஞ்சனியை பூசாரி கற்பழிக்க முயலும் காட்சியாகும். நடந்ததை அறிந்த சிவாஜி, பூசாரியை பழிவாங்க பராசக்தி சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார். “நீ தீர்க்காயுசா இருப்பே” என்று ஒரு பக்தனிடம் பூசாரி கூறும்போது, “ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள்” என்ற குரல் கேட்கும்! சிவாஜியின் குரல்தான் அது!
பூசாரி:_ யார் அம்பாளா பேசுவது?
சிவாஜியின் குரல்:_ அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?
பூசாரி:_ தாயே! பராசக்தி!
சிவாஜி (வெளியே வந்து):_ இந்த பராசக்தி உனக்குத் தாய். என் தங்கை கல்யாணி உனக்கு தாசி! அப்படித்தானே! மானங்கெட்டவனே!
பூசாரி:_ அப்பனே! இது என்ன விபரீதம்?
சிவாஜி:_ விபரீதம் வராது என்று எண்ணித்தானே என் தங்கையோடு விளையாடி இருக்கிறாய்?
பூசாரி (பராசக்தி சிலையைப் பார்த்து):_ தாயே, பராசக்தி!
சிவாஜி:_ அது பேசாது. பேசமுடியும் என்றால், நீ என் தங்கையின் கற்பை சூறையாடத்துணிந்தபோது, “அடே பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில்” என்று தடுத்திருக்கும்.
உன்னிடம் சிக்கிய போது, இந்தப் பராசக்தியை என் தங்கை ஆயிரம் முறை அழைத்தாளாமே! ஓடி வந்து அபயம் அளித்தாளா?
பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து):_ பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!
சிவாஜி:_ தேவி பக்தனே! மனித உதவியை ஏன் நாடுகிறாய்? உன் தேவியின் கையில் சூலம் இருக்க, சுழலும் வாள் இருக்க ஏன் பயந்து சாகிறாய்? (இந்த சமயத்தில், சிவாஜியை வெட்டுவதற்கு அரிவாளை பூசாரி ஓங்க, சிவாஜி அதைப்பிடுங்கி பூசாரியை வெட்டுவார்.)
சிவாஜி மீதான வழக்கு விசாரணை படத்தில் ஏறத்தாழ கால்மணி நேரம் இடம்பெறும். குற்றச்சாட்டுகளை மறுக்காமல் சிவாஜி சொல்வார்: “கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக!
பூசாரியைத் தாக்கினேன்_ அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல் வேஷமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!” இவ்வாறு சிவாஜி கூறும்போது, ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் தியேட்டரை குலுங்கச் செய்யும். “பராசக்தி”யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
“காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்” என்று சில விமர்சகர்கள் எழுதினர். “பராசக்தி” படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது.
இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், “பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்” என்றும் கூறியுள்ளார். “பராசக்தி” படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.
நன்றி:- திரை கதம்பம்
அத வச்சிகிட்டுதானே கருணாநிதி இன்னும் பொழப்பு நடத்திகிட்டு இருக்காரு.....
ReplyDelete2g spectrum gnabagathukku varuthu venam pazya pallavi, adhu votu podum makkalukkgaga,verum vasanam mattum podhadhu,vazkkaiyil pradhipalikka vendum.
ReplyDelete