தமிழனின் வரலாற்றை தேடும் எங்கள் செந்தமிழன் முகநூல் கட்டுரையிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு உங்களுக்காக ......
சாமிக்கண்ணு வின்சன்ட் என்னும் சாகசக்காரரின் கதை!
சாமிக்கண்ணு வின்சன்ட் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் சாகசங்களை, சாதனைகளை, இழப்புகளை, தாங்க இயலா துயரங்களை, ஒரு மாபெரும் வரலாற்றை நீங்கள் அனைவரும் உணர்ந்து அம்மனிதரின் வாழ்க்கையை உலகிற்கு அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதத் துவங்குகிறேன்.
திருச்சி பொன்மலை ரயில் நிலையம். 1905 ஆம் ஆண்டு. கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட சாமிக்கண்ணு எனும் 22 வயது இளைஞர் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றுகிறார். வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களுமே மிகுதியாக வந்து போகும் இடம் ரயில் நிலையம். சாமிக்கண்ணு மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடன் எத்தனை பேர் பணிபுரிந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சாமிக்கண்ணுவை மட்டும் நமக்குத் தெரிகிறது, 107 ஆண்டுகளுக்குப் பிறகும்!
சாமிக்கண்ணு எடுத்த ஒரு முடிவு, தென்னிந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்டது. இன்று ஜெயலலிதா முதல்வராக இருப்பதற்கும் திரையுலகம் கோடிகளில் புழங்குவதற்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் சாமிக்கண்ணு.
சினிமா எனும் ‘கலை’ பிரான்சைச் சேர்ந்த லூமியே சகோதரர்களால் உலகிற்கு அறிவிக்கப்பட்ட ஆண்டு 1895. இங்கே ‘கலை’ எனும் சொல் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்காலத்தில், சலனப்படங்களை (motion pictures) புகைப்படங்களின் (photographs) மேம்பட்ட வடிவமாகத்தான் பெரும்பாலனோர் பார்த்தார்கள். அது ஒரு பெரும் தொழிலாக மாறும் என்றோ அதுதான் உலகையே ஆட்டி வைக்கப்போகிறது என்றோ பெரும்பாலானோர் கற்பனையும் செய்யவில்லை. மிகச் சிலர் சினிமாவை ‘கலையாகவும் தொழிலாகவும்’ அறிந்து கொண்டனர். அந்த மிகச் சிலரில் சாமிக்கண்ணு வின்ன்சன்ட் ஒருவர்.
அக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவை அனைத்தும் துண்டுப்படங்கள். அதாவது மிகச் சில நிமிடங்களே ஓடக் கூடியவை. 3 நிமிடத்திற்கு ஓடும் படம், 7 நிமிடம் ஓடும் படம் என வகைகள். அப் படங்கள் அனைத்துமே ஒலி அற்றவை அல்லது மௌனப்படங்கள் (silent movies). ஊமைப்படங்கள் என்று பொதுவழக்கில் அழைக்கப்பட்டவை.
படங்களின் நீளமும் குறைவு, ஒலியும் இல்லை. அவை பெரும்பாலும் ஆவணப்படங்களின் மூல வடிவங்களாகவே இருந்தன. Leaving the factory என்றொரு பிரபலாமன படம். அதில் என்ன ஓடும்? ஒரு தொழிற்சாலையிலிருந்து பணி முடித்த தொழிலாளர்கள் வெளியேறும் காட்சி இருக்கும். அப்போதைய படப்பதிவுத் தொழில்நுட்பத்தின்படி, வினாடிக்கு பொதுவாக 14 சட்டகங்கள் (frames) ஓடும். அதாவது, பாத்திரங்கள் குடுகுடுவென நடப்பார்கள், வெடுக்கெனப் பேசுவார்கள், சீமாட்டி நாயைப் பிடித்து மின்னல் வேகத்தில் நடப்பாள். இயல்பான வேகத்தைவிட ஏறத்தாழ 90% அதிகமாக இருக்கும். இப்போது நாம் காணும் இயல்பான வேகம் 24 சட்டகங்களில் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வளவு குறைபாடுகளுடன் சினிமா இருந்த காலம் அது.
இதைக் காட்டுவதும் எளிதல்ல. அதற்கென ப்ரொஜடர் வேண்டும். ப்ரொஜடரை இயக்குவதற்கென ஏராளமான தொழில்நுட்பங்கள் வேண்டும். திரை கட்ட வேண்டும், இருட்டில்தான் படம் ஓட்ட முடியும், அதற்கென கொட்டகைகள் அமைக்க வேண்டும், மக்களுக்குப் புகைப்படங்களே முறையாக அறிமுகம் ஆகாத காலம் அது. அவர்களுக்கு சலனப்படங்களைப் பற்றி எடுத்துக் கூறி, கொட்டகைக்கு வரவழைக்க வேண்டும். அப்படி வரும் மக்களை மன நிறைவுடன் படம் பார்க்க வைக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களும் சில நிமிடங்களில் ஓடி நின்று போகும், சத்தமே வராது, கதாபாத்திரங்கள் அனைவரும் வழக்கத்தை விட வேகமாக ஓடுவார்கள், சிரிப்பார்கள். படத்தில் வரும் முகங்களும் பெரும்பாலும் வெள்ளைக்கார முகங்கள்.
பொன்மலை ரயில் நிலையத்தில் வேலைபார்த்த சாமிக்கண்ணு எப்படித்தான் இவ்வளவு சிக்கல்களையும் கடந்து சிந்தித்தாரோ புரியவில்லை.
அவரது நிலையத்திற்கு ஒரு ரயில் வந்து நின்றது. டூபான் (Du Pont) என்ற பிரெஞ்சுக்காரர் வந்திறங்கினார். அக்காலத்தில் உலக சந்தையில் பிரபலமாக இருந்த பதே (pathe) எனும் ப்ரொஜக்டர் நிறுவனத்தின் அதிகாரி அவர். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று துண்டுப்படங்களைத் திரையிட்டுக் காட்டி, பணம் ஈட்டுவது அவர் பணி. இவ்வாறானவர்களை பயணச் சினிமாக்காரர்கள் என்பார்கள். இவர்கள் டூர் அடித்துக் கொண்டே இருப்பதால் டூரிங் தியேட்டர் என்ற பெயர் பின்னாளில் உருவானது. இலங்கையில் பயணத்தை முடித்துவிட்டு வந்த டூபான், களைத்திருந்தார். உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். சாமிக்கண்ணு வின்சன்ட் டூபானுக்கு சில உதவிகள் செய்தார். இருவரும் நட்பு பாராட்டினர். டூபான், தான் வீடு திரும்ப விரும்புவதாகவும் தான் சுமந்து திரியும் உபகரணங்களை யாரிடமாவது விற்றுவிட்டால் நல்லது என்றும் சாமிக்கண்ணுவிடம் கூறினார்.
அந்த உரையாடலில் விதைக்கப்பட்டது, தென்னிந்திய சினிமாத் தொழிற்சாலையின் வித்து.
2 ஆயிரம் ரூபாய் விலை சொன்னார் டூபான். சாமிக்கண்ணு உறவினர்களிடம் திரட்டி அத் தொகையை டூபானிடம் கொடுத்து, ப்ரொஜக்டர், சில துண்டுப்படங்கள், பிற சாதனன்ங்கள் அனைத்தையும் வாங்கினார்.
அக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் எவ்வளவு பெரும் தொகை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எல்லாவிதங்களிலும் சாத்தியம் குறைவான ஒரு தொழிலில், இவ்வளவு பெரிய முதலீடு. ரயில்வே வேலையையும் உதறிவிட்டார். கடனோ பெரும் தொகை. தொழிலோ புத்தம் புதிது.
திருச்சிப் பகுதியில் சாமிக்கண்ணு குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் பாவேந்தன் கூறும் சம்பவங்களில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பகுதி முதியவர்களிடம் பேசியபோதும் ’நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தபோது, ஒரு ஆள் ஊருக்கு வந்தாரு. பெரிய திரையக் கட்டி அதுல வெளிச்சம் போட்டாரு. அந்தத் திரையில வந்ததைப் பார்த்து பேய்ங்கன்னு நினைச்சு நாங்க அலறி ஓடிட்டோம்’ என்றார்களாம்.
இதே போன்ற அனுபவங்கள் அக்காலத்தில் ஏராளம். Arrival of the train என்றொரு துண்டுப்படம். ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நிற்கும் காட்சி மட்டும் அதில் உண்டு.
திரையில் இக்காட்சி வந்ததும், ரயில் தங்கள் மீது மோதப் போகிறது என அஞ்சி, அலறி அடித்துக் கொண்டு மக்கள் கூடாரங்களைப் பிய்த்தெறிந்துவிட்டு ஓடினார்கள்
எனது ‘பேசாமொழி’ ஆவணப்படத்தில் இக்காட்சியைப் படமாக்கியுள்ளேன்.
புகைப்படம் எடுத்துக்கொண்டாலே ஆயுள் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை இப்போது சிலரிடம் உள்ளதை நாம் அறிவோம். அக்காலத்தில், திரையில் படத்தைப் பார்த்தாலே ஆயுள் குறையும், பார்வை மங்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆகவே, சினிமா காட்டுபவர்களைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.
மக்கள் இவ்வாறுதான் சினிமாவைப் பார்த்தார்கள்.
இவர்களை நம்பித்தான், இந்தச் சூழலில்தான் சாமிக்கண்ணு அவ்வளவு பெரிய முடிவை எடுத்தார். சூழலைக் கண்டு அஞ்சுபவர்கள் சாமானியர்கள், சூழலை மாற்ற முடிவெடுப்பவர்கள், சாகசக்காரர்கள். சாமிக்கண்ணு சாகசக்காரர்!
ஒரு மாட்டு வண்டி, சில உதவியாளர்கள், வண்டியில் ப்ரொஜக்டர் மற்றும் சாதனங்கள் –இதுதான் பயணத் திரையரங்கம். சென்னை எஸ்ப்ளனேட் பகுதியில், முதன் முறையாக கொட்டகைத் திரையரங்கை அமைத்தார் வின்சன்ட். கொட்டகைக்குள் படம் காட்டலாம் எனச் சிந்தித்ததே சாதனைதான்.
ஏனெனில், சினிமா என்பது ஏற்கெனவே சொன்னபடி ‘கலை’யாக மட்டும் பார்க்கப்பட்ட காலம் அது. வார்விக்மேஜர் என்னும் பிரிட்டன்காரர், சென்னையில் 1897ஆம் ஆண்டு முதல் முதலாகத் திரைப்படக் கலையை அறிமுகம் செய்தார். அவர் படம் ஓட்டிய இடம் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் திரையரங்கம்.
அது செறிவாகக் கட்டப்பட்ட திரையரங்கம். மின்சாரத்தால் இயங்கும் அரங்கம். அதில் படம் பார்த்தவர்கள் எல்லோருமே துரைமார்கள்தான். வெள்ளையரும் பிற பணக்காரர்களுக்குமானதாகத்தான் சினிமா இருந்தது. அவர்களுக்குத்தான் அது புரியும் என்று நம்பப்பட்டது. அவர்கள் வந்து பார்க்குமளவுக்கான வசதியான இடத்தில்தான் திரையிட முடியும் என்றும் நம்பப்பட்டது.
மின்சாரமே அக்காலத்தில் ஒரு ஆடம்பரம் அல்லவா! அப்படியானால் சினிமா…எவ்வளவு பெரியது!
சாமிக்கண்ணு, எஸ்ப்ளனேட்டில் டெண்ட் அடித்துப் படம் ஓட்டினார். அந்தக் கொட்டகைக்கு யார் வருவார்கள் என நமக்குத் தெரியும். சினிமாவை மேட்டிலிருந்து பள்ளத்துக்குக் கொண்டு சென்றார். எளிய மக்களும் சினிமாவை நேசிப்பார்கள் என அவ்வளவு மோசமான காலத்திலும் அவர் நம்பினார். 1908 ஆம் ஆண்டு வரை, பெரும்பாடுகள். கடன் மேல் கடன். நீண்ட காலம் வெளியூர்களில் தங்கி இருந்தபோது, மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. வின்சன்ட் ஊர் திரும்பிய சில நாட்களில் மனைவி இறந்தே போனார்.
சாமிக்கண்ணு, சில ஆண்டுகளில் வருவாய் ஈட்டத் தொடங்கினார். மக்கள் சினிமாவைப் புரிந்து கொண்டனர். இந்த நிலையைச் சாதிக்க சாமிக்கண்ணு, செய்த வித்தைகளுக்கு அளவே இல்லை. அவருக்கு மந்திர வித்தைகள் தொடக்கத்திலேயே தெரியுமா அல்லது சினிமாவுக்காகக் கற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால், கொட்டகைகளில் அவர் மக்களைக் கவர்வதற்காக, மந்திரவித்தைக் காட்சிகள் செய்து காட்டினார்.
ஒரு படம் முடிந்து அடுத்த படத்தை ப்ரொஜக்டரில் இணைக்கும்போது, சிறிது நேரம் ஆகும். ப்ரொஜக்டரில் சூடு தணிய வேண்டும். அந்த இடைவெளியில் யாரும் கூச்சலிடக் கூடாது. எழுந்து சென்றுவிடக் கூடாது. சாமிக்கண்ணு எனும் அந்த இளைஞரால் அந்த இடைவெளியை உற்சாகமாக நிரப்ப முடிந்தது. சிறந்த மேஜிசியனாக அவர் இருந்தார். அதனாலேயே முன்னோடி சினிமாக்காரராகவும் இருந்தார். சினிமாவே ஒரு மந்திர வித்தைதானே!
கிறித்தவ மத விதிகள் சாமிக்கண்ணுவைக் கண்டித்தன. கோவையின் பிஷப், சாமிக்கண்ணுவை, ‘கிறித்துவுக்கு எதிரான சாத்தானின் வேலைகளைப் பார்ப்பதாகக்’ கூறி தேவாலயத்தை விட்டு விலக்கினார். பெரும்பாடுபட்டு பிஷப்பிடம் மந்திர வித்தைகள் எல்லாமே தந்திரங்கள்தான் என விளக்கி, மீண்டும் தேவாலயத்தில் இணைந்தார் வின்சன்ட்.
இவ்வாறான துன்பங்களுக்கிடையில், சினிமாவை ஒரு தொழிலாக மாற்றிக் காட்டினார் சாமிக்கண்ணு.
நண்பர்களே, நாம் குளிரூட்டப்பட்ட அரங்குகளுக்குள் அமர்ந்து சினிமா பார்ப்பதற்கான மூலகாரணங்களில் சாமிக்கண்ணு முதன்மையானவர்.
சில ஆண்டுகளில், தென்னிந்தியா முழுவதும் ஏறத்தாழ 200 பயணச் சினிமா அரங்குகள் சாமிக்கண்ணு வின்சன்டால் நிறுவப்பட்டன. பதே ப்ரொஜக்டர் நிறுவனத்தின் முதல் தென்னிந்திய விற்பனையாளர் (dealer) சாமிக்கண்ணு வின்சன்ட்தான்.
எந்த ப்ரொஜக்டரை 2 ஆயிரம் ரூபாய்க்குக் கடன் வாங்கி கொள்முதல் செய்தாரோ, அதே ப்ரொஜக்டர்களை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்யும் உயரத்தை மேலே கண்ட இன்னல்களுக்கு மத்தியில் அடைந்தார் அவர்.
தமிழகத்தின் முதல் திரையரங்கம் கெயிட்டி சென்னையில் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாம் அரங்கத்தைக் கோவையில் வின்சன்ட்தான் 1914 ஆம் ஆண்டு கட்டினார். பெயர் வெரைட்டி ஹால். இப்போதும் அந்த அரங்கம் இயங்குகிறது. பெயர் மட்டும் டிலைட் தியேட்டர் என மாற்றப்பட்டுவிட்டது, உரிமையாளர்கள் மாறியதால்.
ஆனாலும் அந்த அரங்கம் இருக்கும் வீதியின் பெயர் இப்போதும் கோவையில் வெரைட்டி ஹால் வீதிதான்.
அந்த திரையரங்கத்துக்குக் கடந்த 2005 ஆம் ஆண்டு என் ‘பேசாமொழி’ படப்பிடிப்புக்காகச் சென்றேன். அரங்கத்துக்கு எதிரே சிகையலங்காரக்கடை வைத்திருக்கும் முதியவர்களிடம் பேசி, சாமிக்கண்ணு பற்றிக் கேட்டேன். அவர்கள் சாமிக்கண்ணுவை நேரில் கண்டவர்கள். டிலைட் அரங்கத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.
வின்சன்ட் வாழ்ந்த காலத்தில் அவரது மாளிகை வெரைட்டி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்தது. அது உண்மையில் அரண்மனைதான். அதன் மிச்சங்கள் இப்போதும் தெரிகின்றன. வின்சன்ட் குடும்பத்தினர் தங்கள் மாளிகையிலிருந்து படம் பார்க்க அரங்கத்துக்கு வருவதற்கென பிரத்தியேகமான வாயில், அழகிய மர வேலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறது. அவர் பேரப்பிள்ளைகளுக்காகக் கட்டிய மீன் தொட்டி, அவர் ரசித்து ரசித்து வரைய செய்த ஓவியங்கள் என நிறைய காணக் கிடைத்தன.
வின்சன்ட் 1942 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
1938 ஆம் ஆண்டு முதலே, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாராம். அவரது மாளிகையின் நீண்ட காரிடாரில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு மன உளைச்சல் அவரை ஆட்டிப் படைத்ததாக அவரது பேரன் வின்பிரட் வின்சன்ட் கூறுகிறார்.
சாமிக்கண்ணு வின்சன்டைப் பற்றி நான் முதன் முதலில் படித்தது, ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகள் வழியாகத்தான். அவரே சாமிக்கண்ணு வின்சன்ட் உட்பட பல முன்னோடிகளுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்.
பின்னர் பேராசிரியர் பாவேந்தனைச் சந்தித்தேன். அவரும் பல்வேறு தகவல்களை வழங்கினார். யூ டிவியின் தென்னிந்தியத் தலைவர் தனஞ்சயன் தமது நூலில் வின்சன்ட் குறித்து எழுதியுள்ளார்.
வேறு சில ஆய்வாளார்களும் திரைப்பட ஆர்வலர்களும் வரலாற்றின் உண்மைகளைப் பதிவு செய்கின்றனர்.
இவ்வாறான சில பணிகள் மட்டும் நடக்கின்றன.
யாரால் இந்த சினிமா ஒரு தொழிலாக மாற்றப்பட்டதோ, யாரால் சினிமா சாமானியர்களைச் சென்றடைந்ததோ, யாரால் சினிமாவில் கோடிகள் கொழிக்கும் என நிறுவப்பட்டதோ, யாருடைய வாழ்வின் அர்ப்பணிப்பு கடந்த 100 ஆண்டுகாலமாகப் பலருக்கு வாழ்க்கையை, பதவிகளை தானம் செய்ததோ, அவரைப் பற்றி யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது எனக் கேட்டுப் பாருங்கள்
நன்றி -தமிழா
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
அரிய தகவல்களை கொண்ட அருமையான கட்டுரை...
ReplyDelete