தொகுப்புகள்

Search This Blog

Friday, October 7, 2016

குடி காத்த திருப்பூர்

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.

அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன். 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது. அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.

இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.

50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 கோடி மணி நேரம்.

இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர்.

- போதை தெளிவோம்
குடி குடியை கெடுக்கும் -

நன்றி :- what's app

Saturday, October 1, 2016

உண்மையான கடவுள் யார்.....?


உலகில் பல கடவுள்கள் &  மதங்கள் இருக்கலாம்,  
ஆனால் உண்மையான கடவுள் யார்.....?


உண்மையாக ,சத்தியத்தின் வழி நடக்க சொல்லும் கிரிஸ்துவத்தின் ஏசுவா....?

அமைதியையும்,நன்மார்க்கத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் நபிகளா....?


அனைத்தும் சமம் என்று கீதையில் கூறும் இந்துக்களின் கண்ணனா.....?


ஆசையை துறக்க சொல்லும் பவுத்த மதத்தின் கெளதமபுத்தரா...?

இல்லை ,


சிவனா..?பிரம்மாவா...?மேரி மாதாவா...? ஒருவரும்  இல்லை ஒன்றுதான்....

தாய் தம் குழந்தைகளிடம் காட்டுவதும்,
காதலன் காதலியிடம் காட்டுவதும்,
கணவன் மனைவி இடம் காட்டுவது போல மட்டும் இல்லாமல் ,
நமக்கு அறிமுகம் இல்லாத,புதியவர்கள்,சக பிரயாணிகள்...
நம்மை பார்த்து உதிர்க்கும் சிறு புன்னகை, சிறு உதவும் தருணங்கள்,அல்லது ஐந்தறிவுள்ள விலங்கினங்கள் செய்யும் கொஞ்சலும், சிறு குழந்தைகளின் சிரிப்பும், இக்காரணிகளை உருவாக்கும்......

அன்பும், அவை வெளிவரும் உயிர்களும்தான் கடவுள் 




நன்றி- செந்தில் நாதன்

Monday, September 26, 2016

"சாத்தான் மிக பெரியவன்"

"சாத்தான் மிக பெரியவன்"

வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது.

அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல்.

முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி.

வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார்.

செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்..

அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்..

தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்டாலும் எப்பேர்பட்ட கொலை பாதகத்தை செய்தாலும் எல்லா மத கடவுள்களுமே வெறுமனே வேடிக்கை பார்ப்பதையே தொழிலாக கொண்டிருக்கின்றன.

பெண்களின் இயல்பான உடல்மாற்ற மாதவிடாயை தீட்டு என ஒதுக்கி கூனி குறுக வைக்கிற இந்து மதம். பெண்களோடு கடவுளர்கள் புணர்கிற காட்சிகளை கோவில்களில் சிலை வடித்து புனிதபரவசத்தில் கையெடுத்து கும்பிட சொல்கிறது.

ஆயிரம் சமத்துவம் பேசினாலும் கன்னியாஸ்திரிகள் திருப்பலி நிறைவேற்ற முடியாது. திருச்சபையின் அதிகாரம் பொருந்திய பொறுப்புகளான ஆயர், கர்தினால், போப் உள்ளிட்ட பதவிகளை பெண்கள் நினைத்து பார்க்கவும் கூடாது என்கிறது கிறிஸ்தவம்.

புர்கா ஒழுங்காக அணியாத பெண்ணை கல்லால் அடித்து கொன்றும் கால் விரல் நகம் தெரிய நடந்த பெண்ணின் கால்களை வெட்டியும் காரணமே இல்லாமல் பெண்களை விவாக ரத்து செய்து, அதுவும் சம்பந்தபட்ட பெண் உட்பட யார் அனுமதியும் தேவையில்லாமல், ஆண் ஐந்து பெண்கள்வரை மணந்து கொள்ளலாம் என கழுத்தில் மிதிக்கிறது இஸ்லாம்.

எல்லாம் வல்லவரான, எங்கும் நிறைந்தவரான, தூணிலும் துரும்பிலும் இருக்க கூடிய , முக்காலமும் உணர்ந்த, நன்மையே உருவான, கருணை மிகு கடவுள் அகோர சிரிப்போடு இவைகளை வேடிக்கை பார்த்து பொழுதுபோக்குவதன்றி வேறொன்றும் செய்தானில்லை.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், கடவுளை உண்டாக்கிய மனிதன் தான் சாத்தானையும் உண்டுபண்ணினான். ஆனால் உங்கள் கடவுளர்களை விட சாத்தான் மிக பெரியவனும் அதி வல்லமையுமுடையவனாய் இருக்கிறான்.

ஆம், உங்கள் அறியாமையும் அறிவுக்கொவ்வாத மூடபழக்கவழக்கங்களும் மதவெறியும் ஆதிக்கவெறியும் தான் அந்த சாத்தான். அந்த சாத்தானை ஒழிக்க வெறுமனே கற்கள் போதாது, மந்திரங்களோ கயிறோ அந்த சாத்தானை அசைத்துகூட பார்க்காது.

தேவையெல்லாம் பகுத்தறிவு. அதுதான் சாத்தானை கொல்லும் ஒரே ஆயுதம். நீங்கள் பகுத்தறிவை கைக்கொள்ளாதவரையில் சாத்தானுக்கு நீங்கள் பலியாவதை எந்த பெரிய கடவுளாலும் தடுக்க முடியாது. தெளியுங்கள்!

நன்றி:- Leo Joseph D

Friday, September 23, 2016

கலைஞர் தடுக்கவில்லையா?

கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?
1970 இல் காவேரி பிரட்சினையில் கலைஞரின் நிலைபாடு இதுதான்
1) 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. உபரிநீரை பயன்படுத்துவதை பற்றி மட்டுமே புதிய ஒப்பந்தம் காண வேண்டும்
2)காவேரியில் தமிழகத்தின் அனுமதியின்றி கட்டப்படும் அணைகளை சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுருத்தியும் நடுவன் குழுவை அமைக்க கோரியும் 1970 ஆம் ஆண்டு கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். (28.10.1970 இந்து)
இவ்வாறு கடிதம் எழுதும் முன்பு ஆறு முறை மத்திய நீர் பாசன அமைச்சர் முன்னிலையில் தமிழகம் கர்நாடகா கேரளா முதல்வர்கள் கூடி பேசி பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்திருந்தன.
அனால் மத்தியில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகா அரசிற்கே சாதகமா இருந்து கலைஞரின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியது.
எனவே 1971 இல் உச்ச நீதி மன்றத்தில் காவேரி நடுவர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தவிட வழக்கு தொடுத்தது கலைஞர் அரசு
இதை கண்டு அப்போதைய பிரதமர் இந்திரா பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் வழக்கெல்லாம் வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார்.
கலைஞர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். கூட்டத்தில் வழக்கை முழுமையாக வாபஸ் வாங்காமல் .
மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது கலைஞர் அரசு.
அதன் பின்னர்21.5.72 இல் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் முன் ஓர் ஒப்பந்ம் ஏற்பட்டது. ஆனால் எந்த மாநில அரசும் அதை ஏற்கவில்லை. அதன் பின்னரும் 1972-75 வரை மூன்று முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கலைஞர் தனது இரண்டு நிபந்தனைகளையும் எந்த சூழ்நிலையிலும் தளர்த்திக்கொள்ளவில்லை.
1975 இல் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த கர்நாடகா அரசு அழைத்த போது கபிணியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே பேசமுடியும் எனத் பிடிவாதமாக தெரிவித்து விட்டார். எமர்ஜென்சியும் வந்து விட்டது. கலைஞர் ஆட்சியும் கலைக்கப்பட்டு விட்டது.
ஆனால் 1977 ல் ஆட்சிக்கு வந்து விட்ட தமிழ் இன துரோக கட்சியான அ தி மு க வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை வேண்டுமென்றே தவிர்த்து கர்நாடகாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதே உண்மை . 1980 இல் எம்ஜிஆர் அரசு காவேரி டிரிபுயூனல் கோரி உச்ச நீதி மன்றத்தில் போட்ட வழக்கை வாபஸ் பெற்று தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது. 1977 முதல் 1988 வரை காவேரி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் காவேரி பிரட்சினையில் எதையும் செய்யவில்லை.
ஆனால் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னரே 1990 இல் கலைஞரின் பெரு முயற்சியால் காவேரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது.
1977 ல் மீண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் அப்போதே 1924 ம் ஆண்டு ஒப்பந்தபடியே வழக்கு தொடர்ந்திருப்பார் . அது மட்டுமின்றி 1977 லேயே காவிரி வழக்கில் தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றியும் கண்டிருப்பார்.
மீண்டும் 1989 ல் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் 1977 முதல் 1988 வரை நடந்த செயலற்ற அ தி மு க அரசின் துரோகங்களை ஒழித்து கட்டினார்
பிற்காலத்தில் சட்ட சிக்கல் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் பெற்று . அன்றய முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தி மு க ஆதரவு பெற்ற வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
அப்படி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த போது அதை எதிர்த்து நக்கலும் நையாண்டியும் செய்தவர் ஜெயலலிதா ...

நன்றி :- அந்தோனி பரிமளம்

Sunday, September 18, 2016

கடவுள் பயமே வேண்டாமா?

கடவுள் பயமே வேண்டாமா?"

பிறந்ததில் இருந்து இன்று வரை நீங்கள், நான், அனைவருமே, கடவுளோ, வேதமோ செய்யக்கூடாது என்று கூறிய விசயங்கள் எத்தனையோவற்றை செய்துவிட்டு, இதெல்லாம் சின்ன தப்பு, கடவுள் நம்மை கண்டுக்கமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம் கூறியிருக்கின்றோம். யாராவது மறுக்கின்றீர்களா? சிறு சிறு பொய்கள் சொல்லும் விசயத்தில் ஆரம்பித்து, ஏமாற்றுதல், பிறர் மனம் நோகச் செய்தல்.. இப்படி தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது.

இந்த கடவுள் பயம் விசயத்தில் இன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலைதான் அதிகம் காண்கின்றோம். அவரவர் வசதிக்கேற்ப தவறுகள் செய்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்து கொள்கின்றோம். சின்ன பென்சிலை திருடியவன், நான் என்ன தங்க செயினையா திருடினேன், இது பெரிய தவறு அல்ல என்று நினைக்கின்றான். தங்க செயின் திருடுபவன் நான் என்ன கடையையேவா கொள்ளை அடிச்சேன். ஒரே ஒரு செயின். அதுவும் அந்த கடைக்காரன் கொள்ளை அடிச்சு சேர்த்தது. இதை கடவுள் கண்டுக்கமாட்டாரு.. அந்த கடைக்காரனோ அத்தனை கடவுள் படத்தையும் கடையில மாட்டி வச்சிட்டு, கிலோவுக்கு கால் கிலோ தாமிரம் சேர்க்கிறான். இப்படித்தான் வியாபாரம் பண்ணனும். இது ஏமாத்து கிடையாது. கடவுள் கோவிச்சுக்கமாட்டாருன்னு சமாதானம் சொல்லிக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய், சாமி உனக்கு தங்கத்தாலே தேர் வாங்கித்தர்றேன்னு சொல்லி, சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறான்.

நான் மேலே சொன்ன அவலங்கள் இன்றைக்கு நடைமுறையில் இல்லயென்று உங்களில் யாரேனும் மறுக்க முடியுமா? இதேபோல்தான் இன்றைக்கு கடவுள் சம்பந்தமான எல்லா விசயங்களுமே அவரவர் வசதிக்கேற்றார்போல் flexible ஆக வளைத்துக் கொள்ளும் விசயமாயிற்று. தவறுகளை செய்துவிட்டு காப்பதற்கு கடவுள் இருக்கின்றார் என்று கடைசியில் மனிதன் சென்று சேரும் இடமாக கடவுள் மாறிவருகின்றார்.

வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு இப்போது யாரும் கடவுளுக்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த எண்ணிக்கை குறைவுதான். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் என்ற அளவிற்கு மனித நாகரிகம் சீர் கெட்டுக் கிடக்கின்றது. ஆலயங்களிலேயே தவறுகள் நடக்கின்றன. தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்களும் இந்த பூமியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடவுள் பயம் குறைவதால் உண்டாகும் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. எனது எதிர்பார்ப்பு, கடவுள் பெயரால் நடந்து வந்த அக்கிரமங்கள் குறையும். கடவுள் விசயம், சென்டிமென்ட் என்று சட்டம் தயங்கும் விசயங்களில், நாளை இந்த நம்பிக்கை சென்ற பின்பு சட்டம் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை இன்னும் பயனுள்ள விசயங்களில் செலவழிக்க இயலும்.

நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு கடவுள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற பயங்கள்தான் இல்லை. சட்டத்திற்கு பயப்படுகின்றேன். தவறு செய்ய பயப்படுகின்றேன். தவறு செய்தால், மாட்டிக்கொண்டு அதனால் ஏற்படப்போகும் மான, அவமான உணர்வு விசயங்களுக்கு பயப்படுகின்றேன். இதையெல்லாம் தாண்டி, என்னையே நீ செய்தது சரியா என்று கேட்கும் எனது மனசாட்சிக்கு பயப்படுகின்றேன். இந்த பயங்கள் எல்லோருக்குமே இருக்கின்றது. இந்த உலகில் வாழ இந்த மூன்று பயங்களுமே போதுமானது என்பதுதான் எனது எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் இந்த நம்பிக்கைகளால் நன்மைதான் எனும்போது விட்டுவிடலாம். அதைத்தான் நானும் இதுநாள் வரை செய்து வருகின்றேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஒதுங்கி, எனது நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்கும் செயலை செய்யக்கூடாது என்று எண்ணுகின்றேன். ஆனால், நடக்கும் சமூக அவலங்களைப் பார்க்கும்போது நாம் ஒதுங்குவது தவறோ என்று தோன்றுகின்றது.

நன்றி..அறுசுவையில் இருந்து பாபு என்ற வாசக நண்பர்...