தொகுப்புகள்

Search This Blog

Sunday, April 22, 2012

முடிந்தால் இதை தடுத்து பாரு ?



இன்று பூமி தினம்
அனைவருக்கும் வாழ்த்துகள் ......
எப்படியான
அழிவை இந்தப் பூமி எதிர்கொள்ளுகின்றது?

மனிதர்களால்,
அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞானத்தால்
இந்த அழிவைத் தடுத்து நிறுத்த
முடியுமா?

இன்று பூமியிலுள்ள பலரிடம்
இருக்கின்ற மிகப் பொரிய கேள்விக்கான
விடையினைத் தேடுவோம் ....

உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய உலகை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குளோபல் வார்மிங் என்று கூறப்படும் உலகம் வெப்பமயமாதல் என்ற நிகழ்வு தான் உலக மக்களின் வயிற்றில் இன்று புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் நாளுக்கு நாள் அரசுகளின் புரிந்துணர்வு அடிப்படையில் திறப்பு விழா கொண்டாடும் தொழிற்சாலைகளாலும், அதிக அளவில் நகர்வலம் வரும் வாகனங்களாலும், உணவு தானியம் படைக்க, நிலத்திற்கு அதிக அளவில் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை படைப்பதாலும், 50 கிராம் எடை கொண்ட பொருளை சமைக்கக்கூடிய 5 கிலோ சுமக்கும் திறனுடைய பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதாலும் புவி இன்று வெப்பம் கூடி எரிமலையாய் எரியத் தொடங்கியுள்ளது.

உலகம் வெப்ப மயமானால் என்ன பிரச்சனை? என நீங்கள் கேட்கலாம். உலகம் வெப்பமயமாதலால் சூரிய வெப்பம் உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத்தட்டுபாடு, உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்பு, வறுமை, பருவம் மாறி மழை பெய்தல், வெயில் தாக்கம், பனிமலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் வெப்பமயமாதல் என்பது அணுகுண்டை விட ஆபத்தானது.

புவி வெப்பம் அதிகரித்து வருவது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். 1975ம் ஆண்டிலிருந்து கடல் மட்டம் உயர்வு அதிக அளவில் உள்ளதாக கூறுகின்றனர்.

உலக சராசரி கடல் மட்டம் கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் 2 மி.மீட்டர் வரை உயர்ந்து வருவதற்கான ஆதாரத்தை அள்ளி நீட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டு கடல் மட்டம் உயர்வு 18 முதல் 59 சென்டி மீட்டர் வரை இருக்குமென மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.



இதற்கு இன்னொரு சான்றாக நிலப்பரப்பில் தற்போது அடிக்கடி அனல் காற்று வீசுவதையும், பனிப்பொழிவு அதிகமாவதையும், பனிபுயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு பயன்பாடும், தொழில்துறை, வேளாண்துறை, நிலப் பயன்பாடு போன்றவற்றில் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகும்.



இந்தியாவை குறித்துப் பார்த்தால் புவி வெப்பம் அடைந்து வருவதால் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. இதனால் 2100க்குள் இந்தியாவில் 16 முதல் 17 கோடி மக்கள் இடம் பெயர நேரிடும்.

மேற்கு வங்கத்தில் 1 கோடி மக்களும், மும்பை மற்றும் புறநகரில் 12 கோடி மக்களும், தமிழ்நாட்டில் 1 கோடி மக்களும், ஆந்திராவில் 60 லட்சம் மக்களும், குஜராத்தில் 55 லட்சம் மக்களும், ஒரிசாவில் 40 லட்சம் மக்களும், இராஜஸ்தான், கர்நாடகா, வடக்கு ஆந்திரா, தெற்கு பீகார், மராட்டியத்தின் உட்பகுதி என சுமார் 70 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டியிருக்கும்.


அவ்வாறு இல்லையெனில் உலக நிலபரப்பில் 2.5 சதவீத அளவு மட்டுமே கொண்ட இந்தியா சுமார் 120 முதல் 130 கோடி மக்களை தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்கி காப்பாற்ற வேண்டியிருக்கும்.

தட்ப வெப்பநிலை மாற்றம் உலகின் சுற்றுச்சுழலுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் அவையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற தட்பவெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Local villagers carry coal after having scavenged the coal illegally from an open-cast coal mine in the village of Jina Gora on February 11, 2012 near Jharia, India. Villagers in India's Eastern State of Jharkhand scavenge coal illegally from open-cast coal mines to earn a few dollars a day. Claiming that decades old underground burning coal seams threatened the homes of villagers, the government has recently relocated over 2300 families to towns like Belgaria. Villagers claim they were promised schools, hospitals and free utilities for two years, which they have not received. As the world's power needs have increased, so has the total global production of coal, nearly doubling over the last 20 years according to the World Coal Association.


நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை உலகம் முழுவதுமுள்ள நுகர்வோர் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருவதாலும், பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் உற்பத்தியாவதாலும் தட்ப வெப்ப நிலை செயற்கையாக அதிகரிக்கும் என்பதை ஐ.நா பன்னாட்டுக் குழுவின் ஆய்வை உணர்ந்த அறிவியலாளர்கள் 1996ம் ஆண்டு உறுதி செய்தனர்.

1997ம் ஆண்டு பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க செல்வந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பருவநிலை மாற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளுக்கு செலவிடுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளே நியாயமாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.

1997ம் ஆண்டு ஐ.நா. கோட்பாடுகளைத் தொடர்ந்து க்யோடோ உடன்பாடு காணப்பட்டது. இதன்படி இணைப்பு 1 நாடுகளான வளர்ந்த நாடுகள் தங்களுடைய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012ம் ஆண்டில் சராசரியாக 5.2 சதவீதம் குறைந்து 1990ம் ஆண்டு நிலவி வந்த நிலைக்கும் குறைவாகக் கொண்டு வர இணங்கின. இந்த மொத்த குறியீடு ஒவ்வொரு நாட்டின் தேசிய இலக்காக மாற்றப்பட்டது.

புவி வெப்பமயமாதலால் என்ன பாதிப்பு?

புவி வெப்பமயமாதலால் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

வேளாண்மை உற்பத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போதைய பாதிப்பை விட மிகக் கடுமையானப் பாதிப்பிற்குள்ளாகும். அரிசி, பருப்பு, தானிய வகைகளின் விளைச்சல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, சில காலங்களில் அந்தப் பயிர் வகைகளே இல்லாமல் முழுமையாக அழிந்து போகும். இதனால் உலக உணவுப் பாதுகாப்பிற்கு மிகுந்த பின்னடைவு ஏற்படுவதுடன், பெரும்பாலான நாடுகளில் வறுமையும் பட்டினிசாவும் பெருகும்.

உலகின் பல்வேறு பாகங்களில் அதிகரித்து வருவது நீர்ப்பற்றாக்குறை. இந்தியாவில் ஓடும் பல நதிகளின் இருப்பிடமாக விளங்கும் இமயமலை, புவி வெப்பமயமாதலால் தொடர்ந்து உருகி வருவதால் ஆறுகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திட நாம் என்ன செய்ய வேண்டும். நம் அன்றாட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். இதுவரை நம் பல செயல்கள் இயற்கைக்கு எதிரானவையே. எனவே தான் இயற்கை நமக்கு எதிராக மாறியுள்ளது.

புவியை காக்க இதோ சில வழிகள்:

தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்'என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் மூலம் கிடைக்கும். பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

நாம் அன்றாடம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அவற்றை குறைக்க சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு தனி நபரும் சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் பயன்படுத்தும் டியூப் லைட், பல்ப் இனிமேல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.


வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக உயிரி எரிவாயுக்கனைப் பயன்படுத்த வேண்டும்.
இவைகளில் மிகவும் முக்கியமானது நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும். எனவே மழை நீர் சேகரிப்பு, கிணற்றின் ஊற்றுக் கண்களுக்கு போதிய நீர் வரும்படி செய்தல் போன்றவற்றால் எதிர்கால விவசாயத்தை காக்க முடியும் என்பதோடு எதிர்கால நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகத்தையும், இன்டஸ்பள்ளத்தாக்கு நாகரிகத்தையும் நாம் அறிய காரணம் அக்கால மனிதர்கள் விட்டு சென்ற அழகிய வேலைபாடுள்ள பானைகளும், ஆயுதங்களும் தான். ஆனால் நமக்கு பிறகு 3000 ஆண்டுகள் கழித்து யாராவது அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கிடைப்பது வெறும் பாலித்தீன் பைகளாகத் தான் இருக்கும்.

ஏனெனில் மிகப்பெரும் கலைகளை போல பாலித்தீன் பைகளும் காலத்தால் அழியாதவை. அதோடு மழை நீரையும் மண்ணுக்குள் போக விடாமல் தடுப்பவை. இவைகளால் நீர், நிலம், காற்று என்ற 3 அடிப்படை கூறுகளுமே மாசுபடுகிறது. எனவே பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை விடுத்து சணல், துணி, காகித பைகளின் பயன்பாட்டைப் பெருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட வேளாண்மையை பாதுகாக்க போதுமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வேளாண்மையில் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விட்டொழித்து இயற்கை உரங்களையும், மூலிகைச் சாறு பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். இதனால் நிலத்தின் வளம் பெருகுவதோடு எதிர்கால வேளாண்மையும் பிழைக்கும்.

அவ்வாறில்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணில் உயிர் வாழும் பல லட்சம், கோடி நுண்ணுயிர்கள் மடிகின்றன. மண்ணும் உயிரிழக்கிறது. இதனால் மண் வேளாண்மைக்கு சிறப்பாக உதவி செய்ய முடிவதில்லை.
மேலும் வேளாண்மையில் உதவி செய்யும் புழு, பூச்சிகளின் ஆதிக்கமும், நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.

இதற்கு மேலும் மேலும் உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் வேளாண்மைச் செலவு அதிகரிப்பதோடு, விளைச்சலும் குறைகிறது. இதோடு நின்றுவிடாமல் விளைபொருட்களில் நச்சுக்கலந்தே இருக்கிறது. அதை உண்ணும் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். தேவைதானா இது?

புவி வெப்பமடைந்து வருவதற்கு இது மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொணடே போகலாம். ஆனால் இங்கே கூறியுள்ள அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே 90 சதவீதம் வரை புவி வெப்பமாதையும் கடல் மட்டம் உயருவதையும் தடுக்க முடியும்.

புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு அரசுகளுக்கு எந்தளவிற்கு உள்ளதோ அதே அளவு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. நாம் ஒன்று கூடி புவியை காத்தால், புவி நம்மை காக்கும்.
நம் சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுப்போம் ...
நன்றி :-What the world needs to watch
நன்றி:-திரு .பெரிய.பத்மநாபன்

1 comment:

  1. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதரிலும் இருந்து துவங்கப்பட வேண்டும்.
    சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட பதிவு.

    ReplyDelete