தொகுப்புகள்

Search This Blog

Thursday, March 7, 2024

பார்ப்பனர் எதிர்ப்பு நியாயமா அநியாயமா ?

தொடர்ந்து பார்ப்பன சமூகத்தை பெரியார்வாதிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு பேசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன். 

முகநூலில் இருக்கும் பல பார்ப்பன இளைஞர்களுக்கும் அந்த உணர்வு இருக்கும் 

“ என்னடா இது எப்ப பாத்தாலும் எல்லாரும் பார்ப்பனர்களை குறை சொல்லிட்டே இருக்காங்களே” என்று தோன்றும். 

இப்பிரச்சனையை அவர்கள் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும். 

“பார்ப்பனர் உசத்தி” என்ற தியரியை குறைந்தது ஆயிரம் வருடங்களாவது அரசர்களின் உதவியோடு பார்ப்பனர்கள் செய்து வந்திருக்கிறார்கள். 

-பார்ப்பனர் உசத்தி
-பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை கூடாது.
-சிவனே ஆனாலும் பார்ப்பனன் தலையை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்து விடும்.

கொஞ்சம் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராண கதைகளை இக்கோணத்தில் வாசித்தால் இதை புரிந்து கொள்ளலாம். 

அதாவது 97 % மக்களுக்கு 3 % மக்கள் உசத்தி உசத்தி என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அவர்களை நம்பவும் வைத்திருக்கிறார்கள்.

என் வீட்டு ப்ரிட்ஜை சரி செய்ய ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டாம் சேல்ஸுக்கு ப்ரிட்ஜுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

சும்மானாலும் அது பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரர் “ இத வாங்கிக்கோ சார். இதுக்கு முன்னாடி ஐயர் யூஸ் பண்ணின ப்ரிட்ஜ். நல்லா இருக்கும்” என்றார். 

ஒரு குளிர்பெட்டியை ஐயர் உபயோகித்தால் அது எப்படி மதிப்புள்ளதாக மாறும் என்று புரியவே இல்லை.

மக்கள் மத்தியில் இன்னமும் பார்ப்பனர் என்றால் உசத்தி என்ற எண்ணம் இருக்கிறதுதான். 

இது ஒரே நாளில் வந்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. 

என்ன திட்டத்தின் மூலம் பார்ப்பனர் உசத்தி என்பது மக்கள் மத்தியில் ஏற்றப்பட்டது? 

உலகில் ஐம்புலன்களை பெற்று மனிதனாக பிறந்து விட்டாலே அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். 

பிரச்சனையை தீர்க்க பெரும் சக்தி ஒன்றிடம் பிரார்த்தனை செய்வது மனித இயல்பு. அப்படித்தான் கடவுள் உருவாகிறார். 

பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

அல்லது ஏற்கனவே மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளை அவர்கள் வழிபாட்டு முறைகளோடு இணைக்கிறார்கள். 

“நிமித்தம்” சொல்வதன் மூலம் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

கடவுளுக்கு அடுத்தது பார்ப்பனன்தான் என்ற தியரியை மக்களுக்குள் எளிதாக் மதத்தின் மூலமாக திணிக்கிறார்கள். 

இதனால்தான் பார்ப்பனர்கள் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” என்பதை ஒத்துக் கொள்வதில்லை. 

கடவுளுக்கு அடுத்து கோவிலில் அங்கே ஒரு பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

அங்கே ஒரு பறையரும், அருந்ததியரும், தேவரும், நாடாரும், வன்னியரும் நின்று பூஜை செய்து கொண்டிருந்தால் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பம் மக்களிடையே மறைந்து விடும்.

ஸோ இப்படி இந்து மதத்துக்குள் பின்னி பிணைந்து பார்ப்பனர்கள் அவர்கள் பற்றிய இமேஜை மக்களிடையே உயர்த்திக் கொள்ளும் போதுதான் பெரியார் எதிர்க்கிறார். அம்பேத்கர் அதை எதிர்க்கிறார்.
 
பாமர மக்கள் “எப்படி ஒரு பார்ப்பனர் உசத்தி” என்று கேட்கும் போதெல்லாம் கடவுளை கைக்காட்டி “கடவுள் சொன்னாராக்கும். கடவுள் எழுதி வைச்சிருக்கிறார்” என்றெல்லாம் பார்ப்பனர்கள் பதில் சொல்லி நம்ப வைத்தனர். 

அதனால்தான் பெரியார் பார்ப்பனர்கள் கைகாட்டும் கடவுளையே எதிர்க்க ஆரம்பித்தார். 

இப்படி யோசித்து பாருங்கள். 

உங்கள் வகுப்பு லீடர் ஆசிரியர் இல்லாத நேரம் ஆசிரியர் சொன்னதாக பெரும் அதிகாரம் செய்கிறான். 

மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான். எதிர்த்து கேட்டால் “ டீச்சர்தான் எனக்கு பவர் கொடுத்தாங்க” என்று சொல்கிறான். 

குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டும் போது “என்னடா உங்க டீச்சர். நா அவுங்க கிட்டையே கேப்பேன். டீச்சர காட்டி எங்கள அதிகாரம் செய்றியா? என்று ஸ்டாப் ரூமை நோக்கி செல்வோமா இல்லையா? “ 

அதைத்தான் பெரியாரும் செய்தார். 

கடவுள் ஒரு பெரும் சக்தி என்று நான் நம்புகிறேன் என்ற லாஜிக்கை பெரியார் எதிர்க்கவில்லை. 

சரி அது உன் நம்பிக்கை இருந்துவிட்டு போ என்றுதான் சொல்கிறார். 

ஆனால் கடவுள் பெரும் சக்தி, அவரின் ஒரே பிரதிநிதி பார்ப்பனர்கள்தான் என்று அதற்கு ஒரு லாஜிக் புராண கதைகளை இட்டு கட்டும் போதுதான் பெரியார் அதே லாஜிக்கை வைத்து அந்த புராண கதைகளை ஆராய்ந்து உண்மையை மக்களிடதில் அம்பலப்படுத்துகிறார். 

மதன காமராஜன் கதை என்றொரு கதை கொத்து உண்டு. 

அதில் ஒரு பார்ப்பன இளைஞன் உலக அனுபவம் வேண்டி தேசம் விட்டு தேசம் செல்கிறான். 

காட்டை கடக்கும் போது வேடன் ஒருவன் எதிர்படுகிறான் 

“ ஐயா நீங்கள் இந்த இரவை காட்டின் இருட்டில் கடந்தால் மிருகங்கள் தாக்கி இறந்து போவீர்கள். ஆகையால் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று அழைக்கிறான். 

பார்ப்பனனும் செல்கிறான். அங்கே சிறிய பரண் ஒன்று இருக்கிறது. 

கீழே தூங்கினால் புலி தின்றுவிடும் என்று பரண் அமைத்து அங்கே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். 

வேடனின் மனைவி அப்பரணில் பார்ப்பனனும் தூங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். 

அது இருவர் தூங்கும் பரண் எப்படி மூவர் தூங்க முடியும் என்று சொல்கிறாள். 

ஆனால் வேடனோ “பாவம் இந்த பார்ப்பனன் அஞ்சி நடுங்கி போய் இருக்கிறான். இவனுக்கு நாம்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று மூன்று பேரும் சமாளித்து பரணில் படுக்கிறார்கள். 

வேடன் இடது ஒரம் , மனைவி வலது ஒரம் , பார்ப்பனன் மத்தியில் என்று படுத்து தூங்குகிறார்கள். 

இரவில் அசைந்து தூங்கும் போது வேடன் பரணில் இருந்து விழுந்து விடுகிறான். 

அவனை புலி தின்று விடுகிறது. 

மறுநாள் காலை பார்ப்பனன் வருத்தம் தெரிவித்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடுகிறான். 

ஒருவருடம் கழித்து அந்த நாட்டின் மன்னனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பார்ப்பனன் தியானம் செய்கிறான். 

அந்த தியானத்தின் போதுதான் தனக்கு பரணில் இடம் கொடுத்து உயிர் நீத்த வேடனே அப்புண்ணியத்தால் இளவரசனாக பிறந்ததாக கண்டுகொள்கிறான். 

சரி அந்த வேடனின் மனைவி என்னவானாள் என்று தியானம் செய்கிறான். அவளும் அந்த பிராமணன் சென்ற ஒரிரு நாளில் விஷமுள் குத்தி இறந்து விடுகிறாள். 

இப்போது அவள் எங்கே பிறந்திருக்கிறாள் என்று பார்த்தால் அவள் ஒரு சேரியில் பன்றிகுட்டைக்கு அருகே இருக்கும் வீட்டில் பிறந்திருக்கிறாளாம். 

கதையை கவனியுங்கள் 

- பார்ப்பனருக்கு உதவி செய்தால் அவர் மறுபிறவியில் இளவரசனாம்.

- பார்ப்பனருக்கு உதவி செய்ய மறுத்தால் அவர் பன்றிகுட்டை சேரியில் பிறப்பாராம்.

இது போன்ற ஏராளமான பார்ப்பன சாதி போற்றும் கதைகளை நம்மிடையே அனைத்து பழங்கதைகளும் திணித்திருக்கும். இப்படி திணித்து திணித்துதான் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

சமதர்ம சமூகத்தில் இந்த போலி பிம்பம் உடையத்தானே வேண்டும். 

அது தேவையில்லாத பிம்பம்தானே. 

அது சமத்துவத்துக்கு எதிரான பிம்பம்தானே. அந்த பிம்ப உடைப்பை ஒவ்வொருவரும் செய்யும் போதுதான் அது பார்ப்பனர்கள் மனதை புண்படுத்தி விடுகிறது. 

அந்த பிம்ப உடைப்பின் அவசியத்தை ஒரு சமூகநீதி ஆர்வலராக நீங்கள் புரிந்து கொள்ளும் போது நீங்களும் பெரியார்வாதிகளுடன் சேர்ந்து அப்பிம்பத்தை உடைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

எந்தவிதமான உண்மையும் இல்லாமல் வெறுமே இட்டுக்கட்டல் மூலம் பிம்பம் நமக்கெதுக்கு என்று அதற்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவீர்கள்.

- Vijay Bhaskarvijay பதிவு

No comments:

Post a Comment