Tuesday, November 29, 2011

வீரமும் துரோகமும் - ஆரியமும் திராவிடமும்

ஆரிய மாயை – சில உண்மைகள்…!

ஆரிய திராவிட முரண்பாடுகள் இன்று நேற்று துவங்கிய பிரச்சினையல்ல. என்று சிந்து சமவெளி முழுவதும் புழங்கிவந்த திராவிடர்களை, நட்டாசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் விரட்டினரோ, அன்றே துவங்கிய பிரச்சினை. ஆரிய சமுதாயம் ஒரு நாடோடி சமூகமாகும். நிலையான நகர்ப்புறங்களையும் ஊர்ப்புறங்களையும் கொண்டு வாழ்ந்தவர்கள் அல்ல ஆரியர்கள். முதன் முதலாய், நன்கு கட்டமைக்கப்பட்ட சிறந்த நகரமான மொகஞ்சதாரோவைக் கண்டவுடன் அவர்களுக்கு அதைக் கைப்பற்ற ஆசை வந்தது. அங்கே வாழ்ந்திருந்த திராவிடர்கள் முரட்டுத்தனமான போர்க்கலைக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கென்று சட்டதிட்டங்களுடன் அமைதியான செல்வச்செழிப்பான வாழ்க்கை வாழ்ந்திருந்தவர்கள். அதனால், ஆரியர்களின் அசுர தாக்குதலை சமாளிக்க முடியாமல் பெரும்பான்மையானோர் அழிந்தனர். குறிப்பிட்ட மக்கள் பின்வாங்கினர். வட இந்தியாவின் தென்கோடி வரை தங்கள் நகரங்களை விரிவு படுத்தினர். ஆயினும் அணியணியாய் வந்த ஆரியரின் விரிவாக்கப் பணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், விந்திய மலைக்கு தெற்கே விரட்டப்பட்டனர். அங்கே ஏற்கனவே வாழ்ந்திருந்த திராவிடப் பழங்குடி மக்களுடன் சேர்ந்து தங்களுக்கென்று நாகரிகத்தை உருவாக்கி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.

ஆரியரின் விரட்டுதல்கள் நின்றுவிட்டாலும் கூட அவர்களுடைய ஊடுருவல்கள் நிற்கவில்லை என்பதுதான் உண்மை. தங்களுடன் திராவிடர்களின் கலாச்சாரத்தையும் இணைத்து இன்று இந்தியா முழுதும் பரவியிருக்கும் இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கினர் ஆரியர்கள். ஆனாலும், திராவிடர்கள் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியா முழுவதும் தங்களின் மொழியான சமஸ்கிருதத்தையும் அதன் மரூஉ மொழிகளான ப்ராகிருதம், பாளி ஆகியனவற்றையும் பரவ விட்டனர் ஆரியர்கள். ஆனால், தென்னகத்தில் தமிழ் நீங்கா இடம் பெற்றது. அதை முற்றிலும் அழித்தொழிப்பது கடினம் என அவர்கள் புரிந்து கொண்ட போது, ஏற்கனவே தமிழில் அழியாப் பேரிலக்கியங்கள் தோன்றிவிட்டிருந்தன. தூய தமிழ் வடிவின் மீதான தாக்குதல் மிக மிக மெதுவாக நடந்தேறியது. சந்திரகுப்தனின் மௌரியப் பேரரசு வட இந்தியா, மேற்கு மற்றும் வடமேற்கு இந்தியா, கிழக்கு இந்தியா என எங்கும் பரவினாலும், தெற்கே பரவாமல் போனது. அவன் மகனான பிந்துசாரனின் ஆட்சிக் காலத்தில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தாலும் கூட சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர்ந்து அதை முறியடித்தனர் என்பது கலிங்க மன்னன் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டில் புலனாகிறது.


ஆனால், அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அதாவது அதுவரை அனைத்துக் குடிகளும் ஒன்றாய் வாழ்ந்திருந்த தமிழகத்தில் சாதி முறை தோன்றலாயிற்று. கண்ணகியால் குற்றஞ்சுமத்தப் பட்டு நீதிக்காக தன் உயிரை விட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய ஒரு புறனாநூற்றுப் பாடலில் “வேற்றுமை தெரிந்த நாற்குடியுள்ளும்” என்னும் வரி வருகிறது. இது சாதி வேறுபாடு தமிழகத்தில் தலைதூக்கியதற்கான சான்று. அதைத் தொட்டே, அவருக்கு பின் வந்த காலத்தவரான திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் குறளைச் சமைத்தனர்.

ஆரியர்களின் பேதங்கள் நிறைந்த சமூகமுறை மட்டுமல்ல தமிழகத்தில் பரவியது, அவர்கள் பயன்படுத்திய வடமொழியும் தான். கி.மு.300 க்கு முன்பாக எழுதப்பட்டதாக கருதப்படும் புறநானூற்றுப் பாடல்களில் வடமொழிக் கலப்பு மிக மிகக் குறைந்த அளவே இருக்க, அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்களில் மிகுந்த கலப்பு நிறைந்துள்ளதைக் காணலாம். மொழியும் கலாச்சாரமும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடிப்படையாகும். அவை அழிந்துபடும் போது அந்த இனத்தின் தனித்தன்மை இழக்கப்படுகிறது.


நாளைடைவில் ஆரியர்கள் அந்தணர் எனும் பெயரில் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த துவங்கினர். அதுவரை கடவுளரை தங்கள் சொந்த மொழியில் வணங்கி வந்த தமிழர்களை வடமொழி கொண்டு வணங்குமாறு செய்தனர். சில தமிழ் மன்னர்கள் தான் இதற்கு முதலில் பலியாகி இடங்கொடுத்தவர்கள். “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” எனும் பாண்டிய மன்னன் தான் பெரிதும் வடமொழி சடங்குகள் பரவ காரணமாயினன். பின்னர் பெரிய வணிகர்களும் பெரு நிலக் கிழார்களும் வடமொழி சடங்குகளை பின்பற்றினர். சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடந்த திருமணச் சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவிற் கொள்க…! கண்ணகியும் கோவலனும் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மேல்தட்டு மக்களாவர்.

நாட்கள் செல்லச் செல்ல தமிழின் தனித்தன்மை சிறிது சிறிதாகத் தேயத்துவங்கியது. மதம் சார்ந்த இலக்கியங்கள் பெரிதும் குவிந்தன. ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் காலத்தில் மதம் பெரிதும் விரும்பப்படும் பாடு பொருளாயிற்று. அந்தணர்கள் வடமொழிப் பெயர்களை அப்படியே தமிழ்வழக்காக மாற்றத் துவங்கினர். தூய தமிழ்ப் பெயர்கள் மறையத் துவங்கின. அரசர்களும், அமைச்சர்களும், தளபதிகளும், பெருந்தனக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியிலான பட்டப் பெயர்கள் கொண்டு வழங்கப்பட்டனர்.


“மாமல்லன்”, “மதுராந்தகன்”, “கோப்பரகேசரி”, “ராஜராஜன்”, “மகாராஜா”, “சத்ருமல்லன்”, என்றெல்லாம் பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். இவ்வாறு சமஸ்கிருத பெயர்கள் சூட்டிக் கொள்வதை ஒரு ஆடம்பரமாக, ஒரு மேல்தட்டு நாகரிகமாக வளர்த்தனர். அவற்றோடன்றி, கடவுளரின் பெயரும் வடமொழியாக்கப்பட்டன. சிவன் “ஈஸ்வரன்” ஆகவும், முருகன் “சுப்ரமணியன், கார்த்திகேயன்” என்றும், மால் “மகாவிஷ்ணு” ஆகவும், வேந்தன் “இந்திரன்” என்றும், கொற்றவை “மகாகாளி” என்றும் மாற்றப்பட்டனர். தமிழிலேயே தனி இலக்கியங்கள் தோன்றியிருந்த காலம் போய், வடமொழி நூல்களை முதனூலாக கொண்டு வழிநூல்கள் எழுதும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு வழிநூலாக, மொழிபெயர்ப்பாக எழுதப்பட்ட கம்பராமாயணம் வடமொழி முதனூலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பெரிதும் சிறந்து விளங்கியது.


கோவில்களை அந்தணரே நடத்தும் முறையும் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்துவங்கியது. அந்தணரைத் தவிர மற்றவர் கருவறைக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அரசர்களும் அந்தணர்களுக்கு கோவில் சார்ந்த நிலங்களை வாரி வாரி வழங்கினர். பல சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி கற்பதும், கற்பிப்பதும் அந்தணர்களின் ஏக போக உரிமையானது. அவர்களாகப் பார்த்து யாருக்கு வேண்டுமானாலும் கற்பிக்கலாம். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்கும் அதிகாரம் உண்டு என்ற வழக்கம் வந்தது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும், பெண்களும் கற்றுத் தேர்ந்து கவிதை எழுதும் அளவுக்கு புலமை பெற்றிருந்த சங்க கால தமிழ்ச்சமூகம் நசிந்து போய், எழுத்தறிவில்லாதவர் பெருகவும், பெண்கள் அடிமையாகவுமாய் தமிழ்க் கலாச்சாரம் சிதையத் துவங்கியது. சங்க கால தூய தமிழ்நூல்கள் அந்தணர் வீட்டுப் பரண்கள் மீது தூங்கலாயின. தமிழன் ஆரிய மயக்கித்தில் விழுந்தான்.


பிள்ளைப் பிறப்பில் துவங்கி, அன்றாட வழிபாடு, திருமணம், பெயர்ச்சூட்டுதல், பிள்ளை வளர வளர வரும் சடங்குகள், இறப்பு, அதற்குப் பின் வரும் இறுதிச் சடங்குகள், நீத்தார் நினைவுநாள் சடங்குகள் என எல்லாம் அந்தணர் செய்யும் சடங்குகளாயின. எல்லாச் சடங்குகளும் தமிழர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியிலேயேச் செய்யப்பட்டன. சம்ஸ்கிருத மொழி தேவபாஷை என வழங்கலாயிற்று. இங்ஙனம் சடங்குகளின் போதேயல்லாது மற்றபடி வழக்கு மொழியிலிருந்து சமஸ்கிருதம் முற்றிலும் அழிந்தது. அதன் எச்சங்கள் மிகுந்த மொழிகள் வட இந்தியாவெங்கும் பரவின. தென்னகத்தில் தமிழேயன்றி, மற்ற திராவிட மொழிகள் சமஸ்கிருதக் கலப்பு மிகுந்து பரவின. 50 விழுக்காட்டிற்கும் மேல் சமஸ்கிருதச் சொற்கள் கலந்தன. தமிழிலும் சமஸ்கிருதம் கலந்தது. தூய தமிழ்ச் சொற்கள் மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன.

தனித் தமிழ் அழிந்து போய், மணிப்பிரவாள நடை மேலோங்கியது. இலக்கியங்கள் எல்லாம் மணிப்பிரவாளம் கொண்டே சமைக்கப்பட்டன. தமிழ் அழிவில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது. தமிழரின் தனித்தன்மையான கலாச்சாரம், ஆரியச் சடங்கு முறைகளுக்குள் சிக்கி அழியத் துவங்கியது. 15ஆம் நூற்றாண்டில் கடைசியாக மலையாள மொழியும் பிறந்து தமிழினின்று பிரிந்து சென்றது. ஆரியர்கள் பெரும்பாலும் அம்மொழியை வளர்க்கத் துவங்கினர். கோவில்கள் எல்லாம் ஆரியமயமாக்கப் பட்டன. அதன் பிறகு வந்த மூன்று நூற்றாண்டுகள், தமிழரின் மொழியும் நாகரிகமும் தனித்தன்மையும் முற்றிலும் அழிந்து போன நாட்களாகும்…

6 comments:

  1. இதை படிக்க படிக்க எனக்கு குருதி கொதிக்கிறது
    -அன்பு

    ReplyDelete
  2. நல்ல கதை திரைகதை. கே பக்யராஜையே மிஞ்சி விட்டிர்கள். என்னிடம் நெறைய பணம் இருந்தால், இந்த அருமையான கதையை திரைப்படமாக எடுக்க உதவி செய்திருப்பேன். ஹஹஹஹா! சரி!இனவெரியரே!ஆங்கிலேயன் கழித்த ஆரிய படையெடுப்பு என்ற மலத்தை நீங்கள் நக்கி கொண்டிருங்கள். எமக்கு நெறைய உருப்படியான வேலைகள் உண்டு. வருகிறேன். நாலாந்தரமான தளத்துக்கு தெரியாமல் வந்து விட்டேன்!

    ReplyDelete
  3. appa thamizhargalum inga illa. avargalum pakistan lenthu vanthavanga than

    ReplyDelete
  4. //இதை படிக்க படிக்க எனக்கு குருதி கொதிக்கிறது
    -அன்பு//

    இப்ப எப்படி தமிழ வளர்க்கலாமுன்னு பாருங்க அன்பு

    ReplyDelete
  5. Good Story. No Proof. There are many articles in the net saying that there is nothing called as Dravidan-Aryan theory. These are all created by you DK and DMK people.

    ReplyDelete
  6. absolutely no proof for your story.
    in which year arya invasion happened?
    why the people from there ran to south end?
    why mohanchadora/harappa was deserted?
    why so called aryans could not live there?
    what about the language spoken by "original" tamil people?
    what language the defeated people brought?
    in 19th century there was some guess work by some european authors without any proof. still you people want to propagate for what?
    is there any single proof from tamil literature that they were the defeated people who ran away from sindu?
    if you want to go back and stay in your origin sindu bank, who will stop you?
    a shameless, posionous article.

    gopalasamy saudi arabia

    ReplyDelete