தொகுப்புகள்

Search This Blog

Sunday, February 2, 2020

யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?

யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?

இவை நமது வரலாறு. தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையில் ஆரியர் வருகையையும் அவர்கள் எவ்வாறு இங்கிருந்தவர்களை ஆதிக்கம் செய்து அவர்கள் சுயத்தையே அழித்தார்கள் என்பதையும், தமிழனின் அடையாளம் என்ன என்பதையும் மிக சுருக்கமாக விபரிக்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

ஆரியர் எனப்படுபவர்கள் கி.மு 1500 ஆண்டுகளிற்கு முன் இன்றைய இந்தியாவின் மேற்கு பக்கமிருந்து அதாவது தற்போதைய ஈரானிலிருந்து  கைபர் கணவாய் ஊடாக இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தவர்கள் ஆவர். ஈரான் என்றால் பாரசீக மொழியில் ஆரியர்கள் நிலம் என்று பொருள்படும். ஆரியர்கள் அக்கினியை வழிபட்டவர்களாவர். 

ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் வரும்போது இங்கே பல இனக்குழுக்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக கிராதர் என்ற இனக்குழு இமய மலை சாரலில் சிவனையும் இந்திரனையும் கடவுளாக வழிபட்டு வந்தார்கள். ரிக் வேதத்தில் இவர்களுக்கு இடையேயான போர்களைபற்றிய குறிப்புகள் உள்ளது. 

ஆரியர்கள் பொதுவாக எதிர்ப்பவரையும் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். கிராதர்களின் கடவுள்களையும் உள்வாங்கி அதற்கு வேள்விகள் பண்ணி தருகிறேன் என்று அக்கினி வளர்த்து அவன் சுய அடையாளத்தை அழித்து இவன் தனக்கு வேண்டியதை சாதித்துகொண்டான். இவ்வாறு ஒவ்வொருவரினதும் அடையாளங்களிற்குள் கலந்து அவர்களின் சுய அடையாளங்களை அழிப்பதில் வல்லவன். இதற்கு அவனுக்கு பயன்பட்டது கடவுள் என்ற மாயை. இவன் மந்திரங்கள் தனக்கு தெரியும் அதன்மூலம் கடவுளுடன் பேச முடியும் நான் பேசி உங்களுக்கு கடவுள் சொன்னதை சொல்கிறேன் என்று வசதியாக உட்கார்ந்துகொண்டான். இன்றைக்குகூட சிலர் சமஸ்கிருதம் தேவ பாஷை என்பதை பார்த்திருப்பீர்கள். இதுதான் அது. 

இவ்வாறு அவன் கடவுளின் பிரதிநிதியாக உட்கார்ந்து விட்டதால் அவனுக்கு தான் நினைத்ததை அந்த மக்களிடையே செய்யக்கூடியவாகவும் அவனை உயர்ந்தவனாக மக்கள் பார்க்க ஏதுவாகவும் இது அமைந்தது. இதே உத்தியைதான் மற்ற மதங்கள் பின்நாளில் கடவுளின் தூதர்கள் என்ற பெயரில் செய்தது.

இவ்வாறு அவன் சமுதாயத்தில் உயர்ந்தவனாக உட்கார்ந்து விட்டபடியால் அவனால் இலகுவாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிக்கமுடிந்தது. பிரிவினையே அவன் பலம். இன்றும் அதையே கையாள்கிறான். நாடாளும் மன்னர்களுக்கு மேலேயே தான் உயர்ந்த சாதியாக இருப்பதால் சிலவேளை மன்னர்களால் தனக்கு தீங்கு வரலாம் என்று பயந்த அவன், அதற்கும் பிரம்மகத்தி தோஷம் போன்ற கட்டுகதைகளை கடவுள் பெயரால் கூறி மக்களிடத்தே ஒரு பீதியை உண்டுபண்ணினான். அதாவது யாராவது பிராமணனுக்கு தீங்கிழைத்தால் அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை.

சூத்திரர் தாழ்த்தப்படுவதும், அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தனக்கு தீங்கு ஏற்படலாம் என்று பயந்த அவன், சூத்திரர்களுக்குள்ளும் கிளை சாதிகளாக பிரிவினையை உண்டுபண்ணி அவர்களிற்குள் ஒற்றுமையை குலைத்து தான் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டான். பல மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைத்து தான் இருந்த இடத்தில் குளிர் காய்ந்தான். தான் கூறுவதே வேத வாக்கு என்ற நிலைக்கு கொண்டுவந்தான். மன்னர்களுக்கே அறிவுரை வழங்கும் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

இவ்வாறு படிப்படியாக இவன் ஒவ்வொரு இனக்குழுவையும் உள்வாங்கி செரித்துகொண்டு, அவர்கள் சுய அடையாளங்களை அழித்துகொண்டு அவனது கலாச்சாரத்தை திணிப்பதில் வெற்றிகண்டான்.

இவ்வாறு வடக்கே ஒவ்வொரு இனக்குழுக்களாக உள்வாங்கி செரித்துகொண்ட அவன் தெற்கிலும் அதே நடைமுறையை பின்பற்றினான்.

தெற்கில் திராவிடர்கள் அதாவது இன்று தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் வசித்து வந்தார்கள். இங்கே அவன் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோதும் அது கி.பி 400 குப்தர்கள் காலம்வரை இங்கே அவனால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. 

குப்தர்கள் காலத்திலேயே சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது. பாடப் புத்தகத்தில்கூட குப்தர்கள் காலம் பொற்காலம் என்றுதான் குறிப்பிட்டு கேள்வியை கேட்பார்கள். யாருக்கு பொற்காலம்? ஆரியருக்கு பொற்காலம். திராவிடருக்கு?

திராவிடர் என்று குறிப்பிடும்போது திராவிடரில் மூத்தவன், திராவிட மொழி்களின் மூலமொழி தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழனையும் யார் என்று பார்க்க வேண்டும். நாம் தமிழர் ஆதலால் திராவிடர்களான மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவற்றின் வரலாற்றிற்குள் போகாமல் தமிழனுக்கு என்ன நடந்தது என்பதிற்குள்ளேயே போகிறேன்.

தமிழன் இயற்கையை வழிபட்டு வந்தான். இறந்துபோன தனது மூதாதையர்களை காவல் தெய்வங்களாக நடுகல் வைத்து வழிபட்டுவந்தான். ஐந்திணை நிலங்களைான மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சியில் சேயோனையும், காடும் காடு சார்ந்த இடமான முல்லையில் மாயோனையும், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடைப்பட்ட தரிசு நிலத்தை பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமான மருதத்தில் வேந்தனையும், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலில் வருணனையும் வழிபட்டு வந்தான்.

இதில் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விடயம் இந்த மாயோன் இன்று விஷ்ணுவாகவும், சேயோன்தான் முருகன் என்றும், வேந்தன் இந்திரனாகவும், வருணன் வருண பகவான் என்று மழையுடனும் தொடர்புபடுத்தி ஆரியனின் கலாச்சாரத்தை தமிழனில் திணிக்க தமிழரின் கலாச்சாரங்கள் பயன்படுகின்றன. 

இவற்றை நம்பவைக்க இங்குள்ள நிலப்பரப்புகளைவைத்து புராண இதிகாச கதைகளை தமிழர்களுக்கு தமிழிலேயே இயற்றி, (இன்றைய சினிமா எடுப்பதுபோல) அதில் ஆரிய கலாச்சாரத்தை போதித்து அதன் மூலம் தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலை செய்தான். இதுவே உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரியனின் முறை. 

முன்னொரு காலத்தில் இங்கே சூரன் என்ற அசுரனுடன் ஸ்கந்தன் என்கிற சேயோன் போரிட்டான் என்பதுமாதிரியான கதைகளும், சேயோனை ஸ்கந்தனைாக்கி அவனை வினாயகனின் தம்பியாக்கி, சிவன் பார்வதியின் பிள்ளையாக்கி, அதன்பின்னும் அவனை மாம்பழ கதைபோல் ஒன்றை உருவாக்கி மூடனாக்கி காட்டுவது. எல்லாவற்றிற்கும் கடவுள் சாயம் பூசி கேள்வி கேட்காதவாறு மூளையை மழுங்கடிப்பது. இதில் அவன் வெற்றியும் பெற்றுவிட்டான். 

இவ்வாறு எல்லா வழிகளிலும் தனது ஆதிக்கத்தை பரப்பியவன். தமிழ் மன்னர்களை கொண்டே தனக்கு இசைவாக ஆலயங்களை அமைத்துகொண்டான். அதைக்கொண்டு சமஸ்கிருதத்தையும் அவன் கலாச்சாரங்களையும் தமிழனில் திணித்துவிட்டான். அங்கே தனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் இருந்த இடத்திலேயே கிடைக்ககூடியவாறு ஏற்பாடுகளை செய்துகொண்டான். அர்ச்சனைதட்டு, உண்டியல், பரிகாரம், நைவேத்தியம், தேவதாசி என்று பட்டியல் நீளும். 

பார்ப்பனனின் மனுதர்ம சட்டத்தை கடவுளின் சட்டம் என்று நம்பிய பல முட்டாள் தமிழ் மன்னர்கள் இங்கே இருந்ததால்,
பார்பனன் கூறுவதை தலையாய பணியாக செய்து முடித்தனர்.
எதிர்த்த சமணர்களை கழுவேற்றி கொல்லவும் தயங்காதவனாக இருந்தான்.

இவ்வாறு தமிழன் சுயத்தை இழந்து இருந்தபோது ஆங்கிலேயரும் அரேபியரும் வந்து மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி உளக்கியதுபோல் அவர்களும் தமது பங்கிற்கு அரேபிய, ஆங்கிலேய கலாச்சாரங்களை தமிழனில் திணித்து தமிழனை சுய அடையாளம் அற்ற பரதேசியாக ஆக்கிவிட்டனர்.

இந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது. இந்த தமிழன் இன்னும் திருந்தியபாடில்லை. தான் யார் என்பதே தெரியாமல் ஆரிய சமஸ்கிருத கடவுள்களிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், அரேபிய அல்லாவிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், வத்திக்கான் கர்த்தருக்கு வக்காலத்து வாங்குபவனாகவும் இருந்து வருகிறான். 

தமிழன் என்று கூறுபவர்கள் தங்களின் அடையாளம் என்ன என்பதை உணரவேண்டும்.

கருத்துக்களை வரவேற்கிறேன்.
 நன்றி  :- வேணுகோபால சங்கர்

No comments:

Post a Comment