கோவிட்-19 என்னும் கொடுந்துகள்!!
அவ்வப்போது சொல்லமுடியாத வேதனைகளை மனிதகுலத்துக்குக் கொடுத்துவிட்டு தன்னைவிட இப்பேரண்டத்தில் மிக்காரும் தக்காரும் இலர் என்று காட்டிவிடுகிறது இப்பேரியற்கை. கொரானாவைரஸ் துகள்களால் பல்லாயிரம் உயிர்கள் அரவமேயின்றிக் கொலையுண்டு போயிருக்கின்றன. முகநூலுக்கு முழுக்குப்போட்டுவிட விரும்பினேன். இன்னமும் உயிருடன் இருப்பதாலும், அறிவியலைப் படித்துக்கொண்டிருப்பவனென்பதாலும், கொரானாவின் கோரத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை விளக்கிவிட முயல்கிறேன்.
பொதுவாக, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் நோய்களை உண்டாக்கவல்ல, பன்றிகள், ஒட்டகங்கள், வௌவால்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்கினங்களில் பரவலாகக் காணப்படும் வைரஸ் நுண்துகள்களை கொரானாவைரஸ்கள் என்றழைக்கிறார்கள். விலங்கினங்களின் குருதியில் வளர்ந்து பல்கிப்பெருகும் இந்த கொரானாவைரஸ்கள் சில சமயங்களில் மனிதனின் மூச்சுக்குழாயிலும், நுரையீரலிலும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. அவ்வாறு கொரானா வகை வைரஸ்கள் தொற்றுவதால், சளி, இருமல் உள்ளிட்ட சாதாரண சுவாசநோய்கள் மனிதனுக்கு உண்டாகின்றன என்றுதான் மருத்துவ உலகம் கடந்த 2002 ஆண்டுவரை நம்பிக்கொண்டிருந்தது.
ஆனால், 2003 இல் (சீனாவில்) வௌவால்களில் தோன்றிய வைரஸொன்று எப்படியோ, மனிதவுடலுக்குள் புகுந்து கொண்டு கடுமையான நுரையீரல் நோய்களை உண்டாக்கியதோடு, ஒட்டுவாரொட்டியாகப் பரவி நூற்றுக்கணக்கானவரை கொன்றொழித்தது. அதற்கு, சார்ஸ் (SARS-Cov-Severe Acute Respiratory Syndrome-Corona virus) வைரஸ் என்று பெயரிட்டதோடு, அது கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று ஆய்ந்து அறிந்துகொண்டபோதில் உலகமே விக்கித்துப்போனது. 'விடாது கறுப்பு' என்பது போல, 2012 ஆம் ஆண்டில் இதே குடும்பத்தைச் சார்ந்த இன்னொரு வைரஸ் ஐரோப்பிய கிழக்கத்திய நாடுகளில் உருவாகித் தொலைத்தது. அந்தவேளையில், வர்த்தகப்பயணமாக அந்நாடுகளுக்கு வந்த தென்கொரியப் பெருவணிகரொருவரைத் தொற்றிக்கொண்டு அவருடன் தென்கொரியா பயணித்தது. ஊர்திரும்பிய அவருக்கு வந்திருப்பது கொரானா வைரஸ்த்தொற்றுதான் என்று கண்டுபிடிப்பதற்குள், மருத்துவர், செவிலியர் தொடங்கி நாடு முழுவதும் பரவிவிட்டது. மெர்ஸ் (MERS- CoV- Middle East Respiratory Syndrome- Corona virus) கொரானா என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸைக் கண்டறிந்து அழிக்க தென்கொரிய நாடு கொடுத்த விலை நூற்றுக்கணக்கான மனிதவுயிர்கள்.
கடந்த டிசம்பர் 2019 இல், தெற்கு சீனாவின் வுஹாங் மாநகரத்தின் கடலுணவுச் சந்தையொன்றில் உருவானதாகக் கருதப்படும் இந்தப் புதுவகை (Novel) வைரஸும் கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று கடந்தகாலப் படிப்பினைகள் மூலமாக அறிந்திருந்தும் அதிதீவிர முயற்சிகள் எடுக்காமல் விட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாயினர். முன்னெடுப்பு நடவடிக்கைகளை விட வேகமாக வைரஸ் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. எனினும், முழுமுயற்சிகள் எடுக்கப்பட்டு நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தபட்டது. உலகமே அரண்டுபோய், ஆராய்ச்சிகளை வேகவேகமாக முடுக்கிவிட்டுக்கொண்டிருந்தன. இதுவரைக்கும் நாற்பது ஆராய்ச்சிக்கட்டுரைகள், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து Science, Nature உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஆனால், நாமோ, வைரஸைக் கட்டுப்படுத்த வாட்சாப் வாயர்களின் புரளிகளை, பஞ்சாங்கத்தில் அன்றே வைரஸ் வருமென்று கணித்திருக்கிறாரென்று புழுகிணிகள் அவிழ்த்து விடுவதை வாய்பிளக்கக் கேட்டுக்கொண்டும், உடலெங்கும் பசுஞ்சாணம் பூசிக்கொள்ள, கோமியம் குடிக்கச்சொல்லும் பக்தப்பதர்களின் பரிந்துரைகளைப் பரந்து உலகெலாம் பரப்பி நம் அறிவியலறிவை உலகமே காறித்துப்பினாலும் கவலையின்றிப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். வைரஸ் துகளின் உள்ளும் புறமும் இருக்கும் புரதங்கள் யாவை? அவற்றை எவ்விதம், எவ்வகை மருந்தைச் செலுத்தினால் துகளைச்சிதைக்கலாம்? கொரானா குடும்பத்தில் இருக்கும் மற்ற வைரஸ்களுடன் இந்த கோவிட்-19 வைரஸின் மரபணு மட்டும் எவ்வாறு மாறுபடுகிறது என்றெல்லாம் சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதை விடுத்து, பவளமல்லிச்சாற்றுக்கு வைரஸ் கட்டுப்படுமென்று ஆருடம்கூறும் டுபாக்கூர் ஹீலர்களை வளர்த்துவிடுகின்றன நம்மூர் ஊடகங்கள். இப்போது, தம்முடைய பப்பெல்லாம் கொரானாவிடம் வேகாது என்று தெரிந்தவுடன், சந்துபொந்தெல்லாம் ஓடியொளியச் சொல்கின்றன.
உலகச்சுகாதார நிறுவனம் (WHO) என்றுமில்லாதவாறு, அவசரநிலையை அறிவித்திருக்கிறது. 2012 இல்
MERS-CoV தொற்றினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட தென்கொரியா, COVID-19 என்னும் வைரஸ் பேரரக்கன் ஆயிரக்கணக்கானோரைத் தாக்கியபோதும், "கேட்டினும் உண்டோர் உறுதி" என்று உறுதியுடன் அதிவிரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தம் மக்களை வெகுவிரைவாக பேரழிவிலிருந்துக்காத்தது.
சரி இப்போது நாம் என்ன செய்யலாம்?
கோவிட்-19 வைரஸ் பற்றியும், அதன் பண்புகள் மற்றும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெடுப்புகள் பற்றியும் நானறிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கோவிட்-19 வைரஸ் என்பதொரு உயிரற்ற மிக நுண்ணிய துகளாகும். உருண்டை வடிவில் இருக்கும் இந்தத்துகள்களின் விட்டம் 0.1 முதல் 0.2 மைக்ரான். அதாவது, புகையில் இருக்கும் கரித்துகள்களின் விட்டத்தை விட நூறுமடங்கும், ஏனைய நுண்ணுயிரிகளில் ஒன்றான பாக்டீரியாவின் விட்டத்தைவிட பத்துமடங்கு சிறியது என்பதால், சாதாரண முகவுறை அணிவதால் வைரஸ் பரவலையோ, தொற்றையோத் தடுக்கமுடியாது. உலக உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு (FDA) பரிந்துரைக்கும் N-95 வகை முகவுறைகள் மட்டுமே, கோவிட்-19 வைரஸ்களை வடிகட்டவல்லவை.
நம்முடைய உடல்மீதோ, அணிந்திருக்கும் துணிகள் மீதோ வந்துசேரும் கோவிட்-19 வைரஸ்கள் குறைந்தது ஆறுமணி நேரமாவது அவ்விடத்தில் சிதைபடாமல் இருக்கும். ஆனால், மரம், நெகிழி அல்லது மாழைப்பரப்புகளின் மீது மூன்று நாள்கள் வரை சிதைபடுவதில்லை. அதனால்தான், வீட்டுக்குள் இருக்கும்போதும் சோப்புப்போட்டுக் கைகழுவச் சொல்கிறார்கள்.
ஏன் சோப்புப்போட்டுக் கைகழுவ வேண்டும்?
கோவிட்-19 வைரஸின் மேற்சுவரானது, கொழுப்பு அமிலங்களால் ஆனது என்பதால், சோப்பிலிருக்கும் கொழுப்பு, மேற்சுவரைக் கரைத்து வைரஸ் துகளை உடைத்துச்சிதைத்துவிடும். ஆகவே, அடிக்கடி சோப்புப்போட்டுக் கழுவும்போது கையிடுக்குகளில் பரவியிருக்கும் வைரஸ் துகள்கள் சிதைந்துவிடும்.
ஏன் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும்?
கோவிட்-19 வைரஸ்கள் நேரடியாக நுரையீரலைத் தாக்குபவை என்பதால், கால் மணிக்கொருமுறை (வாய்/தொண்டை வறண்டுபோகாமல்) நீர்ம உணவு அல்லது தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது, அவை நுரையீரலுக்கு பதிலாக வயிற்றுக்குச்செல்லும். உணவுச்செரிமானத்திற்காக அங்கே ஊறும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம், கோவிட்-19 வைரஸ்களைச் சிதைத்தழிக்கும்.
ஏன் வீட்டுக்குள் தனித்திருப்பது நல்லது.
இதுவரை, பெரும்பாலும் சுவாசநோய்களால் அவதியுறும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்தாம் கோவிட்-19 வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமியர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆகவே, பேரச்சம் தேவையில்லை. அதே சமயத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நலன்கருதி தற்காலிக சமூக விலக்கம் செய்துகொள்வது நமக்கும் நல்லது. நம் சுற்றத்துக்கும் நல்லது.
செ. அன்புச்செல்வன்
No comments:
Post a Comment