Thursday, October 14, 2010

வெற்றியின் விலை விமர்சனம்-ருத்ரனின் பார்வை

வெற்றி விரும்பாத போர், மகிழ்ச்சி விரும்பாத வாழ்க்கை, சலனம் இல்லாத மனம்.. என்று தத்துவ வசீகரங்கள் எவ்வளவு சுகமாகவும், விளம்பரச் சுலபத்தோடு காணப்பட்டாலும் யதார்த்தம் வேறு தான். எல்லாமே வார்த்தைகள்தான், சிந்தனையே வார்த்தைதான், ஆனால் அர்த்தங்களே மனத்ததுள் எண்ணங்களாகின்றன. வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இல்லாத வாழ்க்கை ஒரு இதமான மிகையான கற்பனை.
வெற்றி மகிழ்ச்சி மட்டுமே தரும் என்பதில்லை! முக்காடு விலக்கி தெருவில் இறங்கிவிட்டால், பிறர் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பார்வைகள் எல்லாமே அன்பின் புரிதலுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. எல்லா பார்வைகளுமே விமர்சனங்களை உள்ளடக்கியவைதான். விமர்சனங்கள் எல்லாமுமே வருத்தப்பட வைக்க மட்டுமல்ல, சிலவற்றில் அக்கறையும் இருக்கும், பலவற்றில் பொறாமையும் வெறுப்பும் இருந்தாலும். விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை; அவை நம்மை மட்டுமே நமக்குக் காட்டுவதில்லை- பிறரது பார்வைக்கும் பேச்சுக்கும் உள்ளிருக்கும் அவர்களின் பொய்களையும் காட்டுவதால்.
வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இவை கலந்த வாழ்க்கையில் எது வெற்றி, எது மகிழ்ச்சி என்று மட்டுமல்ல, எது சலனம் என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அர்த்தமாகும். வெற்றி மகிழ்ச்சி இரண்டுமே உழைப்பும் முனைப்பும் இல்லாமல் கிடைக்காது. ஆனால் சலனம் சுலபம், கிட்டத்தட்ட இலவசம்.
சலனம் வெறும் கற்பனையோ கவனச்சிதறலோ மட்டும் அல்ல, அது உள்ளிருக்கும் அடிப்படை இயக்கம். ஒரு காரியத்தில் ஈடுபடும்போது- கண் பார்த்துக் குறி வைத்தாலும், வீட்டு வாசலில் கோலமிட்டாலும், கல்லில் சிலை வடித்தாலும்- கவனம் சிதறாது சலனம் இல்லாது மனம் இருக்கும். ஆனால் அந்தக் காரியம் முடிந்தவுடன் இயல்பாகவே ஓர் ஆயாசத்தில் ஓய்வெடுத்து அடுத்த வேலை பார்க்க ஆயத்தமாகும். வாழ்க்கையில் இந்த இடைப்பட்ட தருணங்களே அதிகம். இங்கே தான் சலனங்களும் வரும். சலனம் என்பது அடுத்தவன் உடைமையை அபகரிக்கும் ஆசையோ தன் தகுதி மீறிய யோசனையோ மட்டும் அல்ல. அது ஒரு நிலை பிறழ்தல். நேர்க்கோட்டில் நடக்கும் போது ஓரம் பார்க்கும் தடுமாறல். அது விமர்சனங்களுக்கு நேரம் செலவிடுவதும் ஆகும்.
ஆனால் விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் கருத்துடையதாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் வகையில் அமைவது எப்போதாவது தான். 
இது நாகரிகம். இது நயம். இது முதிர்ச்சியான மனத்தின் வெளிப்பாடு... இணையத்தில் இது என்றாவது நேரலாம் என்ற நம்பிக்கையோடு இதைப் பதிவிடுகிறேன்.

1 comment:

  1. இணையத்தில் இது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம் .

    ReplyDelete