Saturday, February 19, 2011

தி.மு.க. , அ.தி.மு.க , What is This?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்களன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தக் கூட்டத் தொடரில், உடல் நலிவின் காரணமாக, மருத்துவர் ஆலோசனைப்படி கலந்துகொள்ள முடியாத நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளார் என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும், கோரிய அந்தத் தீர்மானத்தை அரசியல் கண்ணோட்டமின்றி, ஆளும் தி.மு.க., ஏற்றுக்கொண்டு, அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிட ஒத்துழைப்புத் தந்தது.

தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஒருவர் கூறும் போது, அதில் அரசியலை நுழைக்காமல், மிகவும் பெருந் தன்மையோடு தி.மு.க. நடந்துகொண்டு இருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் அவர் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டியது சட்ட ரீதியான நிலையெல்லாம் உண்டு. புதிய சட்டப்பேரவையில் தாம் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை என்று சபதம் செய்து இருக்கிறாரே - இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சட்ட ரீதியான அணுகுமுறையை அ.இ.அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தபோது, அதற்குள்ளிருக்கும் விவகாரங்களுக்குள் போகாமல், தீர்மானத்திற்குத் தி.மு.க. ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறது.

அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுவுடைமை இயக்க வீரர் தோழர் ப. ஜீவா அவர்களின் இல்லத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொள்கை வேறுபாடு வேறு - ஒருவரை ஒருவர் மதிப்பது என்பது வேறு என்று உயர்ந்த பண்பாடுபற்றி எடுத்துக் கூறினார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் விளங்கினார்களே என்றும் சுட்டிக்காட்டினார்.

அன்றைக்கே சட்டப்பேரவையில்- காலையில் திருமணத்தில் கூறிய அந்தப் பண்பாட்டுக்கு இலக்கணமாக - அ.இ.அ.தி.மு.க. கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தை நிறைவேறும்படிச் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க. என்றால் எப்படி நடந்துகொண்டி ருக்கும் என்பது வெளிப்படை! உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திரு. முரசொலி மாறன் அவர்கள் ஒரு குறிப் பிட்ட மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படு வதற்குக்கூட முட்டுக்கட்டை போட்டவர்கள் யார் என்று தெரியுமே!

ஆன்டன் பாலசிங்கத்துக்கு மருத்துவ உதவி இந்தியாவுக்குள் எங்கும் செய்யப்படக்கூடாது என்று கறாராகக் கூறிய மனிதாபிமானிகள் ஆயிற்றே...!

அத்தகையவர்களுக்கு நல்ல புத்தியைக் கற்பிக்கும் வகையில்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறள்மொழிக்கு ஏற்ப, கலைஞர் தலைமையிலான தி.மு.க. நடந்துகொண்டிருக்கிறது என்பது சாதாரண மானதல்ல!

பொதுவாழ்வில் கலைஞர் அவர்கள் காட்டிய முன்மாதிரியை மற்றவர்களும் தொடர்ந்தால், அது தந்தை பெரியார் பக்குவப்படுத்திய பண்பாட்டுக்குப் பெருமை சேர்த்ததாகவே அமையும்.

இந்த நேரத்தில், தி.மு.க.வின் இன்னொரு பெருந் தன்மையான செயல்பாட்டை எடுத்துக்காட்டுவதும் அவசியமாகும்.

தேனி மாவட்ட பஞ்சாயத்துக்கு மொத்தம் பத்து மாவட்டக் கவுன்சிலர்கள்; உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 6, அ.இ.அ.தி.மு.க. 3, ம.தி.மு.க. ஒரு இடம் என்றவாறு கைப்பற்றின.
தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதாகும். தி.மு.க. வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர் யாரும் இல்லை. இதனால் தலைவர் பதவிக்கு தி.மு.க. போட்டியிட முடியாத நிலை.

அதே நேரத்தில், அ.இ.அ.தி.மு.க.வில் 2 தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் இருந்தாலும், வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கைப் பலம் இல்லை. மாவட்டத் துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த வீரராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

ஆனால், தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத இழுபறி நிலை; மூன்று முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். மானமிகு கலைஞர் அவர்களோ இந்தப் பிரச்சினையை வெறும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல், தி.மு.க. உறுப்பினர்களை அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணித்தார்.

4 ஆவது முறையாக மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் டீனா தலைமையில் தேர்தல் நடைபெற்றது (19.12.2006). அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக ரமாதேவி மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று உண்டு. அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் வராததால், வாக்களிக்கவும் முடியவில்லை.

தி.மு.க.வின் பொறுப்புணர்ச்சியையும், அ.இ.அ.தி.மு.க. வின் பொறுப்புணர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தி.மு.க. இருந்த இடத்தில் அ.இ.அ.தி.மு.க. இருந் திருக்குமேயானால், கலைஞர் அவர்கள் காட்டிய பெருந்தன்மையை செல்வி ஜெயலலிதா காட்டியிருப்பாரா என்பதை எவரும் சிந்தித்துப் பார்க்கட்டும்!

அரசியலில் தி.மு.க. காட்டிய இந்தக் கண்ணியம் மற்றவர்களால் பின்பற்றத் தகுந்ததாகும்.

நன்றி:- விடுதலை 

1 comment:

  1. thayavu seithu tamilnattai sooraiyadiya kalaignar kudumbathukku vakkalathu vankuvathai niruthunkal.

    ReplyDelete